திங்கள், ஏப்ரல் 27, 2015

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் வரலாறு




                    பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது.இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். 

ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். 

அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார். இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! உனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் இப்பிறப்புக்கு நல்ல லாபத்தையும்  தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, உனக்குள் இருக்கும் பாம்பை கண்டு பிடி இல்லாத பாம்பைத் தேடி வெளியில் ஓடாதே, என்றார். 

                எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்க மளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதி யிலி ருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான். 

                 இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார். “குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார். பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.


                   அவர் பாடல்களில் செல்வம் , உடல் நிலையாமை பற்றியும் மெய்யான சிவபதத்தை நாடுவது பற்றியும் , விடுகதைகள் , சித்தர் வல்லமைகள் பற்றியும் தனது பாடல்களில் உபதேசங்கள் கூறுகிறார் .

மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர் 
மறலி வருகையில் வாரிச்செல்வரோ 
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர் 
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே .


மலை அளவு செல்வக் குவியல்கள் இருந்தாலும் எமதர்மன் அழைக்கையில் தன்னுடன் செல்வங்களைக் கொண்டு போக முடியுமா முடியாது. அலையும் மனதினை ஈசன் பதத்தில் இருத்தி வைத்தவர்களை எமனும் கண்டு அஞ்சுவான் அவர்களுக்கு அழிவில்லை என்று ஆடுபாம்பே . என்று உள்ளிருக்கும் பாம்பை ஆட்டுவிக்கிறார் . 
                    



                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



      சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக