செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 3



     திருமூலர் அருளிய திருமந்திரம் 
            இரண்டாம் தந்திரம்

1.அகத்தியம்


நடுவு நில்லா திவ்வுலகம் சரிந்து
கெடு கின்ற தெம்பெருமான் என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.



அங்கி யுதயம் வளர்க்கு மகத்தியன்
அங்கி யுதயம் செய்மேல் பால் அவனொடு
மங்கி யுதயம் செய் வடபால் தவமுனி
எங்கும் வளம் கொள்ளிலங் கொளிதானே.



2. பதிவலியில் வீரட்டம் எட்டு


கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எலாம் 

வருத்தஞ் செய்தானென்றும் வானவர் வேண்டக்
குருத் துயர் சூலம்கைக் கொண்டு கொன்றானே.



கொலையில் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத்தா னங்கி யிட்டு
நிலைஉலகுக் கிவன் வேண்டு மென்றெண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே.



எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித் தவன் தாளுணர் தேவர்கள்
பொங்குஞ் சினத்துள் அயன்தலை முன்

அங்கச்சுதனை உதிரம் கொண்டானே.


எங்கும் கலந்தென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித் தாழி செய்தானே.



அப்பணி செம்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும் மலக் காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே.



முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தியுரி அரனாவது அறிகிலர்
சத்தி கருதிய தாம் பல தேவரும்
அத்தீயினுள் எழுந்தன்று கொலையே.



மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முன்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.



இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தம் கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே.



3. இலிங்க புராணம்


அடி சேர்வன் என்ன எம்மாதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகித்
திடமார் தவம் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே.



திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்றெண்ணி அயருற வேண்டா
பரியுடை யாளர்க்குப் பொய் யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே.



ஆழி வலங் கொண்டு அயன்மா லிருவரும்
ஊழி வலஞ் செய்ய வொண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே.



தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்புயில் பெருவலி
ஆங்கு நெரித்தமரா வென்றழைத்த பின்
நீங்காவருள் செய்தான் நின்மலன் தானே.



உறுவதறி தண்டி ஒண் மணல் கூட்டி
அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே.



ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ் சென்று
நாடி இறைவா நம வென்று கும்பிட
ஈடில்லா புகழோன் எழுக வென்றானே.



4. தக்கன் வேள்வி


தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெந்தழ லூடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே.



சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவனல்ல யாமே உலகினில்
பந்தம் செய்பாசத்து வீழ்ந் தவஞ் செய்ய
அந்தம் இலானு மருள் புரிந்தானே.



அப்பரிசே அயனார் பதி வேள்வியுள்
அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும்
அப்பரிசே அது நீர்மையை உள் கலந்து
அப்பரிசே சிவன் ஆலிக் கின்றானே.



அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அப்பரிசே அவர் ஆகிய காரணம்
அப்பரிசு அங்கியுள நாளும் உள்ளிட்டு
அப்பரிசு வாகி அலர்ந் திருந்தானே.



அலர்ந் திருந்தான் என்றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே.



அரிபிரமன் தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்த கை தோள் தான்
அரனருள் இன்றி அழிந்த நல்லோரே.



செவி மந்திரஞ் சொல்லும் செய்தவத் தேவர்
அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச்
செவி மந்திரஞ் செய்து தாமுற நோக்கும்
குவி மந்திரங் கொல் கொடிய தாமே .



நல்லார் நவகுண்ட மொன்பது மின்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்க வென
வில்லால் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.



தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்தாங் கடைவது எம்மாதிப் பிரானை
விளிந்தானது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள் செய்ததூய் மொழியானே.



5. பிரளயம்


கருவரை மூடிக்கலந் தெழும் வெள்ளத்
திருவரும் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கு ஒளி யாகி
அருவரையாய் நின் றருள்புரிந்தானே.



அலைகடல் ஊடறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்டு
உலகார் அழல் கண்டுள் விழாது ஓடி
அலைவாயில் வீழாமல் அஞ்சல் என்றானே.



தண் கடல் விட்ட தமரரும் தேவரும்
எண் கடல் சூழ் எம்பிரானென் றிறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர்மே லெழுந் தப்புறம்
கண் கடல் செய்யுங் கருத் தறியாரே.



சமைக்க வல்லானைச் சயம்பு வென்றேத்தி
அமைக்க வல்லார் இவ்வுலகத் துளாரே
திகைத்தெண் நீரில் கடல் ஒலிஓசை
மிகைக் கொள அங்கி மிகாமை வைத்தானே.



பண்பழி செய் வழிபாடு சென்று அப்புறம்
கண் பழியாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்

விண் பழியாத விருத்தி கொண்டானே.


6. சக்கரப் பேறு


மால்போதக னென்னும் வண்மைக் கிங்காங்காரம்
கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம்
மேற்போக வெள்ளி மலை அமரர்பதி
பார்போகம் ஏழும்படைத் துடையானே.



சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே.



கூறதுவாகக் குறித்து நல் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.



தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர்பால்
தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசி முடிமேல் விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.



7. எலும்பும் கபாலமும்


எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமு மேந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமு மிற்று மண்ணாமே.



8. அடிமுடி தேடல்


பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மால் தங்கள் தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்று கின்றாரே.



அடிமுடி காண்பார் அயன்மா லிருவர்
படிகண் டிலர் மீண்டும் பார் மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டேனென் றயன் பொய்மொழிந் தானே.



ஆம் ஏழுலகுற நின்ற எம் அண்ணலும்
தாம் ஏழுலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் 
ஏழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவனான் மையாலே.



ஊனாய் உயிராய் உணரங் கியாய் முன்னம்
சேணாய் வானோங்கித் திருஉருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து
தாண் முழுது அண்டமு மாகி நின்றானே.



நின்றான் நில முழுது மண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றா ரிருவர் திருமுடி மேல் செல
நன்றாம் கழல் அடி நாட ஒண்ணாதே.



சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தா என்றானும் முனிவரும்
பாவடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப் பெய்தும் மாறே.



தானக் கமலத் திருந்த சதுர்முகன்
தானக் கருங் கடல் ஊழித் தலைவனும்
ஊனத்தி னுள்ளே உயிர் போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மைய தாமே.



ஆலிங்கனம் செய்தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்கன் வைத்ததோர் மெய்ந்நெறி முன் கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்
கோலிங்கு அமைஞ் சருள் கூடலு மாமே.



வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்தெம்போல் அரனை அறிகிலர்
ஆள் கொடுத் தின்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சார கிலாரே.



ஊழி வலஞ்செய் தங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுர் முகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தா வென
ஊழிக் கதிரோ னொளியை வென்றானே.



9. படைத்தல்


ஆதியோ டந்தமிலாத பரா பரம்
போத மதாகப் புணரும் பராபரை
சோதி யதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதிற் பரை யதன் பால் திகழ் நாதமே.



நாதத்தில் விந்துவும் நாத விந்துக் களில்
தீதற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞான கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.



இல்லது சத்தி இடந் தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் இருந்திடும்
வல்ல தாகவழி செய்த அப் பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.



தூரத்தில் சோதி தொடர்ந் தொரு சத்தியாய்
ஆர்வத்து நாத மணைந் தொரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தியோர் சாத்து மானாமே.



மானின் கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின் கண்ணீரும் கலந்து கடினமாய்த்
தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐம் பூதமாய்ப்
பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.



புவனம் படைப்பான் ஒருவ னொருத்தி
புவனம் படைப் பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப் பானும் பூமிசை யானாய்
புவனம் படைப் பானப் புண்ணியன் தானே.



புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுது மாய்
மண்
ணியல் பாக மலர்ந்து எழு பூவிலே.



நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்தில் சோதி பிறக்கும் அக்காற்றிடை
ஓருடை நல் லுயிர்ப்பாத மொலி சத்தி
நீரிடை மண்ணின் நிலைப் பிறப்பாமே.



உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனு மாதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டு இவ்வுலகம் படைக்கும் பொருளே.



ஓங்கு பெருங் கடல் உள்ளுறு வானொடும்
பாங்கர் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசைமேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே.



காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதஞ் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.


பயன் எளிதாம் பரு மா மணி செய்ய
நயன் எளிதாகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே.



போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தை அதுவாகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டுத் திசை யொடும்
தாக்கும் கலக்கும் தயா பரன் தானே.



நின்று உயிர் ஆக்கும் நிமலன் என்னாருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற
முன்துயர் ஆக்கும் உடற்கும் துணை யதா
நன்று உயிர்ப் பானே நடுவு நின்றானே.



ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம் பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய்யான் தகை யானே.



ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன் பல வான
திரு ஒன்றில் செய்கைசெக முற்று மாமே.



புகுந் தறிவான் புவனா பதி அண்ணல்
புகுந் தறிவான் புரி சக்கரத் தண்ணல்
புகுந் தறிவான் மலர் மேலுறை புத்தேள்
புகுந் தறியும் முடிக்கு ஆகி நின்றாரே.



ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐந் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே.



உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே.



ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.



அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே.



வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.



நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே.



ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே.



செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்து நின்றானே.



தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவிக் குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துள்ளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.



ஓராய மே உலகு ஏழும் படைப்பதும்
ஓராய மே உலகு ஏழும் அளிப்பதும்
ஓராய மே உலகு ஏழும் துடைப்பதும்
ஓராய மே உலகோடு உயிர்தானே.



நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏதுபணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே.



அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர் கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே.



ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.



10. காத்தல்


புகுந்து நின்றான் வெளியாய் இருளாகிப்
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.



தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே.



உடலாய் உயிராய் உலகம் அதுவாகிக்
கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பு இலி எங்கும் தானாகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.



தானொரு காலம் தனிச் சுடராய் நிற்கும்தானொரு காலம் சண்ட மாருதமாய் நிற்கும்
தானொரு காலம் தண் மழையாய் நிற்கும்தானொரு காலம் தண் மாயனும் ஆமே.


அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே.



உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே.



உள் உயிர்ப்பாய் உடலாகி நின்றான் நந்தி
வெள் உயிராகும் வெளியாய் நிலம் கொளி
உள் உயிர்க்கும் உணர்வே உடலுள் பரந்து
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே.



தாங்கரும் தன்மையும் தான் அவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கி நின்றானும் அத் தாரணி தானே.



அணுகினும் சேயவன் அங்கியில் கூடி
நணுகினும் ஞானக் கொழுந் தொன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயிராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே.



11. அழித்தல்


அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கி அவ் ஈசற்குக் கை அம்பு தானே.



இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்த
நிலை அன்று அழிந்தமை நின்றுணர்ந்தேன் ஆல்
உலை தந்த மெல்லரி போலும் உலகம்
மலை தந்த மா நிலம் தான் வெந்ததுவே.



பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதம் செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே.



கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.



நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரனருள் உண்மையே.



நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயா சங்காரமாம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல்
உய்த்த சங்காரம் சிவனருள் உண்மையே.



நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
சுத்த சங்காரம் அதீதத்துள் தோயுறல்
உய்த்த சங்காரம் பரனருள் உண்மையே.



நித்த சங்காரமும் நீடு இளைப் பாற்றலின்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள்
உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே.



பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப் பாழ் பாழாகா
வாழாச் சங்காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.



தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாய வைத்தான் வைத்தவன் பதி யொன்றுண்டு
காயம் வைத்தான் கலந் தெங்கும் நினைப்ப தோர்
ஆயம் வைத்தான் உணர் வார வைத்தானே.



12. மறைத்தல்


உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே.



இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பில் கொளுவி முடி குவ தாமே.



இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்து உடன் கூடி
இறையவன் செய்த இரும் பொறியாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாதே.



காண்கின்ற கண் ஒளி காதல் செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண் படு பொய்கைச் செயல் அணையாரே.



தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும்
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே.



அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொ டொன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க்
கரக்கின்றவை செய்த காண் தகையானே.



ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே.



ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி
வருங்கரை ஓரா வகையினில் கங்கை
அருங் கரை பேணில் அழுக் கறலாமே.



மண் ஒன்று தான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனி கட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்று தான் பல காணும் தனைக் காணா
அண்ணலும் இவ் வண்ணம் ஆகி நின்றானே.



13. அருளல்


எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.



உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்க வல்லானே.



குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத் துற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போலெங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அது இதாமே.



விடை உடையான் விகிர்தன் மிகு பூதப்
படை உடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே.



உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே



படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே.



ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே.



அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுஉறு நம்பனும் ஆமே.



உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே.



ஆரும் அறியாத அண்டத் திரு உருப்
பார் முதலாகப் பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே.



14. கரு உற்பத்தி


ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.



அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை கின்ற இன் உயிர் போந்து உற நாடிப்
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே.



இன்புறு காலத்து இருவர் முன் பூறிய
துன்புறு பாசத்து உயர்மனை வான் உளன்
பண்பு உறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்பு உறு காலத்து அமைத்து ஒழிந்தானே.



கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே.



விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈர் ஐந்தொடு ஏறிப்
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே.



பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.



ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேர் அரசு ஆளுமே.



ஏயம் கலந்த இருவர் தஞ்சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப் பல
காயம் கலந்தது காணப் பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.



கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம்
சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.



என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே.



பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே.



ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப்
பழி பல செய்கின்ற பாசக் கருவைச்
சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே.



சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே.



போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.



பிண்டத்தில் உள் உறு பேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள் உறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே.



இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.



இன்பு உற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.



அறியீர் உடம்பினில் ஆகிய வாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.



உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே.



கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன்
கூட்டு கின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர் பட்ட வாறே.



பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே.



எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.



கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடைப்
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே.



அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அவ் ஓர் உயிரைத்
தருகின்றபோது இருகைத் தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே.



வகுத்த பிறவியை மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே.



மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே.



ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.



பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின்னால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.



பாய்கின்ற வாயுக் குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே.



மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.



குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.



கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல் வளையாட்கே.



கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே.



உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே.



இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே.



இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.



குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்ற வாறே.



முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதல் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே.



பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம்
உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திரு அருளாலே.



15. மூவகைச் சீவ வர்க்கம்


சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இருமாயா கூட்டத்து இடை பூட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே.



விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள யாகல் அத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.



விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ் ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்து உளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே.



இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்று எட்டு ருத்திரர் என்பர்
முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே.



பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து அது
ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்தும் ஆய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்கத்து அமிழ்ந்து சகலத்து உளாரே.



சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவம் ஆகார் சித்தர் முத் தாந் தத்து வாழ்வார்
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர்
நவம் ஆன தத்துவம் நாடிக் கண்டோரே.



விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச் சகலத்தர் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே.



விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டுப் போய்
மெய்ஞ் ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே.



ஆண வந்துற்ற வவித்தா நனவு அற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே
சேண் உயர் சத்தி சிவ தத்துவம் ஆமே.



16. பாத்திரம்


திலம் அத்தனையே சிவ ஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலம் அத்தனை பொன்னை நின் மூடர்க்கு ஈந்தால்
பலமும் அற்றே பர போகமும் குன்றுமே.



கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும் காலனைக்
கொண்டு இருந்து ஆர் உயிர் கொள்ளும் குணத்தனை
நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச்
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே.



கை விட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே.



ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டத்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளம் கிளையோனே.



17. அபாத்திரம்


கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே.



ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு
ஈவ பெரும் பிழை என்று கொளீரே.



ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன்
தோம் ஆறும் ஈசற்கும் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதம் கற்கவே.



மண் மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.



18. தீர்த்தம்


உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே.



தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே.



உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே.



அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள்
மறியார் வளைக் கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே.



கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திரு அருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.



கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே.



19. திருக்கோயில்


தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.



கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை
முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.



ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப்
போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.



முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே.



பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே.



20. அதோமுக தரிசனம்


எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே.



அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடை யோற்கே.



செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.



நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே.



அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும்
சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே.



அதோ முகம் மா மலர் ஆயது கேளும்
அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே.



21. சிவநிந்தை


தெளி உறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளி உறுவார் அமரா பதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழில்
கிளி ஒன்று பூஞையில் கீழ் அது ஆகுமே.



முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே.



அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நல் பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகைஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.



போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால்
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே.



22. குரு நிந்தை


பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.



ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய
சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.



பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதா நந்தி ஆணையே.



மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.



ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நந் நந்தி ஆணையே.



சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு
பல் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே.



கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்கத் தான் அறக்
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே.



23. மகேசுவர நிந்தை


ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம் தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே.



ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம்
போன பொழுதே புகும் சிவ போகமே.



24. பொறையுடைமை


பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே.



ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசை தொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர் தம் ஆதியை
ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே.



வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதம் செய்யும்
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இல்லாத இலயம் உண்டாமே.



25. பெரியாரைத் துணைக்கோடல்


ஓடவல்லார் தமரோடு நடா வுவன்
பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரான் ஒடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே.



தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல் தயங்கினும்
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும்
நீ இடர்ப் பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே.



அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்று அருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேர் இன்பம் ஆமே.



தார் சடையான் தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.



உடையான் அடியார் அடியாருடன் போய்
படையார் அழல் மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருக என ஓலம் என்றாரே.



அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே.



                                                            இரண்டாம் தந்திரம் முற்றிற்று .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக