செவ்வாய், நவம்பர் 15, 2011

திருமந்திர பாடல்கள் 2

திருமந்திரத்தில் இருந்து...........
                                                        சில  மந்திரங்கள் 

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் 
உப்பெனப் பேர்பெற்று வுருச்செய்த அவ்வுரு 
அப்பினில் கூடியது ஒன்றாகு மாறு போல் 
செப்பினில் சீவன் சிவத்துளே அடங்குமே .

கடல் நீரில் உள்ள கரிப்புத்தன்மை சூரியனின் வெப்பத்தால் திரவமாக இருக்கும் நீர் உப்பாக உருமாறும் , அதை மீண்டும் அத்தன்நீரிலே கலந்தால் உப்பு நீரில் கரைந்து தன வடிவத்தை இழந்து மீண்டும் நீராக உருமாறும் . அத்தன்மையைப் போல சீவன் என்னும் உப்பும் சிவம் என்னும் கடலோடு கலந்து சிவத்துள்ளே அடங்கும் . 


பண்டம் பெய்கூரை பழகிவிழுந் தக்கால்
உண்டஅப் பெண்டிரு மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லாது 
மண்டி அவருடன் வழிநட வாதே .


இருவினை பாண்டங்களால் வேய்ந்த இந்த உடல் எனும் கூரை , ஆண்டு அனுபவித்து உயிர் பிரியும் போது நம் உழைப்பில் உண்டு அனுபவித்து வாழ்ந்த மனைவியும் மக்களும் உடன் வர மாட்டார்கள் . நாம் வாழும் போது கடைபிடித்த விரதமும் அவற்றின் பயன்களும் , நாம் அடைந்த ஞானமும் இவை இரண்டுமே நம்முடன் வரும் . வேறு எந்த பொருளும் நம்முடன் வருவதில்லை .


ஊரெல்லாம் கூடி ஒழிக்க அழுதிட்டுப் 
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே .


உயிரற்ற உடலை கிடத்தி வைத்து அதைச் சுற்றி சுற்றத்தாரும் ஊரார்களும் மிகவும் சப்தமாக அழுது ஒப்பாரி வைத்து இறப்பதற்கு முன் இருந்த பெயரை நீக்கி தற்போது உயிர் இல்லாததால் பிணம் என்று புது பெயர் சூட்டி புதர் மண்டி கிடக்கும் சுடுகாட்டுக்கு கொண்டு போய் அவ்வுடலை சுட்டு எரித்துவிட்டு பின் நீரினில் மூழ்கி அந்த உயிரின் நினைப்பை அறவே ஒழித்து விட்டார்களே .


ஈட்டிய தேன்பூ மணங்கொண் டிரதமும்
கூட்டிக்கொணர்ந் தொருகொம்பிடை வைத்திடும் 
ஒட்டித் துரந்திட்ட துவலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே .


தேனீக்கள் மலர்களின் மணத்தால் மலர்களும் மேல் அமர்ந்து அதில் உள்ள தேனை சேகரித்து ஒரு மரக் கிளையில் கொண்டு சேமித்து வைக்கும் . வலிமையுடைய மனிதர்கள் தேனை எடுப்பதற்காக அத் தேனீக்களை கூட்டினின்று விரட்டி தேனை எடுத்துக் கொள்வார்கள் .
தேன் இருப்பதை தேனீயே காட்டிக் கொடுத்து அதைப் பிறர் அனுபவிக்க விட்டு ஓடியதைப் போல நாம் சேர்த்த செல்வங்களும் நமக்கு பயன்படாது அதைப் பிறர் அனுபவிக்க விட்டுவிட்டு ஓடப் போகிறோம் ஆகவே இருக்கும் வரை தானம் செய்வோம் .


பாலன் இளையன் விருத்தன் எனநின்ற 
காலம் கழிவன கண்டும் அறிகிலார் 
ஞாலம் கடந் தண்டம் ஊடறுத் தாண்டி 
மேலும் கிடந்தது விளம்புவன் நானே .


குழந்தைப் பருவம் , இளமைப் பருவம் , கிழப்பருவம் என்று நம் வாழ்நாள் கழிவதைக் கண்டும் இளமை நிலையாது என்ற உண்மையை யாவரும் அறிவதில்லை . எம்பெருமானின் திருவருளால் அதை உணரப் பெற்ற நான் அண்டங்களையும் அனைத்து உலகங்களையும் தாண்டி நின்ற சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து கிடந்து பக்தி செய்வேன் .


மந்திரங்கள் தொடரும் .......................


 சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


இறை பணியில் 
                               திருவடி முத்துகிருஷ்ணன் 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக