வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கஞ்சமலைச் சித்தர் பாடல்





கஞ்சமலைச் சித்தர் பாடல்





உரிதாம் பரம்பொருளை உள்ளு - மாயம் 
    உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு - சிவன்
   அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.



துச்சமு சாரவி சாரம் - அற்பச்
     சுகமது துக்கமதாம் வெகு கோரம்
நிச்சய மானவி சாரம் - ஞான
     நிர்மல வேதாந்த சாரமே சாரம்.



கற்பனை யாகிய ஞாலம் - அந்தக்
     கரணங்க ளாலே விளைந்த விசாலம்
சொற்பன மாம்இந்த்ர சாலம் - அன்று
     தோன்றி விட்டாலது சூட்சானு கூலம்.



அற்பம தானப்பிர பஞ்சம் - அது
     அனுசரித்தாலே உனக்கிது கொஞ்சம்
நிற்பது அருள்மேவி நெஞ்சம் - அன்று
     நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞான பொஞ்சம்.



ஆங்காரத் தால்வந்த கேடு-முதல்
     ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காம லானந்த வீடு-அன்று
     தாக்கும னோலயந் தானாகக் கூடு.



தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி
     சாத்திர மான சடங்குகள் ஏது
பத்தி யுடன் மறவாது - குரு
     பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது.



தூராதி தூரங்கள்இல்லை - அத்தைத்
     தொட்டுப் பிடிக்க வென்றால் வெகு தொல்லை,
காரண தேசிகன் சொல்லை-நம்பிக்
     கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை.



ஆணவத் தால்வந்த காயம் - அதில்
     ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம்
காணவ மாம்போகு மாயம்-நன்றாய்க்
     கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம்.



மூடர் உறவு பிடியாதே-நாரி
     மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே-ஞான
     அமுதம் இருக்க விஷம் குடியாதே.



தான் என்று வாது கூறாதே-பேசி
     தர்க்கங்கள் இட்டுச் சள் என்று சீறாதே
ஊனென்ற பாசம் மாறாதே-போனால்
     உன்னாணை உன்மனஞ் செத்துந் தீராதே.



வந்த பொருளைத் தள்ளாதே-நீயும்
     வாராததற்கு வீணாசை கொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே - சும்மா
     சித்திரம் போலிருந்தது ஒன்றும் விள்ளாதே.



தேகபாச பவ பந்தம்-அப்பொருள்
     சிற்றின்ப மானது சிச்சீர்க்கந்தம்
பாகம தானவே தந்தம்-பொருள்
     பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம்.



வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த
     மயக்கமானாற் கொஞ்ச மட்டிற் போகாதே

அஞ்சி யமன்கைச் சாகாதே-கெட்ட
     ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே.



கல்வி மயக்கங் கடந்து-எல்லாம்
     கற்றோ மென்று றெண்ணுங் கசட்டைத் தொலைந்து
சொல்வெப் பினாலே கிடந்து-இரு
     சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து.



ஓடித் திரியும் கருத்து-அதை
     ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டம்பைப் பொருத்து - அந்த
     நாதாந்த வெட்டவெளிக் குள்இருத்து.



சாண்வயிற் றால்அலை யாதே-நிதம்
     சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணவத் தால்உலை யாதே-உனக்கு
     கானந்த முத்தி அது நிலையாதே.



அபிமானி யாகிய சீவன்-அவன்
     அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம்நினைந்தால் போதம் சார்வான்-நிலை
     சார்ந்து கொண்டால் சத்தி ரூபமும் ஆவான்.



நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம்
     நாட்ட மென்றால் வன்னி நிலையிலே நில்லு
தற்சம யங்களை விள்ளு-உண்டு
     தன்மயமாகவே தானே நீ கொள்ளு.



துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத்
     தொந்தங்கள் எல்லாந் துருசறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று
     பேசாம லந்தம் பெருமையை விட்டு.



பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா
     பேசப்பேசப் பிழைஅல்லோ காணும்
வாச்சுத லால்அம்பு பூணும்-நல்ல
     மாசற்ற ஞான விசாரணை வேணும்.



அநித்திய மானது தேகம்-அதில்
     ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந் தால்அந்த போகம்-ஒன்று
     தானாகி நிற்பது வேசிவ யோகம்.



விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய
     வேதனைக் குள்ளேநீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே-குரு
     தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே.



கோடான கோடி தவங்கள்-அந்தக்
     கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ்செபங்கள்
பாடான தல்லோ பவங்கள்-இது
     பண்ணுமுன் நண்ணும் துன்ப அமலங்கள்.



அந்தக் கரணவி லாசம்-அதை
     யாராலும் தள்ளக்கூ டாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற்
     தோன்றாமற் தோன்றுஞ் சுயம்பிரகாசம்.



நாமசொ ரூபமே சித்தி-அதை
     நாடித் தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி
நேம சொரூபமே வித்து-எங்கும்
     நிச்சய மாகும் நிரந்தர வத்து.



                                                                           கஞ்சமலை சித்தர் பாடல் முற்றிற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக