வெள்ளி, ஜனவரி 13, 2023

                                  அடியேன் எழுதிய பாடல்கள் ....








                                          சிவமேஜெயம்


குருவே துணை       பட்டினத்தாரே சரணம்      குருவே சரணம்

                                 
                                   குரு வணக்கம்

காசினிமுற்றாகி னுங்கைக்குள் வந்தாலுந்தூ சேனுவாராதென்று
ஊசியாலுலக நிலையாமையுணர்ந்த உத்தமராமெம் குருநாதர்
பட்டினத்தார் பதமதை நாயேன் கருத்தில் நிறுத்தி யெங்கள்
பட்டில்பெரு மானுக்கு பாடல் யானியற்றுவனே . 

                             
                                  வில்வேஸ்வரர் வணக்கம்

வணங்குகிறேன் வானுமண்ணும ளந்தவன்காணாத் திருவடியை
வணங்குகிறேன் அண்டம்பலக டந்துமயன்காணாச் சடைமுடியை
வணங்குகிறேன் தொண்டருள்ளத் துறைந்தருளும் வில்வேஸ்வரனை
வணங்கி பட்டில்பெருமானுக்கு பாடலியற்றுவனே .


                               வாலை துதி

காலை கதிரவன் கண்ணியவளொரு கண்ணாம்
மாலை வருமதியும் மாதவள் மறு கண்ணாம்
மேலை யொருகண்ணோடு கண்மூன்று டையவளாம்
வாலை திரிபுரையின் பொற்பதமது காப்பு .


                             விநாயகர் வணக்கம்

மதயானை முகத்தவன் மனத்தால் நினைக்க வருபவன்
முதல்வீட்டி லருள்பவனருகம் புல்லிலகமகிழ் பவன்வினை
யகற்றிடும் நாயகன்மூஷிக மேறிடும் விநாயகன்பதம் பணிந்தீ
தகற்றிடும் திருவாகீசனுக்கு பாடலியற்றுவனே .


                                 சுப்ரமண்யர் வணக்கம்

அருணகிரி நாதருக்கு முதலடி யெடுத்துக் கொடுத்தானப்பன்
பரமனுக்கு பிரணவவிளக் கங்கொடுத்தா னலையாழிமால்
மருகனழகு முருகன்சுப்ர மன்யன்குகனை நாயேன்பணிந்து
திருவாகீச பெருமானுக்குப் பாடலியற்றுவனே .

                     திருவாகீசன் பாடல்கள்


அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங்
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்களீசனே .

அஞ்சுபுலனை யுமடக்கும்வகை யறியேன்பஞ்ச பூதநாயகா
செஞ்சடையை நினையேன் பஞ்சனையை மறவேன் மாயையில்
துஞ்சிவீழ்ந் தின்னுமோர் கருப்பைக்கிருப் பவனைவில்வேசா
அஞ்சேலென் றபயமளித்தாட் கொள்ள வேண்டுமையா .

ஆற்றை யணிந்த தும்பை தலையன்
நீற்றை புணைந்த செந்நிற மேனியன்
கூற்றை பணிகொள் கூத்தன் பேரின்ப
பேற்றை யளிப்பவன் திருவாகீசனே .

வில்லடி பட்டான்பாசுபத மளித்திட்டா னன்பால்
கல்லடி பட்டான்கருணை பொழிந்திட்டா னற்றமிழால்
சொல்லடி பட்டான் கவர்ந்த பொருட் கொடுத்திட்டான்
அல்லற் படுமேழைக் கென்செய் வானோ ஒற்றியூரான்  .

மாயவன் தங்கைக்கு தன்னில் பாதி கொடுத்த
தூயவன் பிறந்திறந் தல்லற்படுத்துந்  தீராபெரும்
நோயதை தீர்ப்பவன் காலனுக்குங் காலனால
வாயன் வீற்றருள் செய்யும் விஜயாபதி .


             அண்டம் படைத்தவனாம்  - என் அப்பன்
                ஆலகால விடமுண்டவனாம்
           இன்னல் தவிர்ப்பவனாம்    - என் அப்பன்
                ஈடு இணை இல்லாதவனாம்
            உமையொரு பாகனாம்     -  என் அப்பன்
              ஊழ் வினை அறுப்பவனாம்
          எங்கும் நிறைந்தவனாம்     - என் அப்பன்
                     ஏகமாக நின்றவனாம்
            ஐயம் தீர்ப்பவனாம்           -  என் அப்பன்
                    ஒளிர்கின்ற மெய்ச் சுடராம்
           ஓங்காரப் பரம்பொருளாம் - என் அப்பன்
                   ஔடதமாய் பிணி தீர்ப்பவனாம்
             அஃகாது அவனருளை அளிப்பான் வில்வேஸ்வரன்  .

தங்கத்தை பழித்திடுஞ் செஞ்சடைதன்னில் வளர்பிறையுங்
கங்கையுஞ் சூடியகோல மென்ன ! சுட்டெரிக்கும் செந்தீயை
தங்கையி லேந்தியாடிடும் நின்நடமென்ன !பிற வாநிலையருளும்
எங்கள்குல தெய்வமேதிரு வாகீசா ஏழையெம்மை கண்டுகொள்ளே .

வேண்டேன்  சிந்தைதனில் உனையன்றி வேறோர் சிந்தனையை
வேண்டேன் யான்கைதொழ உனையன்றி வேறோர் தெய்வத்தை
வேண்டேன் நின்னடியார்நட் பல்லாமல்வே றோர்நட்பையென்றும்
வேண்டுவேன் திருவாகீசன் மலரடியை  யணைந்திருக்க .

ஒன்றான தன்னுள்ள யனைத்தையு மடக்கினான்
நன்றாக தொழுவோர்தம் தீவினையை முடுக்கினான்
குன்றாத பெருஞ்சுடரா யனைத்துங்கடந் துநின்றான்பத
மொன்றாத மூடனெனக் கருள்வானோ திருவாகீசன் .

ஒப்பிலொ ருவனைவுமை யொருபாகனைவே டன்கண்ணெடுத்
தப்பியபின் னருள்செய்தவ னைதாருவனமு னிவர்களேவிய
கப்பியகரி வுரிபோர்த்தவனை பட்டிலூரானை திருவாகீசனை
அப்பினில் உப்பெனவே கலந்திரு நன்னெஞ்சே .

விளக்கிட விலகிடுந் துன்பமெல்லாங் கதிர்பட்ட பனிபோற்றிறு
விளக்கிட அகன்றிடுந் தீவினையெல்லாம் பட்டிலூரானுக்குத்திரு
விளக்கிட குறைவிலாது பெருகிடுஞ்செல்வ மெலாம்வாகீசனுக்கு
விளக்கிடு மடியவர் வழியெலாம் வாழுமிது சத்தியமே .

திருப்பணி பலசெய்தான் வீரராஜேந்திரன் பட்டிலூர்பதிக்கு
திருப்பணி செய்திடுமடியவர் குறைதீருமென்றான் வாகீசனுக்கு
திருப்பணி செய்பவர்வம் சந்தழைத்தோங்கு மென்றான் பட்டிலூருக்கு
திருப்பணி செய்பவர்பதந் தன்தலைமேலென்று செப்பேடு செய்தானே .


                  

                        - திருவடி முத்து கிருஷ்ணன்


மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 
                       

                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக