சித்தர்கள் நோக்கில் .....
ஞானம் பெற குரு அவசியமா ?
பிறந்து இறக்கும் இந்த பிறவியை முடிவுக்கு கொண்டு வர குருவருளால் மட்டுமே முடியும் . அவர் மூலமே ஞானம் பெற முடியும் .
இதை சித்தர் இடைக்காடர் தன்னுடைய பாடல்களில் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் .
அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு
அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே.
அவித்த விதை மீண்டும் முளையாது என்றும் அதே போல நல்ல குருவினை அடையாதவர் நற்கதியாகிய வீடு பேற்றினை அடைய முடியாது என்றும் கூறி இருக்கிறார் .
நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் அறிவார்?
நாலு மறைமுடியும் அகப்பேய்
நற்குரு பாதமடி!
என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நான்கு வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார்.
குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
குருமார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொய்க் குருமார்களை நம்பி அவர்கள் பின் செல்பவர்கள் எவ்வாறு மெய்யான சிவ பதத்தை அடைய முடியும் ? அதைத்தான் திருமூலர் குருடர்க்கு வழி காட்டும் குருடரும் , அவரை அழைத்துச் செல்லும் குருடரும் குழி வீழ்வார் என்று பொய்க் குருமார்களை தோலுரித்துக் காட்டும் திருமூலர் ,
உண்மையான குரு எப்படி என்று சொல்கிறார் .
கறுத்த இரும்பே கனகம தானான்
மறிந்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
பொன் மண்ணுக்குள் இருந்து வெட்டி எடுக்கையிலே கறுத்து இரும்பை போல இருக்கும் , பின் பொற்கொல்லர் தன்னுடைய தொழிலால் அதை தங்கம் ஆக்கிய பின் மீண்டும் கறுக்காது அதை போல மனமானது பக்குவ நிலை அடைந்த பின் குருவருள் கிடைக்கும் அந்த குருவருளால் மீண்டும் பிறந்து இறக்கும் நோயை தீர்த்து பிறவா நிலையை அடைந்து இருப்பார்
உண்மை குருவை அடைய பெற்றோர்.
பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே.
பாம்பாட்டியாரும் தனது பங்குக்கு உண்மையான குரு அவசியத்தை உணர்த்துகிறார் . கண்டவர்கள் பின் சுற்றாது ஈசனே கதி என்று அவனையே சிந்தித்து இருந்தோமென்றால் நம்மை கடைத்தேற்றும் குருவை அவன் நமக்கு அளிப்பான் . அந்த குருவருளால் நாம் அப்பன் ஈசன் பதத்தை அடையலாம் . குரு பக்தியே சிறந்தது அப்பனை அடைவதற்கு .
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!