புதன், அக்டோபர் 05, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 5

ஞான குரு பட்டினத்தார் 
         பாடல்களில் இருந்து .......  


ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண் டேதில்லை அம்பலத்தே!நாம் உயிர் வாழ உணவு அளிப்பவனும் ,உறங்கச் செய்பவனும் இப்பூவியில் ஒருவர் மற்றவரை விட்டு விலக காரணமானவனும் பிரிந்தவர்கள் மீண்டும் இணைய காரணமானவனும் இருவினையாகிய நல்வினை ,தீவினை என்ற பாசக்கயிற்றை வைத்து நம்மை ஆட்டி வைப்பவனும் ஒருவன் தில்லையம்பலத்திலே இருக்கிறான் . 


அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம்பெற லாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள்
குடிகாணும் நாங்கள்! அவர்காணும் எங்கள் குலதெய்வமே!திருச்சிற்றம்பலவரை வணங்கும் அடியார்க்கு அடியவராய் ,எளியவராய் இருக்கும் எம்பெருமான் தில்லையில் வீற்றிருக்கும் அம்பலவாணர் திருவடியை இறுக்க பற்றிக்கொண்டால் அழியாத செல்வமான முக்திப் பேறு அடையலாம் . ஈரேழு உலகம் அளந்த திருமாலும் படைப்பு தொழிலைச் செய்யும் பிரமனும் பார்த்திராத திருவடியை உடைய சிவபெருமானே எங்களை ஆண்டருள் செய்து எங்கள் குலத்துக்கே தெய்வமாக வீற்றிருக்கிறார் . 


தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால்
பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்ட லீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடக சாலையெங்கே? இது கண்மயக்கே!தேவர்களுக்கெல்லாம் தேவனே சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பொன்னம்பலனே , நிலையான செல்வத்தைத் தரும் உன் திருவடி நோக்கி உள்ளம் திரும்பி விட்டால் , அரசன் போல் இருந்து ஆண்டு கொண்டிருந்த மண்ணும் , தேடி குவித்த செல்வமும் , அலங்காரம் செய்து வைத்த உடலும் 
வாழ்க்கை என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிப்பும் இவை அனைத்துமே கண்ட கனவைப் போல பொய்யாய் போகும் . இவையெல்லாம் நம் கண்களை மயக்கும் மயக்கமேயாகும் .


உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானும் ஏதென்று கேள்விசெய் வானும் கதியடங்கக்
கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று
தடுப்பானும் நீயல்லையோ தில்லை ஆனந்தத் தாண்டவனே!அனைத்து உயிர்களிலும் இறைவன் நிரந்து இருக்கிற படியால் , இவ்வுலகிலே ஆடை உடுத்துபவனும் , பால் சோறை புசிப்பவனும் ,ஒருவர் எல்லா வளமும் பெற்று வாழச் செய்பவனும் அவ்வாறு வாழ்ந்தவரை செல்வமெல்லாம் அழிந்து யாசகம் கேட்கும் நிலையை கொடுப்பவனும் ,யாசகம் கேட்டவருக்கு கிடைக்கச் செய்பவனும் ,யாசகம் கொடுப்பவரை கொட விடாது தடுப்பவனும் இப்படி அனைத்துமே நீதானே அப்பனே தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும்  எம்பெருமானே .   


வித்தாரம் பேசினும் சோங்கேறி னும் கம்ப மீதிருந்து
தத்தாஎன் றோதிப் பரிவுகொண்டாடினும் தம்முன்தம்பி
ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ? தில்லை யுள்நிறைந்த
கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே.என்னால் எதுவும் செய்ய முடியும் என்று பேசுவதும் , திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கொப்ப மரக்கலம் ஏறி பொருள் தேட சென்றாலும் ,மூங்கிலின் மீதேறி தலை கீழாக நின்று கூத்தாடினாலும் , தமையனும் தம்பியும் ஒத்தாசைக்கு உண்டு என்று கூறினாலும் ,ஏதும் ஆவதுண்டோ ,தில்லையில் இருந்தாலும் எங்கும் நிறைந்துள்ள ஈசன் சொற்படி அல்லாமல் எதுவும் நடப்பதில்லை .


பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே!மனமே , நீ இறைவனிடம் பிறவாதிருக்க வரம் பெற வேண்டும் , தவறி பிறந்து விட்டால் கவலைப் படாதே இறவாதிருக்க மருந்து உண்டு அது என்ன வென்றால் அறங்கள் வணங்கும் தில்லை அம்பலவாணர் திருவடி தாமரையை மறவாமல் இரு அதுவே அருமருந்து உனக்க்கு .


தவியா திரு நெஞ்சமே தில்லை மேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானா கரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை ஐந்தெழுத்தால்
செவியாமல் நீ செபித்தால் பிறவாமுத்தி சித்திக்குமே!பதறாமல் இரு என் நெஞ்சமே ,தில்லையில் வீற்றிருக்கும் சங்கரனை புவி எங்கும் நிறைந்து இருக்கின்ற ஞான வடிவானவனை , திரிபுரம் எரித்தவனை , அணையா விளக்காய் சுடர் விட்டுக் கொண்டு இருக்கும் அணையா விளக்கை , அம்பலத்திலே ஆடும் ஆனந்தக்கூத்தனை , பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்தால் எப்பொழுதும் செபித்தால் பின்னம் பிறவா நிலையான முக்தி உனக்கு கிடைக்கும் .


நாலின் மறைப்பொருள் அம்பல வாணரை நம்பியவர்
பாலில் ஒருதரம் சேவிக்கொ ணாதிருப் பார்க் கருங்கல்
மேலில் எடுத்தவர் கைவிலங் கைத்தைப்பர் மீண்டுமொரு
காலில் நிறுத்துவர் கிட்டியும் தாம்வந்து கட்டுவரே.நான்கு வேதமாகவும் வேதத்தின் பொருளாகவும் உள்ள அம்பலவானரை நம்பி அவர்பால் தம் கருத்தை நிறுத்தாது இருந்தும் , வாழ் நாளில் ஒருமுறையேனும் கைகூப்பி தொழாது இருந்தும் , வாழ்நாளை வீணடிப்பவர்களை , யம தூதர்கள் அவர்கள் தலையிலே கருங்கல்லை ஏற்றி கையில் விலங்கிட்டு ஒரு காலில் நிறுத்தி இறுக்கி கட்டிக் கொண்டு இழுத்துச் செல்வார்கள் .


ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர்தம்மைப்
போற்றா தவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே.கங்கையையும் தும்பை மலரையும் சூடி திருநடனம் புரியும் அம்பலவாணர் தம்மைப் போற்றாமல் ,வணங்காமல் இருப்பவர்க்கு அடையாளம் உள்ளது .அது என்ன வென்றால் இந்த பூவுலகில் உண்ணச் சோறு இன்றி , சுகமின்றி ,உடுக்க உடையின்றி ,யாசகம் போனாலும் பிச்சை கிடைக்காமல் ஏங்கித் தவித்துக் கொண்டு இருப்பார்கள் .


அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, எம்
கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக் காணக்கண்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றனவே!அனைத்து உயிர்களுக்கும் தந்தையை தாயுமாய் இருக்கும் அம்மையப்பனை , முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கு தலைவனாய் இருப்பவனை ,அம்மை சிவகாம சுந்தரி போற்றும் நேசனை , எல்லா உயிர்களுக்கும் படி அளந்து காத்திடும் கர்த்தனை , பொன்னம்பலத்தில் ஆடும் சிதம்பரநாதனை எங்கள் ஐயனை காண கண்கள் எத்தனை கோடி யுகம் தவம் புரிந்து இருக்கின்றதோ ஐயா தில்லை சங்கரனே .


                    பாடல்கள் தொடரும்.................
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                      - திருவடி முத்துகிருஷ்ணன் கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக