திங்கள், மே 30, 2011

தடங்கண் சித்தர் பாடல்கள்

                               தங்கப்பா

அதிவெடி முழக்கி முரசுகள் முடுக்கி 
       அலறிடு முடுக்கைகள் துடிப்ப 
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி
       வீணிலோர் கல்லினைச் சுமந்தே
குதிகுதி வென்று தெருவெல்லாம் குதிப்பார் 
     குனிந்து வீழ்ந்துருகுவர் மாக்கள்
இதுகொலோ சமயம் ? இதுகொலோ சமயம் ?  
         எண்ணவும் வெள்குமென் நெஞ்சே !


அருவருப்பூட்டும் ஐந்தலை , நாற்கை
    ஆனைபோல்  வயிறுமுன் துருத்தும் 
உருவினை இறைவன் எனப்பெயர் கூறி 
       உருள் பெருந்தோனில் அமர்த்தி 
இருபது நூறு மூடர்கள் கூடி 
      இழுப்பதும் தரைவிலுந் தெழலும் 
தெருவெலாம் நிகழும் : இதுகொலோ சமயம் ?
       தீங்கு கண்டு உழலுமென் நெஞ்சே !

 எண்ணெயால் , நீரால் , பிசுபிசுக்கேறி 
        இருண்டுபுன் நாற்றமே விளைக்கும் 
திண்ணிய கற்குத் திகழ்னகை பூட்டித் 
         தெரியல்கள் பலப்பல சார்த்திக்
கண்ணினை கரிக்கும் கரும்புகை கிளப்பிக் 
        கருமனப் பார்ப்புசெய் விரகுக்கு
எண்ணிலா மாக்கள் அடிமிதி படுவர் 
    இதுகொலோ சமயம்? இதுகொலோ சமயம் ?


அழகிய உடல்மேல் சாம்பலைப்பூசி
   அருவருப் பார்க்கலும் . மகளிர் 
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து
   குரங்கெனத் தோன்றலும் . அறியா
மழலையிர் கையிலுட் காவடி கொடுத்து 
    மலை மேற்றலும் இவைதாம் 
வழிபடு முறையோ ?இதுகொலோ சமயம்?
    மடமை கண்டிறங்கு மென்னெஞ்சே .

நீட்டிய பல்லும் சினமடிவாயும் 
   நிலைத்தவோர் கல்லுரு முன்னே 
கூட்டமாய் மோதிக் குடிவெறித் தவர்போல் 
   குதிப்பார் தீ வளர்த்ததில் மிதிப்பார்
ஆட்டினைத் துடிக்க வெட்டிவீழ்த் திடுவார்
    ஆங்கத நுதிரமும் குடிப்பார் காட்டில் 
வாழ் காலக்கூத்து கொல் சமயம் ?
    கண்ணிலார்க் கிரங்குமென் நெஞ்சே !

உடுக்கையை யடித்தே யொருவன் முன்செல்வான் 
        ஒருவன்தீச் சட்டியும் கொள்வான் 
எடுத்ததோர் தட்டில் பாம்புருத் தாங்கி 
       இல்தொறுஞ் சென்று முன்நிற்பர்  
நடுக்கொடுந் தொழுவர் நங்கையர் .சிறுவர் .
         நல்குவர் காணிக்கை பலவும் 
கொடுத்தநீ ற்றனிவார் இதுகொலோ சமயம்?
         குருடர்க் கிரங்குமென் நெஞ்சே !

வேப்பிலைக் கொத்து மிரிதலை மயிரும் 
          வெவ்விதின் மடித்திடு வாயும் 
கூப்பிய கையும் கொண்டவ லொருத்தி 
        குரங்கென ஆடுவாள் குதிப்பாள்
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் 
            நட்குறி கேட்டிட நிற்பர் 
காப்பதோ வாழ்வை ?இதுகொலோ சமயம்? 
           கண்ணிலார்க் கிரங்குமென் நெஞ்சே !


தாய்மொழி பேணார் : நாட்டினை நினையார் 
      தம்கிளை . நண்பருக் கிரங்கார் 
தூயநல் லன்பர்பால் லுயிர்க்கெல்லாம் நெகிழார் 
        துடிப்புறும் ஏழையர்க்  கருளார் 
போய் மலையேறி வெறுங்கருங் கற்கே
        பொன்முடி முத்தணி புனைவார் 
ஏய்ந்தபுன் மடமை இதுகொலோ சமயம் ?
        ஏழையர்க்  கிரங்குமென் நெஞ்சே ! 

பாலிலாச் சேய்கள் .பசி .பணியாளர் 
       பல்துயர் பெறுமின் நாட்டில் 
பாலொடு தயிர் நெய் கனி சுவைபாகு
        பருப்பு நல் அடிசிலின் திரளை 
நூலணி வார்தம் நொய்யையே நிரப்ப 
        நுழைத்தகல் உருவின்முன் படைத்தே
சாலவும் மகிழ்வார் இதுகொலோ சமயம்?
        சழக்கினுக் கழலுமென் நெஞ்சே 

அன்பிலார் உயிர்கட் களியார் : தூய்மை 
      அகத்திலார் : ஒழுக்கமுமில்லார் 
வன்பினால் பிறரை வருத்துவர்: எனினும்
       வகைபெற உடம்பெலாம் பூசி 
முன்தொலுகையர் : முறைகளில் தவறார் 
        முழுகுவார் துறைதோறும் சென்றே 
நன்றுகொல் முரண்பாடு இதுகொலோசமயம் ?
        நடலையர்க் குடையுமென் நெஞ்சே !

மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து 
       மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் 
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை 
        புரிதலே இறையுணர் வன்றோ !
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் 
       செய்பொருள் இறைஎனத் தொழுவார் ?
உய்வரோ இவர்தாம் ?இதுகொலோ சமயம்?
          உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே !!

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக