திங்கள், நவம்பர் 28, 2011

திருமந்திர பாடல்கள் 3

திருமந்திரத்தில் இருந்து .......
                                  சில மந்திரங்கள் 

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறியார் அவர் தாமே .

பசுமையான மரத்தில் தழைக்கின்ற ,தளிர் , இலை , பூ இவை யாவும் மரத்திலிருந்து வீழ்ந்து அழிவதைக் கண்டும் . இம்மனிதர்கள் தவறு செய்யாது சிவபெருமான் திருவடிகளை தன சிந்தையில் ஏற்றாமல் காலன் வந்து அழைத்திடும் போது யாது செய்வதென அறியாது திகைத்து நிற்பார்கள் .

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞா னானந்தத் திருத்தலே .

கொலை செய்வதும் , பிறர் பொருளை அபகரிப்பதும் , காம வசப்பட்டு மூர்க்கராய் இருப்பதும் , பொய்கூறுவதும் இந்த கொடிய பாதகங்களை நம்மிடமிருந்து விலக்கி , மேலான பெரும் பேறை அடைவதற்குரிய ஈசனின் திருவடிகளை சார்ந்து இருப்போர் துன்பமில்லா பேரின்பம் அடையப் பெறுவார்கள் . அவ்வாறு பெற்றால் ஞானாந்தத்தில் இருந்து பிறப்பு இறப்பு என அனைத்தையும் நீங்கி சுகமாக இருப்பார்கள் .

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாவரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாவரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே.

அன்பும் சிவமும் வேறு வேறு என்று சொல்பவர்கள் அறிவில்லாதவர்கள்
அன்புதான் சிவமென்று யாரும் அறிய மாட்டார்கள் . அன்பே சிவம் என்பதை உணர்ந்து தெரிந்து கொண்ட பின் அன்பே வடிவான சிவத்தோடு கலந்து அன்பு தான் சிவம் என்பதை நுகர்ந்து இனிமையாக இருப்பாரே .


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


  திருவடி முத்துகிருஷ்ணன்  
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக