சனி, மே 28, 2011

64 சிவ வடிவங்கள் (31-40)

31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி






திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழுவயதில் அவருக்கு <உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் <உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஐந்தொழில்கள் செய்து எம்மை வழிநடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். அவ்வாறிருக்கையில் அவனுடன் இருக்கும் ஒரு அந்தணச் சிறுவன் பசுவை அடிப்பதைக்கண்டான் விசாரசருமர். உடன் பசு மேய்க்கும் வேலையை அவனே செய்யலானான். கோமாதாவின் அருமை பெருமைகளை <உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான். சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. இதற்கிடையே அங்குள்ள மண்ணி ஆற்றங்கரையின் மணல்மேட்டில் உள்ள அத்திமரத்தின் கீழே மணலிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜைசெய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார். இதனையே தினசரி வாடிக்கையாக்கினார். இதனைக் கண்டோர் ஊர் பெரியோரிடம் முறையிட ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசருமரின் தந்தை இனி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார், மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று பூஜித்து பாலபிசேகம் செய்துக் கொண்டிருக்கும் போது அவரது தந்தையார் கண்டு விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடிவைத்தார். அடியின் வலி உணராமல் சிவபூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் அதிக கோபமுற்ற தந்தையார் பால் குடங்களை <உதைத்துத் தள்ளினார். இதன்பின்னே சுயநினைவு வரப்பெற்ற விசாரசருமர் தந்தையென்னும் பாராமல் அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார். <உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக்கொடுத்தார். பின் என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவாக்கினோம் மேலும் என்னுடைய அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தும் உனக்கே தந்தோம் என்றபடியே தனது சடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்ததால் சிவபெருமானுக்கு "சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
கும்பகோணம் சேய்ஞலூர் ரோட்டைத் தாண்டி அமைந்துள்ள ஊர் "திருவாய்ப்பாடி ஆகும். இவரது பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் பெரியநாயகி என்பதாகும். சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது தூய்மையடையும்.






32. தட்சிணாமூர்த்தி






சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு  முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. இவரை தரிசிக்க செல்லவேண்டிய தலம் "ஆலங்குடி யாகும், குடந்தை-நீடாமங்கலம் வழியாக இவ்வூர் உள்ளது. இறைவன் காசியாரணியர். இறைவி <உமையம்மையாவார். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகும். சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி <உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.
இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும்.


34. வீணா தட்சிணாமூர்த்தி










திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளினார். அப்போது நாரதர். சுக்ரமுனிவர்களின் இசைஞானத்தை உணரவும், சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார். அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக்கொண்டு வந்தார். அப்போது கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார். அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும். முக்கியமான வீணையுடன் பாடும்போது <உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு. இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டினார். இதனைக்கண்ட, கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். தங்கள் கண்களையே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர். இவ்வாறு நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சிதருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.
திருச்சிக்கருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கின்றார். இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக்கிழமைகளில் இவர்க்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.






35. காலந்தக மூர்த்தி






மிருகண்டு முனிவர் என்பவர் மருத்துவதி என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். ஆண்டுகள் பலவாகியும் குழந்தையில்லாத காரணத்தால் மிருகண்டு காசி சென்று குழந்தை வேண்டி தவமியற்றத் துவங்கினார். தவத்திற்கு மெச்சி சிவபெருமான் காட்சிக் கொடுத்து என்ன வேண்டும் என்றுக் கேட்டார். குழந்தை வேண்டுமென்றதும் முனிவரே தீயகுணம், உடல் நோய், ஐம்பொறி ஊனம், அறிவின்மை இவற்றுடன் நூறாண்டு வாழும் பிள்ளை வேண்டுமா? அல்லது அழகு, அறிவு, நோயின்மை, எம்மருள் கொண்ட பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளை வேண்டுமா என கேட்க முனிவரோ பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளையே வேண்டுமென்றார். உடன் வரம் கொடுத்து மறைந்தார். பின் சிறிது நாளில் ஒரு நல்ல சுபமுகூர்த்த தினத்தில் மருத்துவதி அழகான பிள்ளையைப் பெற்றெடுத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்து, தேவதுந்துபி இசைத்து வரவேற்றனர். நான்முகன் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டார்.
மார்க்கண்டேயன் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளரத்துவங்கினான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்னக்காரணம் என்றுக் கேட்க. பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாககக்க கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகையருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்குக என்று வரமளித்தார். பின் ஊர் திரும்பினார். அங்கும் வழிபாட்டைத் தொடர்ந்தார். இவ்வாறிருக்கும் போது அவனது ஆயுள் முடிவடையும் சமயத்தில் எமதூதன் அழைத்தான். பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக்கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும், எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை அசைக்க கூட முடியவில்லை முடிவாக எமனே வர மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவிக் கொண்டான். உடன் சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார். இதனால் எமன் இறந்தான். உடன் பூமியில் மரணம் நிகழாததால் பூமியின் எடைக் கூடிக் கொண்டே சென்றது. பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானை வேண்டினார். உடன் எமன் உயிர்த்தெழுந்தான் மிருகண்டு மகனான மார்க்கண்டேயனுக்கு நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார். மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்த கோலமே காலந்தக மூர்த்தி யாகும். அவரை வணங்க நாம் சொல்ல வேண்டிய தலம் திருக்கடவூர் ஆகும். இத்தலம் மாயவரம் அருகேயுள்ளது. எமபயம் நீங்க இத்தல இறைவனை வணங்க வேண்டும். ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என அனைவரும் எமபயம் நீங்க இங்குள்ள இறைவனை தினமும் வழிபடுவதாக ஐதீகம். இங்கு அறுபது வயதைக் கடந்தோர் சஷ்டியப்த பூர்த்தி விழாவினை இங்கு வந்துக் கொண்டாடுகின்றனர். செந்தாமரை மலர் அர்ச்சனையும், தேங்காய், மஞ்சள், பூ நைவேத்தியமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும். எமபயம் நீங்கும்.


36. காமதகன மூர்த்தி






பார்வதிதேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கணவனாக எண்ணி தவத்தில் இருந்தார். இங்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி அந்நிலையிலேயே இருந்தார். அவரால் <உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோகநிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது, நான்முகனின் படைப்புத் தொழி<லும் நின்றது. இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுத்திடவே அனைவரும் சிவதியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் இத்துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர்  இந்திரன் அனைத்து தேவர்குழாமுடன் சென்று நான்முகனிடம் ஆலோசனை கேட்க நான்முகனோ மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும் என்று  ஆலோசனைக் கூறினார். இதனால் மன்மதனும் வந்தார். பாணம் விட மறுத்தார். இறுதியில் <உலக நன்மைக்காக அந்தக்காரியத்திற்கு ஒத்துக் கொண்டார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் சென்றார். அவரை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார் சென்றவுடன் அவர் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி வேண்டினார். அதன்படி மன்மதன் மீண்டும் <உயிர்த் தெழுந்தார். உடனே ஒரு நிபந்தனை விதித்தார். ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் இருக்கும்படி நிர்பந்தித்தார். மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது, இவரை மாயமவரம் அருகே உள்ள குறுக்கையில் காணலாம். இவரை வணங்கினால் அளவுக்கதிகமான காம உணர்வு அடங்கும். சிவத்தில் ஐக்கியமாக விரும்பும் ஆன்மாக்கள் இவரை வணங்க, காமம் தலைதூக்காது. இவர்க்கு தேனாபிசேகமும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடுக்க உடன் பிறந்தோருடைய அன்பு மேலோங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.



37. இலகுளேஸ்வர மூர்த்தி




நம்முடைய பூமியைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாத பரந்து விரிந்துள்ள வானில் உள்ளன. இவை அறிவியல் பூர்வமான <உண்மையாகும். இதையே ஆன்மிகத்தோடு இணைத்து பார்ப்போம். இவ்வுலகம் எட்டுக்கொண்டது திரசரேணு, திரிசரேணு எட்டுக் கொண்டது லீகை, லீகை எட்டுக் கொண்டது யவை, யவை குறுக்குவாட்டில் எட்டுக் கொண்டது மானங்குலம் மானங்குலம் இருபத்தி நான்கு கொண்டது முழம், முழம் நான்கைக் கொண்டது வில், வில் இரண்டுடையது தண்டம், தண்டம் இரண்டாயிரம் கொண்டது குரோசம், குரோசம் இரண்டுடையது கெவியூதி, அக்குரோசம் நான்கைக் கொண்டது யோசனை, யோசனை நூறு கோடி கொண்டது நிலத்தின் தத்துவத்தின் விரிவாகும்.பஞ்சபூதங்களைக் கொண்ட ஆயிரமாயிரம் பேரண்டங்கள் <உலகில் உள்ளன. பொதுவாக பத்து (புவனங்கள்) உலகங்கள் மேலேயும், பத்து உலகங்கள் கீழேயும் இருக்கும் அதுத்தவிர ஈசானத்தில் பத்தும், வடக்கு, வாயுமூலை, மேற்கு, நிருதிதிக்கிலும், தெற்கிலும், அக்னிமூலையிலும், கிழக்கி<லும் முறையே பத்து பத்து உலகங்கள் இருக்கும். இவைத்தவிர எண்ணிலடங்கா உலகங்கள் இருக்கின்றன. அந்த உலகங்கள் ஆயிரக்கணக்கான பேரண்டத்தில் பரவியுள்ளன. அதில் நடுநாயகமான சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரது திருமேனியைக் காணக் கண்கள் ஒளியிழக்கின்றன. அவ்வாறான ஒளிவெள்ளத்தின் நடுவே அவர் வீற்றிருக்கும் கோயிலின் விரிவு அநேக கோடியமாகும், அந்தத் திருமேனியின் அளவு அநேக கோடியாகும். அவர் வலப்புறமாக மழுவும், சூலமும், இடப்புறமாக கலசமும் கொண்டு இவ்வுலகிலுள்ள <உயிரினங்களின் மும்மலங்களைப் போக்கும் நல் ஞானாசிரியனாக அவர் வீற்றிருக்கிறார். இத்தகைய பெருமையுடன் ஒவ்வொரு அண்டத்தி<லும் ஒருவராக எழுந்தருளி அங்குள்ள <உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அருளாட்சி செய்யக்கூடிய மூர்த்தியே "இலகுளேஸ்வர மூர்த்தி யாகும். இவரை தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம் என்ற ஊரில் காணலாம். இறைவன் பெயர் சிவக்கொழுந்தீசர், இறைவி பெயர் பெரிய நாயகி ஆவார். இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமணத்தடை விலகும். இவர்க்கு மகாவில் வார்ச்சனையும், முக்கனிப்படையல் நைவேத்தியமும் புதன்கிழமைகளில் செய்ய மும்மலம் மறைந்தோடும் பதவியை தக்க வைக்க முடியும்.


38. பைரவ மூர்த்தி








பார்க்கும் யாவரும் அச்சப்படும் "அந்தகன் என்ற பெயருடைய அசுரனொருவன் சிவபெருமானை நினைத்து, பஞ்சாக்கினி மத்தியில் தவம் செய்தான். அத்தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்னவேண்டுமென்றுக் கேட்டார். நான்முகன், விஷ்ணு இவர்களை விட பலமும், யாவரும் அழிக்கமுடியாத ஆற்றலும் வேண்டுமென்றான். உடனே தந்து மறைந்தார் சிவபெருமான். சிவபெருமான் கொடுத்த வரத்தினால், பெற்ற ஆங்காரத்தினால் இந்திரன், விஷ்ணு, நான்முகன் என அனைவரிடமும் சண்டைப் போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்றனர். அவனை மிஞ்சுபவர்கள் யாருமில்லை எனவே அவனிடமே சேர்ந்து விடுவதென முடிவெடுத்து விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்றனர். அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். இதனால் அந்தகன் அனைவரையும் பெண்களைப்போல் உடை, நடை, பாவனைகளில் இருக்கும்படி கட்டளையிட்டான். அதன்படியே அனைவரும் பெண்களாயினர். பெண்களானபின்பும் அவனது கொடுமைத் தொடர அனைவரும் அக்கோலத்துடன் சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் உடன் தோன்றி அவர்களை பார்வதியின் அந்தப்புரத்துப் பெண்களுடன் இருக்கச் செய்தார். இருப்பினும் விடாமல் தொல்லைக் கொடுத்து வந்தான் அசுரன். பொறுத்துப்பார்த்த தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவர்க்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்க உத்தரவிட்டார். பைரவர்க்கும், அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. ஆனால் அசுரனின் சேனைகள் சுக்கிராச்சாரியால் உயிர் பெற்று வந்தன. <உடனே சிவபெருமான் சுக்கிரனை விழுங்கினார். அடுத்த நொடி அசுரசேனைகள் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திச் சிவபெருமானை அடைந்தார். இதனால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் மறைய சிவபெருமானிடம் தன்னை பூதகணங்களுக்கு தலைவனாக்க வேண்டினார். அவனது ஆசையை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிரன் அவரது சுக்கிலத்துடன் வெளிவந்தான். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே "பைரவமூர்த்தி யாகும்.
(சிவபெருமானைப் போல் ஐந்துதலையுடன் இருந்த நான்முகனின் அகந்தையை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன)
காசி முதல் பதினாறு பைரவர்
தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளியால் சகஸ்ரநாமம் தொடர்ந்து ஆறு தேய்பிறைகள் கூற புத்திரபாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டு தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் சகஸ்ரநாமம் கூறி ஜென்ம நட்சத்திரர் அர்ச்சித்து பூந்தியை நைவேத்தியமாகக் கொடுக்க சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டிற்க்கு வரும். தேனாபிசேகம் செய்து நெய்விளக்கிட்டு உளுந்தவடை சாற்றி ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட வியாபாரம் செழிக்கும், மேலும் நாயுருவி இலை அர்ச்சனையும், சுத்த அன்னம் வெண்ணிற பசுவின் பால் கொண்டு சனிதோறும் நைவேத்தியம் கொடுக்க யமபயம் நீங்கி சுகம் உண்டாகும்.


39. ஆபத்தோத்தாரண மூர்த்தி



ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி
அனைத்துவித மங்களமான ஒளிமயமான, ஜோதி மயமான சிவனே உலகில் சஞ்சரிக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் துன்பத்தின் போக்கக்கூடியவர். அவரையின்றி வேறொருவர் நமக்குத் துணை கிடையாது. அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் எண்ணற்ற தேவகணங்கள், பூதகணங்கள், நடனமங்கையர், நான்முகன், இந்திரன், திருமால், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், அசுரர், கிம்புருடர், கின்னரர், யமன், பதினென் கணங்கள், முருகன், வினாயகன், தேவியர், பார்வதி, காளி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, அபிராமி, மகேஸ்வரி, சப்தகன்னியர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆயுதங்கள், சப்தமாதர்கள், நாரதர், சந்திர, சூரிய, கிரகங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சப்தரிஷிகள், நட்சத்திக் கூட்டங்கள், மனிதர், நரகர், நாகர் என அனைத்து வகையான ஜீவராசிகளும் அவரைச் சுற்றிலும் நின்றபடி அனைவருக்கும் வேண்டிய வரங்களையும், வேண்டுவனவற்றையும் கொடுப்பார். அச்சமயங்களில் அவர்களது எண்ணப்படி சாதாரண மானிடர் போல் சட்டையணிந்து இருத்திருக்கரத்தினால் தண்டமும், கபாலமும் ஏந்தியபடி அவர் வீற்றிருப்பார். இவ்வாறென்றுக் கூற முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி அனைவரின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களின் துன்பங்களில் இருந்தும், ஆபத்திலிருந்தும் அவர்களைக் காத்து ரட்சிப்பார். ஆகவே அவரது அற்புதங்களும் அவதாரங்களும், மூர்த்தங்களும் இன்னக் காரணங்களுக்கெனக் கூறமுடியாது. துன்பம் அடைந்தோரையும், ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தி யாகும். சீர்காழியில் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர் என்றும், இறைவி பெயர் திருநீலைநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார். ஆபத்து சமயங்களில் இவரை வேண்ட, இவர் உதவுவார் என்பது ஐதீகம். அவரது திருவுருவங்கள் பலவற்றிற்கு இத்தன்மை இல்லையென்றாலும் அந்தந்த சூழலுக்கு கேற்றாற்போல் உதவிக்கிடைக்கும். இவர்க்கு எருக்கு, தும்பைப்பூ, முல்லை அர்ச்சனையும், புனுகு அபிசேகமும் வெள்ளியிரவு 12 மணியளவில் செய்தோமானால் வேண்டிய பலன் உடனே கிடைக்கும் என்பது உறுதி



40. வடுக மூர்த்தி




சிவார்ச்சனையால் பலனடைந்த துந்துபி என்போனின் மகனான முண்டாசுரன். இவன் இளமையிலேயே சிவபெருமானை நோக்கி, ஊண், உறக்கமின்றி, வெயில், மழை, குளிரெனப் பாராமல், ஐம்புலனையும் அடக்கி சிவபெருமானை மட்டுமே நிந்தையில் கொண்டு தவம் செய்தான். அவனது தவத்தில் மெச்சிய சிவபெருமான் நான்முகன், திருமால் இருபுறம் வரவும், தும்புருநாதர் இசைபாடவும், பார்வதியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார் முண்டாசுரன் மகிழ்ந்தான், பின் யாராலும் அழிக்க வொண்ணாத வரம் கேட்டான். கேட்டபடி கொடுத்து மறைந்தார். அவ்வரத்தினால் தேவர்கள், சந்திர, சூரிய, குபேரன் என அனைவரையும் துன்புறுத்தினான். பின்னர் குபேர சொத்துக்கள் அத்தனையையும் கொண்டுசென்றான். அவனுடன் போர்புரிந்து தோற்றனர். எனவே நான்முகனை சரணடைந்தனர். நான்முகன் முண்டாசுரனை அழிக்கப் புறப்பட்டார். இரு படைக்கும் கடும் போர் நடைபெற்றது. நான்முகனால் அசுரனை வெற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் நான்முகன் சிவபெருமானை வணங்கி ஐயனே ! எனது துயர் தீர உதவ வேண்டும். அசுரனை அழிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினார். அவ்விண்ணப்பத்தைக் கேட்ட சிவபெருமான் தன்னிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட வடுக மூர்த்தியை அனுப்பி முண்டாசுரனை வதம் செய்யச் சொன்னார்.
வடுகமூர்த்தியும் அவ்விடம் சென்று முண்டாசுரனை ஒரு நொடியில் வதம் செய்தார். இதனைக் கண்ட நான்முகன் மனம் மகிழ்ந்தார். தேவர்கள் பூமாரிப் பொழிந்து வடுகமூர்த்தியை வாழ்த்தினார். பின்னர் வடுகமூர்த்திஅனைவரையும் விடுவித்து அவரவர் இடத்தில் அமர்த்தி விட்டு சிவபெருமானிடம் சென்று ஐக்கியமானார். நான்முகனின் வேண்டுகோளிற்கேற்ப சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க எடுத்த முர்த்தமே வடுக மூர்த்தி யாகும். வடுகரை தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் பாண்டிக்கருகேயுள்ள வடுகூர் ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் வடுகநாதன், வடுகூர்நாதன் என்பதாகும். இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். (திருவாண்டார் கோயில் எனவும் இத்தலத்தை வணங்குவர்) இங்கு வாமதேவ தீர்த்தமும், வன்னிமரம் தலமரமாகவும் <உள்ளது. கார்த்திகை அஷ்டமியில் இங்கு பைரவர்க்கு விசேஷமாகும். ஏழரை சனியின் துன்பம் அகல சனிதோறும் வடுகர் முன்பமர்ந்து சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். நாள்பட்ட வழக்குகள் வெற்றிபெற பூஜையுடன் தேனாபிசேகம் செய்து 9 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிறன்ணு வடுகருக்கு விபூதியபிசேகம் செய்யத் திருமணம் விரைவில் நடைபெறும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும், புதன் தோறும் கொடுக்க நீள் ஆயுள் கிடைக்கும். ஆரோக்கியம் நிலவும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக