வெள்ளி, மே 27, 2011

தாயுமானவர் பாடல்கள் 2


9. சுகவாரி

இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் எனருசித் திடவலியவந் தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர் இடையறா துருகிநாடி உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும் ஓய்ந்துயர்ந் தவசமாகி உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடிகாண் கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக் கருதிநகை யாவளதுபோல் சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை தோற்றிற் சுகாரம்பமாஞ் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 1. அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை அறியாத ப்க்குவத்தே ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான் அற்றேன் அலந்தேன்என என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய் இரங்கியொரு வழியாயினும் இன்பவெள மாகவந் துள்ளங் களிக்கவே எனைநீ கலந்ததுண்டோ தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு தண்முகை தனக்குமுண்டோ தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத தன்மையால் தனியிருந்து துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்பர் சுகம்வந்து வாய்க்கும்உரையாய் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 2. கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென் கல்நெஞ்சம் உருகவிலையே கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க வொருகடவுளோ வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக் கிழுக்குமுண்டோ வானமாய் நின்றின்ப மழையா யிறங்கிஎனை வாழ்விப்ப துன்பரங்காண் பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதுமுண்டோ பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப் புன்மையே னாவனந்தோ சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மெளனியாய்ச் சும்மா இருக்கஅருளாய் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 3. என்பெலாம் நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்பஉடல் இளகமன தழலின்மெழுகாய் இடையறா துருகவரு மழைபோ லிரங்கியே இருவிழிகள் நீரிறைப்ப அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙனே அமிர்தசஞ் சீவிபோல்வந் தானந்த மழைபொழிவை உள்ளின்பி லாதஎனை யார்க்காக அடிமைகொண்டாய் புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு புலைக்குடிலில் அருவருப்புப் பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன் புந்திசெலு மோபாழிலே துன்பமா யலையவோ உலகநடை ஐயவொரு சொற்பனத் திலும்வேண்டிலேன் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 4. வெந்நீர் பொறாதென்உடல் காலில்முள் தைக்கவும் வெடுக்கென் றசைத்தெடுத்தால் விழிஇமைத் தங்ஙனே தண்ணருளை நாடுவேன் வேறொன்றை யொருவர்கொல்லின் அந்நேரம் ஐயோஎன் முகம்வாடி நிற்பதுவும் ஐயநின் னருள் அறியுமே ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்என்னை ஆண்டநீ கைவிடாதே இந்நேர மென்றிலை உடற்சுமைய தாகவும் எடுத்தா லிறக்கஎன்றே எங்கெங்கு மொருதீர்வை யாயமுண் டாயினும் இறைஞ்சுசுக ராதியான தொன்னீர்மை யாளர்க்கு மானுடன் வகுத்தஅருள் துணையென்று நம்புகின்றேன் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 5. பற்றுவன அற்றிடு நிராசையென் றொருபூமி பற்றிப் பிடிக்கும்யோகப் பாங்கிற் பிராணலயம் என்னுமொரு பூமிஇவை பற்றின்மன மறும்என்னவே கற்றையஞ் சடைமெளனி தானே கனிந்தகனி கனிவிக்க வந்தகனிபோல் கண்டதிந் நெறியெனத் திருவுளக் கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றைப் பெற்றவனு மல்லேன் பெறாதவனு மல்லேன் பெருக்கத் தவித்துளறியே பெண்ணீர்மை என்னஇரு கண்ணீ ரிறைத்துநான் பேய்போ லிருக்கஉலகஞ் சுற்றிநகை செய்யவே யுலையவிட் டாயெனில் சொல்லஇனி வாயுமுண்டோ சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 6. அரும்பொனே மணியேஎன் அன்பேஎன் அன்பான அறிவேஎன் அறிவிலூறும் ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய்சிலிர்த் திருகைகூப்பி விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே வேசற றயர்ந்தேனியான் இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை இடைவிட்டு நின்றதுண்டோ என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ யாதேனும் அறியாவெறுந் துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டுகண்டாய் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 7. பாராதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியி நுண்மைகாட்டிப் பற்றுமன வெளிகாட்டி மனவெளியி னில்தோய்ந்த பாவியேன் பரிசுகாட்டித் தாராள மாய்நிற்க நிர்ச்சந்தை காட்டிச் சதாகால நிட்டைஎனவே சகநிலை காட்டினை சுகாதீத நிலயந் தனைக்காட்ட நாள்செல்லுமோ காரார எண்ணரும் அனந்தகோ டிகள்நின்று காலூன்றி மழைபொழிதல்போல் கால்வீசி மின்னிப் படர்ந்துபர வெளியெலாங் கம்மியா னந்தவெள்ளஞ் சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரைக் கூவுமுகிலே சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 8. பேதித்த சமயமோ ஒன்றுசொன படியொன்று பேசாது துறவாகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற் பத்தினால் பேசார்கள் பரமகுருவாய்ப் போதிக்கும் முக்கண்இறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்ப தாச்சறிவிலே போக்குவர வறஇன்ப நீக்கமற வசனமாப் போதிப்ப தெவரையனே சாதித்த சாதனமும் யோகியர்கள் நமதென்று சங்கிப்ப ராதலாலே தன்னிலே தானா யயர்ந்துவிடு வோமெனத் தனியிருந் திடினங்ஙனே சோதிக்க மனமாயை தனைஏவி னாலடிமை சுகமாவ தெப்படிசொலாய் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 9. அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ அலரிமண் டலநடுவிலோ அனல்நடுவி லோஅமிர்த மதநடுவி லோஅன்பர் அகமுருகி மலர்கள்தூவித் தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத் திகந்தத்தி லோவெளியிலோ திகழ்விந்து நாசநிலை தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலைதன்னிலோ கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக் கண்டசூ னியமதனிலோ காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ கருவிகர ணங்களோய்ந்த தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது தொழும்பனேற் குளவுபுகலாய் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 10. எந்தநாள் கருணைக் குரித்தாகு நாளெனவும் என்னிதயம் எனைவாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடுபின் மலைவறவும் இற்றைவரை யாதுபெற்றேன் பந்தமா னதிலிட்ட மெழுகாகி உள்ளம் பதைத்துப் பதைத்துருகவோ பரமசுக மானது பொருப்பரிய துயரமாய்ப் பலகாலு மூர்ச்சிப்பதோ சிந்தையா னதுமறிவை என்னறிவி லறிவான தெய்வம்நீ யன்றியுளதோ தேகநிலை யல்லவே உடைகப்பல் கப்பலாய்த் திரையாழி யூடுசெலுமோ சொந்தமா யாண்டநீ அறியார்கள் போலவே துன்பத்தி லாழ்த்தல்முறையோ சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 11. எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல் இருக்கவிலை யோமனதெனும் யானுமென் நட்பாம் பிராணனும் எமைச்சடம தென்றுனைச் சித்தென்றுமே அந்நாளி லெவனோ பிரித்தான் அதைக்கேட்ட அன்றுமுதல் இன்றுவரையும் அநியாய மாயெமை யடக்கிக் குறுக்கே அடர்ந்தரசு பண்ணிஎங்கள் முன்னாக நீஎன்ன கோட்டைகொண் டாயென்று மூடமன மிகவும்ஏச மூண்டெரியும் அனலிட்ட மெழுகா யுளங்கருகல் முறைமையோ பதினாயிரஞ் சொன்னாலும் நின்னரு ளிரங்கவிலை யேஇனிச் சுகம்வருவ தெப்படிசொலாய் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 12.

10. எங்கு நிறைகின்ற பொருள்

அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய ஆப்தர்மொழி யொன்றுகண்டால் அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை அறிந்தார்கள் அறியார்களார் மெளனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுமவரார் மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும் வன்மையொ டிரக்கமெங்கே புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம் பூதபே தங்களெவிடம் பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு பொறைபொறா மையுமெவ்விடம் எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர் யாதுமுனை யன்றியுண்டோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.1. அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே ஐயாஐயா என்னவே அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல அலறியே யொன்றும் இலவாய்ப் பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப் பிதற்றிடுஞ் சிலசமயமேல் பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி பிறவுமே நிலயமென்றுந் தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத் தன்மையாங் காலமென்றுஞ் சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச் சதாஞான ஆனந்தமாய் என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா றெம்மனோர் புகலஎளிதோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.2. வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல் வேறுமுள கலைகளெல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவா யெடுத்துரைக்கும் ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணு ஞானமாகும் ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ துலகவா திகள்சம்மதம் ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும் யாதொன்று பாவிக்கநான் அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின் அத்துவித மார்க்கமுறலாம் ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய் எந்தைநீ குறையுமுண்டோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.3. சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத் தொட்டில்வைத் தாட்டிஆட்டித் தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில் தொடுக்குந் தொடுத்தழிக்கும் பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை போந்துதலை சுற்றியாடும் புருஷனி லடங்காத பூவைபோல் தானே புறம்போந்து சஞ்சரிக்கும் கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங் காணாது கேட்ட எல்லாங் கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங் கபடநா டகசாலமோ எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம் என்னா லடக்கவசமோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.4. கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத கள்ளனே னானாலுமோ கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே கண்பனித் தாரைகாட்டி அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை யானெனவு மேலெழுந்த அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை அகிலமுஞ் சிறிதறியுமேல் தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே சற்றேனும் இனிதிரங்கிச் சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே சகநிலை தந்துவேறொன் றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே ஏழையேற் கருள்செய்கண்டாய் இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.5. காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு கல்லின்முன் னெதிர்நிற்குமோ கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின் கருணைப்ர வாகஅருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற் கருள்தாகமோ சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ் சங்கேத மாய்க்கூடியே தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோகமார்க்க சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என் சிந்தைக்கும் வெகுதூரம்நான் ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள் இந்நாளில் முற்றுறாதோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.6. ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில் ஒருவன்நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென ஓயுமோ இடமில்லையோ அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ அலதுகிர்த் தியகர்த்தராய் அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர் அடாதென்பரோ அகன்ற பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள் பேய்க்கோல மாய்விதண்டை பேசுமோ அலதுதான் பரிபாக காலம் பிறக்கவிலை யோதொல்லையாம் இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ ஏதுளவு சிறிதுபுகலாய் இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.7. நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை நின்றிடவும் மெளனியாகி நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை நின்றனுட் டிக்க என்றால் கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக் காணவிலை யாகையாலே கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன் காட்சியிலிருந்து கொண்டு வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட மாதவர்க் கேவல்செய்து மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம் வாய்க்குமொரு மனுவெனக்கிங் கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே இப்போ திரங்குகண்டாய் இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.8. மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர் வனசருகு வாயில்வந்தால் வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால் வருந்தியு மூலஅனலைச் சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந் தேகநம தல்லவென்று சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ் செலுத்தினார் யாம்பாவியேம் விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில் வேண்டுவ எலாமுடுத்து மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே வேறொரு வருத்தமின்றி இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம் எப்படிப் பிழைப்பதுரையாய் இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.9. முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும் முகத்திலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப முலையின்மணி மாலைநால வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே மாயா விலாசமோக வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத பொன்னாட்டும் வந்ததென்றால் போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப் பூமியி லிருந்துகாண எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி இவ்வுலகம் அறியாததோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.10. உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந் துளறிடும் அவத்தையாகி உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண் டொளிக்கின்ற இருளென்னவே தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால் தாவுசுக துக்கவேலை தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால் தடித்தகில பேதமான முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய் மூதறிவு மேலுதிப்ப முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல் முற்றுமா னந்தநிறைவே என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம் எந்நாளும் வாழிவாழி இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.11.

11. சச்சிதானந்தசிவம்

பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று படர்வெளிய தாகிஎழுநாப் பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட பகிரண்ட உயிரெவைக்கும் நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத நிர்மலா னந்தமயமாய்ப் பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான் பேரின்ப மெய்திடாமல் பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல் பித்தாக வோமனதைநான் சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ் சாசுவத நிட்டைஅருளாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.1. குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு கொள்ளல்போல் ஐந்துபூதங் கூடஞ் சுருங்கிலைச் சாலேகம் ஒன்பது குலாவுநடை மனையைநாறும் வடக்கயிறு வெள்நரம் பாஎன்பு தசையினால் மதவேள் விழாநடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர்செந் நீர்கணீர் மலநீர்புண் நீரிறைக்கும் விடக்குத் துருத்தியைக் கருமருந்துக் கூட்டை வெட்டவெட் டத்தளிர்க்கும் வேட்கைமரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய்போ லிருந்துபொய்யாஞ் சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயந் தானாகி நிற்பதென்றோ சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.2. பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ பத்திநெறி யில்லைவேத பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது பகரவோ இசையுமில்லை யோகத்தி லேசிறிது முயலவென் றால்தேகம் ஒவ்வாதி வூண்வெறுத்தால் உயிர்வெறுத் திடலொக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தி னாற்செய்யவோ மோகத்தி லேசிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்கஎன்றால் முற்றாது பரிபாக சத்திக ளனேகநின் மூதறிவி லேஎழுந்த தாகத்தி லேவாய்க்கும் அமிர்தப் பிரவாகமே தன்னந் தனிப்பெருமையே சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.3. இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும் இவ்வுலகம் எவ்வுலகமோ என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ என்னில்மக மேருவாக்கிச் சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச் சுமையாளு மாக்கிநாளுந் துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ் சூறையிட் டிந்த்ரசாலம் அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை அம்மம்ம வெல்லலெளிதோ அருள்பெற்ற பேர்க்கெலாம் ஒளிபெற்று நிற்குமீ தருளோ அலாதுமருளோ சமயநெறி காணாத சாட்சிநீ சூட்சுமமாத் தமியனேற் குளவு புகலாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.4. இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி ஏங்குதே நெஞ்சம்ஐயோ இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென் றெண்ணவோ திடமில்லையே அனியாய மாயிந்த வுடலைநான் என்றுவரும் அந்தகற் காளாகவோ ஆடித் திரிந்துநான் கற்றதுங் கேட்டதும் அவலமாய்ப் போதல்நன்றோ கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு கந்தமூ லங்களேனும் கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான் கண்மூடி மெளனியாகித் தனியே இருப்பதற் கெண்ணினேன் எண்ணமிது சாமிநீ அறியாததோ சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.5. மத்தமத கரிமுகிற் குலமென்ன நின்றிலகு வாயிலுடன் மதிஅகடுதோய் மாடகூ டச்சிகர மொய்த்தசந் திரகாந்த மணிமேடை யுச்சிமீது முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களடு முத்துமுத் தாய்க்குலாவி மோகத் திருந்துமென் யோகத்தின் நிலைநின்று மூச்சைப் பிடித்தடைத்துக் கைத்தல நகப்படை விரித்தபுலி சிங்கமொடு கரடிநுழை நூழைகொண்ட கானமலை யுச்சியிற் குகையூ டிருந்துமென் கரதலா மலகமென்னச் சத்தமற மோனநிலை பெற்றவர்க ளுய்வர்காண் சனகாதி துணிவிதன்றோ சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.6. கைத்தலம் விளங்குமொரு நெல்லியங் கனியெனக் கண்டவே தாகமத்தின் காட்சிபுரு டார்த்தமதில் மாட்சிபெறு முத்தியது கருதின் அனு மானமாதி உத்திபல வாநிரு விகற்பமே லில்லையால் ஒன்றோ டிரண்டென்னவோ உரையுமிலை நீயுமிலை நானுமிலை என்பதும் உபாயம்நீ யுண்டுநானுஞ் சித்தம்உளன் நான்இல்லை எனும்வசனம் நீயறிவை தெரியார்கள் தெரியவசமோ செப்புகே வலநீதி யொப்புவமை யல்லவே சின்முத்தி ராங்கமரபில் சத்தமற எனையாண்ட குருமெளனி கையினால் தமியனேற் குதவுபொருளே சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.7. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ கடவுள்நீ யாங்களடியேங் கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பெறக் கற்பித்த துன்னதருளே வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர் வைவதுவும் எங்களுலக வாய்பாடு நிற்கநின் வைதிக ஒழுங்குநினை வாழ்த்தினாற் பெறுபேறுதான் ஓயாது பெறுவரென முறையிட்ட தாற்பின்னர் உளறுவது கருமமன்றாம் உபயநெறி யீதென்னின் உசிதநெறி எந்தநெறி உலகிலே பிழைபொருக்குந் தாயான கருணையும் உனக்குண் டெனக்கினிச் சஞ்சலங் கெடஅருள்செய்வாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.8. இன்னம் பிறப்பதற் கிடமென்னில் இவ்வுடலம் இறவா திருப்பமூலத் தெழுமங்கி யமிர்தொழுகு மதிமண் டலத்திலுற என்னம்மை குண்டலினிபால் பின்னம் பிறக்காது சேயென வளர்த்திடப் பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறியெனக் குண்டென்னின் இம்மையே பேசுகர்ப் பூரதீபம் மின்னும் படிக்ககண் டாகார அன்னைபால் வினையேனை யொப்புவித்து வீட்டுநெறி கூட்டிடுதல் மிகவுநன் றிவையன்றி விவகார முண்டென்னிலோ தன்னந் தனிச்சிறியன் ஆற்றிலேன் போற்றிவளர் சன்மார்க்க முத்திமுதலே சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.9. வேதாவை இவ்வணம் விதித்ததே தென்னின்உன் வினைப்பகுதி என்பன்அந்த வினைபேச அறியாது நிற்கஇவை மனதால் விளைந்ததால் மனதைநாடில் போதமே நிற்கும்அப் போதத்தை நாடிலோ போதமும் நினால்விளக்கம் பொய்யன்று தெய்வமறை யாவுமே நீயென்று போக்குவர வறநிகழ்த்தும் ஆதார ஆதேயம் முழுதுநீ யாதலால் அகிலமீ தென்னைஆட்டி ஆடல்கண் டவனுநீ ஆடுகின் றவனுநீ அருளுநீ மெளனஞான தாதாவு நீபெற்ற தாய்தந்தை தாமுநீ தமருநீ யாவுநீகாண் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.10. கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங் குளிர்தீம் புனற்கைஅள்ளிக் கொள்ளுகினும் அந்நீ ரிடைத்திளைத் தாடினுங் குளிர்சந்த வாடைமடவார் வந்துலவு கின்றதென மூன்றிலிடை யுலவவே வசதிபெறு போதும்வெள்ளை வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர மகிழ்போதும் வேலையமுதம் விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும் வேளையிலும் மாலைகந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம் விளையாடி விழிதுயிலினுஞ் சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து தமியேனை ரட்சைபுரிவாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.11.

12. தேசோ மயானந்தம்

மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி மன்னுமுனி வர்க்கேவலமாய் மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு கருமருவு காயத்தை நிர்மலம தாகவே கமலாச னாதிசேர்த்துக் காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக் கலைமதியி னூடுதாக்கி உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல் உணர்வான விழியைநாடி ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம் உற்றிடஎன் மனதின் வண்ணந் திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 1. இப்பிறவி என்னுமோர் இருட்கடலில் மூழ்கிநான் என்னுமொரு மகரவாய்ப்பட் டிருவினை எனுந்திரையின் எற்றுண்டு புற்புதம் எனக்கொங்கை வரிசைகாட்டுந் துப்பிதழ் மடந்தையர் மயற்சண்ட மாருதச் சுழல்வந்து வந்தடிப்பச் சோராத ஆசையாங் கானாறு வான்நதி சுரந்ததென மேலும்ஆர்ப்பக் கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமுங் கைவிட்டு மதிமயங்கிக் கள்ளவங் கக்காலர் வருவரென் றஞ்சியே கண்ணருவி காட்டும்எளியேன் செப்பரிய முத்தியாங் கரைசேர வுங்கருணை செய்வையோ சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 2. தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ் சந்தையிற் கூட்டம் இதிலோ சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை சதுரங்க சேனையுடனே வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம் வஞ்சனை பொறாமைலோபம் வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ வஞ்சனையி லாதகனவே எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே இரவுபக லில்லாவிடத் தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே யானென்ப தறவுமூழ்கிச் சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 3. ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை அடங்கி மனம்வீழநேரே அறியாமை யாகின்ற இருளகல இருளளியும் அல்லா திருந்தவெளிபோல் கோடா தெனைக்கண் டெனக்குள்நிறை சாந்தவெளி கூடிஇன் பாதீதமுங் கூடினே னோசரியை கிரியையில் முயன்றுநெறி கூடினே னோஅல்லன்யான் ஈடாக வேயாறு வீட்டினில் நிரம்பியே இலகிவளர் பிராணனென்னும் இருநிதி யினைக்கட்டி யோகபர னாகாமல் ஏழைக் குடும்பனாகித் தேடா தழிக்கவொரு மதிவந்த தென்கோலோ தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 4. பாடாது பாடிப் படித்தளவில் சமயமும் பஞ்சுபடு சொல்லன்இவனைப் பார்மினோ பார்மினோ என்றுசபை கூடவும் பரமார்த்தம் இதுஎன்னவே ஆடாதும் ஆடிநெஞ் சுருகிநெக் காடவே அமலமே ஏகமேஎம் ஆதியே சோதியே எங்குநிறை கடவுளே அரசே எனக்கூவிநான் வாடாது வாடுமென் முக வாட்டமுங்கண்டு வாடா எனக்கருணைநீ வைத்திடா வண்ணமே சங்கேத மாவிந்த வன்மையை வளர்ப்பித்ததார் தேடாது தேடுவோர் தேட்டற்ற தேட்டமே தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 5. பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து பேசரிய வாசியாலே பேரின்ப உண்மையை அளித்தனைஎன் மனதறப் பேரம்ப லக்கடவுளாய் அறிவா யிருந்திடும் நாதவொலி காட்டியே அமிர்தப்ர வாகசித்தி அருளினைய லாதுதிரு அம்பலமு மாகிஎனை ஆண்டனைபின் எய்திநெறியாய்க் குறிதா னளித்தனைநன் மரவுரிகொ ளந்தணக் கோலமாய் அசபாநலங் கூறினபின் மெளனியாய்ச் சும்மா இருக்கநெறி கூட்டினை எலாமிருக்கச் சிறியேன் மயங்கிமிக அறிவின்மை யாவனோ தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 6. ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன் அறிவினை மயக்கவசமோ அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும் அடுக்கடுக் காஅமைத்துப் பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி பிறங்குவத லாதொன்றினும் பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப் பேரின்ப முத்திநிலையுந் தாராது தள்ளவும் போகாது னாலது தள்ளினும் போகேனியான் தடையேது மில்லையாண் டவனடிமை யென்னுமிரு தன்மையிலும் என்வழக்குத் தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 7. கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங் கரடிவெம் புலிவாயையுங் கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங் கட்செவி எடுத்தாட்டலாம் வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாஞ் சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு சரீரத்தி னும்புகுதலாஞ் சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந் தன்னிகரில் சித்திபெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 8. எல்லாம் அறிந்தவரும் ஏதுமறி யாதவரும் இல்லையெனு மிவ்வுலகமீ தேதுமறி யாதவ னெனப்பெயர் தரித்துமிக ஏழைக்குள் ஏழையாகிக் கல்லாத அறிவிற் கடைப்பட்ட நான்அன்று கையினால் உண்மைஞானங் கற்பித்த நின்னருளி னுக்கென்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல்நான் அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறைஎயிற் றாபாச வடிவமான அந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ தடாதடா காசுநம்பால் செல்லா தடாஎன்று பேசுவா யதுதந்த செல்வமே சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 9. மின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல் மெனசிலம் பொலிகளார்ப்ப வீங்கிப் புடைத்துவிழ சுமையன்ன கொங்கைமட மின்னார்கள் பின்ஆவலால் என்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவருண்டோ என்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை ஏதென் றெடுத்துமொழிவேன் அன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்தெம் அடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக் கறமாதி பொருளுரைப்பத் தென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற செல்வமே சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 10. புத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில் பொலிவுற இருக்குமியல்பும் பொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும் பூமண்ட லாதிக்கமும் மத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம் மாலுமொரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளனதே சிகனென்ன வந்தநின் னருள்வழிகாண் சுத்தபரி பூரண அகண்டமே ஏகமே சுருதிமுடி வானபொருளே சொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள் சுரந்துபொரு கருணைமுகிலே சித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 11.

13. சிற்சுகோதய விலாசம்

காக மோடுகழு கலகை நாய்நரிகள் சுற்று சோறிடு துருத்தியைக் காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர் காமவேள் நடன சாலையை போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும் மலமி குந்தொழுகு கேணியை மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை முடங்க லார்கிடை சரக்கினை மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக வேதம் ஓதியகு லாலனார் வனைய வெய்யதடி கார னானயமன் வந்த டிக்குமொரு மட்கலத் தேக மானபொயை மெய்யெ னக்கருதி ஐய வையமிசை வாடவோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 1 குறிக ளோடுகுண மேது மின்றியனல் ஒழுக நின்றிடும் இரும்பனல் கூட லின்றியது வாயி ருந்தபடி கொடிய ஆணவ அறைக்குளே அறிவ தேதும்அற அறிவி லாமைமய மாயி ருக்குமெனை அருளினால் அளவி லாததனு கரண மாதியை அளித்த போதுனை அறிந்துநான் பிறவி லாதவண நின்றி டாதபடி பலநி றங்கவரு முபலமாய்ப் பெரிய மாயையி லழுந்தி நின்னது ப்ரசாத நல்லருள் மறந்திடுஞ் சிறிய னேனுமுனை வந்த ணைந்துசுக மாயி ருப்பதினி என்றுகாண் தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 2 ஐந்து பூதமொரு கானல் நீரென அடங்க வந்தபெரு வானமே ஆதி யந்தநடு வேது மின்றியரு ளாய்நிறைந் திலகு சோதியே தொந்த ரூபமுடன் அரூப மாதிகுறி குணமி றந்துவளர் வத்துவே துரிய மேதுரிய உயிரி னுக்குணர்வு தோன்ற நின்றருள் சுபாவமே எந்த நாளுநடு வாகி நின்றொளிரும் ஆதியே கருணை நீதியே எந்தை யேஎன இடைந்திடைந் துருகும் எளிய னேன்கவலை தீரவுஞ் சிந்தை யானதை யறிந்து நீயுனருள் செய்ய நானுமினி யுய்வனோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 3 ஐவ ரென்றபுல வேடர் கொட்டம தடங்க ம்ர்க்கடவன் முட்டியாய் அடவி நின்றுமலை யருகில் நின்றுசரு காதி தின்றுபனி வெயிலினால் மெய்வ ருந்துதவ மில்லைநற் சரியை கிரியை யோகமெனும் மூன்றதாய் மேவு கின்றசவு பான நன்னெறி விரும்ப வில்லையுல கத்திலே பொய்மு டங்குதொழில் யாத தற்குநல சார தித்தொழில் நடத்திடும் புத்தி யூகமறி வற்ற மூகமிவை பொருளெ னக்கருதும் மருளன்யான் தெய்வ நல்லருள் படைத்த அன்பரொடு சேர வுங்கருணை கூர்வையோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 4 ஏகமானவுரு வான நீயருளி னால னேகவுரு வாகியே எந்த நாளகில கோடி சிர்ட்டிசெய இசையு நாள்வரை யநாள்முதல் ஆக நாளது வரைக்கு முன்னடிமை கூடவே சனன மானதோ அநந்த முண்டுநல சனன மீதிதனுள் அறிய வேண்டுவன அறியலாம் மோக மாதிதரு பாச மானதை அறிந்து விட்டுனையும் எனையுமே முழுது ணர்ந்துபர மான இன்பவெள மூழ்க வேண்டும் இதுஇன்றியே தேக மேநழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும்வகை உள்ளதோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 5 நியம லட்சணமும் இயம லட்சணமும் ஆச னாதிவித பேதமும் நெடிது ணர்ந்திதய பத்ம பீடமிசை நின்றி லங்குமச பாநலத் தியல றிந்துவளர் மூல குண்டலியை இனிதி றைஞ்சியவ ளருளினால் எல்லை யற்றுவளர் சோதி மூலஅனல் எங்கள் மோனமனு முறையிலே வயமி குந்துவரும் அமிர்த மண்டல மதிக்கு ளேமதியை வைத்துநான் வாய்ம டுத்தமிர்த வாரி யைப்பருகி மன்னு மாரமிர்த வடிவமாய்ச் செயமி குந்துவரு சித்த யோகநிலை பெற்று ஞானநெறி அடைவனோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 6 எறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக அல்ல லென்றொருவர் பின்செலா தில்லை யென்னுமுரை பேசி டாதுலகில் எவரு மாமெனம திக்கவே நெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி நோய்க ளற்றசுக வாழ்க்கையாய் நியம மாதிநிலை நின்று ஞானநெறி நிட்டை கூடவுமெந் நாளுமே அறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும் அன்றி மோனகுரு வாகியே அகில மீதுவர வந்த சீரருளை ஐய ஐயஇனி என்சொல்கேன் சிறிய னேழைநம தடிமை யென்றுனது திருவு ளத்தினிலி ருந்ததோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 7 எவ்வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர் எனக்கு ழைந்துருகி நன்மையாம் இதமு ரைப்பஎன தென்ற யாவையும் எடுத்தெ றிந்துமத யானைபோல் கவ்வை யற்றநடை பயில அன்பரடி கண்டதே அருளின் வடிவமாக் கண்ட யாவையும் அகண்ட மென்னஇரு கைகுவித்து மலர் தூவியே பவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம் விழியு திர்ப்பமொழி குளறியே பாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது பாவையொத் தசைத லின்றியே திவ்ய அன்புருவ மாகி அன்பரொடும் இன்ப வீட்டினி லிருப்பனோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 8 மத்தர் பேயரொடு பாலர் தன்மையது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு கால மாதியை மறந்து நின்னடிய ரடியிலே பத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு மையல் தந்தகில மாயையைப் பாரு பாரென நடத்த வந்ததென் பார தத்தினுமி துள்ளதோ சுத்த நித்தவியல் பாகு மோவுனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை சொல்லு மாயையினு மில்லைஎன் சித்த மிப்படி மயங்கு மோஅருளை நம்பி னோர்கள்பெறு பேறிதோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 9 பன்மு கச்சமய நெறிப டைத்தவரும் யாங்க ளேகடவு ளென்றிடும் பாத கத்தவரும் வாத தர்க்கமிடு படிற ருந்தலை வணங்கிடத் தன்மு சத்திலுயிர் வரவழைக்கும்எம தரும னும்பகடு மேய்க்கியாய்த் தனியி ருப்பவட நீழ லூடுவளர் சனக னாதிமுனி வோர்கள்தஞ் சொன்ம யக்கமது தீர அங்கைகொடு மோன ஞானம துணர்த்தியே சுத்த நித்தஅரு ளியல்ப தாகவுள சோம சேகரகிர் பாளுவாய்த் தென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு எம்மு கத்தினும் வணங்குவேன் தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு கோதய விலாசமே - 10

14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம்

ஆகார புவனமின் பாகார மாக அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக் குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல் தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1. அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும் ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத் தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச் சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே இனம்பிரிந்த மான்போல்நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர்பக்க லிருத்தி வைத்துக் கனந்தருமா கனமேதண் அருளில் தானே கனிபலித்த ஆனந்தக் கட்டிப் பேறே. 2. பேறனைத்தும் அணுவெனவே உதறித் தள்ளப் பேரின்ப மாகவந்த பெருக்கே பேசா வீறனைத்தும் இந்நெறிக்கே என்ன என்னை மேவென்ற வரத்தேபாழ் வெய்ய மாயைக் கூறனைத்துங் கடந்தஎல்லைச் சேட மாகிக் குறைவறநின் றிடுநிறைவே குலவா நின்ற ஆறனைத்தும் புகுங்கடல்போல் சமயகோடி அத்தனையுந் தொடர்ந்துபுகும் ஆதி நட்பே. 3. ஆதியந்தம் எனும்எழுவா யீறற் றோங்கி அருமறைஇன் னமுங்காணா தரற்ற நானா பேதமதங் களுமலைய மலைபோல் வந்தப் பெற்றியரும் வாய்வாதப் பேய ராகச் சாதகமோ னத்திலென்ன வடவால் நீழல் தண்ணருட்சந் திரமெளலி தடக்கைக் கேற்க வேதகசின் மாத்திரமா யெம்ம னோர்க்கும் வெளியாக வந்தவொன்றே விமல வாழ்வே. 4. விமலமுதற் குணமாகி நூற்றெட் டாதி வேதமெடுத் தெடுத்துரைத்த விருத்திக் கேற்க அமையுமிலக் கணவடிவா யதுவும் போதா தப்பாலுக் கப்பாலாய் அருட்கண் ணாகிச் சமமுமுடன் கலப்புமவிழ் தலும்யாங் காணத் தண்ணருள்தந் தெமைக்காக்குஞ் சாட்சிப் பேறே இமையளவும் உபகார மல்லால் வேறொன் றியக்காநிர்க் குணக்கடலா யிருந்த ஒன்றே. 5. ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட ஒளியாகி வெளியாகி உருவு மாகி நன்றாகித் தீதாகி மற்று மாகி நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி இன்றாகி நாளையுமாய் மேலு மான எந்தையே எம்மானே என்றென் றேங்கிக் கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக் கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே. 6. அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமிர்தே என்கண்ணே அரிய வான பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப் பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும் விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே. 7. விண்ணவரிந் திரன்முதலோர் நார தாதி விளங்குசப்த ரிடிகள்கன வீணை வல்லோர் எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர் இருக்காதி மறைமுனிவர் எல்லா மிந்தக் கண்ணகல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளங் கையில்நெல்லிக் கனிபோலக் காட்சி யாகத் திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும். 8. செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம் தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான அப்பரிசா ளரும·தே பிடித்தா லிப்பால் அடுத்ததந்நூல் களும்விரித்தே அனுமா னாதி ஒப்பவிரித் துரைப்பரிங்ஙன் பொய்மெய் என்ன ஒன்றிலைஒன் றென்ப்பார்ப்ப தொவ்வா தார்க்கும் இப்பரிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி. 9. இயல்பென்றுந் திரியாமல் இயம மாதி எண்குணமுங் காட்டியன்பால் இன்ப மாகிப் பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப் பண்புறவுஞ் செளபான பட்சங் காட்டி மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி மற்றங்க நூல்வணங்க மெளன மோலி அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ. 10. அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின் றறிஞரெல்லாம் நடுஅறிய அணிமா ஆதி வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும் இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத் தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம். 11. சன்மார்க்கம் ஞானமதின் பொருளும் வீறு சமயசங்கே தப்பொருளுந் தானென் றாகப் பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்த போதங் கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர் கன்மார்க்க நெஞ்சமுள எனக்குந் தானே கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும். 12. காண்டல்பெறப் புறத்தினுள்ள படியே உள்ளுங் காட்சிமெய்ந்நூல் சொலும்பதியாங் கடவு ளேநீ நீண்டநெடு மையுமகலக் குறுக்குங் காட்டா நிறைபரிபூ ரணஅறிவாய் நித்த மாகி வேண்டுவிருப் பொடுவெறுப்புச் சமீபந் தூரம் விலகலணு குதல்முதலாம் விவகா ரங்கள் பூண்டஅள வைகள்மனவாக் காதி யெல்லாம் பொருந்தாம லகம்புறமும் புணர்க்கை யாகி. 13. ஆகியசற் காரியவூ கத்துக் கேற்ற அமலமாய் நடுவாகி அனந்த சத்தி யோகமுறும் ஆனந்த மயம தாகி உயிர்க்குயிரா யெந்நாளும் ஓங்கா நிற்ப மோகஇருள் மாயைவினை உயிர்கட் கெல்லாம் மொய்த்ததென்கொல் உபகார முயற்சி யாகப் பாகமிக அருளஒரு சத்தி வந்து பதித்ததென்கொல் நானெனுமப் பான்மை என்கொல். 14. நானென்னும் ஓரகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சகமாயை நானா வாகித் தான்வந்து தொடருமித்தால் வளருந் துன்பச் சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார் ஊனென்றும் உடலென்றுங் கரண மென்றும் உள்ளென்றும் புறமென்றும் ஒழியா நின்ற வானென்றுங் காலென்றுந் தீநீ ரென்றும் மண்ணென்றும் மலையென்றும் வனம தென்றும். 15. மலைமலையாங் காட்சிகண்கா ணாமை யாதி மறப்பென்றும் நினைப்பென்றும் மாயா வாரி அலையலையா யடிக்குமின்ப துன்ப மென்றும் அதைவிளைக்கும் வினைகளென்றும் அதனைத் தீர்க்கத் தலைபலவாஞ் சமயமென்றுந் தெய்வ மென்றுஞ் சாதகரென் றும்மதற்குச் சாட்சி யாகக் கலைபலவா நெறியென்றுந் தர்க்க மென்றுங் கடலுறுநுண் மணலெண்ணிக் காணும் போதும். 16. காணரிய அல்லலெல்லாந் தானே கட்டுக் கட்டாக விளையுமதைக் கட்டோ டேதான் வீணினிற்கர்ப் பூரமலை படுதீப் பட்ட விந்தையெனக் காணவொரு விவேகங் காட்ட ஊணுறக்கம் இன்பதுன்பம் பேரூ ராதி ஒவ்விடவும் எனைப்போல உருவங் காட்டிக் கோணறவோர் மான்காட்டி மானை ஈர்க்குங் கொள்கையென அருள்மெளன குருவாய் வந்து. 17. வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை யாதொன்று பற்றின்அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம். 18. அறிவாகி ஆனந்த மயமா யென்றும் அழியாத நிலையாகி யாதின் பாலும் பிறியாமல் தண்ணருளே கோயி லான பெரியபரம் பதியதனைப் பேறவே வேண்டில் நெறியாகக் கூறுவன்கேள் எந்த நாளும் நிர்க்குணநிற்(கு) உளம்வாய்த்து நீடு வாழ்க செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம்பெற் றிடுகபந்தந் தீர்க வென்றே. 19. பந்தமறும் மெஞ்ஞான மான மோனப் பண்பொன்றை அருளியந்தப் பண்புக் கேதான் சிந்தையில்லை நானென்னும் பான்மை யில்லை தேசமில்லை காலமில்லை திக்கு மில்லை தொந்தமில்லை நீக்கமில்லை பிரிவு மில்லை சொல்லுமில்லை இராப்பகலாந் தோற்ற மில்லை அந்தமில்லை ஆதியில்லை நடுவு மில்லை அகமுமில்லை புறமில்லை அனைத்து மில்லை. 20. இல்லைஇல்லை யென்னினொன்று மில்லா தல்ல இயல்பாகி என்றுமுள்ள இயற்கை யாகிச் சொல்லரிய தன்மையதா யான்றா னென்னத் தோன்றாதெல் லாம்விழுங்குஞ் சொரூப மாகி அல்லையுண்ட பகல்போல அவித்தை யெல்லாம் அடையவுண்டு தடையறவுன் அறிவைத் தானே வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு வேதகமாய்ப் பேசாமை விளக்குந் தானே. 21. தானான தன்மயமே யல்லால் ஒன்றைத் தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே போனாலுங் கர்ப்பூர தீபம் போலப் போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம் ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும். 22. அதுவென்றால் எதுவெனவொன் றடுக்குஞ் சங்கை ஆதலினால் அதுவெனலும் அறவே விட்டு மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும் பதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட படிக்குநிரு விகற்பத்தாற் பரமா னந்த கதிகண்டு கொள்ளவும்நின் னருள்கூ ரிந்தக் கதியன்றி யுறங்கேன்மேற் கருமம் பாரேன். 23. பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து வாராயோ என்ப்ராண நாதா என்பேன் வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு பூராய மாமேலொன் றறியா வண்ணம் புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே நீராள மாயுருகிக் கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன். 24. ஆயுமறி வாகியுன்னைப் பிரியா வண்ணம் அணைந்துசுகம் பெற்றவன்பர் ஐயோ வென்னத் தீயகொலைச் சமயத்துஞ் செல்லச் சிந்தை தெளிந்திடவுஞ் சமாதானஞ் செய்வேன் வாழ்வான் காயிலைபுன் சருகாதி யருந்தக் கானங் கடல்மலைஎங் கேஎனவுங் கவலை யாவேன் வாயில் கும்பம் போற்கிடந்து புரள்வேன் வானின் மதிகதிரை முன்னிலையா வைத்து நேரே. 25. நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம் நித்தம்வர வுங்களைஇந் நிலைக்கே வைத்தார் ஆரேயங் கவர்பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றேநீ யாரா லேதான் பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள்எம் பெருமான் நும்போல் தாராள மாக்கருணை பொழியச் செய்யுஞ் சாதகமென் னேகருதிச் சாற்று மென்பேன். 26. கருதரிய விண்ணேநீ எங்கு மாகிக் கலந்தனையே யுன்முடிவின் காட்சி யாக வருபொருளெப் படியிருக்குஞ் சொல்லா யென்பேன் மண்ணேயுன் முடிவிலெது வயங்கு மாங்கே துரியஅறி வுடைச்சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல்லென்பேன் சுருதி யேநீ ஒருவரைப்போல் அனைவருக்கும் உண்மை யாமுன் உரையன்றோ உன்முடிவை உரைநீ என்பேன். 27. உரையிறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி ஒலிக்கின்ற கடலேஇவ் வுலகஞ் சூழக் கரையுமின்றி யுன்னைவைத்தார் யாரே என்பென் கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும் வரிசிறைவண் டினங்காள்ஓ திமங்காள் தூது மார்க்கமன்றோ நீங்களிது வரையி லேயும் பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு பேசியதுண் டோவொருகாற் பேசு மென்பேன். 28. ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம் வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளனென் றும்மனக்கே ஆணவாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப் பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே. 29. அன்றுமுதல் இன்றைவரைச் சனன கோடி அடைந்தடைந்திங் கியாதனையால் அழிந்த தல்லால் இன்றைவரை முக்தியின்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போ தேதான் துன்றுமனக் கவலைகெடப் புலைநா யேனைத் தொழும்புகொளச் சீகாழித் துரையே தூது சென்றிடவே பொருளைவைத்த நாவ லோய்நஞ் சிவனப்பா என்ற அருட் செல்வத் தேவே. 30. தேவர் தொழும் வாதவூர்த் தேவே என்பேன் திருமூலத் தேவேஇச் சகத்தோர் முத்திக் காவலுறச் சிவவென்வாக் குடனே வந்த அரசேசும் மாவிருந்துன் அருளைச் சாரப் பூவுலகில் வளரருணை கிரியே மற்றைப் புண்ணியர்கா ளோவென்பேன் புரையொன் றில்லா ஓவியம்போல் அசைவறவுந் தானே நிற்பேன் ஓதரிய துயர்கெடவே யுரைக்கு முன்னே. 31. ஓதரிய சுகர்போல ஏன்ஏன் என்ன ஒருவரிலை யோஎனவும் உரைப்பேன் தானே பேதம்அபே தங்கெடவும் ஒருபே சாமை பிறவாதோ ஆலடியிற் பெரிய மோன நாதனொரு தரமுலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றென்றே நானா வாகிக் காதல்மிகு மணியிழையா ரெனவா டுற்றேன் கருத்தறிந்து புரப்பதுன்மேற் கடன்முக் காலும். 32. காலமொடு தேசவர்த்த மான மாதி கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி மாலறவுஞ் சைவமுதல் மதங்க ளாகி மதாதீத மானஅருள் மரபு வாழி சாலமிகும் எளியேனிவ் வழக்குப் பேசத் தயவுவைத்து வளர்த்தஅருள் தன்மைவாழி ஆலடியிற் பரமகுரு வாழி வாழி அகண்டிதா காரஅரு ளடியார் வாழி. 33.

15. தேன்முகம்

தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும் நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1. வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக் காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால் ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2. கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக் கண்ணே கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி அத்தால் பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன். 3. விளங்கவெண் ணீறுபூசி விரிசடைக் கங்கை தாங்கித் துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக் களங்கமி லுருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி வளர்ந்ததா ளென்ன உள்ள மன்றென மறையொன் றின்றி. 4. மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள் முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும் குறைவிலா வணநி றைந்து கோதிலா நடனஞ் செய்வான் இறையவன் எனலாம் யார்க்கும் இதயசம் மதமீ தல்லால். 5. அல்லலாந் தொழில்ப டைத்தே அடிக்கடி உருவெ டுத்தே மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னில் தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திட திருள்நீங் காது நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும். 6. நானென நிற்கு ஞானம் ஞானமன் றந்த ஞானம் மோனமா யிருக்க வொட்டா மோனமின் றாக வேதான் தேனென ருசிக்கும் அன்பாற் சிந்தைநைந் துருகும் வண்ணம் வானென நிறைந்தா னந்த மாகடல் வளைவ தின்றே. 7. இன்றென இருப்பே மென்னின் என்றுஞ்சூ னியமா முத்தி நன்றொடு தீது மன்றி நாமுன்னே பெறும்அ வித்தை நின்றது பெத்தந் தானே நிரந்தர முத்தி யென்னின் ஒன்றொரு வரைநான் கேட்க உணர்வில்லை குருவுமில்லை. 8. இல்லையென் றிடினிப்பூமி இருந்தவா றிருப்போ மென்னில் நல்லவன் சாரு வாகன் நான்சொலும் நெறிக்கு வீணில் தொல்லையேன் ஆகமாதி தொடுப்பதேன் மயக்க மேதிங் கொல்லைவந் திருமி னென்ன வுறவுசெய் திடுவ னந்தோ. 9. அந்தணர் நால்வர் காண அருட்குரு வாகி வந்த எந்தையே எல்லாந் தானென் றியம்பினன் எமைப்ப டைத்த தந்தைநீ எம்மைக் காக்குந் தலைவனே நுந்தை யன்றோ பந்தமில் சித்தி முத்தி படைக்கநின் அருள்பா லிப்பாய். 10.

16. பன்மாலை

பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர் பாமாலைக் கேநீதான் பட்ச மென்று நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர் நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன் சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத் தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என்மாலை யறிந்திங்கே வாவா என்றே எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே. 1. கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன் கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும் ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும் இடர்செயுமைம் புலனுங்கா மாதி யாறும் வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே. 2. வடிவனைத்துந் தந்தவடி வில்லாச் சுத்த வான்பொருளே எளியனேன் மனமா மாயைக் குடிகெடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மோன குருவேஎன் தெய்வமே கோதி லாத படியெனக்கா னந்தவெள்ளம் வந்து தேக்கும் படியெனக்குன் திருக்கருணை ப்ற்று மாறே அடியெடுத்தென் முடியிலின்னம் வைக்க வேண்டும் அடிமுடியொன் றில்லாத அகண்ட வாழ்வே. 3. வாழ்வனைத்தும் மயக்கமெனத் தேர்ந்தேன் தேர்ந்த வாறேநான் அப்பாலோர் வழிபா ராமல் தாழ்வுபெற்றிங் கிருந்தேன்ஈ தென்ன மாயந் தடையுற்றால் மேற்கதியுந் தடைய தாமே ஊழ்வலியோ அல்லதுன்றன் திருக்கூத் தோஇங் கொருதமியேன் மேற்குறையோ வுணர்த்தா யின்னம் பாழ் அவதிப் படஎனக்கு முடியா தெல்லாம் படைத்தளித்துத் துடைக்கவல்ல பரிசி னானே. 4. நானானிங் கெனுமகந்தை எனக்கேன் வைத்தாய் நல்வினைதீ வினைஎனவே நடுவே நாட்டி ஊனாரும் உடற்சுமைஎன் மீதேன் வைத்தாய் உயிரெனவு மென்னையொன்றா வுள்ளேன் வைத்தாய் ஆனாமை யாயகில நிகில பேதம் அனைத்தினுள்ளுந் தானாகி அறிவா னந்தத் தேனாகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல் செழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த வொன்றே. 5. ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால் நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கிய னல்லேன் நிவர்த்தியவை வேண்டுமிந்த நீல னுக்கே என்றுமென்றும் இந்நெறியோர் குணமு மில்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ கன்றுமனத் துடனஆடு தழைதின் றாற்போல் கல்வியுங்கேள் வியுமாகிக் கலக்குற் றேனே. 6. உற்றதுணை நீயல்லாற் பற்று வேறொன் றுன்னேன்பன் னாள்உலகத் தோடி யாடிக் கற்றதுங்கேட் டதுமிதனுக் கேது வாகுங் கற்பதுங்கேட் பதுமமையுங் காணா நீத நற்றுணையே அருள்தாயே இன்ப மான நாதாந்த பரம்பொருளே நார ணாதி சுற்றமுமாய் நல்லன்பர் தமைச்சே யாகத் தொழும்புகொளுங் கனாகனமே சோதிக் குன்றே. 7. குன்றாத மூவருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி நின்றாயே மாயைஎனுந் திரையை நீக்கி நின்னையா ரறியவல்லார் நினைப்போர் நெஞ்சம் மன்றாக இன்பக்கூத் தாட வல்ல மணியேஎன் கண்ணேமா மருந்தே நால்வர்க் கன்றாலின் கீழிருந்து மோன ஞானம் அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே. 8. திரையில்லாக் கடல்போலச் சலனந் தீர்ந்து தெளிந்துருகும் பொன்போலச் செகத்தை எல்லாங் கரையவே கனிந்துருக்கும் முகத்தி லேநீ கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள் வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி வார்த்தைசொன்னாற் சுகம்வருமோ வஞ்ச னேனை இரையிலே யிருத்திநிரு விகற்ப மான இன்பநிட்டை கொடுப்பதையா எந்த நாளோ. 9. எந்தநா ளுனக்கடிமை யாகு நாளோ எந்நாளோ கதிவருநாள் எளிய னேன்றன் சிந்தைநா ளதுவரைக்கும் மயங்கிற் றல்லால் தெளிந்ததுண்டோ மெளனியாய்த் தெளிய ஓர்சொல் தந்தநாள் முதலின்பக் கால்சற் றல்லால் தடையறஆ னந்தவெள்ளந் தானே பொங்கி வந்தநா ளில்லைமெத்த அலைந்தே னுன்னை மறவாவின் பத்தாலே வாழ்கின் றேனே. 10.

17. நினைவு ஒன்று

நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளட்டுந் தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல் தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம் பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான் மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே. 1. ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங் கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய் கருமொழியிங் குனக்கில்லை மொழிக்குமொழி ருசிக்கக் கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங்கண்டனைமேல் தருமொழியிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத் தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே. 2. நில்லாத ஆக்கைநிலை யன்றனவே கண்டாய் நேயஅருள் மெய்யன்றோ நிலயமதா நிற்கக் கல்லாதே ஏன் படித்தாய் கற்றதெல்லாம் மூடங் கற்றதெல்லாம் மூடமென்றே கண்டனையும் அன்று சொல்லாலே பயனில்லை சொல்முடிவைத் தானே தொடர்ந்துபிடி மர்க்கடம்போல் தொட்டதுபற் றாநில் எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண் டடிநீ இராப்பகலில் லாவிடமே எமக்கிடமென் றறிந்தே. 3. இடம்பொருளே வலைக்குறித்து மடம்புகுநா யெனவே எங்கேநீ யகப்பட்டா யிங்கேநீ வாடா மடம்பெறுபாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன்னிடமே இடம்அந்த மாநிலத்தே பொருளுந் திடம்பெறவே நிற்கினெல்லா உலகமும்வந் தேவல் செய்யுமிந்த நிலைநின்றோர் சனகன்முதல் முனிவர் கடம்பெறுமா மதயானை என்னவுநீ பாசக் கட்டான நிகளபந்தக் கட்டவிழப் பாரே. 4. பாராதி யண்டமெலாம் படர்கானற் சலம்போல் பார்த்தனையே முடிவில்நின்று பாரெதுதான் நின்ற தாராலும் அறியாத சத்தன்றோ அதுவாய் அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாவை கண்டாய் பூராய மாகவுநீ மற்றொன்றை விரித்துப் புலம்பாதே சஞ்சலமாப் புத்தியைநாட் டாதே ஓராதே ஒன்றையுநீ முன்னிலைவை யாதே உள்ளபடி முடியுமெலாம் உள்ளபடி காணே. 5. உள்ளபடி யென்னவுநீ மற்றொன்றைத் தொடர்ந்திட் டுளங்கருத வேண்டாநிட் களங்கமதி யாகிக் கள்ளமனத் துறவைவிட்டெல் லாந்துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல்பக லற்ற வெள்ளவெளிக் கடல்மூழ்கி யின்பமயப் பொருளாய் விரவியெடுத் தெடுத்தெடுத்து விள்ளவும்வா யின்றிக் கொள்ளைகொண்ட கண்ணீருங் கம்பலையு மாகிக் கும்பிட்டுச் சகம்பொயெனத் தம்பட்ட மடியே. 6. அடிமுடியும் நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டால் அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது குடிமுழுதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த கோலமெல்லாம் நன்றாகுங் குறைவுநிறை வறவே விடியுமுத யம்போல அருளுதயம் பெற்ற வித்தகரோ டுங்கூடி விளையாட லாகும் படிமுழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப் பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் வருமே. 7. வரும்போமென் பனவுமின்றி யென்றுமொரு படித்தாய் வானாதி தத்துவத்தை வளைந்தருந்தி வெளியாம் இரும்போகல் லோமரமோ என்னும்நெஞ்சைக் கனல்மேல் இட்டமெழு காவுருக்கும் இன்பவெள்ள மாகிக் கரும்போகண் டோசீனி சருக்கரையோ தேனோ கனியமிர்தோ எனருசிக்குங் கருத்தவிழ்ந்தோ ருணர்வார் அரும்போநன் மணங்காட்டுங் காமரசங் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அந்நலந்தான் விளங்கும். 8. தானேயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகத் தன்மையினாற் படைத்தளிக்குந் தலைமையது வான கோனாக வொருமுதலிங் குண்டெனவும் யூகங் கூட்டியதுஞ் சகமுடிவிற் குலவுறுமெய்ஞ் ஞான வானாக அம்முதலே நிற்குநிலை நம்மால் மதிப்பரிதாம் எனமோனம் வைத்ததும்உன் மனமே ஆனாலும் மனஞ்சடமென் றழுங்காதே யுண்மை அறிவித்த இடங்குருவாம் அருளிலதொன் றிலையே. 9.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக