வியாழன், டிசம்பர் 24, 2015

மெய்ப்பொருள் நாயனார் வரலாறு ..




             சேதி நாட்டிலுள்ள திருக்கோவிலூர் என்ற ஊரை மலையான்மான் குலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் . அக்குலத்திலே அவதாரம் செய்தவர் மெய்ப்பொருள் நாயனார் . இவர் தாம் அரசாட்சியிலே அறநெறி ஒங்க ஆட்சி செய்தார் . பகை மன்னர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வீரமிக்கவராகத் திகழ்ந்தார் . சிவ வழிபாடே இப்பிறவிப்பிணி போக்கும் திருநீறு இடுவதே அந்நோய்க்கு மருந்தாகும் என்று வாழ்ந்து வந்தார் நீறிடும் அடியவரைக் கண்டால் பக்திப்பெருக்கில் மூழ்கி விடுவார் . சிவனடியார் வடிவமே மெய்ப்பொருள் என்று சிவனடியார் வேண்டுவற்றை குறைவின்றி கொடுத்து ஆட்சி செலுத்திவந்தார் .

                        இப்படி நல்லாட்சி செய்து வந்த மெய்ப்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட அரசன் ஒருவன் அவனது பெயர் முத்தநாதன் என்பதாகும் . பலமுறை மெய்ப்பொருள் நாயனாரிடம் போர் செய்து தோல்வி கண்டவன் போரிலே அவரை வெல்லமுடியாது என்று வஞ்சனையால் திட்டம் தீட்டினான் சிவனடியார் வேடந்தாங்கி அவரை பழிதீர்த்துக் கொள்ள எண்ணினான் . அதே போல தன் மேனியெல்லாம் திருநீறு பூசி சடை முடி தாங்கி  ஒரு புத்தகத்தில் குறு வாழை மறைத்து நாயனாரைக் காண புறப்பட்டான் . திருக்கோவிலூர் வந்தடைந்தான் வாயில் காப்பாளர்கள் புத்தகத்தைத் தாங்கி வரும் சிவனடியாரை வணங்கி உள்ளே போக அனுமதித்தனர் . அவன் நேராக மெய்ப்பொருள் நாயனாரின் பள்ளியறைக்கு வந்தான் . அங்கு வாயில் காவலன் தத்தன் என்பவன் இது அரசரைக் காணும் நேரமல்ல என்று கூறி தடுத்தான் . அது கண்ட முத்தநாதன் தான் அரசர்க்கு வேதத்தை ஓதுவதற்கு வந்திருப்பதாகவும் தன்னை தடை செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளே நுழைந்து விட்டான் . அங்கே மன்னர் நித்திரையில் இருந்தார் .  

                  மன்னருடன் உடன் இருந்த அரசியார் சிவனடியார் வரவு கண்டு மன்னவனின் நித்திரை கலைத்தாள் . எழுந்த அரசன் அடியார் வேடத்தில் இருந்தவனை வணங்கி வரவேற்றான் . முத்தநாதன் யாரிடமும் இல்லாத சிவாகமம் தன்னிடம் இருப்பதாகவும் அதன் பொருளை உனக்கு கூறுமாறு வந்திருக்கிறேன் என்று கூறினான் . மன்னரும் தான் செய்த பாக்கியம் சுவாமி உபதேசம் செய்யுங்கள் என்று வணங்கி நின்றார் . வஞ்சக எண்ணம் கொண்ட முத்தநாதன் உனக்குபதேசம் செய்கையிலே அங்கு யாரும் இல்லாமல் நாம் இருவரும் தனித்து இருக்க வேண்டும் என்று கூற மன்னவன் அரசியாரை அந்தப்புரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் . அவனை ஆசனத்தில் அமரச் செய்து தான் தரையில் அமர்ந்து கேட்பதற்கு தயாரானார் . புத்தக முடிச்சை அவிழ்ப்பது போல பாசாங்கு செய்தவன் உள்ளே வைத்திருந்த குறு வாளால் மன்னவரை குத்தினான் .  குத்துப்பட்டு தரையில் வீழும் அந்நேரமும் மெய்யடியார் வடிவத்தை வணங்கினான் . இதைக்கண்ட மெய்க்காவலாளி தத்தன் ஓடி வந்து தன் உடைவாளை உருவி அவனை வெட்டப் போனான் . 

                           அது கண்டு மன்னன் தத்தா ! அவர் நம்மவர் அவரை பத்திரமாக நம் எல்லையைக் கடந்து விட்டு வா என்றார் . தத்தனும் மன்னனை வணங்கி அவரை அழைத்து வந்தான் இச்செய்தி கேட்ட மக்கள் அனைவரும் வெகுண்டு அத்தீயவனை அழிக்க வேண்டுமென்று வந்தார்கள் தத்தன் அவர்களைத் தடுத்து அரசர் உரைத்ததை கூறினான் . பின் முத்த நாதனுக்கு இடையூறு இல்லாதவண்ணம் நகரத்து எல்லையில் கொண்டு அந்தக் கொடியவனை விட்டு ஓடி வந்தான் . வந்ததும் அரசனை வணங்கி மன்ன வீடு வந்து வந்து விட்டேன் என்றதும் , தத்தா நீ செய்த செயலுக்கு நன்றி என்று தன் உயிர் பிரியும் தருவாயில் , தம் அமைச்சர்களையும்  , தம் குமாரர்களையும் அழைத்து தாம் கடைப்பிடித்து வந்த நெறியினைக் காப்பீர் என்று கூறி , அம்பலத்தரசனின் திருவடியினை தன் சிந்தையில் தியானித்தார் . அங்கே பேரொளியுடன் அம்மையப்பனாக காட்சிக் கொடுத்தான் தில்லையம்பலவன் . மெய்ப்பொருள் நாயனாரை வாழ்த்தி தம் திருவடி நீழலில் சேர்த்துக் கொண்டு மறைந்தார் . மெய்ப்பொருள் நாயனாரும் ஐயனின் திருவடியில் பேரின்பத்தை பெரும் நிலையை அடைந்தார் .   


                            - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக