சனி, ஜூன் 27, 2015

சித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி ...

                              ஸ்ரீ  வாலை அரசி                       

                                         கொங்கண சித்தர் 
                      
      சித்தர் வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த வாலை என்னும் தெய்வத்தை பற்றி தெரியும் . இவள் பத்து வயது சிறுமி என்கிறார்கள் சித்தர்கள் . நம்மை அப்பனிடம் சேர்க்கும் அன்னையாக இருப்பவள் . இவளை பற்றி தெரிய வேண்டும் என்றாலே விட்ட குறை வேண்டும் என்கிறார் கொங்கனவர் தம் பாடல்களில் .

                             நந்தவனத்திலே சோதியுண்டு நிலம்
                             நித்திய பேருக்கு நெல்லுமுண்டு
                             விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
                             விட்டகுறை வேணும் ஞானப்பெண்ணே
           
என்கிறார் . இது மட்டுமல்ல வாலையை பற்றி தம்முடைய வாலைக்கும்மி பாடல்களில் நிறைய கூறுகிறார் .

                             வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
                             காப்பது சேலைக்கு மேலுமில்லை
                             பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
                             கும்மிக்கு மேலான பாடலில்லை

எண்று இந்த வாலை தெய்வத்தின் மகிமையை நமக்கு அறிவுறுத்துகிறார் .
ஆத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு செல்ல வாலையால் மட்டுமே இயலும் இவளை பாடாத சித்தரில்லை , என்னும் அளவிற்கு எல்லா சித்தர்களும் இவளை பாடி பணிந்திருக்கிறார்கள் . மாயையும் அவளே , மாயையை இவள் தான் உண்டு பண்ணுகிறாள் என்பதையும் கொங்கணர் அழகாக எடுத்து வைக்கிறார் பாருங்கள் ...

                                    அஞ்சு பூதத்தை யுண்டு பண்ணிக் கூட்டில் 
                                    ஆறா  தாரத்தை யுண்டு பண்ணிக் 
                                    கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை 
                                    கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் 
           

       நம்முடைய ஆன்மீக ஞானத்தை சோதித்து நம்மை சுற்றி மாயைகளை உருவாக்கி அதற்குள்ளே விழச் செய்திடுவாள் நாம் விழுந்து விட்டோமேயானால் முக்தியில்லை இதைத்தான் சிவவாக்கியர் தனது பாடலில் ..

                           ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை 
                           நாடி நாடி நாடி நாடி நாட்களுங் கழிந்து போய் 
                           வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள் 
                          கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே 

ஆகவே அவளையே சரணாகதியாக , அப்பனிடம் நம்மை அவளால் மட்டுமே கொண்டு சேர்க்க முடியும் என்று அவளையே கதியாக இருந்தோமேயானால் நம்மை கண்ணைப் போல காத்திடுவாள் . குழந்தை  தானே அன்போடு அவளை அழைத்தாள்  உடனே வருவாள் . மந்திரத்திற்கும் , தந்திரத்திற்கும் அப்பாற்பட்டவள் , எதற்குள்ளும் அடங்காதவள் அன்பு என்னும் ஒரே சொல் தான் அவளை நம்மோடு இருக்க வைக்கும் . மற்ற எதுவும் இவளைக் கட்டுப்படுத்தாது . ஈசனும் , அவளும் வேறில்லை . கொங்கனவர் கூறுகிறார் கேளுங்கள் ...    

                                          
                                      காலனைக் காலாலுதைத் தவளாம் வாலை 
                                      ஆலகா லவிட முண்ட  வளாம்
                                      மாளாச் செகத்தை படைத்தவளா மிந்த 
                                      மானுடக் கோட்டை இடித்தவளாம்  .


இன்னும் நிறைய பாடல்கள் . தேவைகளை குறைத்தால் ஒழிய எதிர்பார்ப்பு குறையாது எதிர்பார்ப்பு இருக்கின்ற வரையில் ஆசை இருந்து கொண்டே இருக்கும் . ஆசை இருக்குமேயானால் எப்படி ஈசனை அடைய முடியும் , வாலையை  காண முடியும் சித்தர்கள் வழியில் செல்ல முடியும் . அவன் அருளால் மட்டுமே இது எல்லாம் சாத்தியம் அவனே நமக்கு நல்ல குருவையும் கொடுப்பான் . அந்த குரு மூலமாக வாலையை அறிவோம் அவள் மூலமாக அப்பனை அடைவோம் . 

                           

                    ஓம் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி 
                    ஓம் ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி 
                    ஓம் ஸ்ரீ வாலை அரசி திருவடிகள் போற்றி 
                    ஓம் ஸ்ரீ சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி 
                   ஈசனோடு கலந்த அணைத்துச்  சித்தர் பெருமக்கள் திருவடிகள்                                  போற்றி   போற்றி 


                     சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !!   சித்தர்களை போற்றுவோம் !!
                                 


                             
                   

வெள்ளி, ஜூன் 26, 2015

திருநீலகண்ட நாயனார் வரலாறு 

         ஆடல்வல்லான் நின்றாடும் பெருமை மிக்க சிதம்பரத்திலே குயவர் குலத்திலே திரு அவதாரம் செய்தவர் திருநீலகண்ட நாயனார் . தம் குலத் தொழிலான மண்பாண்டங்கள் செய்து விற்று வாழ்க்கை நடத்தினார் . சிவ பக்தியில் சிறந்து விளங்கினார் சிவனடியார்களுக்கு திருவோடுகள் வழங்குவதை தம் தொண்டாக செய்து வந்தார் . ஆலகால விஷத்தை அருந்தி அவ்விஷத்தை தமது கழுத்திலே நிறுத்தி உலகத்தை காத்த காரணத்தால் சிவபெருமானது  கழுத்து நீல நிறமானது அதைக் குறிக்கும் வண்ணம் அடியார் திருநீலகண்டம் என்று சுவாமியை அழைப்பார் . கண்டம் என்றால் கழுத்து என்று பொருள் படும் . அடியார் நம்பெருமானை திருநீலகண்டம் என்று அழைப்பதை போன்று ஊர் மக்கள் நாயனாரை திருநீலகண்டர் என்று அழைத்தனர் . பக்தி நெறியில் வழுவாது தம் தொண்டையும் சரிவர செய்து இனிய இல்லறம் நடத்தி வந்தார் . 

                     அவ்வூரில் வசித்த நடன மங்கையிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது , இது நாயனாரின் மனைவியாருக்கு பிடிக்கவில்லை ஒரு நாள் மனைவியாரைக் கூட எண்ணி அவரைத் தீண்டப் போனார் . அம்மையார் திருநீலகண்டத்தின் மேல் ஆணையாக எம்மைத் தீண்டாதீர் என்றார் . திருநீகண்டத்தின் மேல் தாம் கொண்ட பக்திக்கு பங்கம் நேரக்கூடாது என்பதினால் மனையாளை தீண்டாது நீங்கினார் . மனைவி எம்மை என்று பன்மையாக கூறியதால் இவரை மாத்திரம் அல்ல பிறிதொரு மாதரையும் மனதினால் கூட தீண்டேன் என்று அவரும் திருநீலகண்டத்தின்மேல் ஆணையிட்டு கூறினார் . அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தாம் கொண்ட விரதம் பிறர் அறியா வண்ணம் வாழ்ந்து வந்தனர் .                               வருடங்கள் பல கடந்தது இருவரும் வயோதிகப் பருவம் அடைந்தனர் . உடல் தான் வயோதிகம் அடைந்ததே அன்றி அவர்கள் கொண்ட பக்தியும் , உறுதியும் தளராது அப்படியே இருந்தது . எம்பெருமான் அவர்களின் பக்தியையும் தன் மேல் ஆணையிட்ட காரணத்தால் அவர்கள் உடலின்பம் தவிர்த்து வாழ்ந்ததையும் உலகத்தார் அறிய திருவுளம் கொண்டார் . காமம் கடப்பது அரிது அதுவும் மனையாளுடன் வசித்து காமம் தவிர்ப்பது என்பது இயலாத காரியம் சிவ பக்தியினால் மட்டுமே காமத்தையும் வெல்ல முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் திருநீலகண்டர் புராணம் . சரி கதைக்கு வருவோம் , ஈசனார் சிவனடியார் வேடம் தாங்கி திருநீலகண்டர் இல்லம் எழுந்தருளினார் . வந்தவரை அமர வைத்து பணிவோடு தங்களுக்கு அடியேன் செய்யும் பணி யாது பெருமானே என்று வினவினார் .

                         ஆலங்காட்டாரும் அன்பரே, யாம் தொலைதூர பயணம் செய்ய வேண்டி உள்ளது ஆகையால் என்னுடைய இந்த திருவோட்டை பத்திரமான இடத்தில் சேர்க்கும் பொருட்டு உம்மை நாடி வந்தேன் , இது சாதாரண ஓடு அல்ல பொன்னும் , ரத்தினங்களும் கொடுத்தாலும் பெற முடியாத , விலை மதிப்பில்லாத ஓடு ஆகும் , ஆதலால் இந்த திருவோட்டை பத்திரமாக பாதுகாத்து யாம் திரும்பி வருகையில் எம்மிடம் சேர்க்க வேண்டும் என்று ஓட்டை திருநீலகண்டரின் கையில் கொடுத்தார் . அடியேனின் பாக்கியம் என்று திருநீலகண்டர் பகவானை பணிந்து அதை பெற்றுக்கொண்டார் . அந்த திருவோட்டை ஒரு பெட்டிக்குள் மிகவும் பாதுகாப்பாக வைத்து பூட்டினார் நெடு நாட்கள் கழித்து சிவபெருமான் திருநீலகண்டர் இல்லத்து எழுந்தருளினார் .யாம் உம்மிடம் கொடுத்த திருவோட்டை வாங்கிச் செல்ல வந்திருக்கிறோம் என்றார் . திருநீலகண்டரது பக்தியின் திறத்தை உலகுள்ளோர் அறியும் வண்ணம் செய்வதற்கு நீலகண்டர் வைத்த பெட்டியில் இருந்து திருவோடு மறையும் படி செய்தார் . சுவாமி திருவோட்டை கேட்டவுடன் திருநீலகண்டர் சென்று வைத்த இடத்தில் தேடினார் ஓட்டைக் காணவில்லை  திகைப்புடன் மனைவியாரிடமும் விசாரித்தார் வீட்டின் எல்லா இடத்திலும் தேடித் பார்த்து விட்டார் திருவோட்டைக் காணவில்லை . 


                          சிவபெருமான் நடப்பதையெல்லாம் ஏதுமறியார் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் . பின் என்னவாயிற்று திருநீலகன்டரே என்று வினவினார் நாயனாரும் சுவாமி அடியேன் திருவோட்டை மிகவும் பத்திரமாக இப்பெட்டியுனுள் பூட்டி வைத்திருந்தேன் ஆனால் ஓட்டைக் காணவில்லை , அடியேன் செய்த தவறை தேவரீர் பொறுத்தருள வேண்டும் அந்த பழைய ஓட்டுக்கு ஈடாக அடியேன் புது ஓடு தருகிறேன் ஐயா மன்னிக்க வேண்டும் என்றார் .  அதைக்கேட்டு கோபம் கொண்ட சிவயோகியார் நீர் வேண்டும் என்றே பொய் கூறுகிறீர் அந்த ஓட்டுக்கு ஈடாக தங்கஓடு கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் , என்னுடைய ஓடு தான் வேண்டும் யாம் அதன் சிறப்பை உம்மிடம் கூறியதால் நீர் அதை வைத்துக் கொண்டு தொலைந்து விட்டது என்று பொய் கூறுகிறீர் , உம்மிடம் அடைக்கலமாய் வந்த பொருளை கவர்ந்து கொண்டு எம்மிடம் மறைக்கிறீர் , என்று சிவயோகியார் சொல்லக் கேட்டதும் சுவாமி , அடியேன் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் அல்லன் வீட்டின் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து விட்டேன் என்னை நம்புங்கள் சுவாமி என்றார் அடியேன் திருடவில்லை என்பதை எவ்வாறு உங்களுக்கு நிரூபிக்க வேண்டும் வேண்டும் என்று கூறுங்கள் என்றார் . 

            சுவாமியும் , சரி நீர் கூறுவதை யாம் ஏற்க வேண்டும் என்றால் உமது மைந்தனை அழைத்து அவன் கையை நீர் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து கொடு நம்புகிறேன் என்றார் . நாயனார் , சுவாமி அடியேனுக்கு மைந்தன் இல்லை என்றார் . அப்படியானால் உம மனையாளின் கரம் பற்றி சத்தியம் செய்து கொடு என்றார் . நாயனாரும் பெருமானே , நாங்கள் திருநீலகண்ட பெருமானின் மேல் ஆணையிட்டு தீண்ட மாட்டோம் என்ற உறுதிப் பாட்டில் இருக்கிறோம் யான் யாது செய்வேன் என்று செய்வதறியாது நின்றார் . சிவயோகியார் , என்னப்பா நீ ஓட்டையும் தர மாட்டேன் என்கிறாய் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்து தா என்றால் அதுவும் முடியாது என்றால் என்ன செய்வது வா தில்லை வாழ் அந்தணர்கள் இருக்கும் சபைக்கு செல்வோம் அங்கே என்ன சொல்கிறார்களோ அதன் படி செய்வோம் என்று சபைக்கு சென்றார் . அவரைப்பின் தொடர்ந்து நாயனாரும் அவர் மனையாளும் சென்றனர் . 

                      சபைக்கு சென்று அந்தணர்கள் இடத்திலே சுவாமி முறையீடு செய்தார் . இங்கே நிற்கும் திருநீலகண்டரிடம் எம்முடைய திருவோட்டை பத்திரமாக காத்து தரும்படி கொடுத்து விட்டு யாம் பயணம் மேற்கொண்டோம் முடித்து வரும் போது எம்முடைய திருவோட்டைக் கேட்டால் , திருடி வைத்துக் கொண்டு அதைக் காணவில்லை என்று பொய் கூறுகிறார் . உணமையிலே இவர் திருடவில்லை என்றால் மனையாள் கரம் பற்றி குளத்திலே மூழ்கி சத்தியம் செய்து கொடு என்றாலும் அதையும் செய்வில்லை , ஒன்று என்னுடைய ஓட்டை வாங்கித்தாருங்கள் அல்லது அவரை யாம் சொன்னது போல சத்தியம் செய்து கொடுக்கச் சொல்லுங்கள் என்றார் . அதைக் கேட்ட அந்தணர் பெருமக்கள்  திருநீலகன்டரே இப்போது நீர் சொல்லும் என்றனர் . பெருமக்களே , அடியேனிடம் இவர் திருவோட்டைக் கொடுத்தார் நானும் அதை பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன் இப்போது காணவில்லை வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியும் காணவில்லை நான் வாங்கினேன் என்பது எந்த அளவு உண்மையோ அதைக் காணவில்லை என்பதும் உண்மை என்றார் . 
                       
                        தில்லை வாழ் அந்தணர்களும் அப்படியானால் சிவனடியார் சொல்வது போல சத்தியம் செய்து கொடுத்தலே நீதி என்று கூறினர் . நாயனாரும் தம்மனைவியாரை தீண்டாதிருத்தலை அங்கே கூற முடியாமல் , மனையாளுடன் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து கொடுக்க தின்னமானார் . அந்தணர்கள் , ஊர்பெருமக்கள் என அனைவரம் சூழ்ந்திருக்க ஒரு மூங்கில் கம்பை ஒரு முனையை தாம் பிடித்து மற்றொரு முனையை மனையாளை பிடிக்க சொன்னார் குளத்திலே இறங்கினார் . அதற்கு சிவயோகியார் உன் மனைவியின் கையை பிடித்துத் தான் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்றார் . திருநீலகண்டர் தாம் வேசியினிடத்து சென்ற காரணத்தால் தன மனையாள் செய்த சபதமும் அதனால் தாமும் திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டதை உலகத்தார் அறியும் வண்ணம் எடுத்துரைத்து அந்த சத்தியத்தின் படி நடந்து வருவதானால் தம்மால் இயலாது என்று குளத்தில் மூழ்கினார் . நீருக்குள் மூழ்கி வெளியே வரும் போது அவர்களுடைய முதுமை நீங்க பெற்று இளமையாய் வந்தார்கள் அதைக்கண்ட ஊரார் திகைத்து நிற்க ஆகாயத்தினின்றும் மலர் தூவினார்கள் தேவர்கள் . 

              அங்கு நின்ற சிவயோகியாரை காணாது தேட விடை வாகனத்தில் உமையாளொடு சிவபெருமான் தோன்றினார் . அங்கிருந்த அனைவரும் தரை விழுந்து நமஸ்காரம் செய்தனர் , நாயனாரும் , அவர்தம் மனைவியாரும் திக்கெல்லாம் நிறைந்தவனை தொழுது பணிந்து நின்றனர் .  அப்பொழுது சிவபிரான் அவர்களை நோக்கி " ஐந்து புலன்களையும் அடக்கி தம் பக்தியும் பொருட்டு மேன்மை நிலை அடைந்த அன்பர்களே , இனி என்றும் இந்த இளமை நீங்காது எம்மிடத்தில் இருப்பீர்களாக என்று அருளிச் செய்து மறைந்தார் . பின் நாயனாரும் , அவர் மனையாளும் இல்லறத்தை இனிதே நடத்தி சிவ பக்தியில் சிறந்து யாருக்கும் கிட்டாத பேரின்ப நிலையை அடைந்து அவன் பதத்திலே இருக்கும் பெரும்பேறு பெற்றார்கள் .


                      சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 
     

வெள்ளி, ஜூன் 12, 2015

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த 

சிறு தொண்ட நாயனார் வரலாறு             காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் சாலியர் மரபினிலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும் . நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார் . பரஞ்சோதியார் யானை ஏற்றம் , குதிரை ஏற்றம் மற்றும் போர் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார் . , வேதங்கள் , வட மொழி நூல்கள் ஆகியவற்றிலும் வல்லவர் . அதைப் போல சிவத்தொண்டிலும் அவன் அடியார்க்கு தொண்டு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரே என்பது போல விளங்கினார் .

                 நரசிம்ம பல்லவனின் படையினை சேனாதிபதியாக இருந்து வழி நடத்தி பல வெற்றிகளையும் பெற்று தந்து மன்னனின் மதிப்பினை பெற்றார் . வாதாபி நகரத்தின் மேல் படையெடுத்து இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தார்.அங்கு இருந்து விலை உயர்ந்த பொருள்களையும்  செல்வங்களையும் , யானை , குதிரை  முதலியவற்றையும் கைப்பற்றி தம் மன்னனிடம் சேர்த்தார் . மன்னன் இவரது வீரத்தை எண்ணி அதிசயித்து பாராட்டினான் . தனது பணியையும் சிறப்பாக புரிந்து தொண்டையும் குறைவில்லாது செய்து வந்தார் . சில அமைச்சர்கள் மன்னனிடம் பரஞ்சோதியார் புரிந்து வரும் சிவத்தொண்டு பற்றி கூறினார்கள் . மன்னன் மனம் பதறினான் இத்தகைய சிவனடியாரையா நான் போர்க்களத்தில் கொலைச்செயல் புரிய வைத்து விட்டேன் என்று . உடனே பரஞ்ஜோதியாரை அழைத்து வாருங்கள் என்று பணித்தான் . அவர் வந்ததும் சிவனடியாரை கொலைப்பாதகம் புரிய வைத்த என்பிழைதனை பொறுக்க வேண்டும் என்று வேண்டினான் .
                             
                              மன்னன் இவ்வாறு கூறியதும் பரஞ்சோதியார் மன்னனை வணங்கி அடியேன் ஏற்றுக்கொண்ட பணி அவ்வாறு இருக்கும் போது இதில் தவறேதும் இல்லை மன்னா என்ற பதிலுரைத்தார் . அறம் விரும்பும் மன்னன் அதனை செவிமடுக்காது , இதுநாள் வரை நானறியாதவாறு நீர் செய்து வந்த சிவத்தொண்டை இனி உமது மனமகிழும் வண்ணம் எந்நேரமும் செய்வீராக என்று கூறி அவருக்கு பெருஞ்செல்வமும் , நிலம் , ஆடு , மாடு  இன்னும் எண்ணற்ற பொருள்களை மனமுவந்து அளித்து விடை கொடுத்து அனுப்பினான் . மன்னனிடம் விடை பெற்ற பரஞ்சோதியார் தமது ஊரை வந்தடைந்தார் . கணபதீச்சுவரத்து இறைவனை வணங்கி தம் தொண்டினை பழுதில்லாமல் செய்து வந்தார் . இல்லறமேற்கும் காலம் வந்தது திருவெண்காட்டு நங்கையாருடன் தனது இல்லறத்தை இனிதே நடத்தி அடியார்களுக்கும் தொண்டு செய்து வந்தார் . அடியார்களுக்கு அமுது அளித்து அவர்கள் உண்ட பின் தாம் உண்ணுவதையே வழக்கமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . சிவனடியார்கள் முன்னம் தன்னை சிறியராகக் கருதி தொண்டு செய்ததால் அடியார்கள் மத்தியில் சிறுத்தொண்டர் என அழைக்கப் பட்டார் . இனிய இல்லறத்தின் பயனாக அழகிய ஆண்மகவை பெற்றெடுத்தார் திருவெண்காட்டு நங்கையார்.  அக்குழந்தைக்கு சீராளன் என்னும் திருநாமம் இட்டு வளர்த்து வந்தார்கள் . மைந்தனுக்கு ஐந்து வயது நிரம்பியது கல்வி பயில பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் .


         
                                              இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது சிறுதொண்டரது அன்பையும் , பக்தியையும் , தொண்டின் சிறப்பையும் உலகத்தார்க்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் , பைரவ அடியார் வேடந்தாங்கி திருச்செங்காட்டங்குடி ஊருக்கு எழுந்தருளினார் . கருஞ்சட்டை அணிந்து இடக்கையில் சூலம் ஏந்தி சிறுத் தொண்டர் வீட்டின் முன் நின்று அடியார்களுக்கு அமுதிடும் சிறுத்தொண்டர் இருக்கிறாரா அவரைக் காண வேண்டி வந்துள்ளேன் என்றார் . சந்தனத்தாதியார் பைரவ அடியாரை வணங்கி அடியாரைத் தேடி வெளியே சென்றிருக்கிறார் . அடியார் இல்லத்தினுள் எழுந்தருள வேண்டும் என்றார் . அது கேட்டு சுவாமி மாதர்கள் இருக்கும் இல்லத்தில் நாம் தனியே எழுந்தருள மாட்டோம் என கூற திருவெண்காட்டு நங்கையார் எம்பெருமானே அடியார்களுக்கு உணவிட அடியாரைத் தேடித்தான் அவர் சென்று உள்ளார் நீங்கள் இங்கு வந்திருப்பது தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வார் ஆதலினால் சிறிது பொறுக்க வேண்டும் ஐயா என இறைஞ்சி கேட்டுக் கொண்டார் . பெருமானும் சரி அம்மா நாம் கனபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கிறோம் அவர் வந்த உடன் யாம் வந்த செய்தியை தெரிவிப்பீராக என்று கூறி ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்தார் .

                                அடியார்களைத் தேடி சென்ற சிறுத்தொண்டர் எங்கு தேடினும் ஒரு அடியவரையும் காணவில்லை என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார் . மனைவியார் பைரவ அடியார் வந்ததை தன் கணவரிடத்து கூறினார் . அதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டவராய் வேகமாக ஆத்தி மரத்தின் கீழமர்ந்த அண்ணலைக் காண விரைந்தார் . பெருமானைக் கண்டு அவர்தம் திருவடிகளை பணிந்து நின்றார் . பணிந்து நின்ற அடியாரை நோக்கி பைரவ அடியார் நீர் தான் சிறு தொண்டரா என வினவினார் . அடியேனை அடியார்கள் அவ்வாறு அழைப்பர் ஐயா என பணிந்து கூறினார் . பின் அடியேன் செய்த தவத்தால் இன்று உங்களைக் கண்டேன் சுவாமி தயை கூர்ந்து அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுதுண்ணல்  வேண்டும் ஐயனே என்றார் .
அதுகேட்ட பைரவர் சிறுத்தொண்டரே உம்மைக் காணும் ஆவலில் தான் யாம் இங்கு வந்தோம் எமக்கு உணவளிக்க உம்மால் இயலாது என்றார் . சுவாமி உங்களுக்கு என்ன உணவு வேண்டுமோ அதை அடியேன் விரைந்து அமுது செய்து படைக்கிறேன் தேவரீர் அருள்செய்ய வேண்டும் என்று பணிந்தார் . 

                     பைரவப்பெருமானும் எம் அன்புக்குரிய தொண்டரே நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் உண்போம் அதுவும் பசுவைக் கொன்று தான் உண்போம் அந்த நாளும் இன்று தான் ஆனால் எமக்கு அமுதளிக்க உம்மால் முடியாது ஐயா என்றார் . அது கேட்ட பரஞ்சோதியார் சுவாமி சிவபெருமான் அருளால் அனைத்து செல்வங்களும் , ஆநிரைகளும் அடியேனிடத்தில் குறைவில்லாது உள்ளது உமக்கு அமுதாகும் பசு எதுவென தெரிவித்தால் அடியேன் விரைந்து சென்று சமைத்து காலம் தவறாமல் அமுது படைப்பேன் ஐயனே என்றார் . சுவாமியும் , அன்பரே நாம் உண்ணும் பசு நரப்பசு , அதுவும் ஐந்து வயது மிகாமல் இருக்க வேண்டும் , அங்கத்தில் ஊனம் எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும் , ஒற்றைக்கு ஒரே பிள்ளையாக தாயார் பிடிக்க தந்தை அரிந்து எந்த பிழையுமின்றி சமைத்த கரியினை மாட்டுமே நாம் உண்போம் எனக் கூறிய பைரவரை பணிந்து சுவாமி அமுது செய்வதானால் அதுவும் எனக்கு கஷ்டமல்ல என்று திருவடியை வணங்கி வீடு வந்தார் . கணவர் வருகையை கண்ட நங்கையார் அடியார் விரும்பும் அமுது யாது என வினவினார் . 
                      
                       சிறுத்தொண்டர் , ஒரே பிள்ளையாய் இருக்கவேண்டும் உடலில் மறு இல்லாத பிள்ளையை தாய் பிடிக்க தந்தை அரிந்து கறி சமைத்தால் திருவமுது செய்விப்பதாக சுவாமி கூறியதை தெரிவித்தார் . திருவெண்காட்டு நங்கையாரும் அவ்வாறு அமுது செய்விப்போம் , அப்படி ஐந்து வயது பிள்ளையை யாரிடம் பெறுவது என்று கேட்டார் . சிறு தொண்டர் மனையாளின் முகம் நோக்கி எவ்வளவு பொன் பொருள் கொட்டி கொடுத்தாலும் பெற்ற பிள்ளையை யாரும் தர மாட்டார்கள் அப்படியே தந்தாலும் , தம் பிள்ளையை தாமே அரியும் பெற்றோர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . ஆகவே நமக்கு கிடைத்திருக்கும் இந்த பாக்கியம் , தொண்டு வழுவாது அடியார் பசி தீர நம் மகனை கறியமுது செய்விப்போம் என்பதைக் கேட்ட நங்கையாரும் மனமகிழ்ந்து ஒப்புக் கொண்டார் . தம் செல்வனை அழைக்க பாடசாலை சென்றார் சீராளா என்றழைத்ததும் பாதச் சலங்கை கொஞ்ச அழகாக ஓடிவந்தான் சீராளத்தேவன் . மைந்தனை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் , திருவெண்காட்டு நங்கையார் நீராட்டி , தலை வாரி தமது கணவர் கையில் கொடுக்க மைந்தனை வாங்கிய சிறுத்தொண்டர் அடியார்க்கு அமுதாகும் பிள்ளையை தாம் முத்தம் கொடுக்கலாகாது என்று , அரிவதற்கு தயாரானார் . 

                    யாரும் பார்த்திடக்கூடாத வண்ணம் , கோடிப் பொன் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத தம் செல்வத்தை வாரி அனைத்து மார்பில் தாலாட்டிய தம் மைந்தனை , திருவெண்காட்டு நங்கையார் இரண்டு கால்களையும் இறுகப் பிடித்துக் கொண்டார் , இதைக்கண்ட சீராளத் தேவன் தாம் அடியார்க்கு அமுதாவதை எண்ணி மகிழ்வது போல புன்னகை சிந்தினான் . பரமனுக்காக எதையும் செய்வோம் என்று கொள்கையுடைய பெரும் தொண்டுகள்  புரியும் சிறுத்தொண்டர் தம் குமாரனின் தலையினை அரிந்தார் , வெண்காட்டு நங்கையார் தலையின் மாமிசம் சுவாமிக்கு ஆகாது என்று மற்ற உறுப்புக்களை அரிந்து கறி சமைத்து தன கணவருக்கு தெரிவித்தார் . சிறுத்தொண்டர் விரைந்து சென்று ஆத்தி நிழலில் அமர்ந்திருந்த அம்மையப்பனை வணங்கி , கால தாமதம் ஆனதற்கு அடியேனை மன்னிக்க வேண்டும் ஐயா சுவாமி சொல்லிய வண்ணம் திருவமுது தயார் செய்தாகிவிட்டது அடியேன் இல்லத்தில் திருவமுது செய்விக்க தாங்கள் எழுந்தருள வேண்டும் என அழைத்தார் . பைரவ கோலம் கொண்ட பெருமானும் சரி என்று தொண்டருடன் புறப்பட்டார் . 

                    இல்லம் வந்த சுவாமின் பாதங்களை தூய நீரினால் கழுவினார் . சுவாமிக்கு தூபங்காட்டி மனையாளுடன் அடியாரை வணங்கி தேவரீர் திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்தார் , அடியார் அமர்ந்தார் , யாம் கூறியது போல எல்லா பாகங்களும் சமைத்து வந்து விட்டனவா என்று கேட்கவும் நங்கையார் தலைக்கறி அடியாருக்கு ஆகாது என்று எண்ணி அதை தவிர்த்து விட்டோம் என்றார் , யாம் அதையும் விரும்பி உண்போம் என்று பைரவப்பெம்மான் கூறியதைக் கேட்ட தொண்டரும் அவர்தம் மனையாளும் செய்வதறியாது திகைத்து நிற்கும் போது சந்தனத்தாதியார் , சுவாமிகள் கேட்டால் என்ன செய்வது என்று அடியேன் தலைக்கறியையும் சமைத்து விட்டேன் அம்மா  என்று தலைக்கறியையும் எடுத்து வந்தார் . எங்கே திருவமுது செய்வதில் பழுது ஏற்படுமோ என்று கலங்கிய தொண்டரது மனம் மலர்ந்தது .  திருவெண்காட்டு நங்கையார் முக மலர்ச்சியோடு தலைக்கறியையும் அடியாருக்கு படைத்தார் . அதன் பின் பைரவ கோல பெருமான் , யாம் தனித்து உண்ண மாட்டோம் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வாரும் என்றார் , இது கேட்ட தொண்டர் வெளியில் சென்று தேடினார் யாரும் இல்லை என முகத்தில் வாட்டம் கொண்டு , அடியாரிடத்தில் வந்து சிவனடியார் யாரும் இல்லை சுவாமி என்றார் . 

                   அதுகேட்ட பைரவர் உம்மை விட இன்னும் ஒரு அடியவர் தேவையா நீர் நம்முடன் உணவருந்தும் , என்று சிறுதொண்டரையும் உணவருந்த பணித்தார் . சரி என்று சுவாமிகள் திருவமுது செய்யும் பொருட்டு அடியேன் உணவருந்துகிறேன் என்று அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தார் அது கண்ட சிவனார் , யாம் ஆறு மதத்திற்கு ஒருமுறை தான் உண்போம் நாம் உண்பதற்கு முன்  பொறுமை இல்லாது நீர் உணவருந்துவது தகுமோ என்று கூறி நம்முடன் உணவருந்த உமது மைந்தனை அழைத்து வாரும் அவன் வந்த பின் யாம் அமுது செய்வோம் . அது கேட்டு அடியார்க்கு அமுது  படுமோ என்று கலங்கி சுவாமி மைந்தன் இப்போது நமக்கு உதவான் என்றார் . அவனை அழையும் அவன் வந்த பின் உணவருந்தலாம்  அப்படி இல்லையென்றால் நாம் அமுது செய்வது இல்லை என்று அடம் பிடித்தார் . பெருமானார் சொல்லை கேட்டு சிறுதொன்டரும் அவர் மனையாளும் வீட்டின் தலை வாயிலில் நின்று சீராளா , சீராளா சிவனைத்யார் உணவுண்ண அழைக்கிறார் வாடா கண்ணே என்று அழைத்தனர் , என்ன ஆச்சர்யம் !! பரமன் அருளால் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்தான் . வந்த தம் புதல்வனை வாரிக் கையிலெடுத்து சிவனடியார் அமுதுன்னப் பெற்றோம் என அகமகிழ்ந்து கணவர் கையில் கொடுத்தார் .   
                   
                          புதல்வனை அழைத்துக் கொண்டு அமுது செய்வதற்கு வீட்டுக்குள் சென்ற சிறுத்தொண்டர் அங்கே பைரவ அடியாரைக் காணாது மனம் வெதும்பி அய்யோ அடியார்க்கு அமுது செய்விக்க முடியாது போனேனே என்று கலங்கினார் . பின் சமைத்த கறியையும் காணாது திகைத்தார் , சுவாமியை தேடும் பொருட்டு வெளியில் வந்து பார்த்தார் . அங்கே ஆயிரம் சூரியன் ஒளியை மிஞ்சும் வண்ணம் செஞ்சடை சூடிய பெருமான் அம்மையொடு விடை மீது காட்சி கொடுத்தார் . சிறு தொண்டரது தொண்டை , அன்பை உலகத்தார் அறியும் வண்ணம் இந்த செயலை நிகழ்த்திகாட்டினார் . பசியால் வாடும் கன்று தாய்ப் பசுவைக் கண்டது போல உள்ளம் உவகை பொங்க தம் குடும்பத்தோடு தரையில் வீழ்ந்தார் . சிவபெருமானும் உமது தொண்டின் திறம் கண்டு யாம் மகிழ்ந்தோம் என்று தம்மை வணங்கி நின்ற நால்வரையும் திருக்கயிலையில் தம் பதத்தில் என்றும் நிலைத்திருக்க திருவருள் புரிந்தார் . 


                      
                       சிவமேஜெயம் - திருவடிமுத்துகிருஷ்ணன்         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                 

                    

                

வியாழன், ஜூன் 04, 2015    மனதில் கோவில் கட்டிய
                  பூசலார் நாயனார் வரலாறு                  தொண்டை நாட்டில் உள்ள திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே அவதரித்தவர்  பூசலார் நாயனார் . இவர்  , பிறவி எடுத்தலே ஈசனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்யவே என்று கருத்தில் கொண்டு  பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்கு திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் திருக்கோவில் கட்டும் அளவிற்கு பொருள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு பொருள் தேடியும் போதுமான பொருள் கிட்டாத காரணத்தினால் மனம் வருந்தினார் . இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார் . மனதிலே கோவில் திருப்பணிக்கு தேவையான பொருள்களை சிறிதுசிறிதாக சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய மரம் , கல்  என அனைத்தையும் மனதில் வாங்கி வைத்துக் கொண்டார் . பணிசெய்வற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயில்  பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி பகல் இரவு பாராமல் தூக்கம் கொள்ளாமல்   அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் ஆகம விதிப்படி அருமையாக திருக்கோவில் பணியை சிரமேற்கொண்டு முடித்தார் . தாம் மனத்திலே கட்டிய திருக்கோவிலுக்கு ஆகம முறையினில் குடமுழுக்கும் சிவபெருமானை ஆங்கு எழுந்தருள் செய்ய நல்ல நாளையும் நிச்சயித்தார் .

                              இவரது திருப்பணி இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் , காடவர்கோண் என்னும் அரசன் காஞ்சி நகரத்திலே சிவபெருமானுக்கு அழகிய திருக்கோவில் கட்டினான் . அத்திருக் கோவிலுக்கு அவன் குடமுழுக்கு செய்யவிருந்த நாளும் , பூசலார் மனத்திலே எண்ணிய நாளும் ஒரே நாளாய் அமைந்தது.  பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அன்று இரவில் காடவர் கோமான் கனவில் எழுந்தருளி நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; நீ இங்கு செய்யத்துணிந்த தாபனத்தினை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்றொரு நாளில் செய்வாயாக’ என்று பணித்தருளி மறைந்தருளினார்.உறக்கம் கலைத்து எழுந்த அரசன்  இறைவர் உளமகிழும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பூசலார் நாயனாரைக் காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு இருந்தவர்களிடம்  ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டான் . அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர். 

                               மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து பூசலார் யார் அவர் எங்கே இருக்கிறார் என்று அவர் வசிப்பிடத்தை கேட்டு அறிந்து , பூசலார் இருக்குமிடத்திற்கு சென்று அவரை வணங்கி, தேவரீர் அமைத்த திருக்கோயில் எங்கு உள்ளது என்று வினவி  அத்திருக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இன்று தான் என சிவபெருமானார் தெரிவித்தருளத் தெரிந்து உம்மைக்கண்டு பணிதற்கு வந்தேன்’ என்றார். பூசலார், அரசன் சொன்னதைக் கேட்டு மனம் பதறி , இறைவர் என்னையும் பொருட்டாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் திருப்பணி  செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அதைக் கேட்ட மன்னன் காடவர்கோன் ஆச்சரியமும் , அதிசயமும் கொண்டு  பூசலாரை நிலமுற்றத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.


                          பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து  தினசரி பூசனைகள் எல்லாம் பெருஞ்சிறப்புடன் பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடிநீழலையடைந்தார்.

                  ஈசனை அடைய எதுவும் செய்ய வேண்டாம் தூய அன்பு இருந்தாலே போதும் நம் அருகில் அவன் என்றும் இருப்பான் நாமும் அவன் பதத்தில் என்றும் நிலைத்து இருப்போம் .

                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

     சிவத்தை போற்றுவோம் !!   சித்தர்களை போற்றுவோம் !!