செவ்வாய், அக்டோபர் 11, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 10

ஞானகுரு பட்டினத்தார் 
      பாடல்களில் இருந்து .......

எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்
சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?துர்நாற்றம் பொருந்திய இந்த நிலையில்லாத உடலை நெருப்பு எனக்கென்னும் , உடலில் உள்ள கிருமிகளும் எனக்கென்னும் இந்த மண்ணும் எனக்குரியதென்னும் தன்னுடைய உணவிற்கு நரியும் , கொடிய நாயும் எனக்கென்னும் இந்த பயனிலாத உடலை நான் விரும்பி வளர்த்தேன் இதனால் எனக்கென்ன பயன் .

என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனேபெற்ற தாயும் உயிரற்று விழுந்த உடலை பிணம் என்று இகழ்ந்து விட்டார் , பொருள் தேடி கொடுத்த மனைவியும் போய்விட்டார் என்று அழுது புலம்பி விட்டார் . பாசத்தைக் கொட்டி வளர்த்த மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார் , அனைத்து பந்தங்களும் உதறிவிட்டேன்  இனி உன் பற்றை தவிர வேறு ஒரு பற்றும் இல்லை என் அப்பனே .
  
உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
இரக்கத் துணிந்துகொண்டேன் குறை ஏதும் எனக்கில்லையே.தியானிப்பதற்கு உனது பஞ்சாட்சரம் எனும் திருவெழுத்தைந்து உள்ளது , எழுத்தை நினைந்து கொண்டு நெற்றியிலே இட்டுக்கொள்ள திருநீறுமுண்டு , தெருக்குப்பையில் உடுத்துவற்கு பழைய கிழிந்த துணியும் உண்டு , எந்த சாதியினரிடத்தும் இரந்து உண்ணத் துணிந்து விட்டேன் . இனி எதற்காக் நான் கவலைப்பட வேண்டும் எந்த குறையும் எனக்கு இல்லை . 

ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து
போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல் லறிவால்
வாதைப்பட்டாய் மட மானார் கலவி மயக்கத்திலே
பேதப்பட்டாய் நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தருமே !


மனமே , இப்பிறவி எடுத்து எண்ணிலா துன்பங்கள் அடைந்தாய் . அப்படிப் பட்டும், துன்பப் படாமல் இருக்கும் வழி இது தான் என்று உணரமாட்டாயா சிவனடியார்களைத் தேடி போ , சிவஞானம் பெறு சிவஞானம் ஒன்றே உன் பிறவிப் பிணி எனும் பெரும் நோயை தீர்க்கும் மருந்து . அதை விடுத்து அறிவில்லாத மனமே பெண்களின் காம வலையிலே சிக்குண்டு அவர் மேல் மயக்கங் கொண்டு சிவத்தை நினையாமல் இன்னும் பெரும் நோயிலே இருக்க நினைத்துவிட்டாய் போலும் நெஞ்சமே உன்னைப் போல் அறிவு இல்லாதவர் இவ்வுலகில் யாருமில்லை .

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே !உண்மை ஞானம் தெளிந்தவர்கள் எப்படி இருப்பார்களென்றால் , பேயைப் போல திரிவார்கள் , எந்த இடத்திலும் உறங்குவார்கள் பிணம் போல , பிறர் தனக்கு இடும் பிட்சைஅனைத்தும் நாயைப் போல உண்டு , நரியைப் போல் உழன்று , நல்ல குல மாதரை தாயாய் நினைத்து , உலகத்தார்களை தமது சுற்றத்தாரை நினைத்து அவர்களுக்கு நல்மொழிகளைக் கூறி , அனைவருக்கும் குழந்தையைப் போல் இருப்பார்கள் உண்மை நிலை உணர்ந்தவர்கள் .

விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீண னிட்ட
முடக்கே புழுவந்து உறையிடமே நலம் முற்றும் இலாச்
சடக்கே கருவி தளர்ந்துவிட்டார் பெற்ற தாயுந்தொடாத்
தொடக்கே உனைச்சுமந் தேன் நின்னின் ஏது சுகமெனக்கே?மாமிசப் பிண்டமே , பிணந்தின்னி கழுகளின் விருந்தாக வந்த சவமே , கமண்டலம் ஏந்திய பிரமன் படைத்த உடையும் சிறு குடிலே , புழுவும் கிருமிகளும் தங்கும் இருப்பிடமே , சிறு நன்மையையும் இல்லாத உடலே  ஆவி பிரிந்துவிட்டால் பெற்ற தாயும் தீண்ட தயங்கும் தீண்டத் தகாத அருவருப்பான பொருளே , உன்னைத் தாங்கித் திரிந்தேன் அதனால் என்ன சுகம் எனக்கு .

அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே !


துன்பம் வரும் காலத்தில் நீ அழுவதால் என்ன பயன் , துன்பம் வந்துவிட்டதே என்று நொந்து போவதனால் என்னபயன் , நம்மால் முடியாது என்று பிறரை நம்பிப் போவதினால் என்ன பயன் , உன்னை இகழ்ந்து பிறர் கூறிய பழிச் சொற்களால் என்ன பயன் , இவை அனைத்துமே நான்முகன் உனக்கு விதித்த சூழ் வினைப்படி நடக்கும் , ஆகவே எதை நினைத்தும் கலங்காதே என் ஏழை நெஞ்சே .

விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
பதியார் துடைப்பும் நம் பால் அணுகாது பரமானந்தமே
கதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ
மதியா திருமன மே இது காண் நல் மருந்துனக்கே !


படைப்புக் கடவுளாகிய பிரமன் படைத்த படைப்பும் , திருமாலின் காத்தல் தொழிலும் , கயிலை நாதனின் அழிப்பும் , இந்த முத்தொழிலுமே நம்மை அணுகாது மனமே நீ பரமானந்தமே கதியாகக் கொண்டு சிவ பதத்தை நிலையெனக் கருதி மற்றதெல்லாம் உறக்கத்தில் வரும் கனவென்று புறந்தள்ளி அவற்றை நினையாமல் இரு மனமே இது தான் உனக்கு நல்ல மருந்து .


நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரம் மதி யாமல்வரும்
பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே !


நாயானது ஒருவர் சாப்பிடும்பொழுது கண் இமைக்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களும் இரக்கமடைந்து மீதி உணவை அதற்கு கொடுப்பர் . இப்படி தெண்டி தின்னும் உணவு நாய்க்குண்டு , நமக்கு பசி வந்து கேட்ட போது பிச்சை உண்டு , யமனின் பாசக் கயிறை வெல்வதற்கு வாயில் உச்சரிக்க நல்ல பஞ்சாட்சரம் உள்ளது . நம்மை மதியாமல் வரும் பேயை ஓடச் செய்ய திருநீறுமுண்டு , நம்மை அணுக பயந்து கொண்டிருக்கும் பிறவி நோய்க்கு ஞானதேசிகன் சிவபெருமானது அருட்பார்வை உள்ளது ,


நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே 
ஏன் இப்படிகெட் டுழலுகின்றாய்? இனி ஏதுமில்லா
வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே !

நான் எவ்வளவு புத்தி சொன்னாலும் கேட்காத என் நெஞ்சமே , ஏன் இப்படி கெட்டு உழலுகின்றாய் சிவனடியே உன்னை எல்லாத் துன்பங்களிலும் காக்கும் என்று அறிந்தும் சிவனடியை பற்றும் வழியை தேடாமல் மாய உலகத்தில் உள்ள இன்பங்களை நோக்கி மீண்டும் மீண்டும் போகின்றாயே என்ன புத்தி இது . நீ செய்யும் இந்த வேடிக்கை எப்படி இருக்கிறதென்றால் வானத்தில் உள்ள விண்மீனுக்கு தூண்டில் போட நினைக்கும் மூடனைப் போல் உள்ளது . 

தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்
“நீயாரு ? நானார்?” எனப்பகர் வார் அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு
பாயாரும் நீயுமல்லால் பின்னையேது நட் பாமுடலே.

என் உடலே நீ நன்றாய் திரிந்து சம்பாதிக்கும் காலத்தில் " நாங்கள் தாயார் " என்றும் மனைவியர் என்றும் உறவாடுபவர்கள் உனக்கு நோய் வந்து உன்னால் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று அறிந்தவுடன் பாயில் படுத்து விட்டால் நீயாரோ நானாரோ என்று கூறி உன்னை நீங்கிவிடுவார் . அந்த நேரத்தில் குடிவந்த நோயும் கொண்ட பாயும் அல்லாது வேறு யாரும் உனக்கு துணையாக மாட்டார் ஆகவே இவர்களைப் போல் உள்ளவர்களிடத்தில் உள்ள பற்றை விடுத்து இறைவனின் திருவருளை பெறுவாய் .  

ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி
நோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டுவிட்டால்
பேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை
நீயும் அறிந்திலையோ? பொருள் தேட நினைந்தனையே.

ஆராய்ந்து பார்த்தால் உரோம துவாரங்கள் தோறும் சிறு புழுக்கள் மலிந்து கடக்கும் மலக்குட்டையாகிய சரீரத்தைச் சுட்டுவிட்டால் , அந்த இடத்தில் பேய் நடனமிடும் என்று கேள்விப்படவில்லையோ , உயிர் இருக்கும் போது துர்நாற்றத்தை தன்னுள் வைத்திருக்கும் போய்விட்டால் பிணமென்று யாரும் தொட மாட்டார் , சுட்ட பின்பும் பேயென்று சொல்லும் இந்த உடலை பேணும் பொருட்டு பொருள் தேட நினைத்தாயே .

மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ
ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே !

கண்ணுக்கு மையிடும் மனைவியும் , புதல்வரும் செல்வம் மிகுந்த வாழ்க்கையும் வாழும் வீடும் ஆகிய மாயையானது செந்தீயை கையிலேந்திய கருணைக் கடவுளே உனதருள் கிடைக்கும் முன் அவை அனைத்தும் உண்மை என்று நம்பி இருந்தேன் , உன்னை பற்றியபின் அவையெல்லாம் நாள்கள் செல்லச்செல்ல வெட்டவெறும்  பாழாய், பழம் கதைகளாய் , கனவாய் போனதே ஐயனே . 


ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை
மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில் உன்னி
விழியால் புனல் சிந்தி விம்மியழு நன்மை வேண்டுமென்றே !பிறப்பொழியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல் படும் என் நெஞ்சமே , அழிவில்லாத வீடுபேற்றை அடைவதற்கு மருந்து சொல்கிறேன் கேள் , அன்னையும் பிதாவும் இன்றி பிறப்பு மூப்பு இறப்பு என்ற எதுவும் இன்றி என்றும் நிலையானவனாக இருக்கும் என் அப்பனை மழுவையும் மானையும் கரத்தில் ஏந்தியிருக்கும் எம் கடவுளை பெருமை மிகுந்த ரிஷபத்தில் ஏறும் பெருமானை மனதில் தியானித்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஆறாய் பெருகி ஓடும் அளவிற்கு விம்மி அழு மனமே நீ வேண்டும் நன்மையை அருள வேண்டும் என்று .

                            பாடல்கள் தொடரும் ........

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                                    - திருவடி முத்து கிருஷ்ணன்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக