ஞான குரு பட்டினத்தார்
பாடல்களில் இருந்து ........
உடைகோவணமுண்,டுறங்கப் புறந்திண்ணையுண்,டுணவிங்
கடைகா யிலையுண்,டருந்தத் தண்ணீருண்,டருந்துணைக்கே
விடையேறு மீசர் திருநாமமுண் டிந்தமேதினியில்,
வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன
வான்பிறைக்கே?
உடையென்று உடுப்பதற்கு கோவணம் இருக்கிறது ,உறக்கம் வந்தால் படுத்துறங்க வீடுகளில் புறந்திண்ணை எங்கெங்கும் இருக்கிறது ,உணவிற்கு காயும் இலையும் இருக்கிறது , குடிக்க நல்ல தண்ணீர் இருக்கிறது , நமக்கு துணைக்கு இடபத்தில ஏறும் ஈசனுடைய திருநாமம் நிறைய இருக்கிறது , இவ்வளவும் அடையப்பெற்ற எனக்கு இந்த பூமியின் வடதுருவம் உயர்ந்தாலென்ன இல்லை தென்துருவம் சாய்ந்தாலென்ன எது நடந்தாலும் எனக்கு என்ன கவலை .
வீடு நமக்குத் திருவாலங் காடு; விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம்; ஓங்குசெல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம்தர; நன்னெஞ்சமே!
ஈடு நமக்குச் சொலவே ஒருவரும் இங்கில்லையே!
என்நெஞ்சமே , இறவைன் குடிகொண்டிருக்கும் திருவாலங்காடு தான் உனக்கும் வீடு , விமலன் சிவபெருமான் அளித்த திருவோடு உன்னிடம் உண்டு அது அட்சய பாத்திரத்தை போன்றது , நீ கேட்டபோதெல்லாம் உனக்கு கொடுக்க செல்வ வளமிக்க நாடும் உண்டு,நல்நெஞ்சமே நமக்கு ஈடு இணை இந்த பூமியிலே யாரும் இல்லை .
நாடிக்கொண்டு ஈசரை நாட்டமுற் றாயிலை; நாதரடி
தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலை; செக மாயைவந்து
மூடிக்கொண் டோமென்றும், காமாயு தங்கள் முனிந்தவென்றும்
பீடிப்பை யோநெஞ்ச மேயுனைப் போல இல்லை பித்தர்களே!
உள்ளமே , குரு உபதேசத்தின்படி ஈசரை நாடி தியானம் செய்தாயா இல்லை .குரு பாதத்தைத் தேடி குருவைத் துதித்து உனது அஞ்ஞானத்தை தெளிவு படுத்தினாயா அதுவும் இல்லை . குருவைத் தேடாமல் உலக மாயையிலே சிக்கி காமத்துக்கு அடிமையாகி காம பானங்கள் உன்னை துன்புறுத்தி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறாயே உன்னைப் போல் பித்துப் பிடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை .
கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே!
எம்பெருமானே உனக்கு பூசை செய்யும் நேரத்தில் கை ஒன்று செய்து கொண்டிருக்கிறது , விழி ஒரு காட்சியை கண்டு கொண்டு இருக்கிறது , வஞ்சகத்தையே பேசும் நாவோ வேறு ஒன்றை பேசிகொண்டிருக்கிறது , துர்நாற்றம் வீசும் புலால் வேறு பரிசத்தை உணர்ந்து கொண்டிருக்கிறது , செவியும் புற விஷயங்களில் ஆர்வம் காட்டி அதைக் கேட்க விரும்புகிறது இவ்வாறு ஐம் பொறி களையும் கட்டுப்படுத்தாமல் நான் செய்யும் பூசையை நீ எவ்வாறு ஏற்பாய் இரு வினைகளையும் தீர்க்கும் ஆண்டவனே .
கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ! கெடுவீர் இந்த மானுடமே!
ஈசனை தரிசிக்க கண்களிருக்கிறது ,சிவ சிந்தனையிலே இருக்க சிந்தையும் இருக்கிறது , மனமுருகி உன்னை பாட இசையும் பாடலும் இருக்கிறது , உன் பாடல்களை கேட்பதற்கு செவிகளும் இருக்கின்றன , பல வகை பச்சிலையால் அர்ச்சனை செய்வதற்கு எண்ணற்ற திருநாமம் உள்ளது , இப்படி உள்ளன்போடு பூசனை செய்தால் எதிரே தோன்றுவதற்கு ஈசனும் இருக்கிறார் , அனைத்தும் இருந்தும் இதை அறியாமல் வாழ்நாள் வீணே கழிந்து மண்ணுக்கே போகும் இந்த மானிடர்களின் அறியாமையை என்னவென்பது .
சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே?
முக்கண்களை உடைய எம் ஈசன் கல்லால் செதுக்கப்பட்ட சிலைகளிலும் செப்பால் செய்யப்பட்ட விக்கிரகத்திலுமா இருப்பார் . இல்லை , பதம் மிகுந்த சொல்லிலும் , சொல்லின் ஆரம்பத்திலும் முடிவிலும் , வேதச் சுருதியிலும்,பகலிலும் இரவிலும் களங்கமில்லாத ஆகாயத்திலும் யாவும் நிலையில்லை என்று ஆய்ந்து தெளிந்து விட்டோர் உள்ளத்திலும் , மெய்யடியார்கள் வாழும் இடங்களுமே ஈசன் இருக்குமிடம் .
வினைப்போகமே ஒரு தேகங்கண்டாய்! வினை தான் ஒழிந்தால்
தினைப்போ தளவும் நில் லாதுகண்டாய்! சிவன் பாதம்நினை!
நினைப்போரை மேவு; நினையாரை நீங்கி இந்நெறியில் நின்றால்
உனைப்போல் ஒருவருண்டோ மனமே எனக்கு உற்றவரே?
மனமே , செய்த வினையின் பொருட்டு அந்த வினைகளை கழிப்பதற்காக , இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்காக இந்த சரீரத்தை அடைந்து இருக்கிறாய் , அணைத்து வினைகளையும் கழித்து விட்டால் இத்தேகம் தினையளவு நேரம் கூட நிலைக்காது , ஆதலால் சிவன் பாதம் சிந்தித்திரு , சிவனை சிந்திப்பவருடன் நட்பாயிரு , சிவபாதம் நினைக்காமல் இருப்பவரை விட்டு விலகு இந்த நல்ல நெறியில் சென்றால் எனக்கு உன்னைப் போல் நெருங்கியவர் யாரும் இல்லை .
பட்டைக் கிழித்துப் பருஊசி தன்னைப் பரிந்தெடுத்து,
முட்டச் சுருட்டி என்மொய்குழ லாள்கையில் முன்கொடுத்து
கட்டியிருந்த கனமாய்க்காரி தன் காமம் எல்லாம்
விட்டுப் பிரியஎன் றோ இங்ங னேசிவன் மீண்டதுவே?
பட்டைக் கிழித்து பெரிய காதறுந்த ஊசியோடு நெருக்கமாக சுற்றி , அதை என் இல்லத்தாளின் கையில் நான் வருவதற்கு முன்பாகவே கொடுத்து எனை கட்டியிருந்த மாயை என் மீதுள்ள இச்சையை ஒழிப்பதற்காகவோ இங்கே சிவன் வந்து இத்திருவிளையாடல் நிகழ்த்தி சென்றானோ .
சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும்,
போதுற்ற பூசலுக்கு என்செய லாம்? செய்த புண்ணியத்தால்
தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கைதனிலே?
சூதாடும் பொருளை ஒத்த தனங்களை உடைய மனைவியும் , காமக் கன்னியரின் புணர்ச்சியும் நம்மை சூழ்ந்துள்ள பொருள்கள் அனைத்தும் உடல் எனும் கூட்டை விட்டு உயிர் பிரியும் நேரம் இந்த பொருள்களால் எந்த பயனும் இல்லை , செய்த புண்ணியத்தால் தான் பயன் உண்டு என்று நான் தெளிவதற்கோ சிவபெருமான் காதறுந்த ஊசியை என் கைகளில் தந்து சென்று விட்டான் .
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!
நெஞ்சே , வலிமையான தோள்களை உடைய அண்ணாமலையர் மலர் திருவடிகளைப் போற்றி எந்நேரமும் துதித்துக் கொண்டிருப்பாய் மனமே , இந்தப் பூதலத்தில் தேடிய துன்பங்களை தருகின்ற செல்வங்களினாலும் தேடி புதைத்து வைத்த திரவியங்களாலும் ஒரு பயனும் இல்லை இவ்வுலகை , உடலை ,தேடியபோருளை விட்டு உயிர் நீங்கும் சமயத்தில் சேர்த்து வைத்த செல்வத்தில இருந்து காதறுந்த ஊசி கூட உன்னோடு வாராது .
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை?
தினையா மளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.
உடலை விட்டு உயிர் நீங்கியவுடன் கட்டிய மனைவியும் பெற்ற மக்களும் வாழ்வும் தேடிய செல்வமும் , வீட்டுவாசலிலே நின்று விடுவர் உன் சுற்றத்தார் மயானம் வரை வந்து வழியனுப்புவர் அதன்பின் உன்னோடு வருவது யாது ? தினையினும் சிறியதாய் எள் அளவே புண்ணியம் செய்திருந்தாலும் அது உன்னைக்காக்க உன்னுடன் வரும் அதன்மூலம் மோட்ச கதி கிடைக்கும் இது சத்தியமான உண்மை .
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!
நாம் தேடிய செல்வமும் ,வாழ்ந்த புகழ் மிக்க வாழ்க்கையும் , வீடு வாசலோடு நின்றுவிடும் . நம்மில் பாதி எனக் கூறி நம்மோடு வாழ்ந்த மனைவியும் அழுது கொண்டே வீதியோடு நின்று விடுவாள் . நாம் கொஞ்சி விளையாடிய நம் மக்களும் தலை மேல் அடித்து அழுது சுடுகாடு வரை வருவர் . நம்முடன் உடன் வருவது இருவினையாகிய பாவ புண்ணியம் மட்டும் தான் .
பாடல்கள் தொடரும் .........
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
- திருவடி முத்துகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக