வியாழன், ஜூன் 02, 2011

ஆன்மீக சிந்தனைகள்

                                             தாயுமானவர்


                               

                                     வாழ்வில் உயர 

* நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர். பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

* உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும். ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

* தளர்வும், சோர்வும், சலிப்பும் முதுமையை விளைவிக்கிறது என்றால், உறுதியும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.

* உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

* உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்

                          ஆனந்தம் என்பது எதில் இருக்கிறது  


இறைவனே! ஆனந்தத்தின் மொத்தவடிவம். ஆனந்தம் பெறவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உழைப்பதும், உண்பதும், ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வதும் எல்லாம் ஆனந்தத்தின் பொருட்டே. நம்மால் என்றுமே ஆனந்ததை விடுத்து வாழவே முடியாது.எங்கும் ஆனந்தமே. எதிலும் ஆனந்தமே! இதற்காகவே, இறைவனும்
சிற்சபையில் ஆனந்த நடமிடுபவனாக இருக்கிறான்.இறைவன் எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கிறான். நம் இதயத்தாமரையாகிய மனத்தில் தேனாக இருந்து தித்திக்கும் இனிமை உடையவன் இறைவன். அவனையே எப்போதும் சிந்திப்போமாக.பொருளின் மீது நாட்டம் கொண்டவனுக்கு அருட்செல்வம் என்றும்எட்டாக்கனியாகும். திருவோட்டையும், செல்வமாகிய நிதியையும் ஒன்று போல காணும் உத்தமர்களின் நெஞ்சத்தை தன் இருப்பிடமாக கொண்டிருப்பவன் இறைவன். குழந்தையின் மனதில் தான் என்னும் அகங்காரம் இல்லை. இவர் நல்லவர், கெட்டவர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதங்கள் தெரிவதில்லை. மனிதனும் குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்டால் அவனே ஞானியாவான்.வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது கடவுளின் கழலடிகளையே வழிபட வேண்டும்.அவன் திருவடிகளே ஆனந்தம் தரும் .


                        மனம் என்னும் மாயக்கண்ணாடி 


 உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.

* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.

                             யாரிடம் விலகி இருப்பது

உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.
* மனம் சலிக்காமல் இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும்.
* பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.




தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன்

3 கருத்துகள்: