திங்கள், ஜூன் 30, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் ...

                                           சிவமயம் 
                                      சிவமேஜெயம் 

குருவே சரணம்        பட்டினத்தாரே சரணம்         குருவே துணை ஆதிசித்த நாதனை அநாதியான மூலனை 
ஆதியந்த மில்லாஎங்கள் ஆலமுண்ட கண்டனை 
மாதிலொரு பாதியனை மாயை அறுக்கும் ஈசனை 
சோதிரூப மானவனை எப்போதும் சிந்தித்திரு நெஞ்சே  .


நல்லாரைக் கூடிநயம்பட வாழாமல் தீங்கு செய்யும் 
பொல்லாரைக் கூடி பொழுதினை கழித்து பாரமாய் வாழுமிப் 
பொல்லாப் புலையனும் நாயினுங்கீழ் பிறப்பெடுத்தயென் 
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கயிலை நாதனே  .


போதும் பிறந்திறந்து அல்லல்படும் வாழ்வு இனியொரு 
போதும் பிறக்க இசைவியோ மட நெஞ்சே பிறந்தால் எப் 
போதும் ஆனந்தக் கூத்தனை சிந்தையில் நினைந்திரு அப் 
போதுபிற வாநிலையடைந்து பேரின்பத்தில் திளைத்திருப்பாய் . 


                                    
                                      - திருவடி முத்துகிருஷ்ணன் 


                                          சிவமேஜெயம் !! 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வியாழன், ஜூன் 26, 2014அடியேன் எழுதிய பாடல்கள் ...............
அடைக்கலக் கண்ணிகள் அம்பலத்திலாடும் ஆண்டவனே உனக்கு அடைக்கலம் 

ஆடிய பொற்பாதமே ஆண்டு கொள்வாய் உனக்கு அடைக்கலம் 

இன்னல் தீர்ப்பவனே எங்கள் ஆலவாயனே உனக்கு அடைக்கலம் 

ஈசனே எந்தையே எம் சிந்தையில் உறைவாய் உனக்கு அடைக்கலம் 

உலகம்மை நாயகனே உமையொரு பாகனே உனக்கு அடைக்கலம் 

ஊழ்வினை அறுப்பவனே வல்வினை தீர்ப்பாய் உனக்கு அடைக்கலம் 

எந்நோய்க்கும் மருந்தானாய் இறைவா உனக்கு அடைக்கலம் 

ஏழை துயர் தீருமையா ஏகநாதா உனக்கு அடைக்கலம் 

ஐம்பூத நாயகனே ஐம்புலன்கள் அடக்குவாய் உனக்கு அடைக்கலம் 

சித்தனாகி பித்தனாகி அத்தனாகி நின்றாய் உனக்கு அடைக்கலம் 

மாலும் அயனும் முயன்றும் முடியா முடியே உனக்கு அடைக்கலம் 

மும்மலமெரித்து முன் வினை தீர்ப்பாய் உனக்கு அடைக்கலம் 

முப்புரமெரித்த முதல்வனே நின் இணையடி அடைக்கலம் 

நோய்க்கு விடுதியாமிவ் வுடலை சோதிமயமாக்குவாய் அடைக்கலம் 

அனைத்தையும் நொடிபொழுதில் ஆக்கி அழிக்க வல்லோய் அடைக்கலம்

ஆவியற்று நான் வீழுமுன்னம் எனை ஆண்டுகொள்வாய் அப்பனே 

              ஐயனே அரனே ஐயா அடைக்கலம் உனக்கே .
 
                                                             
                                                            - திருவடி முத்துகிருஷ்ணன் 

                                         சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


செவ்வாய், ஜூன் 24, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் ..................

                                              சிவமயம் 
                                        சிவமேஜெயம் 
குருவே சரணம்  பட்டினத்தாரே சரணம்  குருவே துணை 
 
               இந்த பாடல் தூத்துக்குடி மாநகரில் அருளாட்சி நடத்தி வரும் என் அப்பன் சங்கர ராமேஸ்வரர் . ஞானத்தை அருள தனி சந்நிதி கொண்டிருக்கும் வில்வேஸ்வரனுக்கும் அடியேன் எழுதிய பாடல்கள் . என் அப்பன் வில்வேஸ்வரர் அடியேன் கேட்டதை எல்லாம் அருளிச் செய்தார் . சங்கடங்கடல் போற்சூழ்ந்து வரின்மனமேதிரு மந்திரநகருறை 
சங்கரராமேஸ் வரனைசரண டைந்துபணி செய்து கிடப்பதே 
நங்கடனென்று சிவசிந்தனையை சிந்தையில் ஏற்றினால் 
பங்கயத்தோனெழுத் தென்னநாளுங் கோளுமென்ன நமக்கேதுமிலையே.


இரைக்கே அல்லும்பக லும்திரிந் தலைந்து
இறையை மறந்து மண்பொன் பெண்ணிற்கு வாழ்ந்து 
மறைந்து போகவிருக்கு மீனனை திருமந்திர நக 
ருறைந்தருள் செய்யும் வில்வேஸ்வரனே காத்தருள்வாய் .


உற்றவனாய் எனக்கே யிருந்துவழிநடத்தி நினதருள் 
பெற்றவனாய் மாற்றிநின் பற்றைத் தவிர வேறொன்றும் 
அற்றவனாய் உன்னடியார்க்கு தொண்டு செய்யும் பணியை 
கொற்றவனே நாயேனுக்கருள் செய்யே .    

                                     -  திருவடி முத்துகிருஷ்ணன்

                                  சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 
  
சதுரகிரி யாத்திரை அனுபவங்கள் .. ....................

சதுரகிரி மலைக்கு அடியேன் அடிக்கடி செல்வதுண்டு . அங்கு அடியேனுக்கு நேர்ந்த மறக்க முடியாத அனுபவங்களை நாளை முதல் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .            ஒவ்வொரு முறையும் தனித்தனி அனுபவங்கள் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் .                            


                                              சிவமேஜெயம் !! 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


     

திங்கள், ஜூன் 23, 2014


அடியேன் எழுதிய பாடல்களில் இருந்து ......

                                                       சிவமயம் 

                                                 சிவமேஜெயம் 

குருவே சரணம்     பட்டினத்தாரே சரணம்     குருவே துணை 


கிட்டியதை எண்ணி திருப்தி காணாமல் தனக்கு 
கிட்டாததை எண்ணி வருந்தி வீனாற் கழித்து 
எட்டாத கனிக்கே பேராவல் கொண்டு வாழ்வாரோடு 
ஒட்டாத வாழ்வை தருவாய் கயிலை நாதனே .


ஊழ் வினையா பாழ்வினையோ என்னுடன் வந்த 
முன் வினையோ பின்வினையோ உடனிருக்கும் 
நல் வினையோ தீவினையோ நான்செய்த வல்வினையோ 
நீள் சடைநாதனை எண்ணாமல் இருந்ததென் தொல்வினையே .
உண்ணா துறங்காதிருக்க மறந்தாயா மடநெஞ்சே மயக்கும் 
பெண்ணோடு கூடாமலிருக்க மறந்தாயா நற்கதியருளும் 
அண்ணாமலை யாரின்திருவடி மலர்களை போற்றி யிருக்க
என்னாமலிருந் தனையே பித்துப் பிடித்த என் நெஞ்சமே .   


                                                    - திருவடி முத்துகிருஷ்ணன்                                                     - திருவடி முத்துகிருஷ்ணன் 


    என்றும் இறை பணியில் 


                                                சிவமேஜெயம் !!

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!புதன், ஜூன் 18, 2014சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் இருந்து சில பாடல்கள் .......நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் 
நமசிவாய அஞ்சிலஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே.


நமசிவாய என்ற நாமத்தை எந்நேரமும் மனதில் தியானித்து நம்முள்ளே இருக்க வைத்தால் மாயை எனபடுவது அஞ்சி ஓடும் , நன்மைகள் பல கிட்டும் ஆகவே உண்மையான அந்த மந்திரத்தை
நீ மனதிற்குள் எப்போதும் தியானித்து கொண்டிருப்பாய் .

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.


ஒரு கல்லை நட்டுவைத்து அக்கல்லுக்கு பூமாலை போட்டு அதற்கு தெய்வமென்று பெயரிட்டு அதை சுற்றி வந்து முணமுணவென்று மந்திரங்கள் என்கிற பெயரில் எதோ சொல்லுகிறீர் .நீர் செய்வது எப்படி இருக்கிறதென்றால் ,சமையல் செய்யும் பாத்திரம் உணவின் சுவையை அறிவது போல் இருக்கிறது . எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அந்த பாத்திரத்துக்கு சுவை தெரிவது இல்லை அதே போல எவ்வளவு பூக்கள் போட்டாலும் மந்திரங்கள் எத்துனை ஓதினாலும் அதற்கு பயனில்லை. சிவம் என்பது தனியாக வெளியில் இல்லை சிவம் நம்மில் கலந்து இருக்கிறது அதை உணராமல் வெளியிலேயே தேடிகொண்டிருக்கின்றீரே , நீர் நட்டு வைத்த கல்லானது உம்மிடம் பேசுமோ என நம்மை சாடுகிறார். 


 என்றும் இறை பணியில் 

                  திருவடி முத்துகிருஷ்ணன் 

                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


   அடியேன் எழுதிய பாடல்கள் .. 


குருவே சரணம்       பட்டினத்தாரே சரணம்       குருவே துணை 

  
              
                                                                 சிவமயம்
ஊழ்வினையும் உறுத்தி உறுத்தி நம்மைச் 
சூழ்வினையே பெண்ணுருக் கொண்டு மாயையில் 
வீழ்செய்து புண்ணாங்குழி எனும்நரக வாயில்தள்ளி 
பாழ்செய்யும் இப்பிறவிப் பிணிபோக்குவாய் ஈசனே   


ஈசனே பிறந்திறந் துழலும் பிறவியின் 
நாசனே மீண்டும் பிறவா நிலையருளும் 
நேசனே பிறந்தால் உனைமறவா வரமருள்வாய் 
தேசனே நின்பதம் பற்றினேன் எனைக் காத்தருள்வாயே .


மெய்யை மெய்யென் றெண்ணி யிறுமாந்திருந்து
நெய்யிட்டு சோறெடுத்து மெய்வளர்த்து - இது 
பொய்யாய் போகுமென் றுணர்ந்து மெய்யோடு 
உய்வடையும் பேறெனக் கருள்வாய் வினைதீர்த்தவனே 

                                     
                                                -   திருவடி முத்துகிருஷ்ணன் 

                                      என்றும் இறை பணியில் 

                                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!செவ்வாய், ஜூன் 17, 2014

குருவே துணை        பட்டினத்தாரே சரணம்        குருவே சரணம் 

ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ  பட்டினத்தார் திருவடிகள் போற்றி !! 


ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ வாலை திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி !!       தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனை

         சூதுற்ற பூதலத்திலிருத் தியென்னகண் டாயையா 

         போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால்

         காதற்ற ஊசிகொண் டுலகறிந்த்த உத்தமரே .                                                                  -  திருவடி முத்துகிருஷ்ணன் இந்த பாடல் என் குருநாதருக்கென அடியேன் அவரை தியானித்து எழுதின பாடல் . இதை என் பாடல்களில் முதற்பாடலாக பதிவு செய்கிறேன் .

                                                     என்றும் இறை பணியில் 


                                                 சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!திங்கள், ஜூன் 16, 2014

அடியேனிடமிருந்து ....................அன்பர்களுக்கு 

                                              சிவமயம் 


 குருவே துணை      பட்டினத்தாரே சரணம்     குருவே சரணம் 
                     இந்த இணையத்தின் இணைப்பில் இருக்கும் மதிப்பிற்குரிய அடியார்களுக்கு அடியேன் திருவடி முத்துகிருஷ்ணனின் பணிவான வணக்கங்கள் .


             எம் குருநாதர் ஐயா திரு பட்டினத்தார் அவர்களை குருவாக நினைத்து  என் தியான வாழ்க்கையை ஆரம்பித்தேன் . அவருடைய திருவருளால் அடியேன் பல சிவ தலங்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறேன் . அப்படி அடியேன் சென்ற தலங்களை பற்றி பல பாடல்களை எழுதியுள்ளேன் . இத்தனை நாள் அதை பதிவிட மனமில்லாமல் இருந்தேன் நண்பர்கள் பதிவிட சொன்ன காரணத்தினால் பாடல்களை பதிவு செய்ய விருக்கிறேன் . அடியேன் படிப்பறிவு இல்லாத காரத்தினால், தமிழறிவு மிக்க பெரியவர்கள் அதிலேதும் பிழைகள் இருந்தால் அடியேனை மன்னிக்கும் படி வேண்டுகிறேன் .


           இந்த பாடல்கள் முழுக்க முழுக்க தியானத்தில் இருக்கும் போது எழுதினேன் . என் வாழ்வில் கடந்து வந்த சங்கடங்கள் பல அதன் தாக்கமும் இதில் அடங்கி இருக்கும் . 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளேன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன் .தினசரி 3 பாடல்களாக பதிவு செய்கிறேன் .


                    பட்டினத்தார் திருவடிகளை போற்றி நாளை முதல் பதிவு செய்கிறேன் .

                                        நன்றி வணக்கம் .


                    என்றும் இறை பணியில்

                                                               திருவடி முத்துகிருஷ்ணன்

             
                                                சிவமேஜெயம் !!

 சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


வெள்ளி, ஜூன் 13, 2014திருமூலர் அருள் செய்த
                          திருமந்திரத்திலிருந்து ...............


             
                           சில மந்திரங்கள் ..கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத் தறியாரே .

சிவனை போற்றும் நூல்களை கல்லாத மனிதர்கள் தன்னிலை அறியும் அறிவை இழந்த மூடர்கள் ஆவர் . இவர்களைக் காணவும் அவர் கூறும் நன்மையில்லாத சொற்களை கேட்பதுவும் நம் கடமை இல்லை . இவர்களைப் போல் உள்ளவர்களே இவர்களுக்கு நல்லவராகத் தோன்றுவார் . நல்லவர் கூறும் நயமிக்க உயர்ந்த கருத்துக்களை செவி கொடுத்து கேட்கும் அறிவு அற்றவர்கள் ஆவார்கள் .

நடுவு நின்றார்க் கன்றி ஞானமு மில்லை
நடுவு நின்றார்க்கு நரகமு மில்லை
நடுவு நின்றார் நல்ல தேவருமாவர்
நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே .

தர்மத்தை போற்றி உயர்வையும் , தாழ்வையும் , இன்ப துன்பங்களையும் சமமாக பாவிக்கும் ஞானியர் மகான்களை தவிர பிற மனிதர்கட்கு ஞானம் வாய்ப்பதில்லை . அனைத்தையும் சமம் என கருதுபவர்கட்கு நரக வாழ்வுமில்லை,பிறந்து துன்பத்தை அனுபவிப்பதும் இல்லை . அவர்கள் மனித நிலையை கடந்து மேலான நிலையாம் தேவ நிலையை அடைவார்கள் . அவர்கள் நின்ற நிலையிலே அவர்களை பின்பற்றி நானும் இருக்கின்றேன் . 


                                        என்றும் இறைபணியில்

 
                                                         திருவடி முத்துகிருஷ்ணன் 

     
                                                       சிவமேஜெயம் !!

           சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்ற்வோம் !!
                           
     
                 


சனி, ஜூன் 07, 2014

திருமூலர் அருள் செய்த 


                                     திருமந்திரத்திலிருந்து ..........

                                                            
               சில மந்திரங்கள் 


யாவர்க்குமாம் இறைவற் கொருபச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு  வாயுறை  
யாவர்க்குமாம் உண்ணும்போ தொருகைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே 

மலர் கொண்டு தினமும் பூஜிக்க முடியாவிட்டாலும் ஒரு இலை கொண்டு ஈசனை பூஜிக்க யாவராலும் முடியும் . பசு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் ஒரு வாயளவு உண்ணக் கொடுத்தலும் யாவராலும் முடியும் . நாம் உண்ணும் போது இரந்து கேட்பவர்க்கும் ஒரு கைப்பிடி அன்னம் கொடுக்கவும் யாவராலும் முடியும் . பிறர் வருந்தாத இனிய சொல்லைக் கூறவும் யாவராலும் இயலக் கூடிய ஒன்றே ஆகும்.

தானொரு காலம் சயம்பு வென்றேத்தினும் 
வானொரு காலம் வழித்துணையாய் நிற்கும் 
தேனொரு பால்திகழ் கொன்றை அணிந்தவன் 
தானொரு வண்ணம் என்னன்பில் நின்றானே 

நாம் வாழும் காலத்திலே ஒருமுறையேனும் சுயம்புவடிவான ஈசனை தொழுது சிந்தையில் ஏத்தினால் எம்பெருமான் பெருவாழ்வு என்னும் மேலான வாழ்க்கைக்கு வழித்துணையாய் நிற்பான் . உலகாளும் அம்மையை ஒருபுறம் இருத்தி கொன்றை மலரை செஞ்சடையில் அணிந்தவன் என் அன்பின் வண்ணமாக என்னுள் நிலைத்து நின்றானே .

        
                    என்றும் இறை பணியில் 


                                                               திருவடி முத்து கிருஷ்ணன் 


                                                 சிவமே ஜெயம் !!

          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
வெள்ளி, ஜூன் 06, 2014

சித்தர்கள் வரலாறு 

                 தாயுமான சுவாமிகள் வரலாறு 

                                 

                               
                              17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் குலத்தில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெஜவல்லி அம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமியான சிவபெருமான் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார். ஒருநாள்... வழக்கம்போல் குழந்தை தாயுமானவர் தியானம் செய்ய உட்கார்ந்ததும், அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. இரவு நீண்ட நேரமாயிற்று. அப்போதும் குழந்தை வீடு திரும்பவில்லை. தந்தை குழந்தையைத் தேடிக்கொண்டு கோயிலுக்கு வந்துவிட்டார். தெய்வ நினைப்பில் தன்னை மறந்திருந்த பிள்ளையின் கையைப் பிடித்து எவ்வளவு நேரம்தான் இப்படிக் கோயிலிலேயே இருப்பாய்? வா வீட்டுக்கு! என்று சொல்லி அழைத்துப் போனார்.
தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார். அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர். விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார். அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள்.
அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார். அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார்.
துயரத்தில் துடிக்கும் ஒரு ஜீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர். இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தாயுமானவர் இல்லற வாழ்க்கையை அறவே வெறுத்தார். இருப்பினும் தமையனின் வற்புறுத்தல் காரணமாக மட்டுவார்குழலி என்னும் குணவதியை மணந்து கனகசபாபதி எனும் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சிறிது காலத்திற்கு பின் துணைவியார் இறந்து போகவே அதற்கு பின் இல்லறவாழ்வை வெறுத்து துறவறம் பூண்டார். திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மவுன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றார். வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர் தாயுமானவர். இவரின் அனுபவங்கள் அப்படியே பாடல்களாக வெளிப்பட்டன. 56 தலைப்புகளில் 1, 452 பாடல்கள் பாடியுள்ளார். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

நன்றி : தினமலர் 
                                                   
                     என்றும் இறை பணியில் 

                                                           திருவடி முத்து கிருஷ்ணன்       
                     
                                            சிவமே ஜெயம் !! 

            சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வியாழன், ஜூன் 05, 2014

மாணிக்க வாசக பெருமான் அருள் செய்த 


                  திருவாசகத்திலிருந்து சில வாசகம் 

எம்பிரான் போற்றி வானத்து
அவர் அவர் ஏறு போற்றி
கொம்ப ரார்மருங் குல்மங்கை
கூறவெள் நீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி
எம்மை என்றும் ஆளுமை புரியும் எம்பெருமானே உமக்கு வணக்கம் . விண்ணோர் தமக்கு அருள் புரிந்து அனைத்தையும் ஆண்டருளும் அரசனே உமக்கு வணக்கம் . பெண்ணை மேனியில் பாதியாய் கொண்டு வெள்ளை நீறு பூசியவனே வணக்கம்.செஞ்சுடரே எம் ஈசனே தில்லை அம்பலத்தில் நடம் செய்யும் நாதனே உமக்கு வணக்கம். உயர்ந்த பெரும் பரம் பொருளே என்னை ஆளும் ஒருவனே உம்மை வணங்குகிறேன் . 

வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஓளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோன் ஆகி யான் எனது என்று
அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே


 ஆகாயம் . மண் , காற்று ,நீர் , நெருப்பு  ஆகிய பஞ்ச பூதங்களும் நீயே எம்பெருமானே . உடலாகவும் , உயிராகவும் இருப்பவனும் நீயே . தோன்றும் பொருளாகவும்,தோன்றாப் பொருளாகவும் விளங்குபவனும் நீயே . நான் என்ற ஆணவம் கொண்டு மாயை தனில் ஆட வைப்பதும் நீயே . வான் கடந்து நின்ற உன் பெருமை தன்னை என்ன சொல்லிப் புகழ்வேன் . இறைவா என்னைக் காத்தருள வேண்டுமையா .
                          என்றும் இறை பணியில் ..

                                                    திருவடி முத்துகிருஷ்ணன் 

                                          சிவமேஜெயம் !!

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!