செவ்வாய், டிசம்பர் 10, 2013


                                           சித்தர் பாடல்களில் இருந்து...................


 திருமூலர் அருளிய 






                    திருமந்திரத்திலிருந்து .................
                                                     
                                
                                    சில மந்திரங்கள்


மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே.

இல்லறம் எனும் நல்லறத்தில் இருப்பவர்கள் இறைவனை நினைந்து மிகப்பெரியதவம் வெய்தவர்களுக்கு ஒப்பாவர்.இறைவனை நினைவில் இருத்தியவர்வர்கள் என்றும் அவனது அன்பினுள் இருப்பர்.ஆனால் பெறற்கரிய பேரானந்தம் என்னும் இறையின்பம்  ,எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் தனது இரையைத் தனது கூரியபார்வையால் அறியும் கருடனது  பார்வைபோலப் பார்த்து இறைவனைக் கூர்ந்து நினையாதவர்களுக்குக் கிட்டாது.

அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.

இறைவன் திருவடிப்பெருமைகளைக் கூறி ,அவனது அன்பிற்காக அரற்றி அழுது, எங்கும் பரவி நிற்கும் அவனது திருவடிகளை நாளும்  பரவி ,உறுதியான அவன் திருக்கழல்களைப் பற்றி, மற்ற பற்றுக்களில் இருந்து ஒதுங்கியோர்களின் மனதில் நிறைந்து  நின்று அருள்செய்பவன் பராபரன்.

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.

சினத்தின் வடிவமான ஆலகால விடத்தை உண்டு தேவர்களைக்காத்த பெருமானைப் பக்குவப்படுத்தப்பட்ட நெஞ்சினில் வைத்துப் போற்றித் துதிப்போர்க்கு,  வாள்போன்ற நெற்றியை உடைய உமையம்மையின் பாகன், தன் இணைகண்ட மான்போல் அடியார்க்கு இணங்கிவந்து அருள்செய்வான் .

மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.

நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களாய் இருப்பவனும் இறைவன்.வேதத்தின் பொருளாய் இருப்பவனும் இறைவனே.பண்ணில் இன்னிசையாகவும் பாடலாகவும் விளங்குபவனும் அவனே.இதற்கு ஒப்பான் என்று கூற இயலாதவன் இறைவன். இத்தகைய இறைவனைத் தன்கண்ணகத்தே வைத்து அன்பு செய்தேனே என்று பாடுகின்றார் திருமூலர் பெருமான்.


                                                            இறை பணியில் 

                                                                                          பெ.கோமதி 

                                                     சிவமேஜெயம் !!

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக