செவ்வாய், மே 31, 2011

சித்தர் பாடல்கள்

  •                            காயக்கப்பல் 


    ஏலேலோ ஏகரதம் சர்வரதம் 
    பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ


    பஞ்சபூதப் பலகை கபபலாய்ச் சேர்த்து 
    பாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டி 
    நெஞ்சு மனம் புத்தி ஆங்காரஞ்சித்தம் 
    மானாபிமானங் கயிறாகச் சேர்த்து 


    ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி
    ஐம்புலன் தனிலே சுக்கானிருத்தி
    நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி 
    சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து 


    தஞ்சலான வெள்ளத்தில் தானே 
    அகண்ட ரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ 
    களவையுங் கேள்வையுங் தள்ளுடா தள்ளு 
    கருனைக்கடலிலே தள்ளுடா கப்பல் 


    நிற்குனந்தன்னிலே தள்ளுடா தள்ளு 
    நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் 
    மூக்கணை முன்றையுந் தள்ளுடா தள்ளு 
    முப்பாலுக்கப்பாலே தள்ளுடா கப்பல் 


    திக்குதிசைஎங்கும் தள்ளுடா தள்ளு 
    திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா தள்ளு 
    பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு 
    பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ 


    தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து 
    தாரம் சகோதரம் தானதும் மறந்து 
    பந்தமும் நேசமும் பாசமும் மறந்து 
    பதினாலு லோகமும் தனையும் மறந்து 


    இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி
    ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி 
    அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில் 
    அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ 




    இந்த பாடல் இயற்றிய சித்தர் யார் என்பது தெரியவில்லை 


    தொகுப்பு : திருவடி முத்து கிருஷ்ணன்








வள்ளலார்


  • கடலூர் அருகிலுள்ள திருமருதூர் கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்று விட்டார்.விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, என்ன நடந்தது ? என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்தடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5)ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.
  • ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்து கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை ஞானக்குழந்தை என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்ல வில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி.ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறுவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.
  • தன் தம்பி மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது  அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி. அண்ணனிடம் தான் ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம்.அவருக்கென தனியே வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார். இதைக் கவனித்த சபாபதி தன் தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது. ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடத்த தினத்தன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக தம்பியை அனுப்பினார் சபாபதி.மகிழ்ச்சியுடன் சொன்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு, சபாபதி வியந்து போனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.ராமலிங்கமோ, தன் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும் மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்ப்த்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும் தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர். இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, வள்ளலார் என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார்.அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு ஜீவகாருண்ய உண்மை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையில் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார். 1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்கு சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்



பாம்பன் சுவாமிகள்







பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.
அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான்.  ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
1923ம் ஆண்டு சுவாமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை டாக்டர்கள் சுவாமி உயிர்பிழைக்க அக்காலை எடுத்துவிட வேண்டும் என்றார்கள். ஆனால், எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில், முருகப்பெருமான் காட்சிதந்து முறிந்த எலும்பு கூடுமாறு செய்தார். ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம்  ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர்.  பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார். 

கந்த சஷ்டி தந்த தேவராயர்




வல்லூரில் வீராசாமி என்பவருக்கு பிள்ளையில்லாத குறையை நீக்க பிறந்தவர் தேவராசர். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல்நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார். 6 நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி. (ஆறு) கவசம், சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம். கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகிறது. அதுமட்டுமின்றி, படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரிலா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை எனத் தோன்றுகிறது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமின்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது


  

மௌன சித்தர் பாடல்கள்


வகுளி நாதரென்னும் மௌன சித்தர் பாடல்கள் 
            
                                                குறவஞ்சிப்பா

ஆதிபெருஞ் சோதிதனை யனுதினமும் நாடி 
   ஐயர்பதந் தேடிகொண் டருள்பெறவே பாடிச் 
சோதிஎனும் மனோன்மணியா ளருதனைப் பெற்றுச் 
சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.

ஆங்காரந் தனயடக்கி யருள்நிலையை நோக்கி 
அரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி 
பாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம் 
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் .

பேய்குணத்தைச் சுட்டல்லோ பிரமநிலை கண்டோம் 
பிரமபதி தான்கடந்து சுழிமுனையுள் கொண்டோம் 
நாய்போலே அலையாமல் நாமிருந்தோம் தவசில் 
நல்லதொரு ஆங்கார மடக்கிமிகப் பவுசாய் .

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம் 
பஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம் 
பாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி 
ஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி   
தாயிஉமை மனோன்மணியா ளெனக்கு சொன்னசித்தைத் 
தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே .

நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்துருகி வாடி 
நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமுந் தேடி 
கலையறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் 
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனே படித்தோம்.

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம் 
உற்றாரை பற்றறுத்து மலைகுகையில் இருந்தோம் 
காணுதற்கும் எட்டாத பரவேளியைக் கண்டோம் 
கற்பமது உட்கொண்டு உடல்வளர்த்து கொண்டோம் 

தந்தைதாயார் சுற்றமொடு தளர்ந்துற வாடோம் 
தவநிலையைப் பெற்றுனராசெய் கையைத்தேடோம் 
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம் 
மேலான பரவெளியி னருளதனை யறிந்தோம்.

நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம் 
நல்லதொரு மூலவட்டச் சுழியை யறிந்தோம்.
வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை யறுப்போம் 
வையகத்தின் செய்கைதனை வழுவாமல் மறுப்போம்.

சக்திச்சக்ர பீடமேறிச் சுத்தவேளியைக் கண்டோம் 
சகலமும் பரவெளி என்றெண்ணி மனமதனில் கொண்டோம் 
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம் 
சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம்.

தொன்னூத்தறு தத்துவத்து உரைத்தனங்களைக் கொண்டோம் 
தய்யபர வெளிதனிலே அய்யர்பதங் கண்டோம் 
விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டோம் யாமே 
மேலான பரவெளியின் ஒளிவைக் கண்டுதாமே 

நானென்ற ஆணவத்தை நயத்தறுத்து விடுத்தோம் 
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தோம் 
தானென்ற கருவமதைத் தணித்துவிட்டு வந்தோம் 
தவமேதான் கதியென்று சரவழியில் உகந்தோம் .

மௌன சித்தர் பாடல்கள் முற்றிட்டு                                    திருவடி முத்துகிருஷ்ணன் 

பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்


கும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.


விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே.



பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.


வழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்.


பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்


ஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.


திங்கட்கிழமை: (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.


செவ்வாய்க்கிழமை: (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.


புதன்கிழமை: (மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.


வியாழக்கிழமை: (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.


வெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.


சனிக்கிழமை: (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.


இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.


குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.


சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.


தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்: ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.


ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.


மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:
சித்திரை அம்சுமான்  சண்ட பைரவர்
வைகாசி தாதா  ருரு பைரவர்
ஆனி ஸவிதா  உன்மத்த பைரவர்
ஆடி அரியமான்  கபால பைரவர்
ஆவணி விஸ்வான்  ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன்  வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன்  ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா  பீஷண பைரவர்
மார்கழி மித்திரன்  அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு  குரோதன பைரவர்
மாசி வருணன்   ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா   சட்டநாத பைரவர்.