செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

(சித்தர் பாடல்கள்) விளையாட்டுச்சித்தர் பாடல்

விளையாட்டுச்சித்தர் பாடல்கள் 


ஆதிசிவ மானகுரு விளையாட்டை ....... யான் 
     அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசத்தி யென்னாத்தாள் ......... சுய
     சொரூபந் தடங்கிநின்ற விளையாட்டை


பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் ........ ஞானம்
     பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவிளை ........ யாட்டுச்
     சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில்.இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் ......... இதை
     இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி ......... முன்பு
     சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன்நானென்று சொல்வதும் விளையாட்டே ........ இந்த
     நானிலத் திருப்பதுவும் விளையாட்டே
தானென் றறிவதுவும் விளையாட்டே ......... பெற்ற
     தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே.தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே ........ பூவிற்
     தனயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே ........ பத்து
     வயது தெரிந்ததுவும் விளையாட்டே.பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே ...... தந்தை
     பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே ........ இந்த
     வையகத் திருப்பதுவும் விளையாட்டே.பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே ...... எங்கும்
     பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே ........ பணம்
     காசுவட்டி போடுவதும் விளையாட்டே.மாடிமனை வீடுவாசல் விளையாட்டே ........ என்றன்
     மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே ........ இச்
     செகத்திற் திரிவதுவும் விளையாட்டே.ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே ....... சதுர்வே
     தாகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே ....... உற்றார்
     கூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே.பிணமா யிருப்பதுவும் விளையாட்டே ........ அதைப்
     பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே ........ ஈமங்
     கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே.செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே ....... சுடலை
     சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே ...... குளித்து
     வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.கனவுநினை வெண்பதுவும் விளையாட்டே ....... இக்
     காசினியோ ருழல்வதும் விளையாட்டே
நினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே ....... மிக்க
     நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே.பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே ....... அவர்
     பின்னாற் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே ....... நல்ல
     வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே.சீராக வாழ்வதுவும் விளையாட்டே ........ செம்பொன்
     சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே.... நெஞ்சில்
     நினைக்காமற் செய்வதுவும் விளையாட்டே.பந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே ...... லோகப்
     பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே .......... இதைச்
     சொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே.யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே ....... அதன்
     உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே ...... ஒருவர்
     தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே.கோடிபணந் தேடுவதும் விளையாட்டே ....... அதைக்
     குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே ......... மனந்
     தேறுதலாய் திரிவதும் விளையாட்டே.கற்பனையுங் கபடமும் விளையாட்டே ........ அதைக்
     காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்க ளாட்டுவதும் விளையாட்டே ....... ஒரே
     சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே.நம்பினோருக் காசைசொல்லல் விளையாட்டே .... பின்பு
     நாட்டாற்றில் போகவிடுதல் விளையாட்டே
கும்பிக் கிறைதேடுதல் விளையாட்டே ....... கடன்
     கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.இச்சையால் மயங்குவதும் விளையாட்டே ..... அதை
     இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத் துண்பதுவும் விளையாட்டே ...... பொல்லாப்
     பேய்போ லலைவதுவும் விளையாட்டே.முத்தி யறியாததும் விளையாட்டே ...... மேலாம்
     மோட்சங் கருதாததும் விளையாட்டே
பத்திகொள் ளாததுவும் விளையாட்டே ...... மனம்
     பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.கேடு வருவதுவும் விளையாட்டே ....... எதற்கும்
     கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே ........ மனப்
     பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே.பாசவினை போக்காததும் விளையாட்டே ..... பெண்
     பாவாயென் றழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே ..... காணாமல்
     நிமிடநேர மென்பதுவும் விளையாட்டே.நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே ..... அதில்
     நினைவுதடு மாறுவதுவும் விளையாட்டே
சித்தியடை யாததுவும் விளையாட்டே ........ ஞானம்
     சிந்தியா திருப்பதுவும் விளையாட்டே.சொற்பனமுண் டாவதுவும் விளையாட்டே ..... மனம்
     சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண் டறிவதும் விளையாட்டே ....... வந்த
     விதமறி யாததுவும் விளையாட்டே.பகலிர வென்பதுவும் விளையாட்டே ....... இகப்
     பயனடைந் திருத்தலும் விளையாட்டே
சகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே ..... யோக
     சாதன மறியாததும் விளையாட்டே.புத்திமா னென்பதுவும் விளையாட்டே ........ இப்
     பூதலத்தோ ரேத்துவதும் விளையாட்டே
வெற்றி யடைவதுவும் விளையாட்டே ....... நான்
     வீரனென்று சொல்வதுவும் விளையாட்டே.தவநிலை தோணாததும் விளையாட்டே ..... ஞான
     தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே ....... ஏக
     பரவெளி காணாததும் விளையாட்டே.யோகந் தெரியாததும் விளையாட்டே ........ அதன்
     உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே ...... இகப்
     பற்றுக்காது இருப்பதுவும் விளையாட்டே.பெரியோரைக் காணாததும் விளையாட்டே .... கண்டு
     பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியா திருந்ததுவும் விளையாட்டே ....... சிவ
     தேகநிலை பாராததும் விளையாட்டே.அஞ்ஞானமுட் கொண்டதுவும் விளையாட்டே ...... பே
     ரறிவாற் றெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே .... இந்த
     மேதினியே போதுமெனல் விளையாட்டே.


                               கண்ணிகள்


ஆதியான மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான்
வாதியானோன் கண்டறிய வாய்க்குமிது மந்திரம்.சுக்குச்சுக்கு வெள்ளக்கல் சுண்ணாம்பு வெள்ளக்கல்
காசுக் கிரண்டுகல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா.குடுகுடு வானைக்கல் கோமான்கும் பானைக்கல்
தேசதேச வாசக்கல் தெக்குநல்ல சீமைக்கல்.பக்குவ மாகாமுன் பார்த்தெடுத்துக் கொண்டபின்
சுக்குச்சுண் ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல்வாகடதோகட மதுரக்கல் வைப்புச்சுண் ணாம்புக்கல்
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல்மேலாஞ் சாதி பாரடா வெட்டவெளியைத் தேரடா
நாலாஞ்சாதி யாகாது நமக்குப் பருப்பு வேகாது.தாய்போலு மாகுமே தங்கைபோலு மாகுமே
சேய்போலு மாகுமே திரும்பப் பெண்டீ ராகுமே.வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்த தோர்பெண்ணாம்
பாலைமங்கை தானடா பருவம்வந்த வழலைதான்.வழலைவாங்கிக் கொள்ளடா மருந்துசூடன் போடடா
குழவியர்க்கு உணர்வதாகக் கொடுத்ததைநீ வாங்கடா.வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே
தூங்கிடாமற் சேநீர்கொண்டு சுருக்கினிலுப் பாக்கடா.நீறுநீ ரெடுத்துமே இரண்டையுமொன் றாக்கியே
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா.கோவானூர் தன்னிலே கொழுந்துபோல் முளைத்ததை
ஏகாளிகள் போகுமுன் னெடுத்துவந்து காய்ச்சடா.காய்ச்சியும் பெருத்துநீ கஞ்சியுப்பு சேர்த்துநீ
மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போலாமடா.ஆதியுப்பு மந்தவுப்பும் இந்தவுப் பெடுத்துநீ
சோதியுப்பு மாச்சடா சுருக்கமிது தானடா.கண்டறிந்து கொள்ளடா கணக்கறிந்து விள்ளடா
கொண்டறிந்து தள்ளடா குருவறிந்து கொள்ளடா.சூதங்கட்ட லாகுமே சொர்ணஉப்பு மாகுமே
வாதம் வாத மென்றறிந்த வாதியேநீ பாரடா.விட்டகுறை யானவன் மேதினியில் வந்தவன்
தொட்டகுறைக் காரனுக்குத் தோற்றமே மெய்ஞ் ஞானமே.

            
ஏகாந்தம் பழம்பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை 
பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு.  

காய்த்தவாழை பூப்பூக்கும் காயாதவாழை தானுமில்லை
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் 
பாய்ச்சாத பயறு தானுமில்லை.

இறைத்தகிணறு தானூறும் இறையாக்கிணறு தானுமில்லை
விதைவிதைத்தால் முளைதேறும் 
விதையாநிலத்தி லொன்றுமில்லை

அழுதபிள்ளை பால்குடிக்கும் அழுகாதபிள்ளைக் கேதுமில்லை
உழுதநிலந்தான் பயிரேறும் 
உழுகாதநிலத்தி லொன்றுமில்லை

ஆசையுளானுக்கு ரோசமில்லை ஆசையிலானுக் கொன்றுமில்லை

                                                                                                               விளையாட்டுச்சித்தர் பாடல் முற்றிற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக