செவ்வாய், மார்ச் 31, 2015

அட்ட வீரட்டானம் ....


   திருவழுவூர் 


முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதிய தாம் பல தேவரும்
அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.


                      - திருமூலர் திருமந்திரம் 


சிவபெருமான் ஆற்றலை உணராது அவன் பெருமையை அறியாது மற்ற தேவர்களுள் ஒருவன் என்று எண்ணிய முனிவர்கள் சிலர்  தமது ஆற்றலை பெரிதாக நினைத்து வேள்வி செய்து   வேள்வித்தீயில் கஜமுகாசுரன் என்னும் யானை உருவம் கொண்ட அரக்கனை தோற்றுவித்து அதனை சிவபெருமானிடத்து ஏவினர் . எம்பெருமான் விரல் நகத்தால் யானையை அழித்து தேவரும் , உமையாளும் பெருமானுடைய கோபம் கொண்ட மேனியின் பேரொளியை கண்டு அஞ்சும் போது யானையின் தோலை போர்வையாக போர்த்தி நின்றார் .                             சிவமேஜெயம் - திருவடிமுத்துகிருஷ்ணன்  


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                

திங்கள், மார்ச் 30, 2015


அட்ட வீரட்டானக் கோவில்கள் ...

சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த இடங்கள் வீரட்டானக் கோவில்கள் ஆகும் . எட்டுக் கோவில்கள் ஆதலலால்  அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது .

1 . திருக்கண்டியூர் 
ஈசனை போலவே ஐந்து தலையை உடையவனாக இருந்தான் பிரமன் இதனால் நான் என்கிற அகந்தை  அதிகமாக , ஈசன் அவனுடைய ஒரு தலையை  கிள்ளி நான்முகனாக்கி அவனுடைய அகந்தையை அழித்த தலம் .

2 . திருக்கோவலூர்
அந்தகாசுரன் என்னும் அரக்கனை தன்  சூலத்தால் வதைத்த இடம் . 

3 . திருவதிகை  
கமலாட்சன் , விருபாட்சன் , வித்யும்மாலி  ஆகிய மூன்று அரக்கர்ளும் ஆட்சி செய்த மூன்று புரங்களையும் சிரித்து எரித்த தலம் . 

4 . திருப்பறியலூர் 
தட்சன் கர்வம் கொண்டு சிவ நிந்தை செய்து அவரை அவமரியாதை செய்தான் வெகுண்ட ஈசன் அவனுடைய வேள்வி தகர்த்து தட்சன் தலையை கொய்து அவன் கர்வம் அடக்கிய தலம் .

5 .  திருவிற்குடி 
பாவங்கள் பல புரிந்து மக்களை எல்லாம் கொடுமை படுத்திய சலந்திரன் என்னும் அசுரனை கொன்ற இடம் .

6 . திருவழுவூர் 
சிவபெருமானை எதிர்த்த கஜமுகாசுரன் என்னும் அசுரனை அழித்து யானையின் தோலை போர்வை போல போர்த்தி நின்ற தலம் .

7 . திருக்குறுக்கை 
கயிலை நாதன் நிட்டையில் இருக்கையில் மலரம்பு எய்த காமனை கண் விழித்து தகித்த இடம் .

8 . திருக்கடவூர்
மிருகண்டு முனிவரின் மகனான மார்கண்டேயனை காலன் பிடிக்க வரும் போது மார்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகப் பற்றி கொண்டார் . அவரை பிடிக்க எமன் தன் பாசக்கயிறை வீசுகையில் கயிறு சிவலிங்கத்தின் மீதும் பட்டது . தன்னை அடைக்கலம் என்று வந்த பின் காலன் கயிறு வீசியதால் ஆத்திரமடைந்து அவனைக் காலால் உதைத்த தலம் .   


ஆகிய இந்த எட்டுத் தலங்களும் ஈசனின் வீர செயல்களை பறை சாற்றும் அட்ட வீரட்டானத் தலங்களாகும் .

   
            சிவமேஜெயம் - திருவடிமுத்து கிருஷ்ணன்  

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
.


அட்ட வீரட்டானம் ..........

                             திருவதிகை


 திரிபுரம் எரித்தது 

அப்பர் தேவாரத்தில் இருந்து ....


கொம்புகொப் பளித்ததிங் கட்கோணல் வெண்பிறையுஞ் சூடி  
வம்புகொப் பளித்தகொன்றை வளர்சடை மேலும்வைத்துச் 
செம்புகொப் பளித்தமூன்று மதிலுடன் சுருங்க வாங்கி 
அம்புகொப் பளிக்க வெய்தாரதிகை வீரட்டானரே .   

கூர்மை வாய்ந்த கொம்பு போல வளைந்த வெண் மதியை அணிந்து நறுமணம் தவழும் கொன்றை மலரை சடையில் சூடி , உறுதியான செப்பு மதில்களை உடைய கோட்டைகளை அழிக்க வில்லை வளைத்து அம்பு தொடுத்து புரங்களை நோக்கி எய்தவர் திருவதிகை ஆளும் வீரட்டானர் .

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புர மாவது மும் மலக் காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.


                               - திருமூலர் திருமந்திரம் 

கங்கை நீரை சுமந்த செஞ்சடை உடைய என் அப்பன் யாவர்க்கும் முதலான் அவனே தொடக்கம் பழம் பொருட்கு எல்லாம் பழமையானவன் பரமன் . அவன் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அந்த உயிர்கள் சார்ந்த மும்மலமாகிய  (ஆணவம் கன்மம் மாயை ஆகிய )காரியங்களை தன் திருவருளால் சுட்டெரித்தான் . அவ்வாறு செய்ததை மூன்று கோட்டைகளை (முப்புரம்) எரித்தான் என்று அறியாதவர்கள் கூறுவார் .
ஆனால் உண்மைதனை யாரும் அறியமாட்டார் .


                             சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
சனி, மார்ச் 28, 2015

   அடியேன் எழுதிய பாடல்களில் .........
                                                 
                                            அட்ட வீரட்டானம் 

                                                   சிவமயம் 

குருவே துணை             பட்டினத்தாரே சரணம்               குருவே சரணம் அகந்தையால் தன்னிலைமறந்த வேதனொருதலை பறித்தாணவமிகு
அந்தகனைவொ ழித்துக்கொடுஞ் சலந்திரனையழித்து சிவநிந்தைசெய்
தக்கன்வேள் விதகர்த்துயெம காலனையுதைத்து அத்திவுரிபோர்த்து 
மன்மதனை தகித்துத்திரி புரமெரித்தா னட்டவீரட்டானத்தானே .

                     
                                             சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!     


     

வெள்ளி, மார்ச் 27, 2015

அட்ட வீரட்டானம் .....

                                       திருவிற்குடி 


சலந்தரனை வதம் செய்தது 


எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.


                                              -    திருமூலர் திருமந்திரம் 


எல்லா இடங்களிலும் அனைத்து உயிரினங்களிலும் கலந்து இருக்கின்ற ஈசன் எம் உள்ளத்திலும் எழுந்தருளி இருக்கின்றான் . அறுசமயங்களாகிய அங்கத்தில் முதலானவன் , நான் மறைகளை ஓதி அருள்செய்தவனாவான் அவனின் பெருமைகளை உணராது வஞ்சனையே உருவான சலந்தரன் சிவபெருமானிடத்து போருக்கு வந்தான் . சலந்தரனை அழிப்பதற்கு ஈசன் திருவடியால் ஆழிப் படையை ( சக்கராயுதம் ) அமைத்து  சலந்தரன் தலையை அவ்வாழி கொண்டு துண்டித்து அழித்தான் . 


                          சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


              

வியாழன், மார்ச் 26, 2015

அட்ட வீரட்டானம் .....

                                      திருக்கண்டியூர்        பிரம்மன் சிரம் கொய்தது எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.

       
                           -  திருமந்திரம் 

ஆதியும் அந்தமும் இல்லாது எங்கும் நிறைந்து உலகம் தனை தாங்கி நிலையான இன்பம் தரும் ஈசனின் திருவடியை உணர்ந்து தேவர்கள் துதிக்கையிலே படைத்தல் தொழிலை செய்து வரும் பிரமன் அனைத்தும் தெரிந்தவன் தான் என்ற அகந்தையிலும் கல்வி செருக்காலும் பரமனை நிந்திக்க சினம் கொண்ட ஈசன் பிரமனின் ஐந்து தலையில் ஒன்றை கிள்ளி நான்முகனாக்கினர் . அதுபோல பிரமன் யாருடைய உந்திகமலத்தில் தோன்றினானோ அவன் தந்தையாகிய அச்சுதன் செல்வச் செருக்கால் நிலை தடுமாற அவன் உதிரத்தையும் ஏந்தி நின்றானே .

  

                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 
புதன், மார்ச் 25, 2015

அட்ட வீரட்டானம் .....

      திருப்பறியலூர் 

                                                     
                                                


   தக்கன் வேள்வி தகர்த்தது 


கொலையில் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே. நான்முகன் மகனான தக்கன் ஈசனிடம் வரம் பெற்று பின் தான் என்ற ஆணவத்தால் அவரை மறந்து யாகம் நடத்தினான் . யாகத்தின்போது  அவிர்பாகம் தனை சிவனுக்கு அளிக்காது ஈசனை மதிக்காது கடிந்து சிவபெருமான் கோபத்திற்கு ஆளானான் . கோபம் கொண்ட ஈசனார் அவனின் தலையை பறித்து யாகத் தீயில் இட்டு பின் அவனுக்கு ஆட்டுத்தலையை பொருத்தி அருள் செய்தார் .     இத்தகைய வீரச் செயல் புரிந்த தலம் திருப்பறியலூர் ஆகும் .


        சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


செவ்வாய், மார்ச் 24, 2015

அட்ட வீரட்டானம் .......... 

                                         திருக்கோவிலூர்      


அந்தகாசுர வதம் 


கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே. 


                                -  திருமந்திரம் 

அந்தகன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் தான் பெற்ற வரத்தால் மிகவும் அகந்தை கொண்டு உலகத்தின் உயிர்களை எல்லாம் கொடுமைப் படுத்தினான் . அவனுடைய கொடுமை தாளாது வானவர்கள் ஈசனிடம் முறையிட ஈசன் திரிசூலம் கொண்டு அவனை வதம் செய்து மக்களை காத்தருள் செய்தார் .

ஈசன் வீரச் செயல் புரிந்த தலங்களுள் ஒன்று திருக்கோவிலூர் .


        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.             குருநாதர் ஐயா ஸ்ரீபட்டினத்தார் திருவடிகள் 
                               போற்றி !! போற்றி !! போற்றி !! 

          சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

புதன், மார்ச் 18, 2015

அத்ரிமலை 


                 அதிசயங்கள் நிறைந்த அத்ரி மலை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்து உள்ளது இந்த எண்ணற்ற ஆச்சர்யங்களும் அதிசயங்களும் அற்புதங்களும்  நிறைந்த அத்ரி மலை .


அகத்தியர் , அத்ரி மகரிஷி , கோரக்கர், தேரையர் , போன்ற முனிவர்கள் மற்றும் சித்தர்கள் வாசம் செய்த மலை இந்த  அத்ரிமலை பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி . இன்றும் பசுமை போர்வை போர்த்தி இருக்கும் ஒரு அற்புத வனம் . இந்த மூலிகைகளை தழுவிக்கொண்டு வரும் காற்று நம் உடலில் பட்ட உடனே ஒரு வித சிலிர்ப்பும் , உற்றாகமும்  கரை புரண்டு ஓடும் . 
அத்ரி மகரிஷியும் அவரது சீடர்களும் தியானம் செய்த அற்புத மலை. அத்ரி மகரிஷியின் சீடர்களில் ஒருவர்  கோரக்கர் என்னும் சித்தர் அவர் தவம் செய்த புண்ணிய மலை .  அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை அணையில் இருந்து அத்ரி மலையின் தோற்றம் மிகவும் அருமையாக மனதை இயற்கையோடு ஒன்றி நம்மை அரவணைத்துக் கொள்ளும் .
                                           அத்ரி மகரிஷி தோற்றுவித்த ஊற்று  
கோரக்கருக்கு தாகம் எடுக்கவே அவர் குருநாதர் தன் சீடர் தாகம் தணிக்க கங்கையை தோற்றுவித்தார் இன்றளவும் வற்றாத சுனையாக , மறக்காத சுவையாக சிறிய நீரோடை . ஓடை சிறியது என்றாலும் அதன் பெருமை பெரியது . அகத்தியருக்கும்  , அத்ரி மஹரிஷிக்கும் கற்சிலை உள்ளது . 

அத்ரி பரமேஸ்வரனை தரிசிக்க வரும் பக்தர்கள் கரடு முரடான பாதைகளை கடந்து  வந்தாலும் அவன் பதத்தை அடையும் போது அந்த களைப்பு இருக்காது .வாழ்க்கை என்னும் பள்ளம் மேடு நிறைந்த பாதையை அவன் துனையோடு கடக்க எண்ணுவோமே யானால் அதுவும் இது போலத்தான் இலகுவாக அவன் பத்தில் கொண்டு சேர்க்கும் என்பதை நமக்கு உணர்த்தும் . 

 அருள்மிகு அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வர சுவாமி  
                            அருள்மிகு கோரக்க நாத சுவாமி திருக்கோவில்  
அங்கு இருக்கும் இந்த மரத்தடியில் தான் கோரக்கர் தவம் செய்தார் என்பது நம்பிக்கை . அவர் தவம் இயற்றிய அந்த புனிதமான இடத்தில் நாமும் தியானம் செய்யும் போது தியானம் நன்றாக கை கூடும் மனம் ஒரு

 வெறுமையை உணரும் . 

அடியேன் தெரிந்த அனுபவித்த விஷயங்களையே இங்கு
 தொகுத்துள்ளேன் , அடியேனுக்கு தெரியாத பல விஷயங்கள் அங்கு 
உள்ளது . 

 அத்ரி மலைக்கு செல்லும் வழியினை பார்ப்போம் 
 நெல்லையை அடைந்து அங்கிருந்து அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ,  ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 7 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம். 

                                     என்றும் இறை பணியில் 

                   சிவமேஜெயம் -   திருவடி முத்துகிருஷ்ணன் 

   சிவத்தை போற்றுவோம் !!!  சித்தர்களை போற்றுவோம் !!! 

                                             
              
                       

                     


வியாழன், மார்ச் 12, 2015மணிவாசக பெருமான் அருளிச் செய்த 

                  திருவாசகத்தில் இருந்து ..................

      
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந்தேனெம் பிரானெனைத் தாங்கிக்கொள்ளே.


உந்தன் அளவு கடந்த கருணையினால் கடையேனை ஆண்டு கொண்ட விடையேறும் பெம்மானே , என்னை விட்டு விடுவாயோ வலிமை பொருந்திய புலியின் தோலை உரித்து உடையாய் அணிந்தவனே , நிலையான இன்பம் தரும் உத்தரகோசமங்கை நகரை ஆளும் தலைவனே சடைமுடியை உடையவனே , அடியேன் சோர்ந்து போனேன் என்னை நீ  தாங்கி கொள்வாயோ பெருமானே . 


               என்றும் இறை பணியில் 


                                 சிவமேஜெயம்  - திருவடி முத்து கிருஷ்ணன் 


        சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!