திங்கள், ஜூலை 25, 2011

மகான்களின் வாழ்வில்

குகை நமசிவாயர்





                              திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் - அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பது மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். மாபெரும் சித்த புருஷரான குகை நமச்சிவாயர் அருணகிரிநாதருக்கும் முற்பட்டவர் என்று கூறப்படுகிறது. குகை நமசிவாயரின் வாரிசுதாரர்கள் தற்போது இந்த ஜீவ சமாதி ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். சைலத்தில் இருந்து தெற்கே வந்த கன்னட தேசத்து வீர சைவ மரபைச் சேர்ந்தவர் குகை நமசிவாயர். கன்னட தேசத்தில் திருப்பருப்பதம் (தற்போதைய ஸ்ரீசைலம்) என்கிற புண்ணிய ÷க்ஷத்திரத்தில் அவதரித்தார் நமசிவாயர். தாய்மொழி - கன்னடம். லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள். ஆண், பெண் என்று லிங்காயத்து பிரிவில் உள்ள அனைவருமே கழுத்தில் சைவச் சின்னமான லிங்கத்தை ஒரு கயிற்றில் கோர்த்து அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்குத்தான் முதல் வழிபாடு நடத்துவார்கள்.


நமசிவாயர் பக்திப் பாரம்பரியத்துடன் வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் காலத்தில் இருந்தே ஈசன் ஆட்கொண்டு விட்டார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். உரிய பருவம் வரும்போது திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஞான குருவாக நீ விளங்குவதற்கு இங்கேயே தங்கி இருத்தல் கூடாது. உடனே திருவண்ணாமலை புறப்படு. தாமதிக்காதே என்று ஒரு நாள் நமசிவாயரின் கனவில் தோன்றி அவருக்கு உத்தரவிட்டார் அண்ணாமலையார். கனவில் இருந்து விழித்தெழுந்தார். ஆனந்தம் கொண்டார். தன்னை வழிநடத்தும் ஈசனை வணங்கினார். திருவண்ணாமலை ÷க்ஷத்திரத்தைத் தான் தரிசிக்கும் நாள் எந்நாளோ என்று ஆவலுடன் இருந்தார். ஈசன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடுத்த நாளே திருவண்ணாமலை நோக்கித் தன் யாத்திரையைத் தொடங்கினார் நமசிவாயர். சிவனருள் பெற்ற இந்த சீலரின் மகத்துவம் புரிந்த சில அடியார்களும், திருவண்ணாமலை என்கிற சித்தர் பூமியில் தவம் இருந்து சிவன் அருள் பெறுவோம் என்கிற வைராக்கியத்துடன் நமசிவாயரைத் தொடர்ந்து சென்றனர். பல கிராமங்களைக் கடந்து பயணித்த அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். நமசிவாயரின் சித்து திறமைகளை வெளிக்கொணர ஈசன் விரும்பினான் போலும். 


அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முகப்பில் வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு மங்கலகரமாக இருந்தது. நமசிவாயருடன் சென்ற அடியார்கள் ஆர்வத்துடன் விசாரித்தபோது அந்த வீட்டில் திருமணம் அப்போதுதான் முடிந்ததாகத் தகவல் சொன்னார்கள். முகம் நிறைய தேஜஸோடு, நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு, சிவப் பழமாக ஒரு தவசீலர் தன் அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார் என்கிற தகவலை அறிந்த திருமண வீட்டுக்குச் சொந்தக்காரர், வீதிக்கு வந்து நமசிவாயரின் திருப்பாதங்களில் விழுந்து பணிந்தார். புன்னகைத்த நமசிவாயர் அவரை ஆசிர்வதித்து, திருநீறு கொடுத்தார். விபூதியைத் தன் நெற்றியில் அணிந்து கொண்ட அந்த வீட்டுத் தலைவர், நமசிவாயரைப் பார்த்து, சிவனருட் செல்வரே.... இப்போதுதான் என் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளி, எல்லோருக்கும் திருநீறு தந்து ஆசிர்வதிக்க வேண்டும். மணமக்கள் வாழ்வாங்கு வாழ உங்களின் ஆசி வேண்டும் என்று கெஞ்சும் முகத்துடன் வேண்டுகோள் வைத்தார்.


எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த நமசிவாயரும், அவரது வேண்டுகோள்படி, திருமண வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு இருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்து விட்டு, சிவ நாமம் முழங்கிக் கொண்டு வெளியே வந்தார். அடுத்த கணம் நடந்த செயல், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. திருமண வீடு திடுமெனத் தீப்பற்றி எரிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை! வீட்டுக்குள் இருந்த மணமக்கள் உட்பட அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன், இதோ... இந்த சாமியார் கொடுத்த திருநீறினால்தான் வீடு தீப்பற்றி எரிந்தது என்று கூற ஒட்டுமொத்த கூட்டமும் சேர்ந்து, நமசிவாயரைத் திட்டித் தீர்த்தது. மனம் நொந்த நமசிவாயர், அதே இடத்தில் அமர்ந்து சிவ தியானத்தில் ஈடுபட்டார். கயிலைவாசனே... நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வாங்கித் தருகிறாய்? இவர்கள் என்னை மட்டுமா அவமதிக்கிறார்கள்? உன்னையும் சேர்த்து அல்லவா அவமதிக்கிறார்கள்? இந்த பழியும் பாவமும் உனக்கும்தானே வந்து சேரும்? ஈசா... கருணைக் கடலே... கண் திறந்து பார்க்க மாட்டாயா? என்று கண்ணீர் மல்க பிரார்த்திக்க... அடுத்த விநாடியே - எரிந்து போன வீடு, பழைய நிலைமையை அடைந்தது. சற்று நேரத்துக்கு முன் அந்த வீடு, தீயினால் பாதிக்கப்பட்டதற்கு உண்டான எந்த ஒரு சுவடும் இல்லை. திருமண வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கலகலப்பானார்கள். சுற்றிலும் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திக்பிரமை அடைந்தனர்.


ஆஹா.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை. சிவபெருமானே இவரது உருவில் வந்திருக்கிறார். நம்மை எல்லாம் ஆசிர்வதித்திருக்கிறார். இவரை எல்லோரும் நமஸ்கரியுங்கள் என்று ஊர்க்காரர்கள் பரவசம் மேலிடச் சொல்லி, விழுந்து வணங்கினார்கள். கூனிக் குறுகி வெளியே நடந்தார் நமசிவாயர். தன்னை ஈசனோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. இனி நான் எவர் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டேன் என்று ஆக்ரோஷமாக ஒரு சபதம் செய்து விட்டு, யாத்திரையைத் தொடங்கினார். திருவண்ணாமலை நோக்கி வந்த அவர் வழியெங்கும் தென்பட்ட பக்தர்களை ஆசிர்வதித்தார். பலரது பிணிகளைத் தீர்த்தார். எண்ணற்ற ஸித்து விளையாடல்களை நிகழ்த்திக் கொண்டே வந்தார். பூந்தமல்லியை அடைந்த அவர்கள் நமசிவாயரிடம் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்காக அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று மணம் வீசும் மலர்களைப் பறிக்க ஆரம்பித்தனர். இந்த நிகழ்வு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலய இறைவனுக்கு கொஞ்சம் கூட பூக்களை வைக்காமல் அனைத்தையும் பறித்து விட்ட சிவனடியார்களைப் பற்றி ஊர்த் தலைவரிடம் சென்று முறையிட்டனர். அவரும் நமசிவாயர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தார்.


நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தை துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா... ஒரு நிமிடம்... என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார். ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள்... என்ன உமது கேள்வி? என்றார். கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்து பூச்செடிகளில் இருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர். எல்லாம் சிவனே... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன.


 எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக. உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக் கொள்ள மாட்டான். நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர். எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக் கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால் - அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், உமது செயலை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த் தலைவர். அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நமசிவாயர். இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழ வேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் பெரும் குரல் எழுப்பி இதை ஆமோதித்தனர்.


குருநாதரின் பதில் இதற்கு என்னவோ? என்கிற குழப்பத்துடன் அடியார்கள் நமசிவாயரைப் பார்க்க, அந்த மகானும் இதற்கு ஒப்புக் கொண்டார். அப்படியே ஆகட்டும். எம் கூற்றும் செயலும் உண்மை என்பதை இதோ, இந்த இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், நீர் சொன்னது அப்படியே நடக்கும் என்று கண்களை மூடி சிவ தியானம் செய்யலானார் நமசிவாயர். இந்த நேரம் பார்த்து ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர், இறைவன் திருமேனியில் இருந்த மலர்மாலையில் ஒரு உறுதியான கயிற்றைப் பிணைத்து, அதன் மறுமுனையை ஒருவரிடம் கொடுத்து, இறுக்கிப் பிடித்திருக்கச் சொன்னார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் மாலை எப்படி நமசிவாயர் கழுத்தில் போய் விழும்? அதையும்தான் பார்த்து விடுவோம் என்று கிண்டலாகப் பேசியபடி நடக்கின்ற நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காகத் தயாரானார்கள் ஊர்க்காரர்கள். அடியார்கள் அனைவரும் மனதுக்குள் சிவ நாமம் துதித்தபடி அமைதியாக இருந்தனர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. குகை நமசிவாயர் ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை மனமுருக ஜபித்தபடி லிங்கத் திருமேனியின் முன் கரம் கூப்பியபடி நின்றிருந்தார். தன்னையே கதி என்று நம்பி வந்தவர்களை அந்த சிவபெருமான் ஒரு போதும் ஏமாற்ற மாட்டார். அதுதான் நமசிவாயரின் வாழ்க்கையிலும் நடந்தது. ஒரு சில நொடிகளில் இறைவனின் கழுத்தில் இருந்த மாலையைப் பிடித்துக்கொண்டிருந்தவர்களின் பிடி தளர்ந்து கயிறு அறுபட்டு, மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது. நமசிவாயரின் கண்கள் கலங்கி விட்டன.


 கைகளை உயர்த்தி ஈசனுக்கு நன்றி சொன்னார். உடன் இருந்த அடியார்கள் அனைவரும், சிவகோஷம் எழுப்பினார்கள். ஊர்த்தலைவர் நமசிவாயரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு, அங்கிருந்து யாத்திரையைத் துவக்கினார். திருவண்ணாமலையை அடைந்த நமசிவாயாருக்கு தமிழ்ப் புலமையைத் தந்து அருளினான் ஈசன். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் வழங்கினான். அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகள். இவ்வாறு ஈசனுக்குப் பணிவிடைகள் செய்து வந்த நமசிவாயர் மலை அடிவார குகைக்குள் சென்று தங்கினார். அன்று முதல் குகை நமசிவாயர் என அழைக்கப்படுகிறார். இவருடைய சீடர்களுள் விருபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.
இவ்வாறு அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து வந்த குகை நமசிவாயர் ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார். அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரி தான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா?  திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையாரின் மேல் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை நமசிவாயரையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது; அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய். திருவண்ணாமலைக்குச் சென்றால் அண்ணாமலையாரின் திருவருளையும், குகை நமசிவாயரின் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெற இவர்கள் இருவரும் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.

நன்றி : தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக