வியாழன், மே 26, 2011

கடுவெளிச் சித்தர் பாடல்கள்

        கடுவெளி சித்தர் ஆனந்த களிப்பு 
          

         
          பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
          கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
          பாபஞ்செய் யாதிரு மனமே.


          சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1


சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2


நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3


நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4


தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5


நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6


நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7


வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8


பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9


மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10


மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11


கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12


ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13


உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14


காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15


பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16


சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17


பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18


அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19


ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20


ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21


எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22


இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23


பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24


வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25


சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26


பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27


போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28


கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29


பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30


செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31


எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32


கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33


எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34


(முடிந்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக