வியாழன், ஜனவரி 12, 2017

மார்க்கண்டேயன் வரலாறு 

      


விதியை மதியால் வென்ற மார்க்கண்டேயன் 


        மிருகண்டு முனிவர் தவத்தில் சிறந்தவர் . இவர் திருக்கடையூரை அடுத்துள்ள ஊரில் வாழ்ந்து வந்தார் . அவர்தம் மனைவியார் பெயர் மருத்துவதி தன் கணவராகிய மிருகண்டு முனிவர்க்கு உற்ற துணையாய் இருந்து இருவரும் இனிய இல்லறம் நடத்தி வந்தார்கள் . இத்தம்பதியர்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கினார்கள் எந்நேரமும் சிவசிந்தனையிலேயே வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு மழலைச் செல்வம் வாய்க்கப் பெறவில்லை . இருவரும் ஈசனை நோக்கி தவம் செய்தார்கள் அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்த ஈசனார் , இப்பிறவியில் உங்களுக்கு மக்கட்பேறு கிடையாது இருந்தாலும் அளிக்கிறேன் என்று இரண்டு நிபந்தனை விதித்தார் . என்னவென்றால் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடிய தீக்குணங்கள் நிறைந்த குழந்தை வேண்டுமா , அழகும் , அறிவும் நல்ல ஒழுக்கமும் நிறைந்து 16 வயதுவரை வாழும் குழந்தை வேண்டுமா என்று கேட்டு முடிவை அவர்களிடம் விட்டு விட்டார் .

                 அவர்கள் இருவரும் பெருமானே நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தாலும் அக்குழந்தையால் எங்களுக்கு என்ன மாண்பு இருக்கும் ஆகவே 16 வயது வாழும் நல்ல ஒழுக்கமான குழந்தையே எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள் , பரமனும் அப்படியே வாய்க்கப் பெறுவதாக என்று வரம் அளித்தார் . அதன்படியே மருத்துவதி அம்மையார் அழகான ஆண்மகவை பெற்றெடுத்தார் , வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல மார்க்கண்டேயன் வளரும் பருவத்திலேயே மிகவும் அறிவுடையவனாக திகழ்ந்தான் . சிவ பக்தியில் தனது பெற்றோரையும் விட சிறந்து விளங்கினான் கல்வி வேள்விகளில் மிகவும் சிறந்தவனாக விளங்கினான் .


                 நாட்கள் கடந்தது மார்க்கண்டேயன் 16 வயதை எட்டும் நாள் வந்தது இருவரும் மனம் வாடிப்போனார்கள் , பெற்றோர் வாட்டத்துக்கு காரணம் என்னவென்று கேட்டான் மைந்தன் . இருவரும் ஈசனிடம் வாங்கிய வரத்தை கூற இது வருந்த வேண்டியது இல்லை எனக் கூறி திருக்கடையூரை வந்தடைந்தான் . திருக்கடையூரில் அருள் பாலிக்கும் அமிர்தகடேஸ்வரை சரணம் என்று மிகப்பெரும் சரணாகதி நிலையில் தன்னை அவர்க்கு அர்ப்பணித்து இறுக்கப் பற்றிக்கொண்டான் எம தூதர்கள் வந்து அவன் உயிரை எடுக்க அருகில் போனார்கள் நெருங்க முடியவில்லை அவர்கள் எமதர்மனிடம் சென்று தங்களால் இயலவில்லை என நடந்ததை கூறினார்கள் . ஒரு பாலகனின் உயிரை உங்களால் எடுக்க முடியவில்லையா எனக் கடிந்து அவனே தனது எருமை வாகனத்தில் புறப்பட்டான் . திருக்கடையூரை அடைந்து அங்கே கண்டவனுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி , இறைவனை கட்டிக்கொண்டிருக்கும் இவனை நாம் எப்படி அழைத்துப் போக என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது உயிரை எடுக்கும் நேரம் வந்தது கால தாமதம் வேண்டாம் என்று பாசக் கயிறை மார்க்கண்டேயனை நோக்கி வீச அது மார்கண்டேயனையும் அவன் கட்டிக்கொண்டிருந்த எம்பெருமான் மீதும் வீழ கோபத்துடன் ஈசனார் சிவலிங்கத்தில் வெளிப்பட்டார் , காலனே , என்னை சரணம் என்று அடைந்திருக்கும் இச்சிறுவன் மீது பாசக்கயிற்றை வீசுவதா என்று கடிந்து தன்னுடைய இடக்காலால் உதைத்தார் , பின் மார்க்கண்டேயனை நோக்கி குழந்தாய் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று அருள் புரிந்தார் .

                   எமன் இல்லாததால் பூமியில் பாரம் அதிகமாகியது , பாரம் தாங்காத பூமா தேவியார் சிவபெருமானிடம் முறையிட செவி சாய்த்த எம்பெருமான் , தன் கடமையை சரியாக செய்த எமனை உயிர்ப்பிக்க செய்து தர்மராஜன்  என்னும் பட்டத்தை வழங்கி அவனுக்கு ஆசி புரிந்தார் . 

               இங்கு விதி வெல்லவில்லை விதியை வெல்வது எது ? சிவசிந்தனையும் சிவபக்தியுமே விதியை வெல்லும் அவனடியை தஞ்சமென்று சரணடைந்து இருத்தலே பிறவிக்கு நலம் பயக்கும் . மதி சூடியவனை இறுக்கப் பற்றினால் விதியை வெல்லலாம் என்னும் மதி மார்கண்டேயனுக்கு இருந்ததால் மார்க்கண்டேயர் என்றும் இருக்கும் சிரஞ்சீவியாக இருக்கிறார் . நாமும் சிவனையன்றி வேறொரு நினைப்பை ஒழித்து எந்நேரமும் சிவசிந்தனையில் இருந்து அவன் திருவடி நிழலில் ஏகாந்த இன்பத்தில் திளைத்து இறவா நிலையை அடைந்து இன்புற்று இருப்போம்.  நல்லது . சிவமேஜெயம் .


                     சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக