செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே
சிவந்த தாமரை மலர்கள் ஒன்றிணைந்தது போன்ற நின் திருவடியை நினைந்து அடைந்த கனிந்த மனத்தினை உடை அடியார்பெருமக்கள் உன்னுடன் வந்து சேர்ந்து விட்டனர்.ஆனால் நான் பாவியேன் புழுக்கள் நிரம்பிய இந்த உடலைத்தாங்கி கல்வி ஞானம் சிறிதும் இல்லாது மலமென்னும் அழுக்கு நிறைந்த தீய மனத்தினை உடையவனாக இருக்கின்றேன்.இவ்வாறு இருந்தாலும் என்னை ஆட்கொண்டவன் நீ .நானும் உனக்கு அடைக்கலமே.
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச்
செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
பிறறால் வெறுத்து ஒதுக்கப் படும் செயல்களைச் செய்யும் எனது செயல்களையும் தவறுகளையும் அளவற்ற நின் கருணையினால் பொறுத்துக்கொள்பவனே!பாம்பினை அணிந்தவனே!பொங்கியெழும் கங்கையைச் சடையினில் தாங்கியவனே!உன் திருவருளால் பாவியேனாகிய எனது பிறவியையும் வேரோடு களைபவனே!என்னை ஆட்கொண்டு அடிமை கொண்டவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்.
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத்
தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற
அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
முப்பத்து முக்கோடிதேவர்களுக்கெல்லாம் பெரும்பெருமானாக விளங்குபவனே!என் பிறவிப்பிணியை வேரோடு களைந்து யாவரும் அடைதற்கரிய பெரும் பேறான பித்துநிலையை அருளியவனே!வலிமை உடையவனே!எப்பொழுதும் என் மனத்துள் வருபவனே!திருமாலும் நான்முகனும் காணற்கு அரியவனாய் நின்றவனே!என்னை ஆளுடையவனே!அடியேன் உன் அடைக்கலம்.
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
உலகவாழ்க்கை எனும் பெரும் துன்பப்புயல் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பொழுது நின் திருவடியைத் துணையாகக் கொண்டவர்கள் திருவருளாகிய தெப்பத்தில் ஏறிக்கொண்டனர்.ஆனால் நான் இடர் சூழ்ந்த மாயையெனும் துன்பச் சுழியில் மாட்டி பெண்இன்பமாகிய பெரும் அலையால் தாக்கப்பட்டு காமம் எனும் பெரும்சுறாவால் துன்பப் படுகின்றேன்.இருப்பினும் என்னை உடையவனே நான் உனக்கு அடைக்கலம்.
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு,
இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான்,
அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
சுருண்ட கூந்தலை உடைய மகளிரது சூழ்ச்சி வலையில் அகப்பட்டு ,எம்பெருமானே நின் திறம் மறந்து இவ்வுலகில் ஆணவம் எனும் மாபெரும் இருளில் மாட்டிக்கிடக்கும் உடலினில் கிடந்து துன்புறுகின்றேன், மைபுாசிய அழகிய கண்களை உடைய உமையவளின் பாகமாக அமர்ந்தவனே !விண்ணில் உள்ளவர்களுக்குத் தலைவனே அருள்புரிந்து காக்க வேண்டும்.எம்மை ஆளுடையவனே அடியவன் உனக்கு அடைக்கலம்.
இறை பணியில்
பெ.கோமதி
சிவமேஜெயம் !!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! |