அற்புதத் திருவந்தாதி : காரைக்கால் அம்மையார்
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
குறிப்புரை :
பயின்ற - பயின்று நன்கு உணர்ந்த. பின் - பிற்பட்ட காலம். என்றது, `சிறு காலையே` என்றபடி. சேர்ந்தேன் - துணையாக அடைந்தேன். என்றது, தமது ஞானத்தின் இயல்பைக் குறித்தவாறு. இதனையே சேக்கிழார்,
`வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று`*
என அருளிச் செய்தார். நிறம் - அழகு. `மணிகண்டம்` எனப்படுதல் அறிக. மை ஞான்ற - கருமை நிறம் ஓரளவில் (கண்டத்தளவில்) ஒட்டி நின்ற. இடர் - துன்பம்; பிறவித் துன்பம். `எஞ்ஞான்று தீர்ப்பது` என்றது, `அதனை யறிந்திலேன்` என்னும் குறிப்பினது, அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்பதாம்.
பாடல் எண் : 2
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.
குறிப்புரை :
படரும் நெறி - செல்லும் கதி என்றது, நற் கதியை. பணித்தல் - உரிமை செய்தல். உம்மைகள், `அவற்றை அவர் செய்யாதொழியார்` என்பதைக் குறித்தலின், எதிர்மறை. சுடர் உரு - ஒளி வீசுகின்ற உருவம். `கோலத்தோடு` என உருபு விரிக்க. `அவர்க்கு` என்பதன் பின், `ஆயினமையால்` என ஒரு சொல் வருவிக்க. `அன்பை அறுத்துவிடாது` என்றேனும், `அன்பு அறப் பெறாது` என்றேனும் உரைக்க.
பாடல் எண் : 3
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
குறிப்புரை :
முதற்கண், `அல்லால்` என்றது, அன்பாதலைக் குறித்தும், பின்னர், `அல்லால்` என்றது, போழ் சூடும் அவரைக் குறித்துமாம். அன்புடையேமை, `அன்பு` என்றது உபசாரவழக்கு. பவர் - கொடி. `பவர் போலும் சடை` என்க. பாகு - ஒரு பகுதி. பாகு ஆக - ஒரு பகுதியில் பொருந்தும்படி போழ் - பிளவு. திங்களின் பிளவு. ஆள் - ஆளாம் தன்மை. `அவர்க்கு அல்லால், எம் ஆளாம் தன்மை. எஞ்ஞான்றும் மற்றொருவர்க்கு ஆகாதே போம்` என இயைத்துக்கொள்க. `ஆகாது` என்பதில் துவ்வீறும், பின்னர்த் தேற்றேகாரமும் தொகுத்தலாயின.
பாடல் எண் : 4
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.
குறிப்புரை :
`கேள் ஆமை யாக` என ஆக்கம் வருவிக்க. கேள் - உறவு. ஆமை, ஆமை ஓடு. அதனை அணியத் தகும் பொருளாக அணிந்த. ஆகம் - மார்பு. மார்பைக் கூறவே, உடல் முழுவதையும் கூறியதாயிற்று. `ஆகம் செம்மையான்` என, சினையினது பண்பு முதல்மேல் ஏற்றப்பட்டது. செம்மையைச் சுட்டிப் பின், `மற்றொன்று` என்றமையால், `கருமை` என்றதாயிற்று. `ஆம் இறை, ஆட்கொண்ட இறை` எனத் தனித்தனி இயைக்க. `கேளாதது என்கொலோ` என்றது, `இன்னும் முறையிடல் வேண்டும் போலும்` என்பதாம்.
பாடல் எண் : 5
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
குறிப்புரை :
இறக்கம் - நீக்குதல்; அழித்தல். `இறைவன்` என்றது, `சிவன்` என்றபடி. `இறைசிவன், கடன்வேந் தன்கையிறை, யிறுப்பு. இறை சிறந்தோன்` * என்னும் நிகண்டினால், `இறைவன்` என்பது சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும். `உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்பவனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே` என்பது உணர்த்தியவாறு.
பாடல் எண் : 6
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.
குறிப்புரை :
வானம் - சிவலோகம். `உம்பர்கோன்` என்றது சீகண்ட உருத்திரரை- அவரது தானம் (இடம்) கயிலாயம். இருண்ட - இருள்மயமான. மொய்யொளி - செறிந்த ஒளி. `என்பாரும், என்பாரும்` என்க. யான் `ஞானத்தானும், என் நெஞ்சத்தானும்` என்பன்` என இயைத்து முடிக்க. சிவலோகத்திலும், கயிலாயத்திலும் இருத்தல் தடத்த நிலையால், ஆகலின், சிவஞானம் பெற்ற சீவன் முத்தர்களது உள்ளத்தில் இருப்பவனாக உணர்தலே அவனது உண்மை நிலையை உணர்தலாம்` என்றபடி. மூன்றாம் அடியை முதலிற் கூட்டி, அதன் இறுதியில் இரண்டாம் உருபு விரித்து, பின் வந்த `என்க` என்பதன்பின் `அவன்` எனச் சுட்டியுரைக்க.
பாடல் எண் : 7
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.
குறிப்புரை :
இரண்டாம் அடி ஈற்றில் உள்ள, `யானே` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் முடிவில், `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. நீற்ற - நீற்றையணிந்த, ஏகாரங்கள் ஏனையோரினின்றும் பிரித்தலின் பிரிநிலை. இவற்றால், `பிறர் தம்மை இவ்வாறு கூறிக்கொள்வன எல்லாம் மயக்க உரைகளாம்` என்றபடி. சிவனுக்கு ஆளாதலின் அருமையையும், பயனையும் குறித்தவாறு. `என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து - முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை... வலஞ்சுழி வாணனை வாயாரப் - பன்னி, ஆதரித்து ஏத்தியும், பாடியும் வழிபடும் அதனாலே` 1 எனவும், `எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே - பந்தம் வீடவையாய பராபரன்... சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே`, `என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - மின்னு வார்சடை வேத விழுப்பொருள்.... செந்நெறி - மன்னுசோதி நம் பால் வந்து வைகவே`2 எனவும் போந்தவற்றையும் உணர்க.
பாடல் எண் : 8
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.
குறிப்புரை :
`ஆள்வானுக்கு (ஆள் ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு` என இயைத்து முடிக்க.
ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் `ஆள்வான்` என்றதனால், `ஆயினேன்` என்றது, `ஆள் ஆயினேன்` என்ற தாயிற்று. `பெறற்கு அரியன்` என்றது, `சிவன்` என்றபடி. `சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனா யினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு` என்றபடி. `திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்` 3 என்றது காண்க. `தூய... போல்வான்` என்றது `சிவன்` என்றபடி. `புனலாகிய கங்கை` என்க. `அனற்கு அங்கை` என்பதை, `அங்கைக்கு அனல்` எனப் பின் முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க.
பாடல் எண் : 9
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.
குறிப்புரை :
`ஈசன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பு அறுப்பது ஆனால், அவன் அருளாலே (யான்) மெய்ப் பொருளையும் நோக்கும் விதியுடையேன்; ஆதலின், எனக்கு எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது அவன் அருளே` என இயைத்து முடிக்க. ஈசன் - சிவன். `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, `காண்பவன் சிவனே யானால்`1 என்பதிற் போல. `மெய்ப்பொருளை யும்` என்னும் சிறப்பும், இறந்தது தழுவியதும் ஆகிய உம்மை தொகுத்தலாயிற்று. நோக்குதல் - ஆராய்தல் . அறிவிப்பதொரு துணையின்றித்தானே அறியமாட்டாத இயல்பையுடையது உயிரினது அறிவு. அத்தன்மைத்தாகிய அவ்வறிவு, குறைபாடுடைய கருவி களைத் துணையாகக் கொண்டு அறியுமிடத்து அறியப்படும் பொருள் களது இயல்பு பொதுவாக விளங்குதலன்றி, உண்மையாக விளங்காது. அதனால், குறைவிலா நிறைவாகிய இறைவனது அருளைத் துணையாகக் கொண்டு அறியுமாயின், அப்பொழுது பொருள்களின் இயல்பு உண்மையாக விளங்கும்.
இனிப் பிறபொருளைக் காட்டுகின்ற கதிரவனது ஒளியே தன்னையும் காட்டுவதாகும் அல்லது, அவனைப் பிறிதோர் ஒளி காட்டமாட்டாது. ஆகையால், கதிரவன் ஒளியைக் கொண்டே கதிரவனைக் காணுதல் போல, இறைவனது அருளால் எல்லாப் பொருள்களையும் அறிதலுடன், அவனையும் அவன் அருளாலேதான் அறிதல் வேண்டும். அது பற்றியே `அவன் அருளாலே அவன் தாள் வணங்கி` 2 என்னும் திருமொழி எழுந்தது. அதனையே இங்கு அம்மையார்,`அருளாலே மெய்ப்பொருளையும் நோக்கும் விதியுடையேன்` என்றார். விதி - முறைமை. இங்ஙனம் எப்பொருளையும் அருளாலே நோக்காது, கருவிகளாலும், நூல்களாலும் விளங்கும் தம் அறிவு கொண்டே பொருள்களை நோக்குவார்க்கு மெய்யுணர்வு தோன்றாது, திரிபுணர்வே தோன்றும் என்க.
இதனையே,
இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்,
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழ்ந்தார்.1
என்று அருளிச் செய்தார் சேக்கிழார்.
அருளால் எவையும் பார்என்றான்:- அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி, தோழி 2
எனத் தாயுமான அடிகளும் கூறினார். `மெய்ப்பொருளாவது யாது` என முதற்கண் ஆராய்தல், இறைவன் உள் நின்று உணர்த்தும் முறையை நோக்கும் நோக்கினாலும், அவன் ஆசான் மூர்த்தியாய் வந்து அறிவுறுக்கும் அருள்மொழியாலுமாம் என்க. அவ்வாற்றான் நோக்குவார்க்கே உண்மை புலனாவதன்றிப் பிறவாற்றான் நோக்கு வார்க்கே உண்மை புலனாகாது என்பதை,
சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு
எனத் திருக்களிற்றுப்படியார் 3 வலியுறுத்தி ஓதிற்று.
பாடல் எண் : 10
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.
குறிப்புரை :
`ஈசன் - சிவன்` என்பது முன்னைப் பாட்டின் உரையிலும் கூறப்பட்டது. `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. வைப்பு - சேம நிதி. `அவனையே பிரானாகக் கொண்டேன்` என ஏகாரம் விரித்து, மாறிக் கூட்டுக. பிரான் - தலைவன்; ஆண்டான். `கொள்வது` என்பது பொதுப்பட அத் தொழிலை உணர்த்திநின்றது. உம்மை, வினையெச்ச விகுதி. எனக்கு அரியது ஒன்று உண்டே` என்க. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய வினா.
பாடல் எண் : 11
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.
குறிப்புரை :
நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். `ஓழி`, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ளடைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் `அவ்வொன்றே` எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத்தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலையசை. `அவ்வொன்றே ஆளாம் அது` என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.
பாடல் எண் : 12
அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.
குறிப்புரை :
முதற்கண் `அதுவே` என்றது, மேல், `உலகெலாம் ஆள்விப்பது` என்றதையும், இடைக்கண், `அதுவே` என்றது `பிறப்பறுப்பது` என்றதனையும் ஏற்புழிக் கோடாலால் சுட்டி நின்றன. இனி - இப்பொழுது. `அதுவே என அறிந்தோமானால்` என்க. `அதுவே தகவு` என முடிக்க. தகவு - தகுதி; தன்மை, பனிக்கு - பனிக்காலத்திற்கு ஆற்றாமல். அணங்குகின்ற - வாடுகின்ற. கண்ணி - முடிமாலை. `பனிக் காலத்திற்கு ஆற்றாது வாடுகின்ற` என்றது, கொன்றை மலரைக் குறித்தவாறு. அது கார்காலத்தில் மட்டுமே பூப்பது. `கண்ணி கார்நறுங் கொன்றை` * என்ற பழம் பாடலைக் காண்க. நுதல் - நெற்றி. தனிக்கண் - ஒற்றைக் கண். `அங்கும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. அல்லாக்கால், `அங்கு` என்பது நின்று வற்றும். இது சிவனது தகைமையைப் புகழ்ந்தவாறு.
பாடல் எண் : 13
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே பாவந் தான்.
குறிப்புரை :
தகவு - தகுதி; நடுவு; நடுவு நிலைமை. அஃதாவது, பிறர்க்கு வரும் துன்பத்தையும் தமக்கு வரும் துன்பம் போன்றதாகவே உணரும் தன்மை. `தாம்` என்றது, `யாரேனும்` என்றபடி. தார் - கொன்றைத்தார். அகலம் - மார்பு. எனவே `சிவனது மார்பு` என்றதாயிற்று. `அதனை மலைமகளைச் சாரத் தனிமையில் புகவிடுதல் பொல்லாது` என்க. பொல்லாது - தீங்கு. தீங்கிற்கு ஏதுவா வதனைத் `தீங்கு` என்றது உபசார வழக்கு. கண்டீர், முன்னிலையசை. `தீங்கிற்கு ஏதுவாவது யாது` எனின், `அவனது மார்பில் மிகத் தீங்கு செய்ய ஊர்ந்து கொண்டிருக்கின்ற பெரிய பாம்பு அவள் மேலே என்றாவது ஒரு நாள் தாவியே விடும். அதனால், தகவுடையோர்க்கு அது பெண் பாவமாய் முடியும்` என்பதாம். அடர்தல் - தீங்கு செய்தல். தான். அசை.
எல்லாம் அறிந்திருந்தும் அம்மையார் பெருமானை நகையாடிப் புகழ்தற் பொருட்டு ஒன்றும் அறியாதார்போல் நின்று இங்ஙனம் கூறினார்; பத்தி பரவசத்தால். `பாம்பு முதலியவற்றுள் எதுவும் அவனையும் ஒன்றும் செய்யாது; அவளையும் ஒன்றும் செய்யாது; அவ்விருவரது தன்மையும் உலகர் தன்மையின் முற்றிலும் வேறானதே` என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக