64 திருவிளையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
64 திருவிளையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 18, 2012

64 திருவிளையாடல் (9)


       ஏழுகடல் அழைத்த படலம்! 


              கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்த அவர், சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார். அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்த காஞ்சனமாலை தகுந்த மரியாதை செய்தாள். உயர்ந்த ஆசனத்தில் அவரை அமர செய்து, சிறிய ஆசனம் ஒன்றில் தான் அமர்ந்து கொண்டாள். 


     பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது, சிறியவர்கள் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், அவர்களின் ஆசியையும் நமக்குத் தரும். அவரிடம் காஞ்சனமாலை, மாமுனிவரே! என் மகள் மீனாட்சியின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. என் மருமகனாக அந்த ஈசனே வந்துவிட்டார். இனி மதுரையின் காலம் பொற்காலமாகவே திகழும். எனவே, நான் பிறவாப் பெருநிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி என்று தாங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றாள்.


 குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தபிறகும், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், அதன் பிறகு முக்திக்குரிய நிலையாகிய தெய்வ வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகனின் செயல்பாடுகளில் தலையிட்டால் நிம்மதியின்மையே ஏற்படும் என்பது இதன்மூலம் கிடைக்கும் அறிவுரையாக இருக்கிறது.காஞ்சனமாலையின் மன ஓட்டத்தை கவுதமரும் புரிந்து கொண்டார்.


அரசியாரே! உமையவளை மகளாகவும், ஈசனையே மருமகனாகவும் அடைந்த பெறற்கரிய புண்ணியத்தைப் பெற்ற மகராசியான உங்களுக்கு உபதேசிக்கும் தகுதி எனக்கில்லை. இருப்பினும், ஞானத்தை யாசிக்கும் போது அதை அருள்வதே ஒருவரின் கடமை. இதோ! பிறப்பற்ற நிலையடைய மூன்று வழிகளைச் சொல்கிறேன். தர்மம் செய்தல், உண்மையை மட்டுமே பேசுதல், இறைவனைத் தியானம் செய்தல், நம் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல் ஆகியவை ஒரு ரகம். சிவாயநம என்னும் மந்திரத்தை தினமும் ஓதுவது, வேதநூல்களை  படிப்பது, யாகங்கள் செய்வது ஆகியவை இரண்டாவது ரகம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்வது, கோயிலை வலம் வருவது, தல யாத்திரை செல்வது, தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவை மூன்றாவது ரகம். இதில், கடல் உள்ள இடத்தில் நீராடுவது மேலும் நலம் பயக்கும், என்றார்.


  அவர் சென்றபிறகு, காஞ்சனமாலை தன் மகளிடம் வந்தாள். மீனாட்சி! எனக்குள் ஒரு ஆசை, பிறப்பற்ற நிலையடைய விரும்புகிறேன். கவுதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். அதிலும் ஆறும் கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று அவர் கூறினார். நம் மதுரை நகரில் உன் கணவரின் அருளால் வைகை என்னும் மலர்க்கொடியாள் மலர்ந்து பரந்து ஓடுகிறாள். ஆனால், இங்கே கடல் இல்லையே! கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலைக்கு பாதை காண்பேன், என்றாள். தாயின் விருப்பத்தை ஆண் பிள்ளைகள் இருந்தால் நிறைவேற்றி வைப்பார்கள். மீனாட்சியோ ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும் இருக்கிறாள்.


      திருமணத்துக்குப் பிறகும் கூட கணவர் வீடான இமயத்துக்குச் செல்லாமல், கணவரையும் இங்கேயே தங்க வைத்து விட்டாள். மணாளனோ மகாதேவன். அவர் உத்தரவிட்டால் கடல்களே விழுந்தடித்துக் கொண்டு இங்கே வராதா என்ன! தன் அன்னையின் விருப்பத்தை அவள் தன் நாதனிடம் சொன்னாள். மாமியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த சாமியும் முடிவு செய்து விட்டார். கடல்களே! மதுரைக்கு வாருங்கள், என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல...ஏழு கடல்களும் மதுரைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் பேரிரைச்சல்... அலைகள் நர்த்தனமாடின. அவற்றில் கிடந்த சங்குகளும், முத்துச் சிப்பிகளும் ஒன்றோடொன்று உரசி எழுப்பிய ஓசை எல்லையே இல்லாமல் விரிந்து சென்றது.


 மக்களின் கண்களுக்கு கடல்கள் தெரியவில்லையே ஒழிய கடல் ஓசை தெளிவாகக் கேட்டது. அவர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அவர்கள் ஓடோடி வந்து மன்னர் சுந்தரேசரை வணங்கி, எம்பெருமானே! எங்கள் மன்னனே! இதென்ன ஓசை... கடல் அலைகளின் பேரிரைச்சல் கேட்கிறதே! என்ன இது! ஊழிக்காலமாகிய உலகம் அழியும் காலம் வந்துவிட்டதா! என பலவாறாகக் கேட்டனர்.


 சுந்தரேசர் அந்தக் கடல்களை அடக்கினார். அமைதியாயிருங்கள்! நீங்கள் மீனாட்சி ஆலயத்தின் வெளிப்புறமுள்ள கிணற்றில் சென்று அடக்கமாய் இருங்கள், என்று கர்ஜித்தார். அவ்வளவுதான்! சத்தமே வரவில்லை. மக்கள் மகிழ்ந்தனர். சுந்தரேசர் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தனர். கிணற்றில் நீர் நிரம்பிக் கிடந்தது. கருணை வடிவான ஈசனை மனதார துதித்த காஞ்சன மாலை பரிவாரங்களுடன் கிணற்றுக்குச் சென்றாள். மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் தெருவுக்கு எழுகடல் தெரு என்று இப்போதும் பெயர் இருக்கிறது.


நன்றி தினமலர் 

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

64 திருவிளையாடல் (8)

அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்!



நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி விடுவானோ! ஐயனே! இதென்ன சோதனை! என்றாள்.மீனாட்சியை அமைதிப்படுத்திய சுந்தரேசர், நான்கு  குழிகளை வரவழைத்தார். அவற்றில் பால் சோறு, தயிர்ச்சோறு உள்ளிட்ட அன்னவகைகள் குறைவின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். குண்டோதரன் அவற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனான்.


 அந்தக் குழியில் இருந்து வந்த சாப்பாடு குறையவே இல்லை. பசி தணியவே, தண்ணீர் குடிக்க நீர்நிலைகளை தேடியலைந்தான். மதுரையில் இருந்த பல குளங்களின் நீரும் வற்றும் வகையில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. ஐயனே! என் தாகத்தையும் தீர்க்க வேண்டும், என சுந்தரேசரிடம் வேண்டினான். அவர் தன் தலைமுடியைச் சாய்த்து கங்கையை கீழே இறங்கச் சொன்னார். கங்கா! நீ பிரவாகமெடுத்து ஆறாக இந்நகரின் வழியே ஓடிவா, என்றார்.
அவள் சுந்தரேசரிடம், சுவாமி! தங்கள் சித்தப்படியே செய்கிறேன்.


 உங்கள் திருமணநாளன்று உருவாகும் பாக்கியம் பெற்ற என்னில் மூழ்கி எழுபவர்கள் பிறப்பற்ற நிலையாகிய மோட்சத்தை அடைய அருள்பாலிக்க வேண்டும், என வேண்டினாள். கங்கா! மோட்சத்தலங்களான வைகுண்டத்தின் முதல் எழுத்தாகிய வை கைலாயத்தின் முதல் எழுத்தாகிய கை இவை இரண்டையும் இணைத்து நீ வைகை என வழங்கப்படுவாய். உன்னில் குளிப்பவர்கள், தீர்த்தமாகப் பருகுபவர்களுக்கு மோட்சம் கிட்டும். அவர்கள் சகல செல்வங்களோடும் வசிப்பார்கள், என்றார். பின்னர் கங்காதேவி, ஆறாக வேகமாக ஓடிவந்தாள்.


 அவளுக்கு வேகவதி என்ற பெயர் உண்டாயிற்று. குண்டோதரன் அந்த ஆற்றின் இருகரைகள் மீதும் கைகளை விரித்து வைத்துக் கொண்டு ஆற்றின் போக்கை தடுத்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்ந்தான். இதனாலும் இந்த நதிக்கு வைகை என்று பெயர் வந்ததாக சொல்வர். தன் தாகம் தீர்த்த வைகை சிவனின் தலையில் இருந்து தோன்றிய தால் அதற்கு சிவதீர்த்தம் என்னும் புனித பெயரும் வைத்தான். சிவனின் திருமணத்திற்கு வந்து, திருமணப்பணிகளை சிறப்பாக செய்த அவனுக்கு பூதகணங்களின் தலைமைப் பதவியை சுந்தரேசப் பெருமான் அளித்தார்.


                                        நன்றி : தினமலர் 

64 திருவிளையாடல் (7)

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!


அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் பிரமித்தனர். இதுபற்றி முறையிட அரசி மீனாட்சியிடம் அவர்கள் ஓடினர். மீனாட்சி மடப்பள்ளியில் சென்று பார்த்தாள். சமைத்த உணவில், லட்சக்கணக்கானவர்கள் சாப்பிட்டிருந்தும் கூட, சற்று கூட குறையாமல் அப்படியே இருந்தது. இது இறைவனின் லீலை என்பதை அவள் எப்படி அறிவாள்? சுந்தரேசர் ஏதும் அறியாதவர் போல் இருந்தாள். மீனாட்சி தன் கணவரிடம் நாணத்துடன் சென்றாள். சுவாமி! எங்கள் இல்லத்தில் நாங்கள் சமைத்த உணவு அப்படியே மீந்துவிட்டது. லட்சக் கணக்கானவர்கள் மாப்பிள்ளை இல்லம் சார்பாக வந்திருந்தும் அப்படியே இருப்பது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. உணவை வீணடிப்பது மகாபாவம் என்பது தாங்கள் அறியாததல்ல! அது அன்னபூரணிக்கு மாசு கற்பித்தது போல் ஆகும். இந்த உணவு காலியாக தாங்கள் தான் அருள்புரிய வேண்டும், என்றாள்.

அவளது பேச்சில் சற்றே ஆணவம் தொனித்தது போல் தெரிந்தது. மனிதனுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது. அந்த ஆணவத்தைக் களைய அவன் சோதனைகளைத் தருவான். தன் மனைவியிடமும் விளையாடிப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டார். அப்படியா! ஏராளமாகவா சமைத்தீர்கள்! எல்லோரும் சாப்பிட்டாயிற்றே! சரி...என் பூதகணங்கள் சாப்பிட்டதா என விசாரித்து விடுகிறேன், என்றவர், பூதகணங்களை அழைத்து விசாரிப்பவர் போல் நடித்தார். குண்டோதரன் என்ற பூதகணத்தை தவிர மற்றவர்கள் சாப்பிட்டாயிற்று என்றனர். குண்டோதரனுக்கு திருமணப்பணிகள் அதிகமாக இருந்ததால், பிறகு சாப்பிடலாம் என இருந்துவிட்டான்.

           குண்டோதரா! சாப்பிடாமல் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்! போ போ, முதலில் சாப்பாட்டை முடி! அப்புறம், பணிகளை செய்யலாம், என செல்லமாகக் கடிந்துகொண்டார் மாப்பிள்ளை சுந்தரேசர். குண்டோதரன் சாப்பிடச் செல்லும் போது மீனாட்சி அவரிடம், சுவாமி! இவன் ஒருவன் சாப்பிடுவதால் உணவு தீர்ந்துவிடுமா! இன்னும் சாப்பிடாதவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையும் வரச்சொல்லுங்கள், என்றாள்.

புன்னகையை உதிர்த்த சுந்தரேசர், இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும், இன்னும் யார் யார் சாப்பிடவில்லை என விசாரித்து அனுப்பி வைக்கிறேன், என்றார். குண்டோதரன் மடப்பள்ளிக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவனது வயிற்றில் வடவைத்தீ எனப்படும் கொடும் பசித்தீயை எரிய வைத்தார் சுந்தரேசன். மடப்பள்ளிக்குள் நுழைந்த குண்டோதரன் ஒரு நிமிடத்தில் அனைத்தை யும் சாப்பிட்டு விட்டு, ஐயோ! பசி பொறுக்க முடியவில்லையே! திருமண வீட்டுக்கு வந்தவர்களுக்கு வயிற்றுக்குச் சோறிட வேண்டாமோ, என புலம்பினான். மீண்டும் சமையல் செய்யப்பட்டது. அதுவும் கணநேரத்தில் காலியாகி விட்டது. மீனாட்சியும் அரண்மனையில் இருந்த மற்றவர்களும் அதிசய அதிர்ச்சியை அடைந்தனர்.இதென்ன புதுமை! ஒரு தனிநபரால் இப்படியும்   உணவுண்ண முடியுமா! இவன் வாயைத் திறந்ததும் எல்லாமே தானாக வயிற்றுக்குள் போய் விடுகிறதே! மீண்டும் மீண்டும் சமைத்து ஓய்ந்துவிட்டனர் சமையல்காரர்கள். அரண்மனையில் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்கள் அத்தனையும் காலி. மீனாட்சிக்கு இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்து விட்டது.


                                          நன்றி : தினமலர் 

64 திருவிளையாடல் (6)


வெள்ளியம்பல திருக்கூத்து நிகழ்த்திய படலம் 


எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும்  விருந்துண்ண  சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும்,  பக்தியில் முதிர்ந்த வியாக்ரபா முனிவரும்! அவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். பதஞ்சலி முனிவர் சிவனிடம், சோமசுந்தரப் பெருமானே! நாங்கள் ஒரு உறுதி எடுத்துள்ளோம். அதாவது, தில்லையம்பலமாகிய சிதம்பரத்தில் நாங்கள் தங்கள் திருநடனக்கோலத்தை தரிசித்த பிறகே உணவு உண்போம். இங்கு என்ன செய்வதென தெரியவில்லை, என்றதும், அதற்கென்ன! அங்கு ஆடிய நடனத்தை இங்கும் ஆடுகிறேன். தாங்கள் இருவரும் கண்டுகளித்த பின் உணவருந்துங்கள், என்றார். முனிவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிவபெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரை கோயிலுக்குள் சென்றார். மேலும் சிவபெருமான் உலகனைத்தும் வடிவான விராட்புருடனுக்குத் தில்லைப் பதி இதயமாகும். மதுரையோ துவாத சாந்தத் தானம் என மொழிந்தார்.இதைக் கேட்டு மகிழ்வுற்ற முனிவர்கள் வேந்தர் வேந்தே! பிறஉறுப்புகள் எது என தெளிவாக விளக்குங்கள் என கூறினர்.

இறைவடிவான சுந்தர பாண்டியர் கூறியதாவது மூலதாரமான இப்பூவுலகிலே எல்லையற்ற இறைத்தன்மைத் தானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள். திருவாரூர் மூலதாரத் தானம், திருவானைக்கா சுவாதிட்டானத் தானம், திருவண்ணாமலை நாபி, தில்லைபதி இதயம், திருக்காளத்தி கண்டம், காசித் தலம் புருவமத்தியம், திருக்கயிலாயம் பிரமநாடி, இந்த மதுரைப் பதி துவாத சாந்தத்தானம். இது எவ்வாறு சிறந்ததென்று கேட்பீர்களானால், அது முன்னர் தோன்றிய முறையால் என்று தெளிந்த விளக்கத்தினை எடுத்து இயம்பினார். அதன் பின் அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே ஓர் அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க விமானத்தின் கீழ், ஒளி பொங்கும் வெள்ளி அம்பலம் ஒன்றை உருவாக்கினார். பளபளவென மின்னிய அந்த அரங்கத்தில் மாணிக்க பீடம் ஒன்று வந்து அமர்ந்தது. கோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற் போல் குருபரன் தோன்றினார். மனம், மொழி, பக்கம், மேல், கீழ், முன், பின் என்ற இவைகளைக் கடந்த மெய்ஞ்ஞானப் பேரொளி வடிவே அது. சிவகணங்கள் முழக்க, நந்தி தேவர் மத்தளம் அடிக்க, திருமால் இடக்கை முழக்க, தும்புரு நாரதர் இசைபாட தேவர்கள் பூமழை பொழிய, கடல்நிற மேனி படைத்த செந்தீப்புறமயிர் முயலகண் மேல் வடவைத் தீப்போல் அவனது செங்கண்கள் பிதுங்கவும், சினங்கொள்ளவும் முதுகு முறியவும் வலது திருவடியை ஊன்றி சிவபெருமான் அந்த பீடத்தில் நின்று நடனமாடினார்.

திருக்கூத்தாடும் இடது திருவடித் தாமரையும், பத்துத் திருக்கரங்களும், வலக்கரம் ஐந்தில் அபய அத்தத்திலே சூலமும், மற்ற நான்கு கரங்களில் உடுக்கை, அம்பு, வாள், மழு என்பனவும் இடக்கரம் ஐந்தில் வரத அத்தத்திலே பாம்பும், மற்றைய நான்கு கரங்களில் அக்கினி, வில், கேடகம், தண்டு என்பனவும், திருநீலகண்டமும், சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும், விரித்த செஞ்சடையும், வெள்ளிய திருநீற்றொளித் திருமேனியும், முக்கண்களும், அரவக் கச்சையும், அம்மையார் ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவ்வம்மையார் மேல் வைத்த திருநோக்கமும் திருநகையும் தோன்றத் திருநடனம் செய்தருளினார். 

அந்த முனிவர்களும் மதுரை மாநகர மக்களும் இறைவனின் நடன காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் கருணாமூர்த்தியைப் பாக்களால் பலபடப் பூசித்துப் போற்றி மகிழ்ந்தனர். பரந்தாமன் அம்முனிவர்களிடம் நீங்கள் இன்னும் விரும்பியது யாது? அதை யாம் நிறைவேற்றி வைப்போம் என வினவினார். உடனே அவ்விருவரும், எந்தையே! இத்திருக்கூத்துடனம் எப்பொழுதும் இவ்வெள்ளியம்பலத்துள்ளே நின்று எல்லோருடைய பாச பந்தங்களையும் போக்கி அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். திருமண விழாக்களில் பிறர் நடனமாடி நாம் ரசிப்பது வழக்கம் தான்! ஆனால், இங்கோ மணமகனே நடனமாடினார். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு முனிவர்கள் உணவருந்தச் சென்றனர்.


                                                                                                                                                நன்றி : தினமலர்

புதன், ஜூலை 06, 2011

64 திருவிளையாடல்

  தடாதகையாரின் திருமணப் படலம்!





உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார். தடாதகையை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நல்லதென முடிவெடுத்து, மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. மகள் அவளிடம், அம்மா! ஒரு தாயாக இருந்து உனக்குரிய கடமையை நீ சொன்னாய். ஆனால், தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது எனது கடமை. தந்தையார் என்னிடம் சொன்னபடி நான் உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு! திரும்பி வந்ததும், உன் விருப்பப்படியே திருமணம் நடக்கும், என்றாள். மகளின் விருப்பத்திற்கு தாயும் குறுக்கே நிற்கவில்லை. அமைச்சர் சுமதி போருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். போர்க்கோலம் பூண்ட தடாதகை பிராட்டி, தாயிடம் நல்லாசி பெற்று புறப்பட்டாள். தாரை, தப்பட்டை ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க அவளது நால்வகைப் படையும் கிளம்பியது.


இவர்களது படையைப் பார்த்தவுடனேயே எதிரிகளெல்லாம் அஞ்சி, நடுங்கி அவளை சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், குழந்தை பிறக்குமென மலையத்துவஜனுக்கு வாக்களித்த இந்திரன், கலங்கிப் போனான். நமது யோசனையால் பிறந்த குழந்தையே, நம்மை நோக்கி படையெடுத்து வருகிறதே என அஞ்சி நடுங்கினான். பதவியை விட்டுவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டான். தடாதகை பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற மிகப் பெரிய செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணிபுரிவதற்காக தன்னோடு வரச்சொன்னாள். பிறகு, கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள். தடாதகை பிராட்டியார் வாழ்க! அமைச்சர் சுமதி வாழ்க! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.கயிலையை அவள் அடைந்ததும், சிவபெருமான் அவளை முகம் மலர வரவேற்றார். தடாதகை  பிராட்டியார் மதுரையிலிருந்து கிளம்பியபோதே, சுந்தரேஸ்வர பெருமானும் அவள் அறியாவண்ணம் அவளது தேரிலேயே அமர்ந்து வந்தார் என்பதை, அவளால் உணர முடியவில்லை. இதை அறியாத நந்திதேவர், பிராட்டியாரின் படை கண்டு நடுங்கி நின்றார். இப்படி ஒரு படை வந்திருக்கிறதே! நம்மையே அடிமைப் படுத்த வந்துள்ள இந்தப் பெண் மணியை நீங்கள் வரவேற்கிறீர்களே! என் கட்டுக்காவலை மீறி இவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். இப்போது நாம் என்ன செய்வது? என சிவனிடம் யோசனை கேட்டார்.


சிவபெருமான் அவரிடம், போருக்கென வந்தவர்களிடம் மோதிப்பார்த்து விட வேண்டியதுதான். நீ நம் படைகளுடன் புறப்படு, என்றார். சக்திதேவியான தடாதகை பிராட்டியாரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, சிவபெருமான் இப்படியொரு நாடகம் ஆடினார். நந்தி தேவரின் தலைமையில் புறப்பட்ட படைகள் அனைத்தும் தடாதகை பிராட்டியால் விரட்டியடிக்கப்பட்டன. சிவகணங்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களின் அஸ்திரங்களை எல்லாம் தடாதகை பிராட்டியார் அழித்தாள். பூதங்களின் வலிமை பிராட்டியின் வலிமை முன்னால் எடுபடவில்லை. வேறு வழியின்றி சிவபெருமானே அவளுடன் போர் செய்ய கிளம்பினார். அவர் அன்னையின் முன் வந்து நின்றதும், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளது தனங்களில் ஒன்று மறைந்தது. மன்மதனின் கணைகள் அவளைத் தாக்கியது போன்ற உணர்வு ஏற் பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, நாணத்தால் தலை குனிந்து நின்றாள் தடாதகை. அமைச்சர் சுமதி ஆச்சரியப் பட்டார். அவருக்கு தான் மீனாட்சியின் தன ரகசியம் தெரியுமே! எதிரே நிற்பது சிவபெருமான் என்பதும், அவளே அவரை மணந்து கொள்வார் என்பதும் தெரிந்து விட்டது. தடாதகை பிராட்டியார் குனிந்த தலைநிமிராமல், அவரது பாதத்தில் விழுந்தாள். அதுவரையில் இருந்த வீரம், காதலாக மாறிவிட்டது.


உலகையே வென்று நம் கைக்குள் கொண்டு வந்தாலும், மனிதன் இறைவனிடமே அடைக்கலமாக வேண்டும் என்பதை உணர்த்தியது இந்தக் காட்சி. சிவபெருமான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின்னர் மீனாட்சி மதுரை திரும்பினாள். தாய் காஞ்சனமாலை வெற்றிக்கனி பறித்து வந்த மகளை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்து, மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். இறைவனுக்கே திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து அமைச்சர் சுமதி ஆனந்தம் கொண்டார். திருமண பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டி யாருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டு திருமணம் அல்லவா? நகரை அவர்கள் அலங்கரித்த விதம் அலாதியாக இருந்தது. தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ண ஓவியங்களைத் தீட்டினர். நகர் முழுவதும் கமுகு, வாழை மரத்தோரணங்களைக் காண முடிந்தது.இறைவனுக்கு அம்பாளின் அவதாரமான தடாதகை பிராட்டியுடன் நடக்கப் போகும் திருமணத்துக்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சேர்ந்தனர். சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் செய்யப் பட்ட அலங்காரத்தை சொல்லி மாளாது. தடாதகை பிராட்டி தன் மக்களை மீன் போல் பாதுகாத்தவள். அதாவது, மீன்கள் தங்கள் கண்களாலேயே குஞ்சுகளுக்கு உணவூட்டுபவை. சற்றும் இமைக்காதவை. இக்காரணத்தால், எங்கள் மீனாட்சிக்கு கல்யாணம் என மக்கள் ஆரவாரம் செய்தனர்.


 அந்த மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்திருந்து அலங்காரம் செய்தனர். ஊர் மகிழ்ந்திருந்த வேளையில், காஞ்சனமாலைக்கு மட்டும் கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் பார்க்க தன் கணவர் மலையத்துவஜன் இல்லையே என்று! தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க அந்த மகாவிஷ்ணுவே வந்துவிட்டார். ஈசனுக்கு பட்டு அங்கவஸ்திரம், விதவிதமான நகைகள் அணிவிக்கப்பட்டு மிக அழகாக இருந்தார். இவரல்லவோ சுந்தரன் என்று மக்கள் ஆனந்தமாகப் பேசினர். சுந்தர ஈஸ்வரன் எங்கள் மீனாட்சியின் கரம் பற்ற வந்துள்ளான், என புகழ்ந்தனர். இதனால் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரன் என்ற பெயர் உண்டாயிற்று. அமைச்சர் சுமதி ஆனந்தக் கண்ணீர் வழிய நின்றிருந்தார். மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். அவர்கள் மாலை மாற்றி  கொண்டனர். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சுந்தரேசர். அவளது பாதத்தில் மெட்டி அணிவித்தார். எங்கும் பூ மழை பொழிந்தது. மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன், என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். மதுரையிலேயே தங்கி, தன் மகளுடன் நல்லாட்சி செய்ய வேண்டுமென காஞ்சனமாலை இறைவனிடம் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அந்தக் கோரிக்கையை ஏற்றார். மீனாட்சியுடன் இணைந்து மதுரை நகரை அரசாள முடிவெடுத்தார்.


நன்றி : தினமலர் 

64 திருவிளையாடல்


தடாதகை பிராட்டியாரின் திரு அவதார படலம் 




குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர  பாண்டியன். அந்த மன்னனின் மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான். ஆம்... அவளே தடாதகை பிராட்டி எனப்படும் மீனாட்சி. அவள் மலையத்துவஜனின் மகளாகப் பிறந்தது சுவை மிக்க வரலாறு. மலையத்துவஜனின் மனைவி காஞ்சனமாலை. இவள் இவ்வுலகில் தோன்றிய உயிர்களில் வித்தியாசமானவள். மனித நிலையில் இருக்கும் நம்மை, நாளையே கடவுள் அழைத்து, இன்று முதல் நீ தேவலோகத்தில் தேவனாக இருப்பாய், என்று சொன்னால், நாம் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. மனித நிலையில் தேவநிலைக்கு உயர்வதையே உயிர்கள் விரும்பும். ஆனால், காஞ்சனமாலை இதற்கு நேர் எதிரானவள். அவள் தனது முந்தையப் பிறவியில் மனித குலத்தை விட உயர்ந்த கந்தர்வ குலத்தில் பிறந்தாள். அந்தப் பிறவியில் இருந்து, தன்னை மனித குலத்திற்கு தாழ்த்திக் கொண்டாள். அப்போது அவளது பெயர் வித்யாவதி. இவளது தந்தை விசுவாவசு. இவளுக்கு அம்பிகையின் மீது பிரியம் அதிகம்.தந்தையே! அம்பிகையை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற வேண்டும், தாங்கள் தான் அதற்கு உதவ வேண்டும், என்றாள்.



 விசுவாவசு அவளுக்கு சக்தி மந்திரத்தை உபதேசித்து, அதையே தொடர்ந்து பக்தியுடன் சொல்லி அம்பாளைக் காணும் பாக்கியத்தை  பெறலாம் என்றார். அடுத்து அம்பாளைத் தரிசிக்க உகந்த இடம் எது எனக் கேட்டாள் வித்யாவதி. பூலோகத்தில் துவாதசாந்தம் என்று புகழ் பெற்றதும், கடம்பமரங்கள் நிறைந்த வனத்திலுள்ளதுமான மதுரை என்னும் புண்ணிய ÷க்ஷத்ரத்தில், யார் ஒருவர் அம்பாளைத் தரிசிக்கிறார்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்,என்றார் விசுவாவசு. தந்தையிடம் அனுமதி பெற்று கந்தர்வக்கன்னியான வித்யாவதி பூலோகம் வந்தாள். மதுரை ÷க்ஷத்ரத்தில் குழந்தை வடிவில் அருள்பாலித்த சக்திதேவியை வணங்கி வந்தாள். தந்தை உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது சொன்னாள். ஒரு ஆண்டு வரை கடுமையான விரதம் அனுஷ்டித்த அவளது பக்திக்கு அம்பாள் இரங்கினாள். வித்யாவதியின் முன்பு மூன்று வயது குழந்தையின் வடிவில் காட்சி தந்தாள். தாயே என அழைத்தாள். வித்யாவதி நெகிழ்ந்து போனாள்.


அம்மா மீனாட்சி! நான் உன்னை குழந்தையாகக் கருதி என் மனதால் பாராட்டினேன், சீராட்டினேன், நீராட்டினேன், அழுது அடம்பிடித்த உன்னை பொய்க்கோபம் கொண்டு கண்டித்தேன், பாலூட்டினேன், ஜடை முடிந்து பின்னலிட்டேன். இத்தனையும் கற்பனை தான் என்றாலும், இந்த எளிய பக்திக்கும் அகமகிழ்ந்து காட்சி தந்தாயே! பிறந்த பயனை அடைந்தேன், என்றாள் வித்யாவதி. குழந்தை மீனாட்சி சிரித்தாள். தாயே! பக்தர்கள் எனக்கு கொண்டு வரும் ஆடம்பர காணிக்கைகளால் நான் மகிழ்வதில்லை. கால் கடுக்க காத்திருப்பதால் மட்டும் என்னை அடைந்து விட முடியாது. இருந்த இடத்தில் இருந்தபடியே, உன்னைப் போல் மானசீகமான பக்தியை செலுத்துவதையே நான் விரும்புகிறேன். அவர் களுக்கு காட்சி கொடுப் பதையே பெருமையாகக் கருதுகிறேன். சரி...நீ ஏதாவது என்னிடம் கேள். வரம் தருகிறேன், என்றாள். தெரிந்தோ தெரியாமலோ உன்னை என் பிள்ளையாகக் கருதிவிட்டேன். அந்தப் பிணைப்பை என்னால் விட முடியாது. இந்த நிலை தொடர வேண்டும். இதைத் தவிர என்னிடம் எந்தப் பிரார்த்தனையும் இல்லை, என்றாள் வித்யா. இதுகேட்டு அகம் மகிழ்ந்த மீனாட்சி, அம்மா! அடுத்த முறை நீ மானிட ஜென்மம் எடுப்பாய். சோழராஜனின் மகளாகப் பிறக்கும் உன்னை, மலையத்துவஜ பாண்டியன் திருமணம் செய்வார்.


உங்கள் இல்லத்தில் நான், இதே மூன்று வயதுக் குழந்தையாய் அவதரிப்பேன், என்று சொல்லி வித்யாவதிக்கு நல்லாசி கூறி மறைந்தாள். வித்யாவதி நினைத்திருந்தால், கந்தர்வ நிலையில் இருந்து தேவநிலைக்கு உயர்ந்து சக்திலோகத்திலேயே இருந்திருக்கும்படியான வரம் கேட்டிருக்க முடியும். ஆனால், அவள் மானிடப்பிறவி பெற்றதன் மூலம், தெய்வத்திற்கே தாயான பெருமையைப் பெற்றாள். ஈசனுக்கு மாமியாராகும் தகுதியும் கிடைத்தது. மீனாட்சியின் அருள்வாக்கின் படி, அவள் சோழமன்னன் சூரசேனனின் மகளாகப் பிறந்தாள். மலையத்துவஜ பாண்டியனை மணம் செய்தாள். நீண்ட காலமாயிற்று. அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பிறகு நாடாள வாரிசு இல்லையே என்ற கவலை மன்னனை உருக்கியது. அவன் பல யாகங்கள் செய்தான். கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய் வித்தான். கடைசியாக, அஸ்வமேதயாகம் செய்வதென முடிவு செய்தான். இதன்மூலம் சகல லோகங்களும் தனக்கு அடிமை படுவதுடன், குழந்தை பாக்கியமும் சித்திக்கும் எனக் கருதினான். யாக ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது. வெற்றிகரமாக யாகம் நடந்து விடும் என்ற நிலை வந்ததும், தேவ லோகத்தில் இருந்த இந்திரனுக்கு பயம் வந்து விட்டது. யாகம் வெற்றி பெற்றால், மலையத்துவஜன் இந்திரலோகத்தையே கைப்பற்றி விடுவான். தன் பதவி போய்விடுமே என்று கவலையடைந்தான். ஒருநாள், மலையத்துவஜனின் முன்பு தோன்றினான்.


ஆச்சரியமடைந்த மலையத் துவஜன், ஐயனே! தாங்களே எங்கள் மதுரை நகருக்கு நேரில் வந்தீர்களா! நான் என்ன பாக்கியம் செய்தேன், என்று உபசார வார்த்தைகள் சொல்லி வரவேற்றான். இந்திரன் அவனிடம், மாமன்னனே! குழந்தை வேண்டும் என்பதே உனது கோரிக்கை. அதற்கு அஸ்வமேதயாகம் பலன் தராது. நீ பல யாகங்கள் செய்தாலும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தவறிவிட்டாய். அந்த யாகத்தை நடத்து. உனக்கு பராசக்தியே மகளாக அவதரிக்க காத்திருக்கிறாள். முற்பிறப்பில், உன் மனைவி செய்த புண்ணியத்தால் கிடைத்துள்ள பாக்கியம் இது, என்று சொல்லவும், அஸ்வமேத யாக திட்டத்தைக் கைவிட்டு, புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்கு ஒப்புக் கொண்டான் மன்னன். இந்திரனும் பயம் நீங்கி விடை பெற்றான். புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கியது. இந்த தகவல் பட்டமகிஷி காஞ்சனமாலைக்கும் தெரியவரவே, அவளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. கண்டோர் வியக்கும் வேள்விச்சாலை ஒன்றை அமைத்தான் மலையத்துவஜன். யாகம் கோலாகலமாகத் துவங்கியது. நாட்டுமக்கள் தங்கள் வாரிசை எதிர்பார்த்து ஆவலுடன் யாக பூஜையில் கலந்து கொண்டனர். மலையத்துவஜனும், காஞ்சனமாலையும் புனிதநீராடி, வேப்பிலை மாலை சூடி யாக குண்டத்தின் முன் அமர்ந்தனர். யாக குண்டத்தில் பல்வகை பொருட்கள் போடப் பட்டன. குடம் குடமாக நெய் ஊற்றப்பட்டது. வேள்விப்புகை மதுரை நகரெங்கும் பரவியது. இந்திரன் அந்த யாகத்தின் பலனைப் பெற்றுக் கொண்டு, அதற்கேற்ப பலனும் அளித்தான். அப்போது யாகசாலையில் பூமழை பொழிந்தது. மன்னனுக்கு வலது தோளும் வலது கண்ணும் துடித்தன.
ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால் சுபமான நிகழ்ச்சிகள் ஏற்படும். பெண்களுக்கு இடது கண் துடித்தால் அது சுபசகுனம். அதற்கேற்ப, காஞ்சனமாலைக்கு இடது கண் துடித்தது. அப்போது அந்த இடமே பிரகாசமானது. 


யாக குண்டத்தில் எரிந்த அக்னியின் மத்தியில், பளிச்சென வெளிச்சம் உண்டானது. அதன் மத்தியில் பச்சை நிறத்தில் மூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தை, நின்ற நிலையில் தோன்றியது. ஆம்... தெய்வத்தாயான மீனாட்சி பூமியில் அவதரித்து விட்டாள். காஞ்சனமாலை என்னும் பெண் தெய்வம் மதுரை மக்களுக்கு கொடுத்த மற்றொரு தெய்வம் அவள். மதுரைக்கு போகிறவர்கள் மீனாட்சியை மட்டும் வணங்கினால் போதாது. அவள் இந்த பூமியில் அவதரிக்க காரணமான காஞ்சனமாலையையும் வணங்கி வர வேண்டும். கோயில் கிழக்குவாசல் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் எழுகடல் தெருவில் இந்த அம்மைக்கு தனிக் கோயில் இருக்கிறது. அந்தக் குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தாள் காஞ்சனா. அவளது மார்பில் தன்னையறியாமல் பால் சுரந்தது. அனலில் உதித்த அந்தச் சிறுமியின் கண்கள் கயல் என்னும் மீனுக்கு சமமாக நீண்டு பெரிதாக மிக அழகாக இருந்தது. என் அம்மையே, அங்கயற்கண்ணியே என அவள் அழைத்தாள். அம்+கயல்+கண்ணி என்பதே அங்கயற் கண்ணி ஆனது. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன். கண்ணி என்றால் கண்களையுயைடவள். அங்கயற்கண்ணி என்றால் அழகிய கண்களை உடையவள் என்று பொருள். இன்னொரு பொருளும் இதற்கு உண்டு. மீனுக்கு தனது பார்வையாலேயே குஞ்சுகளுக்கு இரையூட்டும் சக்தியுண்டு. அது தனது கண்களை இமைப்பதே இல்லை. நாமே கூட பார்க்கலாம். மீனை தண்ணீரை விட்டு வெளியே தூக்கிப் போட்டு அது இறந்துவிட்டாலும் சரி தான். அதன் கண்கள் மட்டும் திறந்தே இருக்கும். ஆக, ஒரு கணம் கூட இமைக்காமல் மக்களை பாதுகாப்பவள் என்ற பொருளும் இதற்குண்டு. அதனால் தான் மீனின் ஆட்சி மதுரையில் நடக்கிறது. அன்னையையும் மீனாட்சி என்கிறோம்.


மலையத்துவஜன் மகளை வாரியணைத்தான். அதன் பட்டுக்கன்னங்களில் முத்தமழை பொழிந்தான். பட்டுத்துணி ஒன்றை குழந்தை மீது போர்த்தி மார்பில் சுரந்த பாலை தன் மழலைக்கு ஊட்டி பேரின்பம் கண்டாள் காஞ்சனமாலை. பாலூட்டி முடித்ததும், தன் குழந்தையின் முக அழகைப் பார்த்து பூரித்துப் போன காஞ்சனையின் கண்கள் சற்றே கீழிறங்க, அப்படியே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டாள். என்ன இது! உலகில் யாருக்குமே இல்லாத அதிசயம். ஐயோ! குழந்தைக்கு இரண்டு மார்புகள் தானே இருக்க வேண்டும், மூன்றாவதாக ஒரு தனம் இருக்கிறதே. இதென்ன கொடுமை. ஐயோ பராசக்தி! நீயே என் மகளாகப் பிறந்தாய். உன்னைப் பெற்றுமா நான் துன்பத்தில் ஆழ வேண்டும்! சற்றுமுன் வரை இருந்த இன்பம் ஒரே நொடியில் தூளாகி விட்டதே, காஞ்சனா புலம்ப, மலையத்துவஜன் பதட்டத்துடன் என்ன ஏதென்று விசாரித்தான். விஷயத்தை அறிந்ததும் அவனது முகமும் சோகத்தில் ஆழ்ந்தது. ஆனாலும், அவர்கள் இதை வெளிப்படுத்த வில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். 


சன்னதியில் குழந்தையை கிடத்தி, ஐயனே, மழலைச்செல்வம் இல்லாத எங்களுக்கு குழந்தை தந்தாய். ஆனால், பிறந்த குழந்தை இப்படியிருக்கிறதே! இதனால், அவளது எதிர்காலமே பாதிக்குமே! என்ன செய்வேன்! என உருக்கமாக சுவாமியிடம் பேசினான் மலையத்துவஜன். அப்போது அசரீரி ஒன்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில் ஒலித்தது.
மலையத்துவஜா, காஞ்சனா! நீங்கள் இருவரும் இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். இவள் பருவம் எய்தி, திருமணம் நடக்க இருக்கும் வேளையில், இந்த தனம் மறைந்து விடும். எனவே இதுபற்றி நீ கவலை கொள்ள வேண்டாம். இவளுக்கு தடாதகை என்று பெயரிடுங்கள், என்றது. இறைவனே உத்தரவாதம் கொடுத்தபிறகு என்ன பயம். தம்பதியர் பயம் நீங்கி சுவாமிக்கு நன்றி தெரிவித்தனர். குழந்தை பிறந்த விழா பாண்டியநாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டது. மன்னன் தன் மக்களுக்கு தானதர்மம் செய்தான். காஞ்சனமாலை சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவைகளை தானமாக அளித்தாள். நீண்டதூரம் வரிசையில் நின்ற மக்கள் இந்த தானத்தைப் பெற்று மகிழ்ந்தனர். மன்னர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் மக்களுக்கு தாராளமாக சலுகைகள் கிடைக்கும். மலையத்துவஜனின் ஆட்சியில் வரிகள் குறைக்கப்பட்டன. கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். புலவர்கள் கவுரவிக்க பட்டனர். பல இடங்களில் மக்களின் தாகம் தீர்க்கவும், விவசாயத்தை அதிகரிக்கவும் குளங்கள் வெட்டப்பட்டன. மீனாட்சி பிறந்தவுடனேயே பாண்டியநாட்டு மக்கள் மிகுந்த மகிழ்வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். மன்னன் பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தான். இறைவனின் உத்தரவுப்படி தடாதகை பிராட்டியார் என்று பெயர் சூட்டினர். தடாதகை என்றால் என்ன? அவள் ஏன் மூன்று தனங்களுடன் இந்த பூமியில் பிறந்திருக்க வேண்டும்? தடாதகை என்றால் எல்லா வகையிலும் மாறுபட்டவள் என்று பொருள். அவள் முக்கண்ணனாகிய சிவனுக்கு வாழ்க்கைப்பட இருந்தாள்.


அவருக்கு தன்னை வித்தியாசமான முறையில் காட்டிக்கொள்ள அவரைப் போலவே மூன்று தனங்களுடன் பிறந்தாள். தமிழ் வளர்த்த மதுரையை ஆளப் போவதால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழைக் குறிக்கும் வகையில் மூன்று தனங்களுடன் பிறந்தாள் என்றும் சொல்வார்கள் அறிஞர்கள். அகரம், உகரம், மகரம் (அ,உ,ம) என்னும் எழுத்துக்களின் கோர்வையே ஓம் என்னும் பிரணவமாகும். அவளை பிரணவத்தின் வடிவம் என்றும் குறிப்பிடலாம். இப்படி, செல்வாக்கோடு பிறந்த மகள் செல்வாக்கோடு வளர்ந்தாள். அந்த மகள் பருவத்துக்கு வந்ததும் அவளை மதுரையின் மகாராணியாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான் மலையத்துவஜன். அவளது ஆட்சியில் காலாகாலத்தில் மழை பொழிந்தது. நீதி தவறாத ஆட்சி, தர்மத்தில் உயர்ந்த ஆட்சி என்று மக்கள் புகழ்பாடினர். மலையத்துவஜ மன்னன் தனது மகளிடம், நீ எட்டுத்திக்கும் சென்று எல்லா நாடுகளையும் உனதாட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும், தேவர் உலகமும் உனக்கு அடிமைப்பட வேண்டும். உன்னிலும் வீரமிக்கவர் உலகில் இல்லை என்ற நிலை வர வேண்டும், என்றான். தடாதகை பிராட்டியாரும் அவ்வாறே செய்தாள். இதனிடையே மலையத்துவஜமன்னன் நோய்வாய்ப்பட்டான். தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த அவன் மந்திரி சுமதியை அழைத்து,மந்திரியாரே! அரசியாரைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். இதை உம்மைத் தவிர யாருக்கும் தெரிய வேண்டாம், எனச் சொல்லி, மூன்று தன ரகசியத்தையும், கயிலாசநாதனாகிய சிவபெருமான் அவள் முன் தோன்றியதும், ஒரு தனம் மறையுமென்பதையும், அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்ற விபரங் களையும் சொன்னான். பின்னர் அவனது உயிர் பிரிந்தது.


நன்றி : தினமலர் 

64 திருவிளையாடல்

மதுரை நகரம் உருவான படலம் 




மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே! ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன. வனவிலங்குகள் வாழ்ந்த கொடிய காடு அது. இந்திரன் நிர்மாணித்து  சென்ற சொக்கநாதர் திருச்சன்னதியை அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தாங்க, அந்தச் சன்னதி மட்டுமே காட்டுக்குள் இருந்தது. தனஞ்செயன் என்ற வணிகர் பாண்டியநாட்டில் வசித்து வந்தார். அவர் மாபெரும் சிவபக்தர். சிவனடியார்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொண்டார். வணிகம் செய்தததால், பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் வெளியூரில் வியாபாரத்தை முடித்து விட்டு, கடம்பவனத்துக்குள் புகுந்து வீடு நோக்கி நடந்தார். திடீரென வானம் இருண்டது. காட்டுக்குள் பாதை தெரியாத அளவு ஒளி சூழ்ந்தது. தனஞ்செயன் அசைவற்று நின்று விட்டார். என்ன செய்வதென தெரியவில்லை. அப்போது, மின்னல் வெட்டினாற்போல் ஓரிடத்தில் ஒளி தோன்றியது. தனஞ்செயன் ஒளி வந்த திசை நோக்கி நடந்தார். அங்கே, சொக்கநாதப் பெருமானின் விமானம் பளிச் சிட்டது.

உள்ளே பெருமான் ஜொலித்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயில் இங்கே எப்படி வந்தது? யார் கட்டியது? என்று தனஞ்செயனுக்கு குழப்பம். இந்திரனால் உருவான கோயில் அது என்பதை அவரால் எப்படி உணரமுடியும்? அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்தன? தங்கத்தில் தாமரையா? அவை தான் ஒளிக்கீற்றைச் சிந்தி இங்கே வெளிச்சமாக இருக்கிறதா? அவர், சொக்கலிங்கத்தைப் பக்தியோடு வணங்கினார். திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தனஞ்செயன் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினார். ஏராளமானோர் பட்டாடைகள் பளபளக்க, தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் தனஞ்செயனுக்கு அவர்கள் தேவர்கள் என்பது புரிந்தது. வானத்து தேவர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே! அதிலும், அவர்கள் சிவபூஜை செய்வதைக் காண என்ன பாக்கியம் செய்தேனோ! அவரது உடல் சிலிர்த்தது. சில தேவர்கள் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பூப்பறித்தனர். தனஞ்செயனும் தன்னையறியாமல் குளத்துக்குள் இறங்கி, அவர்களுக்கு பூப்பறித்துக் கொடுத்து உதவினார். அவர்கள் அவரை வாழ்த்தினர். பூஜை முடிந்ததும் தேவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். இந்த அதிசயம் குறித்து, நாடாண்ட மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தார் தனஞ்செயன்.

மன்னா! தாங்களும் அத்தகைய பூஜையைக் காண வேண்டும். நான் அந்த பூஜையை சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) கண்டேன். தாங்களும் அடுத்த சோம வாரத்தன்று அதைக் காண வரவேண்டும், என்று கேட்டுக் கொண்டார். மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அடுத்த சோமவாரம் எப்போது வருமென காத்து  கொண்டிருந்தான். முதல்நாள் இரவு, பரபரப்புடன் இருந்த அவன், தூக்கம் பிடிக்காமல் இருந்தான். அதிகாலையில் தூக்கம் வந்துவிட்டது. அப்போது எழுந்த கனவில், சொக்கநாதர் அவன் முன்னிலையில் தோன்றி, குலசேகரா! தனஞ்செயன் கண்டது உண்மையே. நீ கடம்பவனத்தை சீர்திருத்தி ஒரு நகரமாக மாற்று. என் கோயிலை அடையாளமாகக் கொண்டு, அது நடுவில் இருக்க நகரம் சிறப்புற அமைய வேண்டும். வீதிகள், வீடுகள், மாளிகைகள் அமைய வேண்டும், என்று கட்டளையிட்டார், திடுக்கிட்டு எழுந்த மன்னன், உடனடியாக அமைச்சர்கள், படைகள் புடைசூழ, தனஞ்செயன் வழிகாட்ட காட்டுக்குள் சென்றனர். அங்கே எட்டு யானைகள் விமானத்தை தாங்க, அதன் கீழ் சொக்கநாதர் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அனைவரும் சொக்கநாதரைச் சேவித்தனர். உடனடியாக விக்னேஸ்வர பூஜை நடந்தது. 

நகரம் கட்டும் பணியைத் துவங்கினான் மன்னன். அர்த்தமண்டபம், உற்சவ மண்டபம், வேள்வி மண்டபம், மடப்பள்ளி முதலானவை அமைத்தான். பின்னர் கோயிலைச் சுற்றி மாடமாளிகைகள், பெரிய வீடுகள், வீதிகள் ஆகியன அமைக்கப் பட்டன. பார்க்க  மிக அருமையாக இருந்தது அந்த நகரம். உடனடியாக, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து சிறப்பாக முடித்தான். சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். தனது ஜடாமுடியில் அணிந்திருந்த சந்திரனின் கலைகளில் (பிறை) ஒன்றை நகரத்தில் சிந்தினார். எனவே அது ஒளி பெற்றது. சந்திரனே மனதிற்கு அதிபதி. மனதிடத்தை வழங்குபவர். அதனால், நகரில் வசித்த மக்கள் மனோதிடம் பெற்றனர். சந்திரனை பார்த்தால் மனம் இனிக்கும். இனிப்பை மதுரம் என்றும் சொல்வர். மதுரம் சிந்திய அந் நகரத்துக்கு மதுரை என்று பெயர் சூட்டினான் குலசேகரப் பாண்டியன். பின்னர் பலகாலம் அந்நாட்டில் செங்கோல் ஆட்சி நடத்தினான்


நன்றி : தினமலர் 

64 திருவிளையாடல்


வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!


 ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.

இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.

துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார்.

வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார்.

 மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.

 நன்றி : தினமலர்