வெள்ளி, ஜூன் 03, 2011

தத்தாத்ரேயர்


                                                                                            


அத்ரி மஹரிஷி, இவரது மனைவி அனுசுயா தேவி . இவர்கள் தமக்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி-அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வரமளிக்கின்றனர்.ஒரு சமயம்  பதிவிரதையான அனுசுயா தேவியை சோதிக்க பிரம்மா, விஷ்ணு, சிவனை மும்மூர்த்திகளும் அனுசுயையிடம் சென்று யாசகம் வேண்டினார்கள் உடலில் உடை ஏதும் இல்லாமல் யாசகம் அளிக்க வேண்டும் என்றனர் . இக்கட்டான இந்த சூழ்நிலையில் அனுசுயை தனது கணவனான அத்ரிமகரிஷியை மனதால் தியானித்து அவரது கமண்டல நீரை மும்மூர்த்திகளின் மீது தெளித்தாள், உடனே மூவரும் பச்சிளம் குழந்தையாக மாறினார்கள். அதன்பின் உடையற்ற தன்மடி மீது அந்த குழந்தைகளை கிடத்தி பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்ரிமகரிஷி வீடு திரும்பியதும் மூன்று குழந்தைகளையும் அவர் பாதத்தில் கிடத்தினாள். மகரிஷியும் குழுந்தைகளை வாரி அணைத்தார். அணைத்த உடனே அந்த 3 குழந்தைகளும் இரண்டு கால்கள், ஒரு உடல், மூன்று தலைகள் மற்றும் 6 கைகளுடன் கூடிய உருவமாக மாறின. இந்த உருவமே தத்தாத்ரேயர் எனப்பட்டது. நமது விருப்பத்தை  பூர்த்தி செய்யவே மும்மூர்த்திகளும் இவ்வாறு வந்தனர் எனக் கூறி மகரிஷி அனுசுயையை ஆசிர்வதித்தார்.
 அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'த(3)த்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார். இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம். இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தானுமாலையனாக இறைவன் இங்கே இருக்கிறார்.

யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கர்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால் அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.


பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது. பாரத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும் படித்திருக்கிறேன். இதேபோல ஸஹ்யமலையில் காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிர்காச அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி (சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது.

தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக