வெள்ளி, டிசம்பர் 09, 2016

விவேகானந்தர் கூறும் உண்மையான குரு யார் ?








































சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்...

கேள்வி...தற்காலத்தில் பலர் தங்களை தாங்களே குரு என்று கூறிக்கொள்கிறார்கள்.இவர்களில் உண்மையான குரு யார்? போலியான குரு யார்? என்று கண்டு பிடிப்பது எப்படி?

சுவாமிஜி....குருவை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. பலபேர் செருக்கின் காரணமாக,தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.அத்துடன் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் நினைக்கிறார்கள். குருடன் குடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழவேண்டிவரும்.இத்தகைய குரு உலகில் ஏராளம் ஏராளம்.

அப்படியானால் உண்மையான குருவை எப்படி கண்டுபிடிப்பது?

1.முதலாவதாக சூரியனைக்காண விளக்கு தேவையில்லை,அதன் ஒளியிலேயே அதை அறியலாம்.அதுபோல உண்மையான குரு வரும் போது,அவர் உண்மையானவர்தான் என்பதை நம் மனம் தானாக உணர்ந்துகொள்ளும்.

2.குரு முறிறிலும் தூய்மையானவராக இருப்பார். தூய்மையற்றவன் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.

3.குரு சாஸ்திரங்களின் உட்கருத்தை அறிந்திருப்பார். வேதம்,குரான்,பைபில் எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமே,மதத்தை பொறுத்த வரை அவை வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே.வார்த்தைகளில் தங்கள் மனத்தை இழந்துவிட்டவர்கள் அதன் உட்பொருளை காண தவறிவிடுகிறார்கள்

.4.குரு பாவம் அற்றவராக இருக்க வேண்டும். தூய்மையற்ற ஒருவரிடம் ஆன்ம ஒளி இருக்காது.எதை போதிக்கிறாரோ அதைப்பற்றி அவருக்கே தெரியாது.

5.முதலில் குரு எத்தகையவர் என்று பார்க்க வேண்டும்,அதன் பிறகே அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்.

6.அவரிடம் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.அவர் பெயர்,புகழ்,பணம் இவற்றிற்காக உங்களுக்கு போதிக்கிறாரா அல்லது அன்பினால் தூண்டப்பட்டு போதிக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.

7.குரு சுதந்திரமானவராக யாருக்கும் அடிமையில்லாதவராக,இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்பவராக இருப்பார்

8. முக்கியமானது அவர் கடவுளை அறிந்தவரா என்பதை பார்க்க வேண்டும்.இல்லாவிட்டார் அவரிடமிருந்து கற்பது ஆபத்தானது.

யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. 




                             சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


  சிவத்தை போற்றுவோம் !!      சித்தர்களை போற்றுவோம் !!


வெள்ளி, நவம்பர் 25, 2016

தேவாரப்பாடல்கள்..


                மணிவாசக பெருமான் அருளிச் செய்த
                      
                             திருவாசகத் தேனிலிருந்து 
                                                                
                                            

                                                                              சில  துளிகள் .......





கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


   கடையேனை நின் பெருங் கருணையினால் வழிய வந்து ஆண்டு கொண்டருள் செய்த விடையாகிய காளை வாகனத்தை உடையவனே ,
அடியேனை விட்டு விடுவாயோ ? வலிமை உடைய புலியின் தோலை உரித்து அதனை ஆடையாக கொண்டவனே நிலையான திருஉத்தரகோச மங்கைக்கு அரசனே , செஞ்சடை உடையவனே , அடியேன் சோர்ந்தேன் எம்பெருமானே , என்னை தாங்கிக் கொள்வாயே . 


மறுத்தனன் யானுன் அருளறி யாமையில் என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தாம் பொய்யினையே.



                எம்பெருமானே , அறியாமையினால் உன் திருவருள் பெருமையை வேண்டாமென்று மறுத்தேன் . மாசு சிறிதும் இல்லா மாணிக்கமே  நாயேன் அறியாமையால் செய்த தவறுக்கு நீ என்னை வெறுத்து ஒதுக்கி விடாதே , உத்தரகோச மங்கைக்கு அரசனே , பெரியவர்கள் சிறிய நாய்கள் குற்றத்தை பொறுத்து மன்னிப்பது போல தேவரீர் என் குற்றத்தை பொறுத்து வினை முழுவதும் அழித்து என்னை ஆட்கொண்டருள வேண்டும் . 

            
                              சிவமேஜெயம் -  திருவடி முத்துகிருஷ்ணன் 


              சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!











திங்கள், மே 23, 2016

சண்முக கவசம்





திரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை நாளைக்கு ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்தை எல்லாம் முருகன் அருள்வான் என பாம்பன் ஸ்வாமிகள் கூறுகிறார் . 


அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளதாகித் 
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வமாகி
எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான
திண்டிறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க

ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல் முழுதும் நற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள்விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழங்கை தன்னை எழிற் குறிஞ்சிக்கோன் காக்க

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க 
தறுகணேறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் 
பிறங்குமான் மருகன் காக்க பின்முதுகைச் சேய் காக்க

ஊணிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்
தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஒரிரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் திமிருமுன் தொடையைக் காக்க

ஏரகத் தேவன் என்தாள் இருமுழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடிரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க

ஐயுறு மலையன் பாதத் தமர் பத்துவிரலுங் காக்க
பையுறு பழநி நாத பரன் அகங் காலைக் காக்க
மெய்யுடல் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வநாயக விசாகன் தினமுமென் நெஞ்சைக் காக்க

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரும் பூதப் பிரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத் தெவையா னாலும்
கிலிகொள எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உவனிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியம் உளர் ஊண் உண்போர், அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவரானுலும் திடமுட எனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசரமெலாம் புரக்குங் 
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடிநாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை எதனாலேனும் நானிடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க

ஙகரமே போற் றழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யனேறு ஆலப் பல்லி
நகமுடை யோந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையா வெற்கோர் ஊறிலா தைவேல் காக்க

சலத்திலுய்வன் மீனேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்திலுந்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரகக் கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காமலே பன்னிரு புயன் சயவேல் காக்க

டமருகத் தடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம் குடல்வலி ஈழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப் பிரமேக மெல்லாம்
எமையடை யாமலே குன்றெறிந்தவன் கைவேல் காக்க

(இ)ணக்கமில்லாத பித்த எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண் முளை தீமந்தஞ்
சணத்திலே கொல்லும் சன்னி சாலமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனையாளாமல் பெருஞ்சத்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம் வாதஞ் சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை
எவையும் என்னிடத்தெய் தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகு பல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவலிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை யெய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த இடத்தும் என்னை
நண்ணி வந்தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க

யகரமே போல் சூலேந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறும் ஆனோன் தன்கைவேல் நடுவிற் காக்க
சிகரமின் தேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க மேற்கில் 
இகலயில் காக்க வாயு வினிற் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன் மகனருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேதபோதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்று நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க

(இ)ழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கு நல் ஊணுண் போதும் மால் விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க திடமுடன் மயிலுங் காக்க

(இ)ளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச்சிவன் தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளி நடு பிற்பகல் கால் சிவகுருநாதன் காக்க

(இ)றகுடைக் கோழித் தோகைக் கிறை முன் ராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ்பின் ராவில் காக்க
நறவிசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழகன் எங்கோன் மாறாது காக்க காக்க

(இ)னமெனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடள் தான் காக்க வந்தே .


                                                 சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!




சனி, ஏப்ரல் 30, 2016

தேவார பாடல்கள் ..

 வாழ்க்கையில் கஷ்டம் தீர ..


       

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.


இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.


செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.


நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.


காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.


பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.


மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.


அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.


அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.


பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.


காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.



                                        கஷ்டம் தீர பெருமானிடம் பொருள் கேட்கும் பதிகம் . மெய்யன்பினால் ஈசனிடம் சம்பந்தபெருமான் படிக்காசு கேட்க சிவபெருமான் கொடுத்தருளினார் . அதுபோல நம்முடைய கஷ்டத்தையும் நீக்கும் பொருட்டு நம் அப்பனிடம்  இப்பதிகத்தை பக்தியோடு பாடி கஷ்டம் தீர்க்க அருள்புரிய வேண்டுவோம் . 



                           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



சிவத்தை போற்றுவோம் !! சித்திகளை போற்றுவோம் !!



                              















 
தேவார பாடல்கள் ...

 தினம் ஒரு பாடல் .



                         தம் தந்தைக்காக  எம்பெருமானிடம் பொருள் அருளுமாறு திருஞானசம்பந்த பெருமான் அருளிச் செய்த திருப்பதிகம் . 




1.  இடரினும் தளரினும் எனதுறுநோய் 
     தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் 
     கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை 
     மிடறினில் அடக்கிய வேதியனே 
     இதுவோயெமை ஆளுமாறீவதொன் றெமக்கில்லையேல்  
     அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே .


         தேவர்கள் அமுதம் பெரும் பொருட்டு பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகாலம் என்னும் கொடும் விஷத்தை தனது கழுத்தில் அடக்கி உலகத்தை காத்த வேதநாயகனே ! அடியேனுக்கு எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் , இளமை நீங்கி முதுமை அடைந்து தளர்ந்து போனாலும் தீவினையால் தீராத நோய் ஏற்பட்டாலும் உன் திருவடிகளை மறவாது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுதானோ ? எம் தந்தைக்கு தேவைப்படும் பொருளை நீ தராது போனால் உன் திருவருளுக்கு அழகோ ஆவடுதுறை ஆளும் பெருமானே . 


                                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!









வெள்ளி, ஏப்ரல் 29, 2016

சித்தர்களை நேரில் காண முடியுமா ?





   காணலாம் என்றும் , அவர்களை தரிசனம் செய்யும் மார்க்கத்தையும் அழகாக அகத்திய பெருமான் தனது " அகத்திய பூரண சூத்திரம் " என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .

அகத்திய பூரண சூத்திரம்

அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு

                                                              - அகத்தியர்


சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் 

துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் 

சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது
பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை 
கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க 
வேண்டும் என்று கூறுகிறார்.


                              சிவமேஜெயம்  - திருவடி முத்துகிருஷ்ணன் 
                   


சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!