திங்கள், மே 30, 2011

64 சிவ வடிவங்கள் (53-64)

53. கௌரி வரப்ரத மூர்த்தி






மந்திரமலை தவமியற்றியதாலேலே சிவபெருமான் தனது தேவியுடன் அங்கு சிறிது நாட்கள் தங்கினார். அச்சமயத்தில் அசுரனொருவன் நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் யாது வேண்டுமென்றுக் கேட்க அவனோ பார்வதி தேவியின் உடலிருந்து தோன்றியப் பெண்ணைத் தவிர வேறொருவரால் எனக்கு அழிவு வரக்கூடாது என்றுக் கேட்டான். கொடுத்து மறைந்தார். இவ்வரத்தினால் அசுரனின் ஆட்டம் அதிகரித்தது. இவன் கொடுமையை தாளமுடியாத தேவர்குழாமின் சார்பாக நான்முகன் சிவபெருமானிடம் சென்று துயர் துடைக்கக் கூறினான். சிவபெருமானும் காளியை நினைத்து வருக என்றார். உடன் காளி வந்தார்.காளியிடம் அழைத்தக் காரணம் கூறினார். காளிதேவி தன்னுடைய கரிய நிறத்திற்காக கவலையுற்றார். உடனே சிவபெருமான் உன்குறைத்தீரும், நீ கௌரியாக மாறும்போது நிறமாவாய் என்று வாழ்த்தியனுப்பினார். உடன் காளி இமயம் சென்று தவமியற்றினார்.தேவர்களையும், வானவர்களையும் காக்கும் பொருட்டு மலையரசனின் மகளான விமலை பொன்னிறத்தில் பிறந்தார். அவர் தன் கருமை நிறத்தை விளக்க துர்க்கையானார். பின்னர் அவர் நான்முகனால் கொடுக்கப்பட்ட சிங்க வாகனத்துடன் சென்று அசுரனைக் கொன்றார். கௌரி பார்வதி தேவியார்  சிவபெருமானால் பொன்னிறமானார்.
வதத்திற்கு பின் மந்திரமலைக்குச் சென்றார். சிவபெருமானை வணங்கினார். உடனே சிவபெருமான் அவரைத் தன் தொடையின் மீது அமர்த்தினார். சிவபெருமானை நோக்கிய பார்வதிதேவியார் தனது கருமையான காளி நிறத்தை மாற்றி பொன்னிற மேனியான கௌரியானார். இவ்வாறு மாற்றியதால் அதாவது காளிக்கு வரம் கொடுத்து கௌரியாக மாற்றியதால் அவரது பெயர் கௌரி வரப்ரத மூர்த்தி யாகும்.காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதர் கோயிலின் இறைவனது திருநாமம் ஏகாம்பரேஸ்வரர். இறைவி திருநாமம் ஏலவார்குழலி அம்மை. இங்கமைந்த மூலவர் மணலால் ஆனவர். உமாதேவியார் இங்குள்ள கம்பை நதிக்கரையில் மண(ல்) லிங்கம் அமைத்து வழிபட்டார். மேலும் இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி இறைவன் இறைவியை வழிபட கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும். தீர்த்தத்தின் மகிமையால் தோல் வியாதி குணமடையும். இவர்க்கு வில்வார்ச்சனையும் பழவகை நைவேத்தியமும், வெள்ளிக்கிழமை கொடுத்து நெய் விளக்குப் போட மாங்கல்ய பலம் கூடும். மக்கட் பேறு உண்டாகும். தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.


54. சக்கர தான மூர்த்தி






குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஒரேக் கொடியின் கீழ் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் பொருட்டு திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். அவ்வாறு யுத்தம் நடைபெறும்போது திருமாலால் தாக்குப்பிடிக்காத நிலை வந்தது. உடன் தனது சக்கராயுதத்தை அம்முனியின் மேல் ஏவினார் ஆனால் அது அம்முனிவரின் வச்சிரக்கையால் தாக்கி திரும்ப திருமாலிடமே சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் இன்னொரு உருவத்தைப் படைத்தார். ஆனாலும் விடாமல் அம்முனிவரும் தனது பாதக்கட்டை விரலை அசைக்க எண்ணற்ற திருமால்கள் தோன்றினார். உடனே திருமாலுக்கு புரிந்தது. இம்முனிவர் தம்மைவிட தவவலிமை அதிகம் பெற்றவர். எனவே இவரை எதிர்க்க முடியாது சிவபெருமானின் ஆயுதத்தால் தான் முடியும் என்று சென்றார். இந்த சக்கராயுதம் திருமாலிடம் வந்தக் கதை எப்படியெனில் ஒரு சமயம் உலகம் முழுதும் அழிந்தது, அப்போது மீண்டுமொரு புதிய உலகைப் படைக்க எண்ணினார். எனவே பிரமனையும், திருமாலையும் உண்டாக்கினார். அவர்களிடம் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்புவித்தார். உடனே காத்தல் தொழிலுக்கென ஆயுதம் வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால் சூரிய, சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும், சக்கரம் ஒன்றும் கொடுத்தார். உடன் பார்வதி தன்பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார்.
அத்தகைய சக்கராயுதம் தோற்றதை நினைத்தவுடன் திருமாலுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. உடனே தேவர்களிடம் சொல்லி, சலந்தரனைக் கொல்ல உருவாக்கிய சுதர்சனம் என்ற ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற தவம் செய்யப் போவதாகக் கூறினார். அவ்வாறே கடுமையான தவமிருந்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார். ஒருநாள் சிவபெருமான் ஒரு மலரை ஒளியவைத்தார். பூஜைசெய்ய வந்தத் திருமால் ஒரு மலர் இல்லாததுக் கண்டு வருந்தி தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி தனது பூஜையை முடித்தார். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்தார். பின் அவரது விருப்பப்படி சுதர்சனத்தை கொடுத்தார். இத்தகைய யாரையும் எதிர்க்க வல்ல சுதர்சனத்தை, திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது. இவரை கும்பகோணம் அருகே உள்ள திருவீழிமிழலையில் காணலாம். இங்குள்ள இறைவன் பெயர் விழிஅழகர். இறைவி பெயர் சுந்தரகுசாம்பிகை என்பதாகும். இவர்களை ஆயிரம் தாமரை மலர்களால் சிவராத்திரியில் வழிபட நாம் வேண்டிய வரங்களைத் தருவார், மேலும் வாழக்கைக்குத் தேவையான படிக்காசும் கொடுப்பார். மஞ்சள்நிறபூக்களால் அர்ச்சனையும், பழவகை நைவேத்தியமும் வெள்ளிக்கிழமையில் கொடுக்க, நீடித்த ஆயுள், கல்வியறிவு, உயர்பதவி வாய்க்கப்பெறும்.



55. கௌரிலீலா சமன்வித மூர்த்தி






திருக்கைலையில் சிவபெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளியுள்ளார். அப்போது தேவி அருகில் வந்து இறைவா எங்கும் நிறைந்துள்ள தேவருடைய உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும் என்றுக் கேட்டார் அதற்கவர் உருவம், அருவம், உருவஅருவத்துடன் இருப்போம் என்றார் பார்வதிக்கு விளங்காததால் விரிவாகக் கூறலானார். நானே உன்னிலும், அனைவரிடத்திலும் உள்ளோம். நானில்லையெனில் அனைவரும் ஜடப்பொருள் ஒப்பாவர் என்றார். அதனை விளக்க அனைத்து உயிர்களின் உள்ளத்தில் சென்று அறிவை மழுங்கடித்து ஜடப் பொருளாக்கினார், இதனால் மனம் வருந்திய பார்வதி அவரிடம் மன்னிப்புக் வேண்டி அனைவரையும் நலமுடன் அறிவைக் கொடுக்கச் செய்து, இச்செயலுக்கு பிராயசித்தமாக பார்வதி தேவியார் பூமியில் அவதரித்தார். தக்கனின் மகளாக யமுனை நதியோரத்தில் இருந்தார். அதனை தன்மகளாகக் கருதி தக்கன் வளர்க்கலானார் தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் சிவனைக் குறித்து தவமியற்றினார். இவ்வாறு பணிரெண்டாண்டு கால கடுமையான தவம் மேற்க்கொண்டார். அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேதியராக வேடமிட்டு தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாக சொன்னார். பார்வதிதேவியும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்து உள்ளம் கலங்கினார். பின்னர் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டினார். இவ்விஷயம் தக்கனுக்குத் தெரிந்து சிவபெருமானுக்கும் தாட்சாயிணிக்கும் நல்லநாள், நல்முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்வித்தார்.
திருமணம் நடைபெற்றவுடன் சிவபெருமானும், தேவர் குழாமும் மறைந்தனர், பின்னர் தாட்சாயணி தனது தவச்சாலையில் காலம் கழித்தார். பின்னர் இடபாருடராக வந்து தாட்சாயிணியை திருக்கைலை அழைத்துச் சென்றார். இதனால் தன்னை மதிக்காத சிவன்மேல் தக்கன் பெரும்கோபம் கொண்டவனாக மாறினான். இவ்வாறு திருமணம் செய்த தேவியரை விட்டு மறைந்து பின் வந்து அழைத்த மூர்த்தயே அதாவது கௌரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே கௌரிலீலா சமன்வித மூர்த்தி ஆகும்.வலங்கைமான் அருகேயுள்ளது பூவனூர் ஆகும். இங்கமைந்த இறைவன் புஷ்டவனநாதர், இறைவி ராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கிருக்கும் கிருஷ்ண தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் இங்குள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதியில் கொடுக்கப்படும் வேரைக் கட்ட விஷக்கடிகள் அனைத்தும் குணமாகும். இவர்க்கு மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும்ல பழவகை நைவேத்தியமும் நல்லெண்ணைய் தீபமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க, நீண்ட ஆயுளும், கல்வியறிவும், உயர் பதவியும் கிட்டும்.


56. விசாபகரண மூர்த்தி






சிவபெருமானின் அனுமதியின்றியும் அவரை வணங்காமலும் தேவர்களும், அசுரர்களும் திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அமுதம் வேண்டிக்கடைந்தனர். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடியை முதுகாலும், கைகளாலும் தாங்கினார். ஆனாலும் கடைதல் தொடர்ந்து நடைபெற்று வரவே ஒருக்குறிப்பிட்டக் காலத்திற்கு பின்னர் வாசுகி என்றப் பாம்பு வலிதாளாமல் அதன் ஆயிரம் தலை வழியே கடுமையான, கொடுமையான ஆலகால விஷத்தைத் துப்பியது, அவ்விஷமானது அனைத்து இடங்களிலும் பரவ அது கண்ட திருமால் அதை அடக்க சென்றார். ஆனால் அவ்விஷத்தின் கடுமை அவரது மேனியைக் கருக்கியது, அதனால் அவர் ஓடினார். பின்னர் அனைத்து தேவர் குழாமும் கைலை சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவனை தரிசித்தனர். திருமாலின் மாறுவேடத்தைக் கண்ட சிவபெருமான் அவரிடம் இந்தக் கோலத்திற்கான காரணம் வேண்ட அனைவரும் பாற்கடல் விஷயத்தைக் கூறினார். பார்வதி தேவியும் அவர்களைக் காக்குமாறுக் கூறினார். பின்னர் சுந்தரர் கொண்டு வந்த விஷத்தை உண்டார். அது தொண்டைக் குழிக்குள் சென்றதும் அதை அங்கேயே நிறுத்தினார். ஆகவே அவரது பெயர் நீலகண்டன், சீசகண்டர் என்றாயிற்று. இதற்குப் பின்னர் சிவபெருமானின் அனுமதியுடன் பாற்கடலைக் கடைய அதிலிருந்து அமுதமும், இன்னபிற பொருள்களும் வந்தது. திருமால் மோகினியாகி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமுதம் கொடுத்தார். அதன்பின் அவரவர் அவரவரர் பதவியில் சென்று அமர்ந்தனர்.
அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு அனைவரயும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டியது சென்னை-ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளியாகும். பொதுவாக பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் பார்த்திருப்போம். இது சிவபெருமான் பள்ளிக் கொண்ட தலமாகும். இங்கு பிரதோஷம் பார்க்க மிக்கச் சிறப்புடையது. இவரருகே பார்வதி தேவியிருக்கின்றார். இவர் விஷம் உண்டதால் ஏற்பட்ட மயக்கத்தினால் இவ்வாறிருக்கிறார். இவர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், முக்கூட்டு எண்ணெய் என்றழைக்கப்படும் நெய், தேங்காய், எள் நைவேத்தியமும், செவ்வாய் அன்றுக் கொடுக்க விஷ பயம் தீரும், நீள் ஆயுள், குடும்ப அமைதி ஓங்கும். இவரை தரிசிக்க தமிழக அரசு சுற்றுலாப் பேருந்துகளை இயக்குகிறது.



57. கருடன் அருகிருந்த மூர்த்தி








ஐம்படைகளையும் கையில் ஏந்திக் கொண்டும் பாற்கடலில் தன்தேவியருடனும், பாம்பாணையில் அமர்ந்திருக்கிறார் திருமால். இவர் தேவராலும் போற்றப்படவர் இவர்க்கு ஒருமுறை சிவதரிசனம் செய்ய வேண்டி தனது வாகனமான கருடன் மீதேறி வான்வழியே சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலைச் சென்றார். அங்கே நந்தி தேவனின் அனுமதியுடன் உட்சென்றார். கருடன் வெளியே இருக்கலானான். உள்ளே சிவனார் நீலகண்டமும், முக்கண்களுடன், மான் மழு, வரத, அபய முத்திரை கொண்ட சதுர்புஜங்களுடன், கங்கையில் கொன்றை மலரை அணிந்து சடாமுடியுடன் அர்த்தநாரீஸ்வரராக நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட மேடையில் வீற்றிருக்கிறார். இக்காட்சியைக் கண்ட அனைவரும் அவரை ஆராதித்தனர். திருமால் உட்சென்று நெடுநேரமாகியும் திரும்பவராததால் கருடன் உட்செல்ல முயன்றது, அதற்கு நந்திதேவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருடன் நந்திதேவரைப் பார்த்து என்னை தடுக்க நீயார், நீயே சுடலையாடியின் வாகனம், உன்னை விரைவில் கொல்வேன் என்றது. இதனைக் கேட்ட நந்திதேவர் ஆழ்ந்து தன் மூச்சை இழுத்தும், வெளியிட்டும் வந்தது. அக்காற்றில் அகப்பட்ட கருடன் நிலைத் தடுமாறியது. திருமால் தான் தன்னைக் காப்பவரென்னி இறைவா பாற்கடல்  வண்ணா என்னைக் காக்க வேண்டும் என்றுக் குரல் கொடுத்தது. சிவதரிசனம் செய்து கொண்டிருந்த திருமாலின் காதில் விழ, அவர் சிவபெருமானிடம் வேண்டினார். கருடனை மன்னித்து நந்திதேவர் வெளியிடும் படி அதற்கு செவி சாய்த்த சிவபெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கு குற்றுயிரும் குலையுயிருமான கருடனை விடுவித்தார். கருடன் தன் கர்வம் அடங்கி பின் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றது. நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடன் அருகிருந்த மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
குடந்தை - ஆவுர் செல்லும் வழியில் உள்ளது பட்டீஸ்வரம். இறைவன் பெயர் பட்டீஸ்வரநாதர் இறைவி பெயர் பல்டனைநாயகி யாகும். இங்கு நந்தியனைத்து சிறிது விலகியவாறு அமைந்துள்ளது. என்னக் காரணமெனில் சம்பந்தர் வெளியே நின்றவாறு வழிபட நந்தி வழிவட்டு விலகியது என்றுக் கூறுவர். இறைவனுக்கு தும்பை மலர் அர்ச்சனையும் வெண்பொங்கல் நைவேத்தியமும் சனிக்கிழகைளில் கொடுக்க செல்வ செழிப்புண்டாகும். புகழ், அறிவு சார்ந்த மதிநுட்பம் கிடைக்கும்.



58. பிரம்ம சிரச்சேத மூர்த்தி






மேருமலையில் இருக்கின்ற உயர்ந்த சிகரமொன்றில் திருமாலும், பிரம்மனும் வீற்றிருக்கின்றனர். அப்போது எண்ணற்ற முனிவர்களும், தேவர்களும் அங்குவந்து இருவரையும் தாழ்மையுடன் வணங்கி அவர்களிடம் உலக உயிர்கள் அனைத்தின் மனதிலும் இருப்பவர் உங்களில் யாரென்றுக் கூறுங்கள் என்றுக் கேட்டனர். இச்செய்தியால் கர்வம் கொண்ட திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே அனைவர் மனதிலும் இருப்பவன் என்ற ரீதியில சண்டை ஏற்பட்டது, இதனைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் நழுவினர். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னும் சண்டைத் தொடரவே வேதமும், பிரணவம் உங்களில் இருவரும் பெரியவர் அல்ல, சிவபெருமானே பெரியவர் என்றது. மீண்டும் கேளாமல் சண்டை நீண்டது, இதனையறிந்த சிவபெருமான் ஜோதி வடிவத்துடன் அங்கே வந்து அதன் நடுவே தம்பதி சமேதராய் திருக்கைலையில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காட்டினார். இதனைக் கண்ட திருமால் சிரம் தாழ்த்தி வணங்கி தோல்வியை ஒப்புக் கொண்டு சிவபெருமானை துதித்தார். ஆனால் பிரம்மனோ கர்வமடங்காமல் தன்னுடைய நடுத் தலையால் சிரம் சிவபெருமானை இகழ்ந்துப் பேசினார். இதனைக் கண்ட சிவபெருமான் அவரது கர்வத்தை அழிக்கவென்னி பைரவரை நினைத்தார். பைரவர் வந்தவுடன் பிரம்மனின் நடுத்தலையை தன் நக நுனியால் கிள்ளியெடுத்து தன் கைகளில் ஏந்தியபடி அனைத்து தேவர் முனிவர்கள் இருப்பிடம் சென்று இரத்தப் பிச்சைக் கேட்டார். இரத்தம் கொடுத்து மயங்கிய பிரம்மாவை எழுப்பி அவர்கள் கர்வத்தை அடக்கினார். பின்னர் பிரம்மன் தன்னுடைய கர்வம் பைரவரால் அழியப் பெற்றார். சிவபெருமானை தவறாகப் பேசியதற்காக மன்னிப்பு வேண்டினார். பின் அவரை பலவிதமாகப் பாடித் துதித்து வழிபட்டார். அந்த சிரச்சேதம் செய்த தலை சிவபெருமானிடமே இருந்தது. இதனால் பிரம்மன் நான்முகன் என்றும் சதுர்முகன் என்றும் பெயர் பெற்றார். பிரம்மனின் கர்வத்தை அடக்க ஐந்தாவது தலையை நகநுனியால் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்றப் பெயர் ஏற்படலாயிற்று. இவரை வழிபட திருக்கண்டியூர் செல்ல வேண்டும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார். இங்கமைந்த பிரம்ம தீர்த்ததில் மூழ்கி இறைவனுக்கு வில்வார்சனை செய்ய பிரம்மஹஸ்தி தோஷம் விலகும். தோல் சம்பந்தப்பட் வியாதிகள் குணமடையும்.
மாசிமாத 13,14,15 ஆகிய தேதிகளில் மாலை 5.45-6.15 வரை சூரிய ஒளி இறைவன் மீதுப்படுவது சூரியனே இவரை வணங்குவதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் நாமும் அவருடன் வழிபட சூர்ய சம்பந்தமான தோஷம் விலகும். இவர்க்கு குவளைமலர் அர்ச்சனையும், சக்கரைப் பொங்கல் அல்லது கொண்டைக் கடலை நைவேத்தியம் சனி அல்லது திங்களன்று கொடுக்க திருமணம் கைகூடும் தொழிலில் முன்னேற்றமும், பகைவர் தொல்லையும் தீரும்


59. கூர்ம சம்ஹார மூர்த்தி








ஒரு காலத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் தீராத சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் இருதரப்பிலும் எண்ணற்ற உயிர்சேதம் ஏற்பட்டது. இதனால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற யோசனையை பிரமனிடம் கூறினர். பிரமன் திருமாலிடம் கூற அவரது துணையுடன் பாற்கடலைக் கடைந்தனர். இருதரப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மந்திரமலை ஆடியது. இதனால் திருமால் மலையின் அடியில் சென்று ஆமையாகி மலையைத் தாங்கினார். இதனால் விஷம் வந்து, அதை சிவபெருமான் உண்டது வரை அனைவரும் அறிந்ததே. விஷம் வரக்காரணம் சிவனை வணங்காதது என்று உணர்ந்தோர் அவரை வணங்கினார். இவனது ஆசியுடன் அமுதம் கடைய சென்றனர். இப்பொழுதும் ஆமை வடிவம் தாங்கிய சிவபெருமான் மலையைத் தாங்கினார். அமிர்தமும் வந்தது. அதனைத் தொடர்ந்து பல அறிய பொருட்களும் வெளிவந்தது. அமிர்தத்தை தேவர்கள் மட்டும் அடையும் நேரத்தில் திருமால் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தம் உண்டனர். இவ்விசயத்தை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொன்னார்கள். திருமால் மிக்கக் கோபத்துடன் கையில் இருந்த அகப்பையால் அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல், சிவபூஜை செய்து ராகு, கேது கிரகங்களாக உருமாறி இன்றளவும் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பிடித்து வாட்டுகின்றனர். இதனிடையே மந்திமலையைத் தாங்கியபடி நின்ற (திருமால்) ஆமை ஏழு சாகரங்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்து சேற்றையும் உண்டது. ஆமை அனைத்தையும் உண்டது. இதனால் சந்திர, சூரியர் கடலில் சென்று மறைய பயந்து வேறொங்கோ ஒளிந்துக்கொண்டனர், இருளின் பிடியில் உலகம் அமிழ்ந்தது, இதனால் உலகமாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர். ஆமையை அழிக்குமாறு கூறினார். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் அவ்வாமையின் உடலைக்குத்தி அதன் இறைச்சியை வழித் தெடுத்தார். பெருமானே அதன் ஓட்டை ஆபரணமாக்க வேண்டுமெனத் தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பப்படி தன் திருமார்பில் இருந்த பிரமனின் தலைமாலையின் நடுவே யொருத்தி இணைந்தார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். திருமாலாகிய ஆமையைக் கொன்றதால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
சென்னையிலுள்ள பாரிமுனைக்கருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது வரை ஓவியம் காணப்படுகின்றது. அங்கு சிவமூர்த்திகளின் ஓவியம் நிறையக் காணப்படுகின்றது. இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்களன்றுக் கொடுக்க நீர் கண்டம் மறையும் பயம் விலகும். தம்பதியர் ஒற்றுமைப் பெருகும்



60. மச்ச சம்ஹார மூர்த்தி



சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரமனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரமன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரமனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மந்தரம் போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வேலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு நின்றார். வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். பின்னர் அதன் கண்னை தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவரும் தந்து ஆசி கூறினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த மீனை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவர்க்கு வில்வார்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாய் அன்று கொடுத்து, எள் தீபமிட தொழில் விருத்தியடையும். பல புதியத் தொழில்கள் தோன்ற ஏதுவாகும்.


61. வராக சம்ஹார மூர்த்தி






இரணியாக்கன் எனும் அசுரன் பிரமனை நோக்கி தவமிருந்தான், அவனது தவத்திற்கு மெச்சிய பிரமன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய்போல் சுருட்டி கடலில் சென்று மறைந்தான். தேவர்கள் இதனால் செய்வதறியாது திகைத்தனர். பின் திருமாலிடம் முறையிட்டனர். திருமாலும் அனைவரது ஆசியுடன் கருடவாகனத்தில் சென்று வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் கொண்டார். அது மலையை விட உயரமாகவும். ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளியும். அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டு அதன் மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே குலுங்குகிறது. இப்படியாக பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலையே பிரட்டிப்போட்டு அசுரனைக் கண்டுபிடித்தார். அவனை தன் கொம்பினால் கொன்று, உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அவ்வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்று தின்றது. இதன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராகத்தை தன் சூலாயுதத்தால் கொன்று, அதன் ஒரு கொம்பொடித்து தன்மேனியில் ஆபரணமாக்கினார். அதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. இதனால் அதனுடைய மற்றொரு கொம்பு பிழைத்தது. பின்னர் சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும் அனைவருக்கும் வராக புராணம் கூறி வைகுந்தம் சென்றார்.  திருமால் தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காசியிலும், தமிழகத்திலும் உள்ள பழமலைக் கோயிலிலும் காணலாம். இவர்க்கு புதன்கிழமைகளில் நெய்விளக்கும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் கொடுக்க வியாபாரம் கொழிக்கும் பகைவர் பார்வையால் வளம் பெருகும்.









62. பிரார்த்தனா மூர்த்தி








தாருவன முனிவர்கள் தவமும், யாகமுமே முக்தி கிடைக்கக் கூடிய வழியென நினைத்திருந்தனர். அவர்கள் சிவபெருமானை வணங்காது செருக்குடன் இருந்தனர். அவர்கள் செருக்கை அழிக்க சிவபெருமான் பிட்சாடனராக மாறி முனிவர்களின் மனைவியர் கற்பையும் (பிறஆடவனின் அழகை நினைப்பதே) அழித்தார். திருமால் மோகினி அவதாரத்துடன் முனிவர்களின் தவத்தை அழித்தார். இதற்கெல்லாம் யார்காரணமென தவவலிமையால் முனிவர்கள் உணர்ந்தனர். உடனே அப்சார வேள்வி நடத்தி அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் அனைத்தையும் சிவபெருமான் மீது பிரயோகித்தனர். முயலகன் என்ற அசுரனும் சிவபெருமானை நோக்கி வர அவனது முதுகில் ஏறி நடனமாடி முனிவர்களுக்கு ஞானமளித்தார். இச்செய்தியைக் கேள்வியுற்ற உமாதேவியார் வருந்தினார். தாமே சக்தியாக உள்ளோம். அவர் என்னை விடுத்து திருமாலை மோகினியாக்கிச் சென்றுவிட்டாரென்ற செய்தியைக் கேட்டதும், ஓர் திருவிளையாடல் நடத்த எண்ணி ஊடல் கொண்டார்.
இதனையறிந்த சிவபெருமான் சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்தும், அதனைப் போக்க நினைத்தார், அவர் சக்தியிடம் சென்று தேவி எனது ஒரு சக்தியான நீயே செய்கின்ற வேலையைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். அதாவது நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்க்கையாகவும் பிரிகின்றிர்கள். என் மனைவியாக கையில் நீயும், ஆணுருவம் கொள்கையில் திருமாலாகவும், யுத்தக் களத்தில் துர்க்கையாகவும், கோபத்தில் காளியாகவும் உருமாறுகின்றீர்கள். எனவே திருமால், காளி, துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்க என்றார். உடன் உமாதேவியார் கோபம் மறைய இறைவா தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக்காட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். உடன் சிவபெருமானும் ஆடிக் காட்டினார் இந்த நடனத்தையே கௌரி தாண்டவம் என்றழைப்பர். தனது ஊடலுக்கு பலமுறை இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் மன்னித்து தன்னுள் ஐக்கியப்படுத்தினார். சிவபெருமான் உமாதேவியின் ஊடலுக்கான காரணத்தை விளக்கியதாலும் அவர் நடனம் காண பிரார்த்தித்தமையால் திருநடனத்தை மறுபடியும் அவர் முன் நிகழ்த்திக் காட்டினார். இம்மூர்த்தியே பிரார்த்தனா மூர்த்தி ஆவார். இவர்க்குரியத் தலமாக ருத்ரகங்கை குறிப்பிடப்படுகிறது. இவர்க்கு வெண்தாமரை அர்ச்சனையும், நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும் புதன் அன்று கொடுத்து, நெய் தீபமிட்டால் திருமணத்தடை விலகி திருமணம் கைக்கூடி வரும் வேண்டிய செல்வமனைத்தும் கிடைக்கும்.



63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி




சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்த நான்முகனின் நடுத்தலையை பைரவர் தன்னுடைய நகத்தினால் திருகி எடுத்தார். அதன் பின்னர் அவருடைய ஆணைப்படி அவரால் உருவாக்கப்பட்ட அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் வனம் சென்று அங்கிருந்த முனிவர்கள், ரிஷிகள், தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அதனால் வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். இதனால் இறந்தவர்களை உயிர்பித்து அவர்களின் செருக்கை அழித்தார். அவர்கள் அடுத்து சென்ற இடம் வைகுந்தம். அங்கே தன்னையும், கணத்தலைவர்களையும் தடுத்த திருமாலின் முழுமுதற்காவலனான விடுகசேனனை சூலாயுதத்தால் கொன்றார். தன் தோள் மீது போட்டார். பின்னர் தேவியர் படை சூழ பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் தனது கணத்தலைவர்களுடன் சென்று திருமாலிடம் இரத்தப் பிட்சை ஏற்க வந்ததைச் சொல்ல சந்தோஷத்துடன் திருமால் தனது நகத்தினால் நெற்றியியை கீறி ஒரு ரத்த நரம்புருவி அதிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார்.
இவ்வாறாக ஆயிரம் ஆண்டுகள் இரத்தம் கொடுத்தும் பைரவரின் பிட்சா பாத்திரம் நிறையவில்லை, இதனால் திருமால் பலவீனமடைந்து மயங்கினார். இதனைக் கண்ணுற்ற அவன் தேவியர் திகைக்க, பைரவர் அவர்களைத் தேற்றி திருமாலை எழச்செய்தார். பின்னர் திருமாலின் வேண்டுகோளின்படி வடுகசேனனை மறுபடி உயிர்பித்தார். இவ்வாறு முனிவர், ரிஷிகள், தவசிகள், தேவர்கள், திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்றதற்குக் காரணம் அவர்களுடைய அகந்தையையும், கர்வத்தையும் அழிப்பதற்குத்தானே ஒழிய வேறில்லை. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் காசியாகும். இங்குள்ள விஸ்வநாதர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைளில் கொடுக்க விளக்கிட பகைவர் தொல்லை மறையும். நாம் செய்த பாவங்கள் கங்கையில் மூழ்கி பின் விஸ்வநாதரை தரிசிக்கத் தீரும்.


64. சிஷ்ய பாவ மூர்த்தி








தமிழ்க்கடவுள் எனவும், தமிழர் கடவுள் எனவும் போற்றப்படுபவன் முருகபெருமான். தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மனை அழித்தார் முருகபெருமான். முருகன் வேறு சிவசக்தி வேறல்ல. அவரே இவர். இவரே அவர். ஆறிற்கும் ஆறுமுகனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஆறுமுகம் கொண்டவன், ஆறு எழுத்து கொண்டவன், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன், வளர்பிறை சஷ்டி அவனுக்கு உகந்த நாள். இப்படி அனைத்தும் ஆறு மயம் தான். ஒருமுறை கைலைக்கு பிரமன் வந்தான். அப்போது அகந்தை மேலிட குமரனை வணங்காமல் சென்றான். குமரன் பிரமனை அழைத்து அவன் யாரென்றும், செய்யும் தொழில் என்னவென்றும் கேட்டான். பிரமனும் நான் படைப்புத் தொழில் புரிபவன் என்றான். குமரனும் படைப்புத் தொழிலை எவ்வாறு செய்வாய் என்றான், வேதம் ஓதி செய்வதாகக் கூறினான். வேதம் ஓதுக என்றான் குமரன் பிரமனும் ஓம் என்று படித்தொடங்கினான். உடன் குமரன் பிரமனை நோக்கி இப்பொழுது நீர் கூறிய பிரணவத்தின் பொருள் கூறுக என்றான். பிரமன் பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்க, பிரணவத்தின் பொருள் தெரியாத நீயெல்லாம் எவ்வாறு படைப்பை மேற்கொள்வாய் என்றபடியே பிரமனை சிறையில் அடைத்தான் இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் குமரனிடம் வந்து குமரா நீ பிரணவத்தின் பொருளை அறிவாயா அப்படியெனில் எனக்கு கூறு என்றார். உடன் குமரனும் முறைப்படிக் கேட்டால் கூறுவதாகச் சொன்னான். உடனே சிவபெருமான் சீடராக மாறி கேட்க, குமரனோ குருவாக மாறி உபதேசித்தான். அப்பிரணவத்தின் பொருள் செவிகளில் தேனாய் இனித்தது. (அதன் பின்னர் பிரமன் சுவாமிமலை சென்று சிவபூஜை செய்து அவர் மூலமாக முருகபெருமான் பொருளுரைக்க பிரமன் அறிந்தார்) அதாவது (தந்தைக்கே) தகப்பனுக்கே சுவாமியாக அதாவது குருவாக இருந்து பிரணவத்தின் பொருள் உரைத்ததால் குமரனுக்கு தகப்பன் சாமி எனப் பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் சிஷ்யராகவும், குமரன் குருவாகவும் உபதேசம் கொடுத்ததால் இம்மூர்த்திக்கு சிஷ்ய பாவ மூர்த்தி என்றப் பெயர் உண்டாயிற்று.
சுவாமிமலை குடந்தையருகே அமைந்துள்ளது. இத்தலத்திலேயே தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. என இத்தல இறைவனை வணங்க கல்வி மேம்பாடு அடையும். மேலும் இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியமும், திங்கள்ல செவ்வாய்களில் கொடுத்து நெய்விளக்கிட கல்வி சிறப்படையும் நீள் ஆயுள் உண்டாகும். அறிவு மேன்மையடையும்.

















































 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக