புதன், நவம்பர் 27, 2013


   சித்தர்கள் வரலாறு ...................


                                            சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
                                                   
                                         




                         அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் அருள்வரலாறு   


  இன்பமாயது அறாதிடை ஓங்கவும் 
  துன்பமாயது தூரத்துள் நீங்கவும்           
  முன்பராபரன் மொய்குழலோடு அணைந்து 
  அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்.

இன்பங்கள் இடையறாது  ஓங்கவும்  துன்பங்கள் நம்மைவிட்டு நீங்கவும் சிவபெருமான் பராசக்தியுடன் கூடி அன்புடனே ஈன்றருளிய ஒப்பில்லாத விநாயகப்பெருமானைப் போற்றுவோம்.
      
         வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் சமயக்குரவர் நால்வர்பெருமக்களின் வழியைப்பின்பற்றிய அருளாளர்கள் நாடெங்கும் திருமடங்கள் அமைத்து அருள்நெறியை வளர்த்தனர்.அவ்வகையில் 17 ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட திருமடம் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்கர் திருமடம்.இதை நிறுவியவர் தவத்திரு சாந்தலிங்கர் அடிகளார் ஆவார்.இவருடைய நாடும் ஊரும் இன்னது என்று தெளிவாக அறிவதற்கில்லை.பலரும் சாந்தலிங்கர் தொண்டைநாட்டைச் சார்ந்தவர் என்று கருதுகின்றனர்.

          இளமையிலேயே சமயநெறி மேற்கொண்டு நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் நாடி நற்சற்குருவைநாடியருந்தார்.“முர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினோர்க்கு ஓர் வார்த்தைசொலச் சற்குரவும் வாய்க்கப்பெருமே”என்ற அருள்மொழி வழியில் துறையுார் சிவப்பிரகாசரது தவவலிமையும் அருட்பொலிவும் நாடு போற்றும் சீலமும் கோலமும் உணர்ந்த திரவண்ணாமலைத் திருமடத்தையணுகி சாந்தலிங்கர் குருநாதரின் திருவுளக்குறிப்புகண்டு வழிபட்டார்.

           சிவப்பிரகாசர் கும்பகோணத்தில்தோன்றி 7 வயதிலேயே செம்பொருள் உணரும் சீலத்தராகித் திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் ஆதிகுருமுதல்வர் சீர் வளர் சீர் நமசிவாயதேசிகரின் அணுக்க சீடரானார்.அவர் தம் அருள் நோக்கில்  “இதனை இதனால் இவன் முடிக்கும்” என நினைந்து ஆதீன இளவரசராக அமைத்தார்.தன்னேரில்லாத் திறமையால் தில்லைக்கோயிலில் முட்டுப்பட்டிருந்த வழிபாட்டைத் தொடரச்செய்தார்.இறைவன் திருவருளால் வீரசைவநெறிக்கு ஆட்பட்டார்.

வேலூர் அமைச்சர் இலிங்கண்ணன் இவர்பால் அளவிலாப்பத்திமை பூண்டு திருவண்ணாமலையில் திருமடம் அமைத்துத் தந்தார்.“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த”எனும் சிவஞானபோத சூத்திரத்தின் செம்மை நெறியில் தம்குருநாதர் சிவப்பிரகாசரைச் சாந்தலிங்கர் அத்திருமடத்திலே கண்டு வீரசைவ தீக்கைபெற்று குருவைச் சிவமாகக்கொண்டு குருவுடன் பலகாலம் தலப்பயணம் மேற்கொண்டார்.திருவண்ணாமலையில் தங்கியகாலத்து கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசருடன் நட்புப் பூண்டார்.குருவருளும் திருவருளும் உள்நின்றுணர்த்த ”கொங்குநாட்டில் மேலைச்சிதம்பரமாம் மிக்கபுகழ்ப் பேரூரில் சீலத்தவர் போற்றும் திருமடம்” அமைத்தார்.சிலகாலம் சுந்தரமூர்த்திசாமிகள் முதலையுண்ட பாலகனை மீட்டதலமான அவிநாசியிலும் தங்கி அருள்பாலித்துள்ளார்.




          சாந்தலிங்கர் வீரசைவநெறியில் நின்றவர்.வீரசைவர்கள் தங்களது இட்டலிங்கப்பெருமானைக் கையில் வைத்து வழிபாடுசெய்யும் வழக்கம் உடையவர்கள்.இந்நெறியினர் இட்டலிங்கத்தைக் கணப்பொழுதும் அங்கத்தின் வேறாகப் பிரிந்திருப்பதையறியார்.இலிங்காங்க சம்பந்தமே இந்நெறியினரின் தலையாய ஒழுக்கம்.இவர்தம் கைத்தலத்து வைத்து வழிபட்ட இட்டலிங்கத்திற்குச் சாந்தலிங்கம் என்றுபெயர்.அப்பெயராலேயே இவரும் அழைக்கப்பெற்றார்.சாந்தன்,சாந்தையன்,சாந்தநாயகன்,சாந்தலிங்கேசன் , சாந்தமுனி எனப்பலவாறு இவருடைய பெயரைப் பின்னுள்ளோர்கள் வழங்கினர்.  இவரை வீரசைவர் என ஒருசமயத்தைச்சார்ந்தவராகக் கூறலாமோ என்று எண்ணலாம் ஆனால் அறுவகைச் சமயங்களையும் அவற்றின் பேதங்களையும் மருவி உயர்ந்த அனுபவக்கொள்கையே வீரசைவம். இதனாலேயே சாந்தலிங்கர் “தவிராத விரோத சமய நூலன்று அவிரோத உந்தியார்”என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார்.சமய நூல் எனில் விரோதம் தவிர்க்கப்பெற இயலாது என்பதே சாந்தலிங்கர் கண்ட உண்மை.

       சாந்தலிங்கர் மயிலம் ஆதீனம் ஆதிகுருமுதல்வர் சிவஞானபாலைய சாமிகளைக் காண்பதற்குப் பொம்மபுரம் சென்றார்.வழியில் துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகளைக்ககண்டு அவரையும் உடனழைத்துக்கொண்டு சிவஞான பாலையசாமிகளைத் தரிசித்தார்.சிவஞானபாலைய சாமஜகளின் திருக்குறிப்புப்படி கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசரின் தங்கையைச் சாந்தலிங்கர் திருமணம் செய்து கொண்டார்.பேரூரில் தங்கியிருந்தபொழுதும் மனைவிஞானாம்பிகையுடனே இருந்தார்.பின்னரே துறவு மேற்கொண்டார்.

       சாந்தலிங்கர் தம்மனைவியுடன் இருந்தே தவநெறியில் தவறாது ஒழுகினாலும் தம்மிடம் பயில்வோர் தவநெறியை உறுதியுடன் கடைபிடித்தற்பொருட்டாக தாம் தன் மனைவியையும் துறந்து வாழ்தல் வேண்டும் எனக்கருதினார். அதனையும் திருவருட்குறிப்பின்படியே செய்யவிழைந்து இறைவனிடம் இன்று திருவமுதுக்குச் செல்லும் பொழுது முதலில் பாலண்ணம் கிடைத்தால் இன்றுமுதல் மனைவியைநீத்து வாழ்வேன் என்று வேண்டியவராய் திருவமுதுக்குச் சென்றார்.அவர் வேண்டுதலின் படி முதல் அன்னம் பாலன்னமாகவே வந்தது. அன்றுமுதல் மனைவியைத்துறந்தார் சாந்லிங்கர்.


இந்நிகழ்வுககுப் பின்னர் ஞானாம்பிகை அம்மையார் தன்கணவரின் உளக்குறிப்பை உணர்ந்தவராய் தானும் துறவு மேற்கொண்டு திருவண்ணாமலைசென்று குடில்அமைத்து அருள்நெறியில் வாழ்ந்து பலருக்கும் வழிகாட்டினார்.  இன்றும் அங்கு இருக்கும் ஞானாம்பிகை பீடம்  இதற்குச்  சான்றாக இருக்கின்றது.

       சாந்தலிங்கரது அருட்தோற்றத்தையும் தவப்பொலிவையும் உணரும் அடியவர் கூட்டம் நாளுக்குநாள் பெருகியது.கொங்குநாட்டில் பேரூராதீனம் பொலிவுற்றது. திருமடத்தில பணிபுரியும் தொண்டர்கள் குழுமினர். இத்திருமடத்தில் பணியாளர்களின்றித் தொண்டர்களே பணிசெய்யும் தூயவாழ்வு பெருகியது.நிறைந்த கல்வியும் ஒழுக்கமும் உடைய அடியார்கள் பிறப்பெனனும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள்காணும் சிந்தையராய்த் தொண்டாற்றினர்.இதைப் புலவர்புராணத்தில் தண்டபாணி அடிகள் சிறப்பித்துக்கூறுவார்.சாந்தலிங்கர் “எழுதிய விளக்கென” ஒன்றிய நிலையில் அடியார்கள் திருவருள் விளக்கம்பெறப் பொலிவுடன் வழிகாட்டியருளினார்.

       சாந்தலிங்கரின் அருட்திறம் அண்டை மாநிலங்களிலும் விளங்கித் தோன்றியது .கன்னட நாட்டில் மன்னராகத் திகழ்ந்த குமாரதேவர் எனும் மன்னர் சாந்தலிங்கப் பெருமானின் திருவடியே முத்திக்குத் திருந்தியநெறி என உணர்ந்தவராய் சாந்தலிங்கரை வந்தடைந்தார்.சாந்தலிங்கரிடம் தம்மை மாணவராக ஏற்றுக்கொள்ளும் படி வேண்ட அடிகள்,“நீர் வாளேந்திப் போர்புரியும் மன்னர் உமக்கு இந்நெறி பொருந்தாது ”என்று கூறிவிட்டார் . ஆனால் குமாரதேவர் மனம் தளராதவராய் திருமடத்திலேயே தங்கி மாணவராய் ஏற்றுத்தான்ஆகவேண்டும் என்று கூறுமளவிற்கு உறுதியுடன் போராடினார்.இவரின் மனஉறுதியை உணர்ந்த சாந்தலிங்கப்பெருமான் கையில் புல் அறுக்கும் கருவியைக் கொடுத்து “நீசென்று பசுக்களுக்குப் புல் அறுத்து வா ” என்று கூறினார்.வாள்பிடித்த கைக்கு சிறு கத்தி கொடுக்கவும் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை.இருப்பினும் அடிகளின் ஆணை என்று  கருதியவராய் புல் அறுத்துக் கொணர்ந்தார்.

                சாந்தலிங்கர்  குமாரதேவரின் கோலங்கண்டு அவரின் பக்குவத்தை உணர்ந்தார்.   காரணம் புல் அறுக்கச் சென்றவர் புற்களைமட்டும் அறுக்கவில்லை தனது கை கால்களிலும் இரத்தக்காயங்களுடன் வந்தார்.இதனைப்பார்த்த அடிகள் தனக்கேற்ற மாணவன் என்று குமாரதேவரை மாணவராக ஏற்றுக்கொண்டார். குமாரதேவரும் தன்குருநாதருடன் பல தலங்களுக்குத்  தலப்பயணம் மேற்கொண்டு மெய் பொருள் அறிவைப் பெற்றார்.மாணவனின் பக்குவம் அறிந்த சாந்தலிங்கர் விருப்பப்பட்ட தலம்சென்றுதங்கி அருள்நெறிபரப்புக என்று அருள்வழங்கினார்.அவரும் குருநாதரின் வழிகாட்டலின்வண்ணம்  திருமுதுகுன்றம் சென்று மடம் அமைத்து அருள்பணியாற்றினார். 

          சாந்தலிங்கரின் அருளாளணையின்வண்ணம்  சிதம்பரசாமிகளைச் சீடராக ஏற்றுக்கொண்டார்.சாந்தலிங்கர் சிதம்பரசாமிகளைக்கொண்டு தான் இயற்றியருளிய நான்கு நூல்களான கொலைமறுத்தல் ,வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோதஉந்தியார் ஆதிய நான்கு நூல்களுக்கும் செம்மையான உரைசெய்வித்தார்.பின் சிதம்பரசாமிகள் தீருப்போரூரில் இதேபோன்று திருமடத்தைநிறுவினார்.

        சாந்தலிங்கப்பெருமான் அருளியநான்கு நூல்களும் முத்திப்பேற்றுக்கு வழிகாட்டும் பாங்குடையன.இந்நூல்கள் அளிககும்  பயனை வண்ணச்சரபம் தண்டபாணி சாமிகள்,
        “கூசல் அறக்கருணைகூட்டும் கொலை மறுப்பும்
          ஈசனது பத்திக்கு இனிதாம் சதகமும் பொய்ப்
          பாசமுழுவதும் பறித்தொழிக்கும் தீபமும் நெஞ்சு
          ஊசல் நிகர் ஆட்டொழிக்கும் உந்தியுமாம் நூற்பெயரே”

                                                                           என்று பாடிப்பரவுகின்றார்.இப்பாடலில்                                                                                             தண்டபாணிசாமிகள், 

                         சாந்தலிங்கர் அருளிய கொலைமறுத்தல் உயிர்களின்மேல் கருணைகொண்ட கொல்லாமையை வற்புறுத்துவது,வைராக்கியசதகம் இறைவனிடத்து பக்திமையை வளர்ப்பது,பாசத்தைநீக்குவது தீபம்,சமயப்பொதுமையை விளக்குவது அவிரோதஉந்தியார் என்று கூறியுள்ளார்.மேலும் இவர் சாந்தலிங்கரை “முழுஞான வீரனம்மா”என்றும் போற்றியுள்ளார்.

        இவ்வாறு உலகம் உய்ய நான்கு நூல்களை அருளிச்செய்த சாந்தலிங்கப்பெருமான் பல அருட்தொண்டுகளை ஆற்றிவிட்டு மாசிமாதம் மகம் நட்சத்திரத்தன்று இறைவனது பேரொளியில் கலந்தார்.இவர் சீவசமாதியான  இடத்தில் திருக்கோயில் அமைத்து வழிபட்டனர். காலப்போக்கில் அயல்ஆதிக்கத்தால் பலமாற்றங்களை இத்திருமடம் கண்டாலும் இன்றும் சாந்தலிங்கப்பெருமானின் திருவருட்கருணையால்
சிறந்து பொலிவுடன் விளங்குகிறது.இன்று அருளாட்சி செய்துவரும் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் பெரும்முயற்சியால் தமிழ்ப்பணியும் சைவப்பணியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. சாந்தலிங்கப்பெருமானின் அருள் வரலாற்றினைச் சுருக்கமாக எழுத அடியேனுக்குத் திருவருள்   கூட்டியமையைநினைந்த பெருமகிழ்வு அடைகிறேன்.



                சுவாமிகளின் ஜீவசமாதி கோவை மாநகரத்தில் பேரூர் என்னும் திருத்தலத்தில் அமைந்திருக்கிறது .

      சாந்தலிங்கரின் தாள் பணிந்து அனைவரும் ஈசனடி அடைவோம் .


                                                                      திருச்சிற்றம்பலம்.          


                    இறை பணியில்    
           

                                  பெ .கோமதி              





                                    சிவமேஜெயம் !!

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                 
                                                    
        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக