திங்கள், ஜூலை 18, 2011

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள்


நான்காவது கச்சித் திருவகவல் 

திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45

காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50

இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55

மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60

மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70

திருச்செங்கோடு

நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னைக்
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.

திருவொற்றியூர்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2

திருவிடைமருதூர்

காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2

திருக்கழுக்குன்றம்

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.

திருக்காளத்தி

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 1

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போ
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனைப் பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே! 2

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3

முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோகத்தினாற்
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு
மப்போது கண்கலக்கப் படவும் வைத்தா யையனே,
எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி யீச்சுரனே. 4

இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளைத்துமின்னார்
அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந்தொழுகும்
புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள், பொன்முகலிக்
கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. 5

நாறுங் குதிரைச் சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்
ஊறு மலக்குழி காமத்துவார மொளித் திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே. 6

திருக்கைலாயம்

கான்சாயும் வெள்ளி மலைக்கரசே, நின்கழல் நம்பினேன்
ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய், காவூரனுக்காய்
மான்சாயுச் செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. 1

இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று
பல்லுங் கரையற்று வெள்வாயுமாய், ஒன்றிற் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூக்கத்திலே
யல்லும் பகலு மிருப்பதென்றோ? கயிலா யத்தனே. 2

சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலாயத்தனே. 3

கையார ஏற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு
மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்று ஓலமிடுவது என்றோ? கயிலாயத்தனே. 4

நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே. 6

மந்திக் குருளையத் தேனில்லை, நாயேன் வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனைத் தீதகற்றிப்
புந்திப் பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்தனே, கயிலாயத்தனே. 7

வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவ நின் அருளால், கயிலாயத்தனே. 8

மதுரை

விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.

பிணமெனப் படுத்தி யான் புறப்படும் பொழுது நின்
அடிமலர்க் கமலத்துக் கபய நின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித் தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45

அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50

எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!

திருச்சிற்றம்பலம்



பட்டினத்தார்-பாடல்கள்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த பின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 2

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3

நீறார்த்த மேனியும் ரோமஞ் சிலிர்த்து உளம் நெக்கு நெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீரடிக்கே
மாறாத் தியான முற்று ஆனந்த மேற்கொண்டு மார்பிற் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5

செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித், தினந் தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட ஏகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்தனே, கயிலாயத்தனே. 6

வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன் வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் ஐஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவன் நின் அருளால், கயிலாயத்தனே. 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும், நின் ஐஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13

பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவ தில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்க அறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

நல்லாய் எனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக் கொன்று போடும் பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லா நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லு கண்டாய் கச்சியேகம்பனே. 32

நாறு முடலை, நரிப்பொதி சோற்றினை, நான் தினமுஞ்
சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில் விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் அலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன் செயலே என்பார் காண் கச்சியேகம்பனே. 37

பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவை அன்னாள்
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் உனைப் பூசியாத உலுத்த ரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கொன்றேன் அனேக முயிரை எலாம் பின்பு கொன்று கொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்க வென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம் நீபொறுப்பாய்
என்றே உனை நம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோடு இணங்காமற் கனவினும் பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் தோகையர் மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

முடிசார்ந்த மன்னரு மற்ற முள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு பின்னு இந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டு மென்றே அறிவாரில்லையே. 7


அன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை:
ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யில் தீமூட்டு வேன்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வய்க்கு.

விருத்தம்: 
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

வெண்பா:
வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்தமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து
என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.

வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறு ஆனாள்- பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

உடற் கூற்று வண்ணம்:
ஒருமடமாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்ப்தும் ஒன்ற்ம் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ்மடவாரும்
உகவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து

மயிர்முடி கோதி அறுபத நீல
வண்டு இமிர் தண்தொடை கொண்ட புனைந்து
மணிபொன் இலக்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க

மதனசொரூபன் இவன் எனமோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு கழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுத்ல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து ந்ரைதிரை வந்து
வாதவிரோத குரோத்ம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே

வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி ந்டந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து கணையும் அழிந்து
தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு

கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு
திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிந்ல் ஆதரவு ஏது என நொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளர்பிறை போல எயிரும் உரோம
முச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மகதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து ம்னைவி புலம்ப
மாழ்கினரே இவ காலம் அறிந்து

பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட எஇன்றவர் பந்தர்
இடும் எனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர்தாம்இ
ருந்தசவம்கழு வுஞ்சிலர் என்று
பணிதுகில் தொஞ்கல் களபம் அணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இளமைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து

விறகுஇடை மூடிஅழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்துநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே .!


தொகுப்பு : திருவடி முத்துகிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக