சனி, செப்டம்பர் 02, 2017

         சித்தர்கள் அருளும் கோவில்கள் ..


   தோரணமலை முருகன் கோவில் 
     


                          முருகப்பெருமான் அருளாட்சி செய்து வரும் பல புண்ணிய மலைகளில் இத்தோரணமலையும் ஒன்று  . இந்த மலையின் சிறப்புகளை சொல்வதற்கு இந்த ஒரு பதிவு கண்டிப்பாக போதாது அவ்வளவு பெருமை வாய்ந்தது இந்த தோரணமலை . தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவரும் அவருடைய சீடர் தேரையரும் வழிபட்ட மலை . பல மூலிகைகைள் நிறைந்த இந்த மலையில் தான் தேரையர் தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிகள் பல செய்து இங்கேயே பல ஆண்டுகாலம் தவம் புரிந்து இன்றும் அவர் அருள் செய்து வரும் அதிசய மலை . 





                         தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் அமைந்து இருக்கிறது . இங்கு முருகப்பெருமான் மலைக்குகையில் இருந்து அருள் பாலிக்கிறார் . எத்துணை துன்பம் நேரினும் முருகா என்றழைக்க நொடியில் அனைத்தையும் பகலவன் கண்டா பனி போல தீர்த்துவிடுகிறார் தோரணமலை முருகன் . அம்மையப்பன் திருமணத்தின் போது தேவர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் கூடியதால் தென் பகுதி உயர்ந்தது அதை சமன் படுத்த அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வரும் வழியில் இந்த மலையை பார்த்திருக்கிறார் இதன் அழகில் மனம் லயித்து இங்கேயே சிறிது காலம் தங்க முடிவெடுத்திருக்கிறார் . இந்த மலையின் தோற்றம் வாரணம் அதவாது யானை படுத்திருப்பது போன்று இருந்ததால் வாரண மலை என்றும் ,  ஏக பொதிகை நாக பொதிகை ஆகிய இரு மலைகளுக்கும் தோரணம் போல இருப்பதால் தோரணமலை என்றும் கூறுவர் .  


               தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிக்கு பல மூலிகைகள் கிடைத்ததால் அங்கேயே தன்னுடைய குருநாதனை அழகிய வடிவில் சிலை வடித்து வழிபாட்டு வந்தார் . பின் சீடராக தேரையர் வந்தார் இருவரும் பல மருத்துவ நூல்களை இங்கிருந்து எழுதியதாக கூறப்படுகிறது . சிறப்பாக முருகனுக்கு இரு பெரும் சித்தர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அகத்தியர் தேரையரை அழைத்து நான் பொதிகை சென்று தவம் செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு போய்விட்டார் . தேரையரும் பல நூறு ஆண்டுகள் தவம் புரிந்து தோரணமலையில் தன்னை ஐக்கிய படுத்துக்கொண்டார் . அவர்கள் வழிபாட்டு வந்த முருகப்பெருமானுக்கு வழிபாடு இல்லாமல் போனது . காலப்போக்கில் முருகப்பெருமான் ஒரு சுனைக்குள் தன்னை மறைத்துக் கொண்டார் . அள்ளிக்கொடுக்கும் வள்ளல் பெருமான் அவனால் சுனைக்குள் இருக்க முடியுமா ? தோரணமலையை அடுத்த ஊரில் இருக்கும் ஒரு அடியவரின் கனவில் முருகன் தோன்றி மலைக்கு மேலே உள்ள சுனையில் தான் இருப்பதாகவும் தன்னை  வழிபாடு செய்யவும் ஆணையிட்டார் .

                 அந்த அன்பரின் முயற்சியால் அகத்தியரும் , தேரையரும் வழிபட்ட தோரணமலை முருகனை எல்லா மக்களும் வழிபாடு செய்யுமாறு சிறு குகையில் பிரதிஷ்டை செய்து , மலை ஏறுவதற்கு படிகள் மேலே உள்ள சுனைகளை பண்படுத்தி மக்கள் பயன் பெறுமாறு அமைத்தனர் . அவன் அருள் இருந்தாலே அவன் தாளை வணங்க முடியும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று . இங்கு வந்திடும் அடியவர்தம் வினைகளை வெந்து போகச் செய்வான் தோரணமலை முருகன் . இல்லை என்றே சொல்லாமல் தன்னுடைய அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறான் . முருகன் இங்கே கிழக்கு நோக்கி அமர்ந்து திருச்செந்தூரை நோக்கிய வண்ணம் உள்ளார் அதுவும் தனி சிறப்பு .

                 ஒரு நதி ஓரத்தில் இருந்தாலே அந்தத் தலம் புனிதத் தலம் ஆனால் தோரணமலை ராமநதி ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கு இடையில் இருக்கிறது . மிகவும் புனிதமான மலை இந்த மலை . இன்றளவும் சித்தர்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் அற்புத மலை . மலை உச்சியில் தியானம் செய்து தேரையர் சித்தரை அருவமாக உணரலாம் அடியேன் உணர்ந்திருக்கிறேன் அடியேன் மட்டுமல்ல உடன் வந்த அன்பர்களும் உணர்ந்து இன்பத்தில் திளைத்த மலை இந்த தோரணமலை . 


      தீராத நோய்களையும் , துன்பங்களையும் , மனக் கவலைகளையும் களைந்து நம்மை வாழிவில் சிறக்கச் செய்யும் அற்புதமான மலை . கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்ய வேண்டிய அருள்சக்தி நிறைந்த மலை .

         வழிபாட்டு நேரம்

                 தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.  செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் . 



                         சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

      சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!


என்றும் இறை பணியில் ..

சிவமேஜெயம் அறக்கட்டளை 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் 
4/169 B , MAC  கார்டன் , ஸ்டேட் பேங்க் காலனி 
தூத்துக்குடி - 2
9944091910 , 9842154171











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக