வெள்ளி, ஜூலை 22, 2011

விவேகானந்தரின் ஆன்மீக சிந்தனைகள்                          உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும். மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர்களையும் விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை.லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் தானாவே வந்துசேரும்.  உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் ஆன்மிகவாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.உள்ளத்தூய்மையும், மனவலிமையும் உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்  பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே  ஆன்மிகம்.

உள்ள உறுதியோடு இருங்கள். அதற்கு மேலாக மனத்தூய்மையும், முழு அளவில் சிரத்தை உள்ளவராகவும் இருங்கள்.பிறருடைய நன்மையைச் சிறிது நினைத்தாலும் கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றல் நம்மிடம் இதயம் பெற்றுவிடும். வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.ஒருகாலத்தில் நீங்களே வேதகால ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது வேறுவடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் முழுமையாக நம்பிக்கை வையுங்கள். தைரியமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்லுங்கள்.

 இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளராக இருங்கள்.சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் இந்த உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள். அதனால் எதற்கும் அஞ்சிவிட மாட்டீர்கள். சிங்கக்குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள்.ஓய்வு ஒழிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், அந்த வேலைகளில் கட்டுப்பட்டு விடாதீர்கள். அதற்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.நீங்கள் ஒரு எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும். அடிமையைப் போல அல்ல. சுதந்திரமாகவும், அன்போடும் கடமைகளைச் செய்யுங்கள்.

அன்பின் அடிப்படையிலும், அன்பின் மூலமாகவும் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மனஒருமைப்பாடு ஆகும். வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் தன்னம்பிக்கையோடு வாழ்பவனே பெருமையும் ஆற்றலும் பெற்றுத் திகழ்கிறான். உலகின் எந்த நாட்டு வரலாறானாலும் இந்த உண்மையை நம்மால் உணர முடிகிறது.மனிதர்களின் துணை எவ்வளவு கிடைத்தாலும், அதை எல்லாம்விட கடவுள் துணையே மிகவும் பலம் மிக்கதாக நமக்கு வழிகாட்ட வல்லது.யாருடைய நம்பிக்கையையும் குலைக்காமல், முடிந்தால் அவனை மேலே தூக்கிவிட முயற்சி செய்யுங்கள்.

அனைவர் மீதும் அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறருக்காக உழைத்துக் கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.பிறருக்காகச் செய்யும் சிறுமுயற்சி கூட நமக்குள் சிங்கத்தின் வலிமையை தரவல்லதாகும். விரும்புகிற வேலையைச் செய்வதில் என்ன பெருமை இருக்கிறது? எந்த வேலையாக இருந்தாலும், அதை தனக்கு விருப்பமானதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி. ஒரு பணியைச் செய்வதாக இருந்தால், எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்.அடிமையைப் போல அல்ல. தன்னை அடக்கப் பழகியவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்படுவதில்லை. அவனுக்கு அதன் பின்னர் அடிமைத்தனம் என்பதே இல்லை.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். சோம்பல் ஒருபோதும் நமக்கு உதவாது. வேண்டாத குணங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முழு வலிமையோடு செயலில் இறங்கினால், வெற்றிக்குரிய வழியை இறைவனே காட்டி நிற்பான்.உடம்பை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ள பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் கற்றுத் தாருங்கள். காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

கடினமான உடல்வேலைகளில் ஈடுபடுங்கள். மனம், உடல் இரண்டுக்கும் சரிசமமாகப் பயிற்சி கொடுங்கள்.  துன்பங்கள் மலைபோல நின்று பயமுறுத்தினாலும், பயப்படாதீர்கள். காலால் மிதித்து நசுக்கிவிடுங்கள். பயத்திற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. காலத்திற்கு எல்லையில்லை. முன்னேறுங்கள். திரும்பத் திரும்ப உங்களின் உண்மை இயல்பான தைரியத்தை மனதில் கொள்ளுங்கள். பிரகாசம் உங்களை வந்தடைந்தே தீரும்.மூன்று விஷயங்கள் இப்போது உங்களுக்குத் தேவை. லட்சியத்தை உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறனுள்ள மூளை, வேலை செய்யக்கூடிய கைகள். இம்மூன்றும் இருந்தால் வெற்றி உங்களைத் தானாக வந்தடைந்துவிடும்.விழிப்புணர்வுடன் செய்யும் பிரார்த்தனையின் மூலம் எல்லா விருப்பங்களும் நிறைவேறும். பிரார்த்தனையின் போது நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்பு பெறுகின்றன.

கற்பு என்பது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருபாலாரிடமும் இருக்கவேண்டிய நன்னெறி ஆகும்.நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல், தோற்றம் கூட மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். வலிமையுள்ளவர்களாக, மனத்தூய்மை மிக்கவர்களாக எண்ணினால் நிச்சயம் அப்பண்புகள் உங்கள் உணர்வோடு கலந்துவிடும்.நீங்கள் மகத்தான பணிகளைச் செய்வதற்காகப் பிறந்திருக்கிறீர்கள்.

 சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. எழுந்து நின்று துணிவுடன் உங்கள் கடமையைச் செய்யுங்கள். பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் நமக்கு நாமே நன்மை செய்தவர்களாகிறோம். நன்மை பெறுவதற்கான ஒரே வழி இது மட்டும் தான். எப்போதும் விரிந்து மலர்வது தான் வாழ்வின் பயனாகும். உங்கள் மனம் பரந்தநோக்குடன் திகழட்டும். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிச்சிகரத்தை எட்டிப் பிடிக்கத் தேவையான குணங்கள். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத்தவிர தனியாக வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.


கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும். வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். 

தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்! இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

 தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை. 


ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். 

இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும். அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது.

 என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும். அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.பலமே வாழ்வு; பலவீனமே மரணம்! கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும். கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். 


ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான். உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும். உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், 

வேறுபாடு காட்டாதே. உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன். 


பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். 


சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும். ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.                                                                                                                                                     

எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள்.  தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!


                                                                                                                                                                                                    -                விவேகானந்தர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக