வெள்ளி, அக்டோபர் 07, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 7

ஞான குரு பட்டினத்தார் 
            பாடல்களில் இருந்து ....


இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும் பார்ந்தொழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள்! பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே!இரவும் பகலும் இரைக்காக திரிந்து ஓடி அதனால் களைப்படைந்து மோகத்தினால் மெலிந்து மாதரின் வெட்டுண்ட புண்போல் இருக்கும் அவலக் குழியருகே எலும்புக்காக நாய் காத்துக் கொண்டிருப்பதைப் போன்று அதற்கே உழன்று கொண்டிருக்கும் அடியேனை உன் பதம் சேரும் படி எனை ஆண்டருள் செய்வாய் பொன்முகலி ஆற்றின் கரையில் கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து அருள் செய்யும் திருக்காளத்தி ஈஸ்வரனே .   


கான்சாயும் வெள்ளி மலைக்கரசே! - நின் கழல் நம்பினேன் 
ஊன்சாயும் சென்மம் ஒழித்திடு வாய்! கர வூரனுக்காய்
மான்சாய செங்கை மழுவலஞ் சாய வனைந்த கொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக் கொழுந்தே!நறுமணம் எத்திசையிலும் கமழும் கைலாய மலைக்கு தலைவனாய் திகழும் அரசே கரவூரர் என்பவருக்காக உன் கையில் உள்ள மானையும் மழு என்னும் ஆயுதத்தையும் அணிந்திருக்கும் கொன்றை மலரில் வழியும் தென் ஒரு புறம் வழியவும் ,ஜோதிமயமான திருமேனி ஒருபுறம் சாயவும் செய்த சிவக்கொழுந்தே உன் திருவடியை நம்பினேன் என்னை விட்டு விடாதீர் ஐயா .


இல்லம் துறந்து பசிவந்த போது அங்கு இரந்து தின்று
பல்லும் கரையற்று, வெள்வாயு மாய்ஒன்றில் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பதென் றோ? கயி லாயத்தனே!உறவுகளைத் துறந்து துறவறம் பூண்ட பின் பசிவந்தால் எங்கேயும் இரந்து உண்டு தாம்பூலம் இடாததால் பல்லும் கரையற்று வெள்ளியைப் போல் தூய்மையான வாயை உடையவனாய் இருந்து இல்லறத்தில் இருந்த பொது உபயோகித்த எந்த பொருளும் மீது நாட்டமில்லாமல் ஆசை அழிந்து பேசிய வார்த்தைகளையும் கேட்ட சொற்களையும் அதன் பொருள்களையும் மறந்து உன் திருவடி நிட்டையிலே சுகமாய் இருந்து அல்லும் பகலும் அந்த நிட்டை எனப்படும் தூக்கத்திலேயே இருப்பதெப்போது கயிலாயத்தனே .


சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும்அற்று, நினையா மையுமற்று, நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!அம்மையப்பனாய் விளங்கும் அத்தனே , சிந்திக்கும் சிந்தனை அற்று , அழியும் பொருள் மீதுள்ள ஆசையையும் அற்று , நான் என்கிற அகந்தை அற்று ,செய்கின்ற தொழில்கள் அற்று , நினைப்புமொழிந்து , நினையாமல் இருக்கிறோம் அந்த நினைவும் அற்று அனைத்து சிந்தனைகளும் உன்னிடத்தில் ஒடுங்கி தன்னந்தனியனாய் இருந்து ஆனந்த நித்திரை எனப்படும் சமாதியில் என்றிருப்பேன் கயிலாயத்தில் வீற்றிருக்கும் அப்பனே .


கையார ஏற்றுநின் றுஅங்ஙனந் தின்று, கரித்துணியைத்
தையா துஉடுத்தி, நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா என்று ஓலம் இடுவது என்றோ? கயிலாயத்தனே!பிறரிடும் பிச்சையை கையாலேயே வாங்கி , வாங்கிய நிலையிலே( நின்றவாறு ) தின்று , துணி வேண்டும் என்றால் குப்பையில் கிடக்கும் நைந்துபோன கரித்துணியை தைக்காமலே உடுத்தி ,உன் சந்நிதிக்கே வந்து உள்ளன்போடு உன்னை பணிந்து மனமுருகி வேண்டும்போது உள்ளே உரோமம் விதிர்த்து அந்த பரவச நிலையில் ஐயா என்று உன்னை அழைப்பது என்றோ கயிலாயத்தனே .


நீறார்த்த மேனி உரோமம் சிலிர்த்து உளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற்று ஆனந்த மேற்கொண்டு, மார்பில் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ? கயிலாயத்தனே!விபூதியணிந்த உடலில் உரோமம் சிலிர்த்து , உள்ளம் நீர் குழைத்த சேறாய் கசிந்து உருகி நெகிழ்ந்து உன் திருவடி பேறு என்னும் ஆனந்த வீட்டை அடைய எப்போதும் தியானத்திலே இருந்து அதனால் ஆனந்தம் மிக கொண்டு கண்களில் உள்ள கண்ணீர் மார்பில் வழிந்தோடி ஆறாய்ப் பெருகிக் கிடப்பதேன்றோ கயிலாயத்தனே . 


செல்வரைப் பின்சென்று சங்கடம்பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின்
எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்த னே! கயிலாயத்தனே!நம்மை விட செல்வந்தரிடம் சென்று அவரைப் புகழ்ந்து நம்மிடம் உள்ள இயலாமையை விளக்கி தினமும் பல்லினைக்காட்டி அவர் உதவி புரிவாரோ மாட்டாரோ என்று பரிதவியாமல் , பரமானந்தத்தின் முடிவிற்கு சென்று என் பிறவித்துன்பங்கள் நீக்கி ஏகாந்தம் என்னும் பேரின்ப இடத்திலே இருப்பது எந்த நாளோ அறியேன் , அம்மையுமாகி அப்பனுமாகிய கயிலாயத்தனே . 


மந்திக் குருளையொத் தேன்இல்லை; நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்கும் சிந்தையை யான்என்செய் வேன்எனைத் தீதகற்றிப்
புந்திப் பரிவில் குருளையை ஏந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்த னே !கயி லாயத்தனே!பெண் குரங்கு தனது குட்டியை பொருட்படுத்தாது அங்கும் இங்கும் தாவும் குட்டியானது தாயை இறுக பற்றிக்கொள்ளும் ,அது போல் இந்த ஆத்மாவானது பரமாத்மாவாகிய உன்னை இறுக பற்றிக்கொண்டால் கடைத்தேறும் வழியைக் காண முடியும் . நாயேன் இந்த உண்மையை அறிந்து இருந்தும் இன்னும் வெளி உலகத்தை பற்றி ஆராயும் சிந்தையை நான் என்ன செய்வேன் , ஆகவே எம்பெருமானே என் தீவினைகளை அகற்றி என் பூசையையும் அன்பையும் ஏற்று எப்படி ஒரு தாய்  பூனை தனது குட்டியை எங்கு சென்றாலும் கவ்விக் கொண்டு போகுமோ ,அவ்வாறு இந்த நாயேனை நீ ஆட்கொண்டருள வேண்டும் கயிலாயத்தில் வீற்றிருக்கும் அம்மையப்பனே .


வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செழுத்தாம்
அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே!கயிலாயத்து அப்பனே உனதருளால் இனி பிறந்தும் இறந்தும் அல்லல் படும் வாழ்க்கையை வாழ மாட்டேன் , மயக்குகின்ற பெரும் நரகக் குழியாகிய பிறக்கும் பெரும் குழியில் விழ மாட்டேன் , உன்னை போற்றி புகழும் சிவனடியார்கள் கூட்டத்தை விட்டு அகலாமல் நினது திரு நாமமாகிய ஐந்தெழுத்து என்னும் தேனை அருந்தி அந்த ஆனந்தத்திலே திளைத்து இருப்பேன் இதுவெல்லாம் உன் அருளால் கயிலாயத்தனே .


விடப்படு மோ இப் பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படு மோ? நின் அருளின்றி யேதினமே அலையக்
கடப்படு மோ? அற்பர் வாயிலில் சென் றுகண்ணீர் ததும்பிப்
படப்படு மோ? சொக்க நாதா! சவுந்தர பாண்டியனே!பெருமானே இந்த மாய வாழ்க்கையை விட்டுவிட முடியுமோ , அப்படி அனைத்தையும் துறந்து செல்வதற்கு மனம் துணிவு பெறுமோ உன் அருள் இல்லாமல் தினமும் அலைந்து அலைக் கழிக்கப்படுமோ இல்லை தம் குறைகளை பிறரிடம் சொல்லி இன்னும் துன்பப் படுமோ நானறியேன் மதுரையம்பதி வாழ் சொக்கநாதா சவுந்தர பாண்டியனே .


                   பாடல்கள் தொடரும் ........


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                      - திருவடி முத்துகிருஷ்ணன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக