திங்கள், அக்டோபர் 03, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 1

       ஞான குரு பட்டினத்தார்


      பாடல்களில் ...............இருந்து 

         
கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.

கட்டி அணைத்திடும் மனைவியும் பிள்ளைகளும் காலத்தச்சன் எனும் எமன் , வெட்டி வீழ்த்திய மரம் போல் நமது உடலை சாய்த்து விட்டால் , என்ன செய்வார்கள் பறைகளை கொட்டி அழுவார்கள் மயானம் கொண்டு வந்து ஈமக்கடன்கள் செய்வார்கள் . அம்மயானத்தைத் தாண்டி (நம்முடன்) ஓரடி எடுத்து வைப்பாரோ ! என் இறைவனே காஞ்சியிலே வாழும் ஏகம்ப நாதனே .

நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்
தன்னாலுமாடிச் சலித்திடுமோவத் தன்மையைப்போல்
உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்
என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே !

அக்காலத்தில் பொம்மலாட்டம் எனப்படும் வேடிக்கை நிகழ்ச்சியில் நல்ல நூலினால் ஒரு பொம்மையை கட்டி அதை ஆட்டுவித்துக் கொண்டு இருப்பார்கள் . அந்த நூல் அற்று விட்டால் அந்த பொம்மை தானே ஆடிடுமோ ! ஆடாது அப்பனே ! அதுபோல ஆட்டுவிப்பானாக  நீ நின்று என்னை இயக்கி கொண்டிருக்கிறாய் நானும் இயங்கிக் கொண்டிருக்கிறேன் .உன்னை நான் பிரிந்தால் என்னால் இயங்க முடியுமோ ? முடியாது என் தலைவனே காஞ்சியை ஆண்டருளும் ஏகம்ப நாதனே ! 

நல்லாரினக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே
.

நல்லவர்களின் நட்பும் உனக்கு செய்யும் பூசையும் சிவஞானமும் இல்லாமல் போற்றுவதற்கு வேறு நிலையும் உண்டோ ? இல்லை அப்பனே வீடும் , செல்வகுவியல்களும் , மனைவியும் , சொந்த பந்தங்களும் , குழந்தைகளும் , இறுமாப்புடன் வாழும் பொருளற்ற வாழ்க்கையும் , மற்றவரை வசீகரப்படுத்தும் அழகான தேகமும் , எல்லாம் வெளி மயக்கமாகிய மாயையே இறைவா கஞ்சியிலே எழுந்தருளும் ஏகம்ப நாதனே .

பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கடமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின்திருவடிக்கன்பு 

இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே.    

ஞானகுரு பட்டினத்தார் தன்னையே தாழ்த்திக் கொள்கிறார் . நற்செயல்கள் செய்யாதவன் அறநெறியை பின்பற்றாதவன் , ஐம்புலன்கள் எனப்படும் பஞ்சேந்திரியங்களை வெல்லாதவன் , பல நல்ல நூல்களை கல்லாதவன் , உண்மையான சிவனடியாரிடத்தில் நட்பு பாராட்டாதவன் , வாய்மை எனும் சத்தியத்தை பேசாதவனும் , சிவனின் திருவடியில் நீங்காத பேரின்பத்தை அடைவதற்கு அன்பில்லாதவனுமாகிய இந்த பாவி மண்ணில் ஏன் பிறந்தேன் இறைவா காஞ்சி மாநகர் வாழ் ஏகம்ப நாதனே .

அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற்
சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.

இந்த பொய்யான உடலைப் பேணுவதற்கு உணவைத்தேடுவது அன்ன விசாரம் அதை ஒழித்தால் பொருள் தேடும் விசாரம் நீங்காத விசாரமாம் ,அதுவும் ஒரு வழியாக நீங்கபெற்றால் , அழகிய பெண்களை தேடும் விசாரம் பல காலத்துக்கும் நீங்கவே நீங்காத விசாரம் . உன்னை போற்றாது சித்தம் தெளியாது இருக்கும் இந்த பாவியின் மனதிற்கு என்ன விசாரம் வைத்தாய் ? இறைவனே எம்பெருமானே ஏகம்ப நாதனே .

கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நல்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.

எம்பெருமானின் புகழ் கூறும் நூல்களை கற்காத தவறையும் , அதில் உள்ள உன் மகிமைகளை மனதில் நிறுத்தா தவறையும் , மனம் உருகி உன்னை வேண்டி நிற்காத  தவறையும் , நிலையான வீடருளும் சிவபதத்தை நினைக்காமல் இருந்த தவறையும் , ஐந்தெழுத்து மந்திரமாம் உன் மந்திரத்தை உச்சரிக்காமல் இருந்த தவறையும் ,உன்னை போற்றாத தவறையும் , வணங்காத தவறையும் , இன்னும் பல நான் செய்த தவறையும் பொறுத்து என்னை உன் பதத்தில் நிலைத்திருக்கும்படி அருள் செய்வாய் காஞ்சி பெருமானே ஏகம்ப நாதனே .

மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரையும்
வீயவிட்டோட்டி வெளியேபுறப்பட்டு மெய்யருளாந்
தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து
ஏயுமதேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே.

வஞ்சனைகள் செய்பவரோடு கொண்டிருக்கும் நட்பும் , இறைவனை அடைவதற்கு நம்மை தடுக்கும் மலமே வடிவான மாயை எனும் பெண்களையும் விட்டு , அவை தன்னிடம் நெருங்காமல் அவைகளை விடுத்து துறவு பூண்டு மெய்யான சிவ பதத்தை அடைவதற்கு சக்தி எனும் தாயை பின்பற்றி தாயின் மூலமாக தந்தையாகிய சிவத்தை அடைந்து அதன்பின் தாயையும் மறந்து தந்தையாகிய சிவத்தையே அம்மையப்பனாய் கருதி சிவத்தோடு சிவமாய் ஒன்றி விடுவதுதான் உண்மையான நிஷ்டை என்று எனக்கருள் செய்தான் என் அப்பன் காஞ்சிக்கு தலைவன் ஏகம்ப நாதன் .

வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று 
சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம்
நரிக்கோ? கழுகு பருந்தினுக்கோ? வெய்ய நாய்தனக்கோ?
எரிக்கோ? இரையெதுக்கோ? இறைவாகச்சி ஏகம்பனே.

யாவரையும் காம மாயக்கங் கொள்ளச்செய்யும் அழகிய வேல் போன்ற கண்களுடைய பெண்களின் காம இச்சைக்காக காம சாத்திரம் எனும் காம நூல்களை படித்து அவர்களுடன் இன்புற்றிருப்பேன் , நின் திருவெழுத்து எனப்படும் பஞ்சாட்சரம் சொல்ல மாட்டேன் , இந்த பாவி உடல் நரிகளுக்கோ , பிணத்தை தின்னும் கழுகு பருந்துகளுக்கோ கொடிய நாய்களுக்கோ அல்லது நெருப்பிற்கோ , வேறு எதற்கோ இரை என்று நானறியேன் இறைவா கச்சி ஏகம்பனே என கூறுகிறார் .

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டிஎன் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.

காதின் அழகையும் மூக்கின் அழகினையும் கண்ணின் அழகையும் காட்டி நம்மை அலைகழிக்க பெண்ணென்று வரும் மாயையிலே மிகப்பெரிய மாயையான பெண்ணை நம்முயிர் எடுக்க வந்த எமனின் தூதுவர்கள் என்று எண்ணாமல் இதுவே இன்பம் என்று அவ்வின்பத்திலே மூழ்கி இருக்கும் இத்தீய புத்தியை என்னவென்று சொல்லுவேன் இறைவா காஞ்சி வாழ் ஏகம்ப நாதனே.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

நாம் அண்டி வாழும் இந்த ஊரும் நம்முடன் வருவதில்லை ,நம் சொந்த பந்தங்கள் வருவதில்லை  நம்மில் பாதி எனக்கூறும் மனைவியும் வருவதில்லை , நாம் புத்திரப் பேறு பெற விரதமிருந்து வேண்டி பெற்ற பிள்ளைகளும் வருவதில்லை , நீ சம்பாதித்த பேரும் , பொருள்களும் செல்வங்களும் உடன் வருவதில்லை , காஞ்சி பெருமான் என அப்பன் ஏகம்ப நாதன் சிவன் திருவடியை பற்று நம் பிறவிப்பிணி தீர்க்கும் அருமருந்து அதுதான் உன்னுடன் இருக்கும் நிலையான இன்பம் .

சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு 
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே.


நாம் செய்த தீவினையே பெண்ணாக வடிவமெடுத்து வந்து , யாவரும் மயங்கி புகழும் தனங்களும் மனதை பெண் வயபடுத்தும் சதையுமாகி கொடுமையினால் கிழித்து வெளிபடுகின்ற மலமும் உதிரமும் ஊற்றெடுக்கும் பெரும் பள்ளமாக்கிய அல்குழியை விட்டு வெளி வரும் வழியை அறிந்திடேன் இறைவா கச்சி ஏகம்பனே .  

வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.

வீண் வாதத்துக்கு சண்டைக்கு போவார் மீண்டு வருவார் தமது கூற்றை மற்றவர் கேட்குமாறு சொல்வார் , தீசெயலுக்கு துணையும் போவார் , தம் ஆயுட்காலம் முழுவதும் தேடும் பொருளை  தமக்கு இஷ்ட பட்ட பெண்ணுக்கு கொடுத்து மயங்குவார் . இக்குணங்களை உடைய இவர்கள் எதற்காக பிறந்தார் என் இறைவனே காஞ்சியின் ஏகம்ப நாதனே .

ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.

எப்பொழுதும் பொய்யை மட்டுமே பேசுவார்கள் , நல்லவர்களை பழிப்பார்கள் , தன்னை பத்து மாதம் சுமந்து நம்மைபேணி வளர்த்த தாயாரை வைவார்கள் (திட்டுவார்கள்),ஞான நூல்கள் எனப் படும் நல்ல நூல்களை படித்து தெளிவு பெற மாட்டார்கள் ,பிறர்க்கு உதவவும் மாட்டார் தம்மை அண்டி இருப்பவர்க்கும் எதுவும் கொடுக்க மாட்டார் , இவ்வாறு இருக்கும் இவர் இருந்து என்ன பயன் அல்லது இறந்தால் என்ன பயன் கச்சி ஏகம்பனே .

       இன்னும் தொடரும் அடுத்த பதிவில் .....

சிவத்தை போற்றுவோம்!!சித்தர்களை போற்றுவோம்!!

                     - திருவடி முத்துகிருஷ்ணன் கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக