புதன், ஜூன் 18, 2014

   அடியேன் எழுதிய பாடல்கள் .. 


குருவே சரணம்       பட்டினத்தாரே சரணம்       குருவே துணை 

  
              
                                                                 சிவமயம்




ஊழ்வினையும் உறுத்தி உறுத்தி நம்மைச் 
சூழ்வினையே பெண்ணுருக் கொண்டு மாயையில் 
வீழ்செய்து புண்ணாங்குழி எனும்நரக வாயில்தள்ளி 
பாழ்செய்யும் இப்பிறவிப் பிணிபோக்குவாய் ஈசனே   


ஈசனே பிறந்திறந் துழலும் பிறவியின் 
நாசனே மீண்டும் பிறவா நிலையருளும் 
நேசனே பிறந்தால் உனைமறவா வரமருள்வாய் 
தேசனே நின்பதம் பற்றினேன் எனைக் காத்தருள்வாயே .


மெய்யை மெய்யென் றெண்ணி யிறுமாந்திருந்து
நெய்யிட்டு சோறெடுத்து மெய்வளர்த்து - இது 
பொய்யாய் போகுமென் றுணர்ந்து மெய்யோடு 
உய்வடையும் பேறெனக் கருள்வாய் வினைதீர்த்தவனே 

                                     
                                                -   திருவடி முத்துகிருஷ்ணன் 

                                      என்றும் இறை பணியில் 

                                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



செவ்வாய், ஜூன் 17, 2014

குருவே துணை        பட்டினத்தாரே சரணம்        குருவே சரணம் 









ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ  பட்டினத்தார் திருவடிகள் போற்றி !! 


ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ வாலை திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி !!



       தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனை

         சூதுற்ற பூதலத்திலிருத் தியென்னகண் டாயையா 

         போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால்

         காதற்ற ஊசிகொண் டுலகறிந்த்த உத்தமரே . 



                                                                 -  திருவடி முத்துகிருஷ்ணன் 



இந்த பாடல் என் குருநாதருக்கென அடியேன் அவரை தியானித்து எழுதின பாடல் . இதை என் பாடல்களில் முதற்பாடலாக பதிவு செய்கிறேன் .

                                                     என்றும் இறை பணியில் 


                                                 சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



திங்கள், ஜூன் 16, 2014

அடியேனிடமிருந்து ....................அன்பர்களுக்கு 

                                              சிவமயம் 






 குருவே துணை      பட்டினத்தாரே சரணம்     குருவே சரணம் 




                     இந்த இணையத்தின் இணைப்பில் இருக்கும் மதிப்பிற்குரிய அடியார்களுக்கு அடியேன் திருவடி முத்துகிருஷ்ணனின் பணிவான வணக்கங்கள் .


             எம் குருநாதர் ஐயா திரு பட்டினத்தார் அவர்களை குருவாக நினைத்து  என் தியான வாழ்க்கையை ஆரம்பித்தேன் . அவருடைய திருவருளால் அடியேன் பல சிவ தலங்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறேன் . அப்படி அடியேன் சென்ற தலங்களை பற்றி பல பாடல்களை எழுதியுள்ளேன் . இத்தனை நாள் அதை பதிவிட மனமில்லாமல் இருந்தேன் நண்பர்கள் பதிவிட சொன்ன காரணத்தினால் பாடல்களை பதிவு செய்ய விருக்கிறேன் . அடியேன் படிப்பறிவு இல்லாத காரத்தினால், தமிழறிவு மிக்க பெரியவர்கள் அதிலேதும் பிழைகள் இருந்தால் அடியேனை மன்னிக்கும் படி வேண்டுகிறேன் .


           இந்த பாடல்கள் முழுக்க முழுக்க தியானத்தில் இருக்கும் போது எழுதினேன் . என் வாழ்வில் கடந்து வந்த சங்கடங்கள் பல அதன் தாக்கமும் இதில் அடங்கி இருக்கும் . 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளேன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன் .தினசரி 3 பாடல்களாக பதிவு செய்கிறேன் .


                    பட்டினத்தார் திருவடிகளை போற்றி நாளை முதல் பதிவு செய்கிறேன் .

                                        நன்றி வணக்கம் .


                    என்றும் இறை பணியில்

                                                               திருவடி முத்துகிருஷ்ணன்

             
                                                சிவமேஜெயம் !!

 சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


வெள்ளி, ஜூன் 13, 2014



திருமூலர் அருள் செய்த
                          திருமந்திரத்திலிருந்து ...............










             
                           சில மந்திரங்கள் ..



கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத் தறியாரே .

சிவனை போற்றும் நூல்களை கல்லாத மனிதர்கள் தன்னிலை அறியும் அறிவை இழந்த மூடர்கள் ஆவர் . இவர்களைக் காணவும் அவர் கூறும் நன்மையில்லாத சொற்களை கேட்பதுவும் நம் கடமை இல்லை . இவர்களைப் போல் உள்ளவர்களே இவர்களுக்கு நல்லவராகத் தோன்றுவார் . நல்லவர் கூறும் நயமிக்க உயர்ந்த கருத்துக்களை செவி கொடுத்து கேட்கும் அறிவு அற்றவர்கள் ஆவார்கள் .

நடுவு நின்றார்க் கன்றி ஞானமு மில்லை
நடுவு நின்றார்க்கு நரகமு மில்லை
நடுவு நின்றார் நல்ல தேவருமாவர்
நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே .

தர்மத்தை போற்றி உயர்வையும் , தாழ்வையும் , இன்ப துன்பங்களையும் சமமாக பாவிக்கும் ஞானியர் மகான்களை தவிர பிற மனிதர்கட்கு ஞானம் வாய்ப்பதில்லை . அனைத்தையும் சமம் என கருதுபவர்கட்கு நரக வாழ்வுமில்லை,பிறந்து துன்பத்தை அனுபவிப்பதும் இல்லை . அவர்கள் மனித நிலையை கடந்து மேலான நிலையாம் தேவ நிலையை அடைவார்கள் . அவர்கள் நின்ற நிலையிலே அவர்களை பின்பற்றி நானும் இருக்கின்றேன் . 


                                        என்றும் இறைபணியில்

 
                                                         திருவடி முத்துகிருஷ்ணன் 

     
                                                       சிவமேஜெயம் !!

           சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்ற்வோம் !!




                           
     
                 






சனி, ஜூன் 07, 2014

திருமூலர் அருள் செய்த 


                                     திருமந்திரத்திலிருந்து ..........

                                                            




               சில மந்திரங்கள் 


யாவர்க்குமாம் இறைவற் கொருபச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு  வாயுறை  
யாவர்க்குமாம் உண்ணும்போ தொருகைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே 

மலர் கொண்டு தினமும் பூஜிக்க முடியாவிட்டாலும் ஒரு இலை கொண்டு ஈசனை பூஜிக்க யாவராலும் முடியும் . பசு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் ஒரு வாயளவு உண்ணக் கொடுத்தலும் யாவராலும் முடியும் . நாம் உண்ணும் போது இரந்து கேட்பவர்க்கும் ஒரு கைப்பிடி அன்னம் கொடுக்கவும் யாவராலும் முடியும் . பிறர் வருந்தாத இனிய சொல்லைக் கூறவும் யாவராலும் இயலக் கூடிய ஒன்றே ஆகும்.

தானொரு காலம் சயம்பு வென்றேத்தினும் 
வானொரு காலம் வழித்துணையாய் நிற்கும் 
தேனொரு பால்திகழ் கொன்றை அணிந்தவன் 
தானொரு வண்ணம் என்னன்பில் நின்றானே 

நாம் வாழும் காலத்திலே ஒருமுறையேனும் சுயம்புவடிவான ஈசனை தொழுது சிந்தையில் ஏத்தினால் எம்பெருமான் பெருவாழ்வு என்னும் மேலான வாழ்க்கைக்கு வழித்துணையாய் நிற்பான் . உலகாளும் அம்மையை ஒருபுறம் இருத்தி கொன்றை மலரை செஞ்சடையில் அணிந்தவன் என் அன்பின் வண்ணமாக என்னுள் நிலைத்து நின்றானே .

        
                    என்றும் இறை பணியில் 


                                                               திருவடி முத்து கிருஷ்ணன் 


                                                 சிவமே ஜெயம் !!

          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!








வெள்ளி, ஜூன் 06, 2014

சித்தர்கள் வரலாறு 

                 தாயுமான சுவாமிகள் வரலாறு 

                                 

                               
                              17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் குலத்தில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெஜவல்லி அம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமியான சிவபெருமான் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார். ஒருநாள்... வழக்கம்போல் குழந்தை தாயுமானவர் தியானம் செய்ய உட்கார்ந்ததும், அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. இரவு நீண்ட நேரமாயிற்று. அப்போதும் குழந்தை வீடு திரும்பவில்லை. தந்தை குழந்தையைத் தேடிக்கொண்டு கோயிலுக்கு வந்துவிட்டார். தெய்வ நினைப்பில் தன்னை மறந்திருந்த பிள்ளையின் கையைப் பிடித்து எவ்வளவு நேரம்தான் இப்படிக் கோயிலிலேயே இருப்பாய்? வா வீட்டுக்கு! என்று சொல்லி அழைத்துப் போனார்.
தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார். அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர். விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார். அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள்.
அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார். அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார்.
துயரத்தில் துடிக்கும் ஒரு ஜீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர். இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தாயுமானவர் இல்லற வாழ்க்கையை அறவே வெறுத்தார். இருப்பினும் தமையனின் வற்புறுத்தல் காரணமாக மட்டுவார்குழலி என்னும் குணவதியை மணந்து கனகசபாபதி எனும் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சிறிது காலத்திற்கு பின் துணைவியார் இறந்து போகவே அதற்கு பின் இல்லறவாழ்வை வெறுத்து துறவறம் பூண்டார். திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மவுன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றார். வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர் தாயுமானவர். இவரின் அனுபவங்கள் அப்படியே பாடல்களாக வெளிப்பட்டன. 56 தலைப்புகளில் 1, 452 பாடல்கள் பாடியுள்ளார். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

நன்றி : தினமலர் 
                                                   
                     என்றும் இறை பணியில் 

                                                           திருவடி முத்து கிருஷ்ணன்       
                     
                                            சிவமே ஜெயம் !! 

            சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வியாழன், ஜூன் 05, 2014

மாணிக்க வாசக பெருமான் அருள் செய்த 


                  திருவாசகத்திலிருந்து 























சில வாசகம் 

எம்பிரான் போற்றி வானத்து
அவர் அவர் ஏறு போற்றி
கொம்ப ரார்மருங் குல்மங்கை
கூறவெள் நீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி
எம்மை என்றும் ஆளுமை புரியும் எம்பெருமானே உமக்கு வணக்கம் . விண்ணோர் தமக்கு அருள் புரிந்து அனைத்தையும் ஆண்டருளும் அரசனே உமக்கு வணக்கம் . பெண்ணை மேனியில் பாதியாய் கொண்டு வெள்ளை நீறு பூசியவனே வணக்கம்.செஞ்சுடரே எம் ஈசனே தில்லை அம்பலத்தில் நடம் செய்யும் நாதனே உமக்கு வணக்கம். உயர்ந்த பெரும் பரம் பொருளே என்னை ஆளும் ஒருவனே உம்மை வணங்குகிறேன் . 

வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஓளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோன் ஆகி யான் எனது என்று
அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே


 ஆகாயம் . மண் , காற்று ,நீர் , நெருப்பு  ஆகிய பஞ்ச பூதங்களும் நீயே எம்பெருமானே . உடலாகவும் , உயிராகவும் இருப்பவனும் நீயே . தோன்றும் பொருளாகவும்,தோன்றாப் பொருளாகவும் விளங்குபவனும் நீயே . நான் என்ற ஆணவம் கொண்டு மாயை தனில் ஆட வைப்பதும் நீயே . வான் கடந்து நின்ற உன் பெருமை தன்னை என்ன சொல்லிப் புகழ்வேன் . இறைவா என்னைக் காத்தருள வேண்டுமையா .




                          என்றும் இறை பணியில் ..

                                                    திருவடி முத்துகிருஷ்ணன் 

                                          சிவமேஜெயம் !!

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வியாழன், ஏப்ரல் 17, 2014


சித்தர் பாடல்களிலிருந்து ................

                     திருமூலர் அருளிய திருமந்திரத்திலிருந்து ...

                                       





                              சில மந்திரங்கள் 


பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப் 
பின்னால் பிறக்க இருந்தவர் பேர் நந்தி 
என்னால் தொழப்படும் எம்மிறை மற்றவன் 
தன்னால் தொழப்படு வாரில்லை தானே .

மின்னுகின்ற தங்கத்தால் பின்னியது போல் மின்னிடும் செஞ்சடை பின்புறம் ஒளி வீச எம் உள்ளத்துள் வீற்றிருக்கும் பரம்பொருளின் 
திருநாமம் (பிறப்பும் இறப்பும் இல்லாதான் ) நந்தி என்பதாகும் . எம்மால் இடைவிடாது தொழுதிடும் ஈசனும் அவனே . உலகனைத்தும் புகழ்ந்து போற்றும் எம் இறைவனால் வணங்கப்படுபவர் எவ்வுலத்தில் தேடினாலும் யாவரும் இல்லை .

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது 
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே 

முற்பிறப்பில் சிவபெருமானை போற்றாமல் நற்றவம் இயற்றாமல் இருப்பவர்கள் பிறவி பிணியை ஒழிக்காது பிறவி சுழற்றியில் சிக்கி தவிப்பார்கள் . நான் முற்பிறப்பின் செய்த தவப்பயனால் அவனுடைய பெருமையை செந்தமிழிலில் விளக்கும் அருளை எனக்களித்தான் இறைவன் .

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.


அமர நிலை எனப்படும் இறவா நிலையை அடைந்தவர் அவனை தவிர யாறொருவருமில்லை . தேவரும் அவனைத்தொழுதே அமரத்துவம் பெற்றார்கள் அவனில்லாமல் தேவர்களும் இல்லை . அவன் அருளில்லாமல் செய்கின்ற தவத்திற்கும் நற்பேறு இல்லை .முத்தொழில் புரிந்திடும் மூவர்க்கும் அவன் அருள் இல்லாமல் வேலை ஒன்றுமில்லை . சிவனைத் தொழாமல் பேரின்ப பெரு வீடு அடைவதற்கும் யாவராலும் ஆவதில்லை . 


                            என்றும் இறை பணியில் 
                         
                                                           திருவடி முத்துகிருஷ்ணன் 

                                            சிவமேஜெயம் !!!

         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


திங்கள், ஏப்ரல் 14, 2014

 தேவாரப் பாடல்களில் இருந்து 

   
                     திரு மாணிக்கவாசக பெருமான் அருளிய

                                                  

                                       
திருவாசகத் தேனிலிருந்து

                                    சில துளிகள்  

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதமளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே?


தாயும் தந்தையுமானவனே , ஒப்புவமை இல்லாத மாணிக்கமே, என் அன்பெனும் கடலில் உருவான  அருமையான அமுதமே,பொய்மையான செயல்களையே அதிகமாகச் செய்து வீணாகக் காலத்தைக் கழிக்கின்ற, புழு உறையும் இடத்தை உடம்பாகக் கொண்ட கீழ் பிறப்பெடுத்த  கீழானவனுக்கு , பேசற்கரிய மிகவும் உயர்ந்து போற்றும் மேன்மையான , சிவபதத்தினை எனக்கு
 அருட்செய்த  அருட்செல்வமே, சிவபெருமானே , இப்பிறப்பினில் என் அன்பும் பக்தியும் கொண்டு உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி நீ வேறு எங்கு செல்ல முடியும் .

பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவ தினியே?


 பற்றுகளின் வேரை அடியோடு அழித்திடும் , யாவர்க்கும் முன்னமாய்  உள்ள பழமையான பொருளை,  பற்றும் வழியை அடியவனாகிய  எனக்கு அருள் புரிந்து , நான் செய்யும் வழிபாட்டினை விரும்பி, என் சித்தத்துள் புகுந்து , தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே,அளவற்ற பேரொளியை உடைய விளக்கே , விளக்கினுள் தோன்றும் சோதி மயமானவனே , அருட்செல்வமே, சிவபெருமானே , ஈசனே ,  உன்னை இறுக்கமாகப்  பற்றினேன் . என் அன்புப் பிடியில் இருந்து இனி எங்கும் செல்ல முடியாது .

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெ ழுந்தருளுவதி னியே?


ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே , கோயிலாகக் கொண்டு, என்னை  ஆட்கொண்டு, எல்லையற்ற பேரின்பத்தை அளித்து , என் பிறவி வேரை அறுத்து ,  என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட , தலை ஒட்டு மாலை அணிந்தவனே  , அனைத்தினும் பெரியவனே பரம்பொருளே  வெட்ட  வெளியிலே நான் கண்ட காட்சியே  அடியேனது அருட்செல்வமே , சிவபெருமானே , என் வாழ்வின் இறுதியிலே  உன்னை உறுதியாகப் பற்றினேன் ,  நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது .


                                           என்றும் இறை பணியில் 

                                                                திருவடி முத்துகிருஷ்ணன் 

                                                    சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!

தேவாரப் பாடல்களில் இருந்து ....


திருஞான சம்பந்தர் அருளி செய்த


                                         
தேவாரத் தேனிலிருந்து



                               சில தேன் துளிகள்


ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.

சிவன் உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும் . உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் ஆலமரத்தின் நல்ல நிழலில் உலகம்மை தாயாரோடு தானும் மிகவும் மனம் மகிழ்ந்து விரும்பி இருந்து விட்ட திருத்தலம் திருவிடை மருதூர் இது தானோ .




முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருதீதோ.


முழுமை பெறாத வளரும் பால் போன்ற இளம்பிறையை தன் செஞ்சடைதனில் சூடிய  முதல்வன் ,  தாமரை மலரமர்ந்த நான்முகனும் , திருமாலும் விரும்பித் தொழப்படும் தெய்வம் சிவபெருமான் , உமையம்மையும் தானுமாய் பேரழகோடு வீற்றிருக்கும் திருவிடை மருதூர் இதுவோ .

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே.

பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக விளங்குபவனும் ,தேவருக்கும் மூவருக்கும் தலைவனாய் இருப்பவனும் , உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு ஆலமர நிழலில் எழுந்தருளியிருந்து அவர்களுக்கு ஞானத்தை உபதேசம் செய்தவனுமான எம் ஈசன் இருக்கும் செழிப்புமிக்க நகரம் திருவிடை மருதாகும்.


     என்றும் இறை பணியில் 

                    - திருவடிமுத்துகிருஷ்ணன் 

                  சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!