வெள்ளி, ஜனவரி 13, 2023

                                அடியேன் எழுதிய பாடல்கள் ...






                     சோதிக் கண்ணிகள்

அண்டம் படைத்த சோதி ஆதியந்த மில்லா சோதி
தாயுந் தந்தையுமான சோதி தாயுந்தந்தையுமில்லா சோதி

தானே உருவான சோதி தனக்கு நிகரற்ற சோதி
கண்டம் கருத்த சோதி அண்டமெல்லாம் நிறைந்த சோதி

அருவுருவாய் நின்ற சோதி குருவுக்குங் குருவான சோதி
பட்டிலூர் ஆளும் சோதி பட்டினத்தார்க் கருளிய சோதி

கழுமர மெரித்த சோதி கடுவெளி நின்ற சோதி
வறுமையை யகற்றும் சோதி பொறுமையை அளிக்கும் சோதி

பிள்ளையாய் வந்த சோதி தொல்லை தனை தீர்த்த சோதி
வொற்றியூர் உறைந்த சோதி குருநாதர் கலந்த சோதி

பிறவா நிலையருளும் சோதி பிறவிக்கு மருந்தான சோதி
வில்லடி பட்ட சோதி வில்வேஸ்வரனாய் நின்ற சோதி

கல்மிதக்க வைத்த சோதி கல்லடி பட்ட சோதி
பிள்ளைக்கறி கேட்ட சோதி தில்லையுள் ளெழுந்த சோதி

அயனு மாலுமறியா சோதி மயக்கம் தீர்க்கும் மகா சோதி
ஆலகால முண்ட சோதி ஆலமரத்தமர் அருஞ் சோதி

ஆனையுரி போர்த்த சோதி அயன்தலை பறித்த சோதி
கங்கை யணிந்த சோதி சங்கடங்கள் தீர்க்கும் சோதி

மூன்று புரமெரித்த சோதி முக்கண்ணுடைய முதற் சோதி
வளர் பிறையை பூண்ட சோதி மலர்கொன்றை சூடிய சோதி

எலிக்கருள் செய்த சோதி புலித்தோல் தரித்த சோதி
நந்திவிலக பணித்த சோதி நந்தனார்க் கருளிய  சோதி

நவகோள்கள் நடுங்கும் சோதி நடு நாயகமாய் நின்ற சோதி
பிட்டுக்கு மண்சுமந்த சோதி பட்டிலூ ரருளும் பரஞ்சோதி

வானுமண்ணுங் கடந்த சோதி ஆணும்பெண்ணுமான சோதி
வன்றொண்டர் போற்றும் சோதி தொண்டர்க்கு தூது சென்ற சோதி

திருவாசகம் எழுதிய சோதி திருவாகீசனாய் நின்ற சோதி
நரியை பரியாக்கிய சோதி உரிதிருடிக் கருளிய  சோதி

வேடன்கண் வாங்கிய சோதி வேடனை கண்ணப்பராக்கிய சோதி
முனிமைந்தனுக் கருளிய சோதி கூற்றுவனை யுதைத்த சோதி

காமத்தை கடந்த சோதி காமனை எரித்த சோதி
ஐம்பூதமாய் ஆன சோதி ஐம்புலன்களை அடக்கும் சோதி

சித்தம்தெளிய அருளும் சோதி சித்தருக்கருளிய சோதி
தொட்டிலூரை தடுக்கும் சோதி பட்டிலூர் உறைந்த சோதி

பந்தபாச மறுக்கும் சோதி வந்தவினை போக்கும் சோதி
குயவனை சோதித்த சோதி குவலயத்துள் நற்பேறளித்த சோதி

வெள்ளை விடையேறும் சோதி கொள்ளை பாவம்போக்கும் சோதி
கடையேனுக் கருளும் சோதி திருவிடைமருதூ ரமர்ந்த சோதி

திங்கள்முடி சூடிய சோதி எங்கள் பட்டிலூர் அமர்ந்த சோதி
வடலூர் வாழும் சோதி வள்ளலார் பார்த்த சோதி

முன்னை எரிக்கும் சோதி பின்னை தவிர்க்கும் சோதி
ஆடிப் படைக்குஞ் சோதி ஆடிக் காத்தழிக்கும் சோதி

தக்கன் வேள்வி தகர்த்த சோதி ஒக்கயெதுவும் இல்லா சோதி
வேதன் தலை பறித்த சோதி வேத நாயகனாய் நின்ற சோதி

அண்டமெல்லாம் கடந்த சோதி அண்டமெல்லா மாளும் சோதி
தொண்டருள்ளம் உறையும் சோதி விண்டவர் காணா சோதி

செல்வமெல்லாம் அருளும் சோதி பட்டிலூர் உறைந்த சோதி
வினையெல்லாம் தீர்க்கும் சோதி திருவாகீசனா யமர்ந்த சோதி .


  - திருவடி முத்து கிருஷ்ணன்

 மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 

ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக