சனி, ஜனவரி 25, 2014

7.32 திருக்கோடிக்குழகர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஏழாம் திருமுறை)


பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்       
குடிதான் அயலேஇருந்தாற் குற்றமாமோ   
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.  7.32.1
 
முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ  
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ  
குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா   
என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே.   7.32.2
 
மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்தென்பால் 
பத்தர் பலர்பாட இருந்த பரமா    
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா  
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே.    7.32.3
 
காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்      
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற   
வேடித்தொண்டர் சாலவுந்தீயர் சழக்கர்     
கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே. 7.32.4
 
மையார் தடங்கண்ணி பங்கா கங்கையாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை 
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே. 7.32.5
 
அரவேர் அல்குலாளை ஓர்பாகம் அமர்ந்து  
மரவங் கமழ்மா மறைக்கா டதன்தென்பாற் 
குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா     
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே. 7.32.6
 
பறையுங் குழலும் ஒலிபாடல் இயம்ப     
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே  
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா 
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே.  7.32.7
 
ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ   
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ      
முற்றா மதிசூடிய கோடிக் குழகா  
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே.   7.32.8
 
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்    
படியான்பலி கொள்ளும் இடங்குடி இல்லை 
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்       
அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே.    7.32.9
 
பாரூர்மலி சூழ்மறைக் காடதன்தென்பால்   
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை     
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்    
சீரார்சிவ லோகத் திருப்பவர் தாமே.       7.32.10

திருச்சிற்றம்பலம்
 

·         இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடநாதர், தேவியார் - மையார்தடங்கணம்மை.

நன்றி -பன்னிருதிருமுறைகள்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக