வியாழன், ஏப்ரல் 17, 2014


சித்தர் பாடல்களிலிருந்து ................

                     திருமூலர் அருளிய திருமந்திரத்திலிருந்து ...

                                       





                              சில மந்திரங்கள் 


பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப் 
பின்னால் பிறக்க இருந்தவர் பேர் நந்தி 
என்னால் தொழப்படும் எம்மிறை மற்றவன் 
தன்னால் தொழப்படு வாரில்லை தானே .

மின்னுகின்ற தங்கத்தால் பின்னியது போல் மின்னிடும் செஞ்சடை பின்புறம் ஒளி வீச எம் உள்ளத்துள் வீற்றிருக்கும் பரம்பொருளின் 
திருநாமம் (பிறப்பும் இறப்பும் இல்லாதான் ) நந்தி என்பதாகும் . எம்மால் இடைவிடாது தொழுதிடும் ஈசனும் அவனே . உலகனைத்தும் புகழ்ந்து போற்றும் எம் இறைவனால் வணங்கப்படுபவர் எவ்வுலத்தில் தேடினாலும் யாவரும் இல்லை .

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது 
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே 

முற்பிறப்பில் சிவபெருமானை போற்றாமல் நற்றவம் இயற்றாமல் இருப்பவர்கள் பிறவி பிணியை ஒழிக்காது பிறவி சுழற்றியில் சிக்கி தவிப்பார்கள் . நான் முற்பிறப்பின் செய்த தவப்பயனால் அவனுடைய பெருமையை செந்தமிழிலில் விளக்கும் அருளை எனக்களித்தான் இறைவன் .

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.


அமர நிலை எனப்படும் இறவா நிலையை அடைந்தவர் அவனை தவிர யாறொருவருமில்லை . தேவரும் அவனைத்தொழுதே அமரத்துவம் பெற்றார்கள் அவனில்லாமல் தேவர்களும் இல்லை . அவன் அருளில்லாமல் செய்கின்ற தவத்திற்கும் நற்பேறு இல்லை .முத்தொழில் புரிந்திடும் மூவர்க்கும் அவன் அருள் இல்லாமல் வேலை ஒன்றுமில்லை . சிவனைத் தொழாமல் பேரின்ப பெரு வீடு அடைவதற்கும் யாவராலும் ஆவதில்லை . 


                            என்றும் இறை பணியில் 
                         
                                                           திருவடி முத்துகிருஷ்ணன் 

                                            சிவமேஜெயம் !!!

         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


திங்கள், ஏப்ரல் 14, 2014

 தேவாரப் பாடல்களில் இருந்து 

   
                     திரு மாணிக்கவாசக பெருமான் அருளிய

                                                  

                                       
திருவாசகத் தேனிலிருந்து

                                    சில துளிகள்  

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதமளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே?


தாயும் தந்தையுமானவனே , ஒப்புவமை இல்லாத மாணிக்கமே, என் அன்பெனும் கடலில் உருவான  அருமையான அமுதமே,பொய்மையான செயல்களையே அதிகமாகச் செய்து வீணாகக் காலத்தைக் கழிக்கின்ற, புழு உறையும் இடத்தை உடம்பாகக் கொண்ட கீழ் பிறப்பெடுத்த  கீழானவனுக்கு , பேசற்கரிய மிகவும் உயர்ந்து போற்றும் மேன்மையான , சிவபதத்தினை எனக்கு
 அருட்செய்த  அருட்செல்வமே, சிவபெருமானே , இப்பிறப்பினில் என் அன்பும் பக்தியும் கொண்டு உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி நீ வேறு எங்கு செல்ல முடியும் .

பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவ தினியே?


 பற்றுகளின் வேரை அடியோடு அழித்திடும் , யாவர்க்கும் முன்னமாய்  உள்ள பழமையான பொருளை,  பற்றும் வழியை அடியவனாகிய  எனக்கு அருள் புரிந்து , நான் செய்யும் வழிபாட்டினை விரும்பி, என் சித்தத்துள் புகுந்து , தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே,அளவற்ற பேரொளியை உடைய விளக்கே , விளக்கினுள் தோன்றும் சோதி மயமானவனே , அருட்செல்வமே, சிவபெருமானே , ஈசனே ,  உன்னை இறுக்கமாகப்  பற்றினேன் . என் அன்புப் பிடியில் இருந்து இனி எங்கும் செல்ல முடியாது .

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெ ழுந்தருளுவதி னியே?


ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே , கோயிலாகக் கொண்டு, என்னை  ஆட்கொண்டு, எல்லையற்ற பேரின்பத்தை அளித்து , என் பிறவி வேரை அறுத்து ,  என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட , தலை ஒட்டு மாலை அணிந்தவனே  , அனைத்தினும் பெரியவனே பரம்பொருளே  வெட்ட  வெளியிலே நான் கண்ட காட்சியே  அடியேனது அருட்செல்வமே , சிவபெருமானே , என் வாழ்வின் இறுதியிலே  உன்னை உறுதியாகப் பற்றினேன் ,  நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது .


                                           என்றும் இறை பணியில் 

                                                                திருவடி முத்துகிருஷ்ணன் 

                                                    சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!

தேவாரப் பாடல்களில் இருந்து ....


திருஞான சம்பந்தர் அருளி செய்த


                                         
தேவாரத் தேனிலிருந்து



                               சில தேன் துளிகள்


ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.

சிவன் உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும் . உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் ஆலமரத்தின் நல்ல நிழலில் உலகம்மை தாயாரோடு தானும் மிகவும் மனம் மகிழ்ந்து விரும்பி இருந்து விட்ட திருத்தலம் திருவிடை மருதூர் இது தானோ .




முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருதீதோ.


முழுமை பெறாத வளரும் பால் போன்ற இளம்பிறையை தன் செஞ்சடைதனில் சூடிய  முதல்வன் ,  தாமரை மலரமர்ந்த நான்முகனும் , திருமாலும் விரும்பித் தொழப்படும் தெய்வம் சிவபெருமான் , உமையம்மையும் தானுமாய் பேரழகோடு வீற்றிருக்கும் திருவிடை மருதூர் இதுவோ .

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே.

பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக விளங்குபவனும் ,தேவருக்கும் மூவருக்கும் தலைவனாய் இருப்பவனும் , உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு ஆலமர நிழலில் எழுந்தருளியிருந்து அவர்களுக்கு ஞானத்தை உபதேசம் செய்தவனுமான எம் ஈசன் இருக்கும் செழிப்புமிக்க நகரம் திருவிடை மருதாகும்.


     என்றும் இறை பணியில் 

                    - திருவடிமுத்துகிருஷ்ணன் 

                  சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!