திங்கள், செப்டம்பர் 11, 2017

சிந்தனைக்கு .....

மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் சிந்தனைகள்


  ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த நாத்திகர் ஒருவர் சுவாமியை கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு , அன்று இரணியன் ஒருவனை அழிக்க உங்கள் கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்தார் ஆனால் இன்றோ அவனினும் கொடியவர் பலர் உள்ளரே கடவுள் ஏன் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை என்று கர்வத்தோடு கேட்டான் . 

         அமைதியே உருவான பரமஹம்சர் , அன்று நரசிம்மர் தோன்ற ஒரு பிரகலாதனாவது காரணமாக இருந்தான் . இன்று நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லோரும் கொடியவர்களாக இருக்கிறார்களே தவிர பிரகலாதனாக யாரும் இல்லையே என்று கூறினார் . அதைக்கேட்ட நாத்திகன் எதுவும் பேச முடியாமல் விலகி சென்றானாம் . 


                           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

     சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!  

சிவமேஜெயம் அறக்கட்டளை 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் 
ஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி -2
9944091910 , 9842154171

சனி, செப்டம்பர் 09, 2017

சித்தர் பாடல்கள் ..

  சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்




          நந்தீஸ்வரக் கண்ணிகள்  . 


     சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சித்தராவார் . அவருடைய பாடல்களில் இறையை பற்றி சொல்லி இருப்பாரே தவிர மதத்தைப் பற்றி அல்ல. சித்த நிலை என்பதே அனைத்துங் கடந்த அற்புதமான நிலை அங்கு , மதம் , மொழி , இனம் என்று பாகுபாடு இல்லை அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சிவமே . அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தார்கள் . தாம் வேறு சிவம் வேறு என்றில்லாமல் சிவத்தோடு கலந்து இருந்தார்கள் . நந்தீஸ்வரக் கண்ணிகளில் அவர் சிவத்தைப் பாடியிருக்கும் ஆழகைக் காணலாம் வாருங்கள் .

ஆதியந்தங் கடந்தவுமை யாளருணா தாந்தச்
சோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே .                    

முடிமுடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே
அடிமுடியாய் நின்றநடு வணையேநந் தீஸ்வரனே .                

கர்த்தனே யானுன் கருணைத் திருவடிக்கே
எத்தனை தான்றெண்ட னிடுவேனந் தீஸ்வரனே .                        

தீர்க்க தெண்டனிட்டேன் திருவடியைப் போற்றி செய்தேன்
வாக்கு நடக்க வரமரு ணந்தீஸ்வரனே .                                            

மாசில் பரவெளியே மௌனமணி மாளிகையில்
வாயிற் பெருவழியே மகத்தே நந்தீஸ்வரனே .                              

மகத்தோனே ஞான மழையே யருள் வெள்ள
முகத்தோனே மோனே முனையேநந் தீஸ்வரனே                      

ஞானம் விளைவேற்று நல்ல சமுசாரிகட்கு
மோன மழையூற்று முகிலே நந்தீஸ்வரனே .                             

மும்மூல யோக முழுதுஞ் சித்தி செய்துதர
உன்னாலே யாகு  முயிரேநந் தீஸ்வரனே .                                     

சமர்க்கொடுத்து வென்றோங்கு சாம்பவியைக் கைப்படுத்தித்
தமர்விடுத்து நீக்கித் தருளாய் நந்தீஸ்வரனே .                              

நல்லோர்க்கு நீகாட்ட நல்குங் குணங்குடிவாழ்
வெல்லோர்க்கு நீகாட்ட வெளிதோ நந்தீஸ்வரனே .                 

இல்லினிடங் கூட்டியிதழ் விரியுஞ் செங்கமல
வல்லினிடங் காட்டி வைப்பாய் நந்தீஸ்வரனே .                       

சாமிதனை யுஞ்சுத்த சைதந்ய மானசிவ
காமிதனை யும்மென்று காண்பேனந் தீஸ்வரனே  .                   

உமையாளு மையாயு வந்தடிமை கொள்ளும்வண்ணம்
எமையாளு மையா விறையே நந்தீஸ்வரனே .                           

கேசரத்தைக் காட்டிக் கிளரொளியா தன்னருட்பால்
ஆதரித்தே பூட்ட வருள்வாய் நந்தீஸ்வரனே .                             

சத்தி சிவமுதலாகி சாம்பவியம் பாளருளிச்
செத்த சிவமுதலாச் சித்தா நந்தீஸ்வரனே .                                 

சித்தாளை யீன்ற சிறுபெண்ணாந் தாளிரண்டு
பொற்றாளை யென்றோ புணர்வே நந்தீஸ்வரனே .                 

பத்துவயதுடைய பாவையரை யன்றோ நீ
சித்தர்க்கெல்லாந் தாயாய்ச் செய்தாய் நந்தீஸ்வரனே .         

காமரூபி யாநித்ய கல்யாண சுந்தரியை
ஓமரூபி யையெற்கு முதவு நந்தீஸ்வரனே.                                       

கேசரியாடன் கருணை கிட்டினன்றோ வாசாம
கோசரவாழ் வெல்லாங் கொடுப்பாய் நந்தீஸ்வரனே .            

மூலவெளி சூட்டி மோனக் குணங்குடிக்கும் 
மேலை வழிகாட்டி விடுவாய் நந்தீஸ்வரபே .                            

கண்டப்பா லங்கடத்திக் கமலாசனத் தேற்றி 
அண்டப்பா லுங்கொடுத்தே யருள்வாய் நந்தீஸ்வரனே .      

செங்கமலப் பூடச் செல்வியர்தாஞ் சித்தம்வைத்தாற் 
றங்கமலை கூடத் தருவானந் தீஸ்வரனே .                               

போதகத்தைப் பூட்டிப் புருவமையத் தாயுமெற்கும் 
வாதிவித்தை காட்ட வருவாய் நந்தீஸ்வரனே .                       

ரசயோக சித்து நயனருளி னாலடிமை 
நிசயோக முற்று நிலைப்பே னந்தீஸ்வரனே .                           

மகாவித்தை காய்ப்பதற்கு மதியமிர்த வூரலுண்டே 
லகிரியுற்று நிற்பதற்கு லபிப்பாய் நந்தீஸ்வரனே .                

குப்பை வழலையெனுங் கோழையெலாங் கக்கவைத்துக் 
கற்ப வழலை வரக்காட்டு நந்தீஸ்வரனே  .                                 

கற்ப வழலைவரக் காட்டிகற்ப முண்டதற் பின் 
பற்ப வழலைமுறை பகர்வாய் நந்தீஸ்வரனே .                        

சூதமுத னீற்றிச் சொன்னமதி யமிர்தப்ர 
சாதமாதி லூற்றித் தருவாய் நந்தீஸ்வரனே .                             

அற்பமாந் தேகமதா யடியே னெடுத்தவுடல் 
கற்பதேக மாகக்கணிப்பாய் நந்தீஸ்வரனே .                                

உமைநம்பி னோர்வாழு மோங்கு குணங்குடியார்க் 
கெமனுட் பிணையாரு மெதிரோ நந்தீஸ்வரனே .                     

முநீஸ்வரரி லொன்றாய் முடித்தருள்வா யாகிலனைச் 
சநீஸ்வரக் கூடச் சாட்டாய் நந்தீஸ்வரனே .                                 

காலனும் போய்விடுவான் காலங் கடந்துசிறு 
பாலனும் மாய்விடுவேன் பரமே நந்தீஸ்வரனே .                      

கவன மணிமுதலாய்க் கட்டியென் கைகளிக்க 
மவுன மணித்தாய்க்கு வகுப்பாய் நந்தீஸ்வரனே .                    

மாயை வலைவீசி மாயக்காம லென்றன் மேல் 
நேய வலைவீசி  நிகழ்த்து நந்தீஸ்வரனே .                                    

தோகை யிளமின்னார் சுகபோகமும் பசியும் 
பேச்சு வழிசொன்னாற் போதும் நந்தீஸ்வரனே .                         

பெண்ணா யுலகமெலாம் பிணக்காட தாக்கியையோ 
மண்ணாய் வடிவதென்ன மாயும் நந்தீஸ்வரனே .                     

சையோகப் பித்தை வெல்லச் சமர்த்தோடு கச்சைகட்டு 
மெய்யோகப் புத்திசொல்ல வேண்டும் நந்தீஸ்வரனே .         

பாஷாண்டி கடோறும் பலனொன்று மின்றிவெறும் 
வேஷாண்டி யாக்கிவிடு காண் நந்தீஸ்வரனே .                         

பிணம்பிடுங்கித் தின்னும் பேய்போற் சிலதுளையர்
பணம்பிடுங்கித் தின்பதென்ன பாவம் நந்தீஸ்வரனே .            

பணமுடியா னென்றும் பவம்பிடியா னென்றுமெனை 
குணங்குடியா னென்றும் குறிப்பாய் நந்தீஸ்வரனே .              

உன்னையன்றி யேழை யோரே னொருவரையும்         
அன்னையென்று மாளவருள் வாய்நந்தீஸ்வரனே .               

ஆத்தாளைத் தேடியலைந் தலைந்து விண்பறக்குங் 
காத்தாடியானே னென்கண்ணே நந்தீஸ்வரனே .                       

மான்பிறந்த கன்றாய் மயங்குதற்கென் றாய்வயிற்றி 
லேன்பிறந்த கன்றா யிருந்தே னந்தீஸ்வரனே                           

ஏனோ வெனையீன்றா ளெந்தாய்வ் வாறுசெயத் 
தானோ வினுமென் செயத்தானோ நந்தீஸ்வரனே .                

தாய்தாயே யென்றே தலைப்புரட்டக் கொண்டுவெறு 
வாய்வாயை மென்றோடி வாடினே னந்தீஸ்வரனே .            

தாயை விட்டுப் பிள்ளை தவிப்ப தறிந்தவுடன் 
சேயையிட்டம் வைத்தணைக்கச் செய்வாய் நந்தீஸ்வரனே . 

கன்றினுக் கேயிரங்குங் காலியென வென்றனை தான் 
என்றுமெனக் கிரங்க விசைப்பாய் நந்தீஸ்வரனே .                   

மாயை மணமுடித்து மயக்கா தெனையீன்ற 
தாயை மணமுடித்து தருவாய் நந்தீஸ்வரனே .                        

தற்பரத்தி னல்வெளியே சர்வபரி பூரணமே 
சிற்பரத்தி னேரொளியே சிவமே நந்தீஸ்வரனே .                       

முத்தரெலாம் வாழியெங் கண்மோனமணித் தாயருளுஞ்    
சித்தரெலாம் வாழி சுத்த சிவமே நந்தீஸ்வரனே .                       

குற்றம் பலநீக்கிக் குணங்குடியென்றே மேவுஞ் 
சிற்றம்பலம் வாழ்சிவமே நந்தீஸ்வரனே .                                    


             சித்தர் குணங்குடியார் அருளிச் செய்த நந்தீஸ்வரக் கண்ணிகள்  முற்று பெற்றது .   

                           சித்தர் குணங்குடியார் சீர்பதம் போற்றி !!

                     
                    சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!!     சித்தர்களை போற்றுவோம் !!!

சிவமேஜெயம் அறக்கட்டளை 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் 
ஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி - 2
9944091910 , 9842154171

       







சனி, செப்டம்பர் 02, 2017

         சித்தர்கள் அருளும் கோவில்கள் ..


   தோரணமலை முருகன் கோவில் 
     


                          முருகப்பெருமான் அருளாட்சி செய்து வரும் பல புண்ணிய மலைகளில் இத்தோரணமலையும் ஒன்று  . இந்த மலையின் சிறப்புகளை சொல்வதற்கு இந்த ஒரு பதிவு கண்டிப்பாக போதாது அவ்வளவு பெருமை வாய்ந்தது இந்த தோரணமலை . தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவரும் அவருடைய சீடர் தேரையரும் வழிபட்ட மலை . பல மூலிகைகைள் நிறைந்த இந்த மலையில் தான் தேரையர் தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிகள் பல செய்து இங்கேயே பல ஆண்டுகாலம் தவம் புரிந்து இன்றும் அவர் அருள் செய்து வரும் அதிசய மலை . 





                         தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் அமைந்து இருக்கிறது . இங்கு முருகப்பெருமான் மலைக்குகையில் இருந்து அருள் பாலிக்கிறார் . எத்துணை துன்பம் நேரினும் முருகா என்றழைக்க நொடியில் அனைத்தையும் பகலவன் கண்டா பனி போல தீர்த்துவிடுகிறார் தோரணமலை முருகன் . அம்மையப்பன் திருமணத்தின் போது தேவர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் கூடியதால் தென் பகுதி உயர்ந்தது அதை சமன் படுத்த அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வரும் வழியில் இந்த மலையை பார்த்திருக்கிறார் இதன் அழகில் மனம் லயித்து இங்கேயே சிறிது காலம் தங்க முடிவெடுத்திருக்கிறார் . இந்த மலையின் தோற்றம் வாரணம் அதவாது யானை படுத்திருப்பது போன்று இருந்ததால் வாரண மலை என்றும் ,  ஏக பொதிகை நாக பொதிகை ஆகிய இரு மலைகளுக்கும் தோரணம் போல இருப்பதால் தோரணமலை என்றும் கூறுவர் .  


               தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிக்கு பல மூலிகைகள் கிடைத்ததால் அங்கேயே தன்னுடைய குருநாதனை அழகிய வடிவில் சிலை வடித்து வழிபாட்டு வந்தார் . பின் சீடராக தேரையர் வந்தார் இருவரும் பல மருத்துவ நூல்களை இங்கிருந்து எழுதியதாக கூறப்படுகிறது . சிறப்பாக முருகனுக்கு இரு பெரும் சித்தர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அகத்தியர் தேரையரை அழைத்து நான் பொதிகை சென்று தவம் செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு போய்விட்டார் . தேரையரும் பல நூறு ஆண்டுகள் தவம் புரிந்து தோரணமலையில் தன்னை ஐக்கிய படுத்துக்கொண்டார் . அவர்கள் வழிபாட்டு வந்த முருகப்பெருமானுக்கு வழிபாடு இல்லாமல் போனது . காலப்போக்கில் முருகப்பெருமான் ஒரு சுனைக்குள் தன்னை மறைத்துக் கொண்டார் . அள்ளிக்கொடுக்கும் வள்ளல் பெருமான் அவனால் சுனைக்குள் இருக்க முடியுமா ? தோரணமலையை அடுத்த ஊரில் இருக்கும் ஒரு அடியவரின் கனவில் முருகன் தோன்றி மலைக்கு மேலே உள்ள சுனையில் தான் இருப்பதாகவும் தன்னை  வழிபாடு செய்யவும் ஆணையிட்டார் .

                 அந்த அன்பரின் முயற்சியால் அகத்தியரும் , தேரையரும் வழிபட்ட தோரணமலை முருகனை எல்லா மக்களும் வழிபாடு செய்யுமாறு சிறு குகையில் பிரதிஷ்டை செய்து , மலை ஏறுவதற்கு படிகள் மேலே உள்ள சுனைகளை பண்படுத்தி மக்கள் பயன் பெறுமாறு அமைத்தனர் . அவன் அருள் இருந்தாலே அவன் தாளை வணங்க முடியும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று . இங்கு வந்திடும் அடியவர்தம் வினைகளை வெந்து போகச் செய்வான் தோரணமலை முருகன் . இல்லை என்றே சொல்லாமல் தன்னுடைய அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறான் . முருகன் இங்கே கிழக்கு நோக்கி அமர்ந்து திருச்செந்தூரை நோக்கிய வண்ணம் உள்ளார் அதுவும் தனி சிறப்பு .

                 ஒரு நதி ஓரத்தில் இருந்தாலே அந்தத் தலம் புனிதத் தலம் ஆனால் தோரணமலை ராமநதி ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கு இடையில் இருக்கிறது . மிகவும் புனிதமான மலை இந்த மலை . இன்றளவும் சித்தர்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் அற்புத மலை . மலை உச்சியில் தியானம் செய்து தேரையர் சித்தரை அருவமாக உணரலாம் அடியேன் உணர்ந்திருக்கிறேன் அடியேன் மட்டுமல்ல உடன் வந்த அன்பர்களும் உணர்ந்து இன்பத்தில் திளைத்த மலை இந்த தோரணமலை . 


      தீராத நோய்களையும் , துன்பங்களையும் , மனக் கவலைகளையும் களைந்து நம்மை வாழிவில் சிறக்கச் செய்யும் அற்புதமான மலை . கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்ய வேண்டிய அருள்சக்தி நிறைந்த மலை .

         வழிபாட்டு நேரம்

                 தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.  செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் . 



                         சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

      சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!


என்றும் இறை பணியில் ..

சிவமேஜெயம் அறக்கட்டளை 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் 
4/169 B , MAC  கார்டன் , ஸ்டேட் பேங்க் காலனி 
தூத்துக்குடி - 2
9944091910 , 9842154171