வெள்ளி, டிசம்பர் 18, 2015

63 நாயன்மார்கள் ..

           இளையான்குடி மாறநாயனார்  வரலாறு  ..

                                              இளையான் குடி என்னும் இயற்கை எழில் கொஞ்சும் ஊரில் உலக மாந்தர்கட்கு உணவிடும் வேளாளர் குலத்தில் அவதரித்தார் மாறனார் . இளையான் குடியில் பிறந்த காரணத்தினால் இளையான்குடி மாற நாயனார் என்று அழைக்கப் பட்டார் . பெரும் செல்வங்களை உடைய மாறனாருக்கு வயல் வெளிகளும் நிறைய இருந்தன  . சிவபக்தியில் சிறந்து விளங்கிய மாறனார் எந்நேரமும் எம்பெருமானது திருநாமத்தை மனதில் எண்ணி அவன் அடியார்களுக்கு விருந்தோம்பல் செய்வதை தம் தொண்டாக செய்து வாழ்ந்து வந்தார் . தம் இல்லம் தேடி வரும் அடியார்களை சிவபெருமானெனக் கருதி இருக்கையில் அமர்த்தி அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கி அடியார்களுக்கு திருவமுது செய்து வந்தார் . 


              தாம் கொண்ட கொள்கையில் அணு அளவும் பிறழாது சிவத்தொண்டை புரிந்து வந்தார் இப்படி இருக்கையில் பெருமானார் மாறனாரின் பக்தியின் திறத்தை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் . வறுமையே காணாத மாறனாரை வறுமையை காண செய்தார் . வறுமையில் இருந்தாலும் தம்முடைய தொண்டை வழுவாது செய்து வந்தார் . இப்படி இருக்கையிலே ஈசனார் தம்முடைய தொண்டரை ஆட்கொள்ள திருவுளம் கொண்டு மாறனாரின் சிவனடியார் வடிவந்தாங்கி மாறனார் இல்லம் எழுந்தருளினார் . நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போது வந்த அடியவரை நாயனார் வணங்கி பாத பூசை செய்து பெருமானே சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள் அடியேன் தங்களுக்கு திருவமுது செய்து கொடுக்கிறேன் என்று ஆசனத்தில் அமர வைத்து விட்டு தம் மனையாளிடத்தில் சென்று , வீட்டில் எதுவும் இல்லை என்ன செய்ய என்று கேட்ட பொழுது பதி கொண்ட விரதத்திற்கு பங்கம் வந்துவிடக் கூடாதே என்று கலங்கி நிற்கையில் அம்மையாருக்கு ஒரு யோசனை நம் நிலத்தில் விதைத்த விதைநெல்லை எடுத்து வாருங்கள் அதை வறுத்து குத்தி சாதம் சமைக்கிறேன் என்று கூற , பெரும் பொன் புதையல் தனக்கு கிடைத்தாற் போல மனமகிழ்ந்து மாறனார் வயல் வெளிக்கு சென்றார் 


                                   கொட்டும் மழையில் நனைந்த படி விதைநெல்லை கூடையில் வாரி எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் . அம்மையாரும் தோட்டத்திலிருந்து கீரை வகைகளை பறித்து வந்தார் . மாறனார் கொடுத்த விதை வாங்கிக் கொண்டு சமைக்க விறகு இல்லையே என்று வருத்தம் கொண்டார் சற்றும் மனம் பதிக்காமல் நாயனார் தம் குடிசையிலிருந்த கொம்புகளை முறித்து சமைப்பதற்கு கொடுத்தார் மகிழ்வுடன் மனைவியார் நொடிப்பொழுதில் சுவை மிகு திருவமுது படைத்தார் . அடியாரை வணங்கி திருவமுது செய்யுங்கள் சுவாமி என நமஸ்கரித்து அவர் பாதங்களில் வீழ்ந்தனர் . எழுந்து பார்க்கையிலே அங்கு அடியவரை காணாது திகைத்தனர் . அங்கே பெரும் சோதியாய் மேள தாளம் முழங்கிட ரிஷப வாகனத்தில் உலகம்மையாளோடு தோன்றினார் உலகுக்கு அளக்கும் பெருமான் . 

                       நம்பால் அன்பு கொண்ட அன்பனே ! உனது வறுமையையும் பொருட்படுத்தாது அடியவர்களுக்கு கொடுப்பதே சிறந்த அறம் என்று கொண்ட கொள்கையில் சிறிதும் பிசகாது நீ செய்த இந்த தொண்டு சிறந்தது .
 இன்னும் பல ஆண்டுகள் நீவிர் இருவீரும் வாழ்ந்து குறைவில்லா செல்வங்களோடு இன்பங்கள் பலபெற்று அடியார்களுக்கு தொண்டு புரிந்து என் பதத்தை வந்தடைவீர்களாக ! என்று கைலாயபதியார் திருவாய் மலர்ந்தருளினார் .  காணக்கிடைக்காத கற்பகத்தை கண்ட பின் வேறு என்ன வேண்டும் இருவரும் ஐயனை வணங்கி தோத்திரம் செய்து தரைவீழ்ந்து வணங்கினார்கள் . பலகாலம் வாழ்ந்து தொண்டு செய்து பரமனின் பதத்தை அடைந்து இன்புற்று வாழ்ந்தார்கள் . 


                             

                          - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


              சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!


நம்முடைய sivamejeyam.blogspot என்கிற வலைப்பதிவு sivamejeyam.com என்று இணைய தளமாக உருவெடுத்துள்ளது . என்பதை நாயேன் தெரிவித்துக் கொள்கிறேன் . 

                                    நன்றி . சிவமேஜெயம் .                          


                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக