வியாழன், ஆகஸ்ட் 04, 2011

64 திருவிளையாடல் (8)

அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்!



நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி விடுவானோ! ஐயனே! இதென்ன சோதனை! என்றாள்.மீனாட்சியை அமைதிப்படுத்திய சுந்தரேசர், நான்கு  குழிகளை வரவழைத்தார். அவற்றில் பால் சோறு, தயிர்ச்சோறு உள்ளிட்ட அன்னவகைகள் குறைவின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். குண்டோதரன் அவற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனான்.


 அந்தக் குழியில் இருந்து வந்த சாப்பாடு குறையவே இல்லை. பசி தணியவே, தண்ணீர் குடிக்க நீர்நிலைகளை தேடியலைந்தான். மதுரையில் இருந்த பல குளங்களின் நீரும் வற்றும் வகையில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. ஐயனே! என் தாகத்தையும் தீர்க்க வேண்டும், என சுந்தரேசரிடம் வேண்டினான். அவர் தன் தலைமுடியைச் சாய்த்து கங்கையை கீழே இறங்கச் சொன்னார். கங்கா! நீ பிரவாகமெடுத்து ஆறாக இந்நகரின் வழியே ஓடிவா, என்றார்.
அவள் சுந்தரேசரிடம், சுவாமி! தங்கள் சித்தப்படியே செய்கிறேன்.


 உங்கள் திருமணநாளன்று உருவாகும் பாக்கியம் பெற்ற என்னில் மூழ்கி எழுபவர்கள் பிறப்பற்ற நிலையாகிய மோட்சத்தை அடைய அருள்பாலிக்க வேண்டும், என வேண்டினாள். கங்கா! மோட்சத்தலங்களான வைகுண்டத்தின் முதல் எழுத்தாகிய வை கைலாயத்தின் முதல் எழுத்தாகிய கை இவை இரண்டையும் இணைத்து நீ வைகை என வழங்கப்படுவாய். உன்னில் குளிப்பவர்கள், தீர்த்தமாகப் பருகுபவர்களுக்கு மோட்சம் கிட்டும். அவர்கள் சகல செல்வங்களோடும் வசிப்பார்கள், என்றார். பின்னர் கங்காதேவி, ஆறாக வேகமாக ஓடிவந்தாள்.


 அவளுக்கு வேகவதி என்ற பெயர் உண்டாயிற்று. குண்டோதரன் அந்த ஆற்றின் இருகரைகள் மீதும் கைகளை விரித்து வைத்துக் கொண்டு ஆற்றின் போக்கை தடுத்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்ந்தான். இதனாலும் இந்த நதிக்கு வைகை என்று பெயர் வந்ததாக சொல்வர். தன் தாகம் தீர்த்த வைகை சிவனின் தலையில் இருந்து தோன்றிய தால் அதற்கு சிவதீர்த்தம் என்னும் புனித பெயரும் வைத்தான். சிவனின் திருமணத்திற்கு வந்து, திருமணப்பணிகளை சிறப்பாக செய்த அவனுக்கு பூதகணங்களின் தலைமைப் பதவியை சுந்தரேசப் பெருமான் அளித்தார்.


                                        நன்றி : தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக