செவ்வாய், மே 31, 2011

வள்ளலார்


  • கடலூர் அருகிலுள்ள திருமருதூர் கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்று விட்டார்.விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, என்ன நடந்தது ? என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்தடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5)ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.
  • ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்து கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை ஞானக்குழந்தை என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்ல வில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி.ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறுவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.
  • தன் தம்பி மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது  அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி. அண்ணனிடம் தான் ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம்.அவருக்கென தனியே வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார். இதைக் கவனித்த சபாபதி தன் தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது. ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடத்த தினத்தன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக தம்பியை அனுப்பினார் சபாபதி.மகிழ்ச்சியுடன் சொன்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு, சபாபதி வியந்து போனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.ராமலிங்கமோ, தன் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும் மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்ப்த்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும் தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர். இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, வள்ளலார் என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார்.அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு ஜீவகாருண்ய உண்மை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையில் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார். 1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்கு சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்



1 கருத்து:

  1. http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409 - Tamil
    http://www.vallalyaar.com/?p=975 - English

    பதிலளிநீக்கு