திங்கள், அக்டோபர் 03, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 2

  ஞான குரு பட்டினத்தார்
   பாடல்களில் .....இருந்து 
    
நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமுங் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே.நாயாய் பிறந்தாலும் அது உடையவனுக்கு காவல் காக்கவும் வேட்டையாடியும் உதவி புரியும் தாயார் வயிற்றில் பிறந்த நாம் செல்வந்தராகி , காய் காய்க்காத மரத்தை போலவும் ,நீர் வற்றிப்போன தடாகத்தைப் போலவும் கல்லால் செதுக்கிய பசுவைப் போலவும் , யாவருக்கும் ஒன்றும் கொடுக்காதவராய் இருக்கும் மனிதரை ஏன் படைத்தாய் திருக்காஞ்சியில் அருளும் எம்பெருமானே ஏகம்ப நாதனே .


ஆற்றிற்கரைத்த புளியாக்கி டாமலென் அன்பையெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய் குன்ற வில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய் இறைவாகச்சி ஏகம்பனே.ஐயனே ! நான் உன் மீது கொண்ட அன்பை ஆற்றில் கரைத்து விட்ட புளியாக்கிடாமல் உன்னை போற்றி பற்றி இருக்கும்படி அருள் செய்ய நீ திருவுளம் செய்ய வேண்டும் ஐயா ! மூன்று புரத்தையும் எரித்து எமனை அடிமை கொண்டு , மேருமலையை வில்லாகக் கொண்டு , திருமாலைக் கொடியாகக்  கொண்ட ! இறைவனே திருக்கச்சியின் தலைவனே ஏகம்ப நாதனே .


பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே.பிசாசமே பெண்ணுருவாய் வந்து எனைபிடித்து தன்னுடைய வெருட்டும் கண்களைக் கொண்டும் தனது தனங்களைக் கொண்டும் மயக்கி , ஆறாத புண் போன்று இருக்கும் பிறவி நீங்காப் பெரும் குழி எனும் குழிக்கு இழுத்துச் சென்று , என் ஞான அறிவை மங்கிப் போக செய்ததால் , திருக்காஞ்சியில் வீற்றிருக்கும் எங்கள் பெருமானே உன்னை எண்ணாமல் மறந்தே இருந்து வாழ்நாள் வீணாய் கழிந்து போனதே இறைவா கச்சி ஏகம்பனே .


நாவார வேண்டுமி தஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால்
சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால்
போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே.பெண்கள் தன் நாவால் நமக்கு பிரியமானவற்றை பேசுவார்கள் , உன்னை நீங்கினால் நான் இறந்து விடுவேன் என்று சொல்லி கூட இருந்தே உண்பார்கள் ,நம் கையில் உள்ள பணம் இல்லாது போனால் உமக்கு இங்கென்ன வேலை போய்வாரும் என்று நடுத்தலையில் குட்டும் பெண்களுக்கு தான் சம்பாதித்த பொருளைக் கொடுக்கும் அறிவீனர்களின் தலைவிதி இது தானோ என் அப்பனே ஏகம்ப நாதனே . 


கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே.சிவபுராணங்களை படிக்காதவர் , நல்லவர்களிடம் கனவில் கூட உண்மை பேசாதவர் , யாரேனும் பசி என்று வந்தால் அவர்களுக்கு உணவு கொடாதவர் , குரு உபதேசம்படி நெறிகளை கடைபிடிக்காதவர் , தருமம் செய்ய நினைக்காதவர் , உன் நாமத்தை சற்றும் நினையார் இவ்வுலகில் இருப்பதனால் பயனென்ன ? இறப்பதனால் பயனென்ன ? எனக்கு சொல்வாய் காஞ்சியில் உறையும் பெருமானே .


வானமுதத்தின் சுவையறி யாதவர்வண்கனியின் 
தானமுதத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாயஞானஞ் சிறிது மில்லார்க்கு
ஈனமுதச்சுவை நன்றல்ல வோகச்சி ஏகம்பனே.ஞானத்தில் முதிர்ச்சி பெறாதவர் தான் கற்றுணர்ந்த கேள்வி ஞானமே சிறந்தது என்பர் . இது எவ்வாறு உள்ளது என்றால் வான் அமிர்தத்தின் சுவையறியாமல் தாமுண்ட வன்கனியின் சுவை தான் சிறந்தது என வாதிடுவது போல் உள்ளது . தேனும் அமுதமும் தனித்தனியே சுவையை ஆராயும் தன்மை  போல ஞானத்தையும் கேள்வி ஞானத்தையும்  தெளியும் அறிவு சிறிதுமில்லார்க்கு அவரறிந்த ஈனமுதச் சுவை தான் சிறப்பானதாகும் திருக்கச்சி ஏகம்ப நாதனே .


ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.அழுக்கான உடலை,காமத்தை கழிக்கும் மறைவிடம் உள்ள அருவருக்கத்தக்க ஒன்றை, சதையால் பொதிந்த பல துவாரம் உள்ள துருத்தியை, நான் தினமும் சோற்றை நிரப்பிய தோலினால் செய்யப்பட்ட ஒரு பையை , சொல்லுதற்கரிய காற்றினால் நிரப்பட்டு காற்று வெளியேற காத்துக்கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை நிலையானதென்று எண்ணி அதை பேணி வாழ்ந்து விட்டேன் இறைவா கச்சியில் உறையும் பெருமானே . 


சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.நான் சிந்திய சொற்களால் வரும் குற்றத்தையும் , அடுத்தவருக்கு தீங்காக , தவறாக சிந்திக்கும் குற்றத்தையும் , இன்னும் நான் செய்த கொடிய செயல்களும் , பார்வையினால் செய்த பாவத்தையும் , புண்ணிய நூல்களில் உள்ள நல்லவைகளை கேட்காமல் தவறான சொற்கள் கேட்ட தவறையும் , எல்லாக் குற்றத்தையும் பொறுத்து எனக்கு அருள் செய்வாய் திருக்காஞ்சி அமர்ந்த ஏகம்ப நாதனே .
   
முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளைஓலை விளக்கியிட்டுப்
பட்டப்பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவாகச்சி ஏகம்பனே.பெண்கள் தம் அழகோடு அழகு சேர்க்க நல்ல மஞ்சளை எண்ணெயில் சேர்த்து அதைத் தடவி முகத்தை மினுமினுப்பாகச் செய்து , விரல்களில் மெட்டிட்டு நெற்றியில் பொட்டிட்டு அக் காலத்தில் கழுத்தில் அணியும் காரை என்னும் பித்தளை அணிகலனை நன்றாக துலக்கி அதையும் அணிந்து கொண்டு பட்டப்பகலில் வெளிமயக்கம் செய்யும் பாவையர் மீது எனக்கு இருக்கும் இஷ்டத்தை நீ தவிர்த்து அருள வேண்டும் இறைவா காஞ்சியை ஆளும் ஏகம்பனே!


பிறந்துமண் மீதிற் பிணியேகுடி கொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேன்மைய லாகிப்புன் மாதருக்குட்

பறந்துஉழன் றேதடு மாறிப்பொன்தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திட வோபணித்தா யிறைவாகச்சி ஏகம்பனே.மண் மீது பிறந்த நாள் முதல் நோய்கள் வாழும் இடமாக உடலை வைத்துக்கொண்டு , பேரின்பம் எனும் சிவபதத்தை மறந்து , பெண்களை கூடும் சிற்றின்பமே மேலானது என்று கருதி அப் பெண்களிடையே மலருக்கு மலர் தாவும் வண்டைப்போல் பறந்து தடுமாறி , பொருளை சம்பாதித்து அப்பெண்களுக்கு கொடுத்து இறந்து போகவா என்னை படைத்தாய் இறைவா திருக்காஞ்சியிலே எழுந்தருளும் ஏகம்பனே .


     பதிவுகள் இன்னும் தொடரும் ....... 


சிவத்தை போற்றுவோம்!!சித்தர்களை போற்றுவோம்!!


                  - திருவடி முத்துகிருஷ்ணன்  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக