வியாழன், டிசம்பர் 24, 2015

ஞானகுரு மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்கள் .....


அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற்
சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.


நிலையில்லா இந்த தேகத்தை வளர்க்கும் பொருட்டு அன்னத்தை தேடும் விசாரம் பெரிய விசாரம் அது ஒழிந்தால் வாழ்க்கையை அனுபவிக்க செல்வத்தை சேர்க்கும் விசாரம் விடாத விசாரம் . மயில்போல சாயலுடைய பெண்டிரை புகழ்ந்து பேசி இன்பந் துய்க்கும் விசாரம் பல கால விசாரமாம் , சித்தம் தெளியாது திரியும் இந்தப் பாவியின் மனதிற்கு என்ன விசாரம் வைத்தாய் , கச்சியில் அருள் புரியும் ஏகம்ப நாதனே .  


கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.என்னிறைவா , நீவீர் அருளிச் செய்த சிவாகமங்களையும் வேதங்களையும் கற்றுணராத பிழையும் , வேதங்களின் வழிநில்லா பிழையும் , நின் திருவடியை சிந்தனை செய்யாத பிழையும் , இப்பிறவிக்கு நற்பயனருளும் நின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்யாத பிழையும் , உன்னை வணங்காத பிழையும் , இதுவரை நாயேன் வினையின் காரணத்தால் செய்த பிழையெல்லாம் பொறுத்து எனக்கு அருள் செய்வாய் திருக்காஞ்சியில் உறைந்தரும் செய்யும் ஏகம்ப நாதனே . 


                         - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 
மெய்ப்பொருள் நாயனார் வரலாறு ..
             சேதி நாட்டிலுள்ள திருக்கோவிலூர் என்ற ஊரை மலையான்மான் குலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் . அக்குலத்திலே அவதாரம் செய்தவர் மெய்ப்பொருள் நாயனார் . இவர் தாம் அரசாட்சியிலே அறநெறி ஒங்க ஆட்சி செய்தார் . பகை மன்னர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வீரமிக்கவராகத் திகழ்ந்தார் . சிவ வழிபாடே இப்பிறவிப்பிணி போக்கும் திருநீறு இடுவதே அந்நோய்க்கு மருந்தாகும் என்று வாழ்ந்து வந்தார் நீறிடும் அடியவரைக் கண்டால் பக்திப்பெருக்கில் மூழ்கி விடுவார் . சிவனடியார் வடிவமே மெய்ப்பொருள் என்று சிவனடியார் வேண்டுவற்றை குறைவின்றி கொடுத்து ஆட்சி செலுத்திவந்தார் .

                        இப்படி நல்லாட்சி செய்து வந்த மெய்ப்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட அரசன் ஒருவன் அவனது பெயர் முத்தநாதன் என்பதாகும் . பலமுறை மெய்ப்பொருள் நாயனாரிடம் போர் செய்து தோல்வி கண்டவன் போரிலே அவரை வெல்லமுடியாது என்று வஞ்சனையால் திட்டம் தீட்டினான் சிவனடியார் வேடந்தாங்கி அவரை பழிதீர்த்துக் கொள்ள எண்ணினான் . அதே போல தன் மேனியெல்லாம் திருநீறு பூசி சடை முடி தாங்கி  ஒரு புத்தகத்தில் குறு வாழை மறைத்து நாயனாரைக் காண புறப்பட்டான் . திருக்கோவிலூர் வந்தடைந்தான் வாயில் காப்பாளர்கள் புத்தகத்தைத் தாங்கி வரும் சிவனடியாரை வணங்கி உள்ளே போக அனுமதித்தனர் . அவன் நேராக மெய்ப்பொருள் நாயனாரின் பள்ளியறைக்கு வந்தான் . அங்கு வாயில் காவலன் தத்தன் என்பவன் இது அரசரைக் காணும் நேரமல்ல என்று கூறி தடுத்தான் . அது கண்ட முத்தநாதன் தான் அரசர்க்கு வேதத்தை ஓதுவதற்கு வந்திருப்பதாகவும் தன்னை தடை செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளே நுழைந்து விட்டான் . அங்கே மன்னர் நித்திரையில் இருந்தார் .  

                  மன்னருடன் உடன் இருந்த அரசியார் சிவனடியார் வரவு கண்டு மன்னவனின் நித்திரை கலைத்தாள் . எழுந்த அரசன் அடியார் வேடத்தில் இருந்தவனை வணங்கி வரவேற்றான் . முத்தநாதன் யாரிடமும் இல்லாத சிவாகமம் தன்னிடம் இருப்பதாகவும் அதன் பொருளை உனக்கு கூறுமாறு வந்திருக்கிறேன் என்று கூறினான் . மன்னரும் தான் செய்த பாக்கியம் சுவாமி உபதேசம் செய்யுங்கள் என்று வணங்கி நின்றார் . வஞ்சக எண்ணம் கொண்ட முத்தநாதன் உனக்குபதேசம் செய்கையிலே அங்கு யாரும் இல்லாமல் நாம் இருவரும் தனித்து இருக்க வேண்டும் என்று கூற மன்னவன் அரசியாரை அந்தப்புரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் . அவனை ஆசனத்தில் அமரச் செய்து தான் தரையில் அமர்ந்து கேட்பதற்கு தயாரானார் . புத்தக முடிச்சை அவிழ்ப்பது போல பாசாங்கு செய்தவன் உள்ளே வைத்திருந்த குறு வாளால் மன்னவரை குத்தினான் .  குத்துப்பட்டு தரையில் வீழும் அந்நேரமும் மெய்யடியார் வடிவத்தை வணங்கினான் . இதைக்கண்ட மெய்க்காவலாளி தத்தன் ஓடி வந்து தன் உடைவாளை உருவி அவனை வெட்டப் போனான் . 

                           அது கண்டு மன்னன் தத்தா ! அவர் நம்மவர் அவரை பத்திரமாக நம் எல்லையைக் கடந்து விட்டு வா என்றார் . தத்தனும் மன்னனை வணங்கி அவரை அழைத்து வந்தான் இச்செய்தி கேட்ட மக்கள் அனைவரும் வெகுண்டு அத்தீயவனை அழிக்க வேண்டுமென்று வந்தார்கள் தத்தன் அவர்களைத் தடுத்து அரசர் உரைத்ததை கூறினான் . பின் முத்த நாதனுக்கு இடையூறு இல்லாதவண்ணம் நகரத்து எல்லையில் கொண்டு அந்தக் கொடியவனை விட்டு ஓடி வந்தான் . வந்ததும் அரசனை வணங்கி மன்ன வீடு வந்து வந்து விட்டேன் என்றதும் , தத்தா நீ செய்த செயலுக்கு நன்றி என்று தன் உயிர் பிரியும் தருவாயில் , தம் அமைச்சர்களையும்  , தம் குமாரர்களையும் அழைத்து தாம் கடைப்பிடித்து வந்த நெறியினைக் காப்பீர் என்று கூறி , அம்பலத்தரசனின் திருவடியினை தன் சிந்தையில் தியானித்தார் . அங்கே பேரொளியுடன் அம்மையப்பனாக காட்சிக் கொடுத்தான் தில்லையம்பலவன் . மெய்ப்பொருள் நாயனாரை வாழ்த்தி தம் திருவடி நீழலில் சேர்த்துக் கொண்டு மறைந்தார் . மெய்ப்பொருள் நாயனாரும் ஐயனின் திருவடியில் பேரின்பத்தை பெரும் நிலையை அடைந்தார் .   


                            - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


திங்கள், டிசம்பர் 21, 2015

ஞான குரு மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்கள் ......

             பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே.


நல்ல குணங்களை பெறாதவன் , நன்னெறிகளை கடைபிடிக்காதவன் ,
ஐந்து புலன்களை அடக்கி அதனை வெற்றி கொள்ள இயலாதவன் , நன்மை ஓதும் நூல்களை விரும்பி கற்காதவன் , உண்மையான சிவனடியாரிகளிடத்து நட்பு பாராட்டதவன் , சத்தியம் உரைக்காதவன் 
உன்றன் தாமரை மலரை ஒத்த திருப்பாதங்களில் அன்பு இல்லாதவன் 
இந்த மண்ணில் எதுக்காக இப்பிறவி எடுத்தேன் கச்சியில் உறைந்தருள் செய்யும் ஏகம்பநாதனே .

பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.


பூமியில் பிறக்கின்ற போதும் கையில் எதுவும் கொண்டு வரவில்லை. இறந்து போகும் போதும் கொண்டு எதுவும் போகப் போவதுமில்லை 
பிறப்பிற்கும் , இறப்பிற்கும் நடுவே நீங்கள் அனுபவித்திருக்கும் இந்த செல்வமானது சிவன் அருளால் கிடைத்தது என்று தன்னை நாடி வந்தவர்கட்கு எதுவும் கொடுக்காது வீனாக உயிரை விடும் கீழ் மக்களுக்கு அடியேன் எது சொல்வேன் திருக்கச்சியில் அருளும் ஏகம்பனே . 


                           - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன்         சிவத்தை போற்றுவோம் !!!  சித்தர்களை போற்றுவோம் !!! 

நம்முடைய இணைய தளம் sivamejeyam.com என்பதனை அடியேன் தெரிவித்துக் கொளிகிறேன் . நன்றி . சிவமேஜெயம் .                         

சனி, டிசம்பர் 19, 2015

அட்டமா சித்திகள் ...

1.அணிமா     : மிகப்பெரிய தோற்றத்தை சிறியதாக காண்பித்தல் .
2. மகிமா        : மிகச்சிறிய பொருளை பெரியதாக மாற்றுவது .
3. லகிமா       : கனமான பொருள்களை காற்றைப் போல லேசாக ஆக்குவது .
4. கரிமா         : லேசான பொருள்களை மலையைப் போல கனமாக ஆக்குவது .
5. பிராப்தி      : ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தெரிவது .
6. பிரகாமியம் : கூடு விட்டு கூடு பாய்தல் .
7. ஈசத்துவம்   : ஐந்து தொழில்களையும் நடத்துதல் 
8. வசித்துவம் : ஈரேழு உலகத்தையும் தன வசப்படுத்துதல் .


                     இவை அனைத்தையும் அறிந்து தம் சிந்தை தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்றே கூறலாம் .

                -  சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 


             

 அட்டமா சித்திகள் ...

                                 

1 . அணிமா  :   மிகப் பெரிய தோற்றத்தை சிறிதாக்கி காண்பித்தல் .
2. மகிமா       : மிகச் சிறிய தோற்றத்தை பெரியதாக ஆக்குவது 
3. லகிமா      : கனமான பொருள்களை காற்றை போல                                                        லேசாக ஆக்குவது. 
4. கரிமா    : லேசான பொருளை மிகவும் கனமான பொருளாக                        ஆக்குவது. 
5. பிராத்தி    :  எவ்வுலகத்தும் எவ்விடத்தும் தடையின்றிச் சஞ்சரித்தல் 
6. பிரகாமியம் : கூடு விட்டு கூடு பாய்தல் 
7. ஈசத்துவம்    : ஐந்து தொழிலையும் நடத்துதல் 
8.வசித்துவம் :  ஈரேழு உலகத்தையும் தன் வசப்படுத்துதல் 
             இவை அனைத்தையும் அறிந்தவர்கள் சித்தர்கள் . அவர்களால் அனைத்தும் முடியும் .


                சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!!   சித்தர்களை போற்றுவோம் !!!  

வெள்ளி, டிசம்பர் 18, 2015

63 நாயன்மார்கள் ..

           இளையான்குடி மாறநாயனார்  வரலாறு  ..

                                              இளையான் குடி என்னும் இயற்கை எழில் கொஞ்சும் ஊரில் உலக மாந்தர்கட்கு உணவிடும் வேளாளர் குலத்தில் அவதரித்தார் மாறனார் . இளையான் குடியில் பிறந்த காரணத்தினால் இளையான்குடி மாற நாயனார் என்று அழைக்கப் பட்டார் . பெரும் செல்வங்களை உடைய மாறனாருக்கு வயல் வெளிகளும் நிறைய இருந்தன  . சிவபக்தியில் சிறந்து விளங்கிய மாறனார் எந்நேரமும் எம்பெருமானது திருநாமத்தை மனதில் எண்ணி அவன் அடியார்களுக்கு விருந்தோம்பல் செய்வதை தம் தொண்டாக செய்து வாழ்ந்து வந்தார் . தம் இல்லம் தேடி வரும் அடியார்களை சிவபெருமானெனக் கருதி இருக்கையில் அமர்த்தி அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கி அடியார்களுக்கு திருவமுது செய்து வந்தார் . 


              தாம் கொண்ட கொள்கையில் அணு அளவும் பிறழாது சிவத்தொண்டை புரிந்து வந்தார் இப்படி இருக்கையில் பெருமானார் மாறனாரின் பக்தியின் திறத்தை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் . வறுமையே காணாத மாறனாரை வறுமையை காண செய்தார் . வறுமையில் இருந்தாலும் தம்முடைய தொண்டை வழுவாது செய்து வந்தார் . இப்படி இருக்கையிலே ஈசனார் தம்முடைய தொண்டரை ஆட்கொள்ள திருவுளம் கொண்டு மாறனாரின் சிவனடியார் வடிவந்தாங்கி மாறனார் இல்லம் எழுந்தருளினார் . நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போது வந்த அடியவரை நாயனார் வணங்கி பாத பூசை செய்து பெருமானே சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள் அடியேன் தங்களுக்கு திருவமுது செய்து கொடுக்கிறேன் என்று ஆசனத்தில் அமர வைத்து விட்டு தம் மனையாளிடத்தில் சென்று , வீட்டில் எதுவும் இல்லை என்ன செய்ய என்று கேட்ட பொழுது பதி கொண்ட விரதத்திற்கு பங்கம் வந்துவிடக் கூடாதே என்று கலங்கி நிற்கையில் அம்மையாருக்கு ஒரு யோசனை நம் நிலத்தில் விதைத்த விதைநெல்லை எடுத்து வாருங்கள் அதை வறுத்து குத்தி சாதம் சமைக்கிறேன் என்று கூற , பெரும் பொன் புதையல் தனக்கு கிடைத்தாற் போல மனமகிழ்ந்து மாறனார் வயல் வெளிக்கு சென்றார் 


                                   கொட்டும் மழையில் நனைந்த படி விதைநெல்லை கூடையில் வாரி எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் . அம்மையாரும் தோட்டத்திலிருந்து கீரை வகைகளை பறித்து வந்தார் . மாறனார் கொடுத்த விதை வாங்கிக் கொண்டு சமைக்க விறகு இல்லையே என்று வருத்தம் கொண்டார் சற்றும் மனம் பதிக்காமல் நாயனார் தம் குடிசையிலிருந்த கொம்புகளை முறித்து சமைப்பதற்கு கொடுத்தார் மகிழ்வுடன் மனைவியார் நொடிப்பொழுதில் சுவை மிகு திருவமுது படைத்தார் . அடியாரை வணங்கி திருவமுது செய்யுங்கள் சுவாமி என நமஸ்கரித்து அவர் பாதங்களில் வீழ்ந்தனர் . எழுந்து பார்க்கையிலே அங்கு அடியவரை காணாது திகைத்தனர் . அங்கே பெரும் சோதியாய் மேள தாளம் முழங்கிட ரிஷப வாகனத்தில் உலகம்மையாளோடு தோன்றினார் உலகுக்கு அளக்கும் பெருமான் . 

                       நம்பால் அன்பு கொண்ட அன்பனே ! உனது வறுமையையும் பொருட்படுத்தாது அடியவர்களுக்கு கொடுப்பதே சிறந்த அறம் என்று கொண்ட கொள்கையில் சிறிதும் பிசகாது நீ செய்த இந்த தொண்டு சிறந்தது .
 இன்னும் பல ஆண்டுகள் நீவிர் இருவீரும் வாழ்ந்து குறைவில்லா செல்வங்களோடு இன்பங்கள் பலபெற்று அடியார்களுக்கு தொண்டு புரிந்து என் பதத்தை வந்தடைவீர்களாக ! என்று கைலாயபதியார் திருவாய் மலர்ந்தருளினார் .  காணக்கிடைக்காத கற்பகத்தை கண்ட பின் வேறு என்ன வேண்டும் இருவரும் ஐயனை வணங்கி தோத்திரம் செய்து தரைவீழ்ந்து வணங்கினார்கள் . பலகாலம் வாழ்ந்து தொண்டு செய்து பரமனின் பதத்தை அடைந்து இன்புற்று வாழ்ந்தார்கள் . 


                             

                          - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


              சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!


நம்முடைய sivamejeyam.blogspot என்கிற வலைப்பதிவு sivamejeyam.com என்று இணைய தளமாக உருவெடுத்துள்ளது . என்பதை நாயேன் தெரிவித்துக் கொள்கிறேன் . 

                                    நன்றி . சிவமேஜெயம் .                          


                                                 

சனி, டிசம்பர் 12, 2015

63 நாயன்மார்கள் ........

          பக்தியில் சிறந்த அதிபத்த நாயனார் வரலாறு ..
                                                                          சோழவள நாட்டிலே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினத்தில்  நுழைப்பாடி என்ற கடற்கரை கிராமத்தில் மீனவர் குல மரபிலே திரு அவதாரம் செய்தார் அதிபத்தர் . இவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார் . ஆழ்கடலுள் சென்று தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கென அதைக் கடலிலே விட்டு விடுவதை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் . இறைவன் மேல் கொண்ட அன்பின் காரணமாக தன்னால் இயன்ற இந்த செயலை சிவத் தொண்டாக புரிந்து வந்தார்  . மீன் பிடிப்பதில் அதிபத்தர் வல்லவராக திகழ்ந்தார் . இவருடைய இந்தத் தொண்டை உலகம் அறியச் செய்ய ஈசனார் திருவுளம் கொண்டார் . 

                              வழக்கமாக நிறைய மீன் பிடித்து வரும் அதிபத்தருக்கு சில நாள்களாக வலையில் ஒரே ஒரு மட்டும் அகப்படும் அவர் தன் தொண்டில் பிறழாது அதையும் ஈசனுக்கென கடலிலே விட்டுவிடுவார் எவ்வளவு சோதனை வந்தாலும் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் . மீன் விற்று பிழைப்பு நடத்தும் அவருக்கு மீன் கிடைக்கததால் மிகவும் வறுமையின் பிடியில் அகப்பட்டார் . ஒரு நாள் மீன் பிடிக்க சென்றார் அன்றும் அப்படியே ஒரு மீனும் அகப்படவில்லை ஒரே ஒரு மீன் அகப்பட்டது அந்த மீன் தங்க மீன் தக தக வென ஜொலித்தது அவருடன் மீன் பிடிக்க வந்தவர்கள் உன்னுடைய கஷ்டத்திற்கு தீர்வு வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த மீனை கடலில் விட்டார் . 

                            அனைவரும் திகைத்தனர் என்ன இப்படி செய்து விட்டாரே என்று அங்கலாய்த்தனர் அதற்கு அதிபத்தர் அவர்களது வார்த்தைகளை சற்றும் பொருட்படுத்தாது என் இறைவனுக்கு அளிக்க பொன் மீன் கிடைத்தற்கு  அடியேன் அளவற்ற ஆனந்தம் கொள்கிறேன் என்று உரைத்தார்.  திகைப்புடன் அவரை அவர்கள் நோக்கிக் கொண்டிருக்கும் போது இடப வாகனத்தில் ஈசனார் தோன்றினார் தான் செய்யும்  தொண்டில் இருந்து சிறிதும் பிறழாது வாழ்ந்த அதிபத்தரை தமது திருவடியின் கீழ் இருக்குமாறு திருவருள்  செய்தார் . 

                                                   - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 

                              சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 

இனிவரும் பதிவுகளை நம்முடைய sivamejeyam.com என்கிற வலைத் தளத்தில் காணுங்கள் . நன்றி  . சிவமேஜெயம் .