புதன், நவம்பர் 27, 2013



           

   சித்தர் பாடல்களில் இருந்து ..................





                                                திருமூலர் அருளிய 



                                            திருமந்திரத்திலிருந்து சில மந்திரங்கள் ....

சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.


அரசன் வீற்றிருக்கும் அரசுகட்டிலிலும் அரசனென மதிக்கப்படும். அதுபோல சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்  சிந்தையும் சிவனெனவே மதிக்கப்படும்.சிந்தையினுள்ளே சிவம் வெளிப்படும். யாருக்கு வெளிப்படும்? சிந்தை தெளிந்தவர்களுக்குத்தான்.சிந்தை தெளிந்தவர்கள் யார்?கேட்டல், சிந்தித்தல்,தெளிதல்,நிட்டைகூடல் ஆகியமுறையில் தெளிந்தவர்கள்.இவ்வாறுசிந்தை தெளிந்தவர்களின் சிந்தையில் சிவபெருமான் வீற்றிருப்பார்.அச்சிந்தையும் சிவனெனவே மதிக்கப்படும்.

வாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள்
நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.


இறைவன் வாக்கும் மனமுங் கடந்த மாற்றம் மனம் கழியநின்ற மறையோன்.அவனை அவனது திருவருளால் மட்டுமே நோக்கமுடியும்.அவன் நம் நோக்கத்திற்கு உரியவன்தான் ஆனால் நுண்ணியவன்.போக்கும் வரவுமில்லாப் புண்ணியன்.பிறப்பு இறப்பு என்ற கேடுகளுக்கு அப்பாற்பட்டவன்.எனவே இத்தகைய  இறைவனை அவனருள்கொண்டே நோக்க வேண்டும்.இத்தகைய அத்தனை ஆய்ந்து அறிந்தவர்களுக்கு அதுவே ஆக்கமாகிய பிறவிப்பயனாகும்.

பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த்
தரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே.


முழுமுதற்பொருளாம் சிவபெருமான் அனைத்திற்கும் மேலானவன். இதனையே பரன், பராபரன் அதற்கும் அப்பாலான் என்று பாடியுள்ளார். உரன் என்பது இறைவனின் ஆற்றலைக் குறிக்கின்றது.பேரறிவும் பேராற்றலும் உடையவனான இறைவன் பேரூழிக்காலத்து அனைத்து ஒளிகளும் மங்கியபொழுதும் குன்றாத பேரொளியாய் விளங்குபவன். தான் தனது என்று உரிமை கொண்டாடும் ஆறறிவினாலும் அறிய ஒண்ணா  அரனானவன் இறைவன்.இவ்வாறு ஏகமாய் இருந்து இன்னருள்  தந்து இடையறாது ஓம்புகின்ற தாயிற்சிறந்த தயாவான தத்துவன் இறைவன்.


                                   இறை பணியில் 

                                                          பெ.கோமதி 

                                    சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக