அடியேன் எழுதிய பாடல்கள் ....
குரு வணக்கம்
காசினிமுற்றாகி னுங்கைக்குள் வந்தாலுந்தூ சேனுவாராதென்று
ஊசியாலுலக நிலையாமையுணர்ந்த உத்தமராமெம் குருநாதர்
பட்டினத்தார் பதமதை நாயேன் கருத்தில் நிறுத்தி யெங்கள்
பட்டில்பெரு மானுக்கு பாடல் யானியற்றுவனே .
வில்வேஸ்வரர் வணக்கம்
வணங்குகிறேன் வானுமண்ணும ளந்தவன்காணாத் திருவடியை
வணங்குகிறேன் அண்டம்பலக டந்துமயன்காணாச் சடைமுடியை
வணங்குகிறேன் தொண்டருள்ளத் துறைந்தருளும் வில்வேஸ்வரனை
வணங்கி பட்டில்பெருமானுக்கு பாடலியற்றுவனே .
வாலை துதி
காலை கதிரவன் கண்ணியவளொரு கண்ணாம்
மாலை வருமதியும் மாதவள் மறு கண்ணாம்
மேலை யொருகண்ணோடு கண்மூன்று டையவளாம்
வாலை திரிபுரையின் பொற்பதமது காப்பு .
விநாயகர் வணக்கம்
மதயானை முகத்தவன் மனத்தால் நினைக்க வருபவன்
முதல்வீட்டி லருள்பவனருகம் புல்லிலகமகிழ் பவன்வினை
யகற்றிடும் நாயகன்மூஷிக மேறிடும் விநாயகன்பதம் பணிந்தீ
தகற்றிடும் திருவாகீசனுக்கு பாடலியற்றுவனே .
சுப்ரமண்யர் வணக்கம்
அருணகிரி நாதருக்கு முதலடி யெடுத்துக் கொடுத்தானப்பன்
பரமனுக்கு பிரணவவிளக் கங்கொடுத்தா னலையாழிமால்
மருகனழகு முருகன்சுப்ர மன்யன்குகனை நாயேன்பணிந்து
திருவாகீச பெருமானுக்குப் பாடலியற்றுவனே .
திருவாகீசன் பாடல்கள்
அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங்
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்களீசனே .
அஞ்சுபுலனை யுமடக்கும்வகை யறியேன்பஞ்ச பூதநாயகா
செஞ்சடையை நினையேன் பஞ்சனையை மறவேன் மாயையில்
துஞ்சிவீழ்ந் தின்னுமோர் கருப்பைக்கிருப் பவனைவில்வேசா
அஞ்சேலென் றபயமளித்தாட் கொள்ள வேண்டுமையா .
ஆற்றை யணிந்த தும்பை தலையன்
நீற்றை புணைந்த செந்நிற மேனியன்
கூற்றை பணிகொள் கூத்தன் பேரின்ப
பேற்றை யளிப்பவன் திருவாகீசனே .
வில்லடி பட்டான்பாசுபத மளித்திட்டா னன்பால்
கல்லடி பட்டான்கருணை பொழிந்திட்டா னற்றமிழால்
சொல்லடி பட்டான் கவர்ந்த பொருட் கொடுத்திட்டான்
அல்லற் படுமேழைக் கென்செய் வானோ ஒற்றியூரான் .
மாயவன் தங்கைக்கு தன்னில் பாதி கொடுத்த
தூயவன் பிறந்திறந் தல்லற்படுத்துந் தீராபெரும்
நோயதை தீர்ப்பவன் காலனுக்குங் காலனால
வாயன் வீற்றருள் செய்யும் விஜயாபதி .
அண்டம் படைத்தவனாம் - என் அப்பன்
ஆலகால விடமுண்டவனாம்
இன்னல் தவிர்ப்பவனாம் - என் அப்பன்
ஈடு இணை இல்லாதவனாம்
உமையொரு பாகனாம் - என் அப்பன்
ஊழ் வினை அறுப்பவனாம்
எங்கும் நிறைந்தவனாம் - என் அப்பன்
ஏகமாக நின்றவனாம்
ஐயம் தீர்ப்பவனாம் - என் அப்பன்
ஒளிர்கின்ற மெய்ச் சுடராம்
ஓங்காரப் பரம்பொருளாம் - என் அப்பன்
ஔடதமாய் பிணி தீர்ப்பவனாம்
அஃகாது அவனருளை அளிப்பான் வில்வேஸ்வரன் .
தங்கத்தை பழித்திடுஞ் செஞ்சடைதன்னில் வளர்பிறையுங்
கங்கையுஞ் சூடியகோல மென்ன ! சுட்டெரிக்கும் செந்தீயை
தங்கையி லேந்தியாடிடும் நின்நடமென்ன !பிற வாநிலையருளும்
எங்கள்குல தெய்வமேதிரு வாகீசா ஏழையெம்மை கண்டுகொள்ளே .
வேண்டேன் சிந்தைதனில் உனையன்றி வேறோர் சிந்தனையை
வேண்டேன் யான்கைதொழ உனையன்றி வேறோர் தெய்வத்தை
வேண்டேன் நின்னடியார்நட் பல்லாமல்வே றோர்நட்பையென்றும்
வேண்டுவேன் திருவாகீசன் மலரடியை யணைந்திருக்க .
ஒன்றான தன்னுள்ள யனைத்தையு மடக்கினான்
நன்றாக தொழுவோர்தம் தீவினையை முடுக்கினான்
குன்றாத பெருஞ்சுடரா யனைத்துங்கடந் துநின்றான்பத
மொன்றாத மூடனெனக் கருள்வானோ திருவாகீசன் .
ஒப்பிலொ ருவனைவுமை யொருபாகனைவே டன்கண்ணெடுத்
தப்பியபின் னருள்செய்தவ னைதாருவனமு னிவர்களேவிய
கப்பியகரி வுரிபோர்த்தவனை பட்டிலூரானை திருவாகீசனை
அப்பினில் உப்பெனவே கலந்திரு நன்னெஞ்சே .
விளக்கிட விலகிடுந் துன்பமெல்லாங் கதிர்பட்ட பனிபோற்றிறு
விளக்கிட அகன்றிடுந் தீவினையெல்லாம் பட்டிலூரானுக்குத்திரு
விளக்கிட குறைவிலாது பெருகிடுஞ்செல்வ மெலாம்வாகீசனுக்கு
விளக்கிடு மடியவர் வழியெலாம் வாழுமிது சத்தியமே .
திருப்பணி பலசெய்தான் வீரராஜேந்திரன் பட்டிலூர்பதிக்கு
திருப்பணி செய்திடுமடியவர் குறைதீருமென்றான் வாகீசனுக்கு
திருப்பணி செய்பவர்வம் சந்தழைத்தோங்கு மென்றான் பட்டிலூருக்கு
திருப்பணி செய்பவர்பதந் தன்தலைமேலென்று செப்பேடு செய்தானே .
- திருவடி முத்து கிருஷ்ணன்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம்
ஸ்ரீ பட்டினத்தார் குடில்
6/400 வண்ணார் பேட்டை
தாளமுத்து நகர்
தூத்துக்குடி 2
9944091910