வெள்ளி, ஜனவரி 06, 2017

அரிச்சந்திரன் முற்பிறவி ... ஸ்ரீ விசுவாமித்திர மகரிஷி 
                 உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் .                   காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள்  மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு  சுயம்வரம்  செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பினான் . அதனை ஏற்று வந்த மன்னர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனனும் ஒருவன் மிகுந்த அழகும் கம்பீரமும் உடையவன் .


            சுயம்வரநாளும் வந்தது வந்திருந்த அனைவரையும் வரவேற்று தன்னுடைய நிபந்தனையை கூறினான் , கூண்டினுள் அடைக்கப்பட்ட சிங்கத்தைக் காட்டி இதை யார் வெற்றி கொள்வாரோ அவருக்கு என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான் . அந்த சிங்கத்தின் தோற்றம் பார்ப்பவரை அச்சப்பட வைத்தது யாவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திரிலோசனன் சிறுத்தும் அச்சமின்றி கூண்டுக்குள் சென்றான் காண்பவரையும் திகைக்க செய்யும் அளவுக்கு பலமான சண்டை சிங்கத்துக்கும் அவனுக்கும் நடந்தது முடிவில் சிங்கத்தை வென்றான் திரிலோசனன் .


                அறிவித்தபடி மதிவானி , மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேதங்கள் முழங்க ஆன்றோர் ஆசிகளுடன் திரிலோசனனை மணம் புரிந்தாள் . அனைவரும் ஆனந்தத்துடன் இருந்த அதே நாளில் திரிலோசனன் மாலை வேளையில் கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவன் மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து வாளால் அவனை வெட்டிக் கொன்று விட்டான் . இந்த துயரத்தைக் கேள்விப்பட்ட மன்னனும் மக்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர் , மதிவானி மயக்கம் அடைந்தாள் , மயக்கம் தெளிந்த பின் எழுந்தவள் துக்கம் தாளாது இனியும் நாம் உயிரோடு இருத்தல் ஆகாது என முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொள்ள கங்கையில் குதித்தாள்  .


         

                                                 அப்போது அங்கு நீராட வந்த கௌதம முனிவர் நீரில் தத்தளிக்கும் மதிவானியை காப்பாற்றி கரை சேர்த்தார் . மதிவானி முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள் . கௌதம முனிவர் தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என ஆசிர்வதித்தார் . இதைக் கேட்ட மதிவானி முனிவரிடம் நடந்ததைக் கூற அவரும் என் வாக்கு பொய்க்காது மகளே , நடந்ததை மறந்து தவத்தில் ஈடுபடு உன் இந்த பிறவி முடிந்து அடுத்த பிறவியில் இதே மாங்கல்யத்துடன் நீ பிறப்பெடுப்பாய் இந்த மாங்கல்யம் யார் கண்களுக்கும் புலப்படாது . உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குளத்தில் பிறப்பான் , உன் சுயம்வர நேரத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் அவனுக்கு புலப்படும் . நீங்கள் திருமணம் புரிந்து பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என்று அருளாசி செய்தார் .
                 


                                         கௌதம முனிவரின் ஆலோசனையின் படி அவரின் ஆசியோடு அவரின் ஆசிரமத்திலேயே தன தவத்தை மேற்கொண்டாள் . சில காலத்தில் அவளுடைய இந்த பிறவிக்கு முடிவுக்கு வந்தது . அடுத்த பிறவியில் மதிவானி , சந்திரமதியாகவும் , திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர் . சந்திரமதி சுயம்வர நாளில் யார் கண்ணுக்கும் புலப்படாத மாங்கல்யம் அரிச்சந்திரனுக்கு தெரிய அரிச்சந்திரன் சந்திரமதியை மனம் புரிந்தான் . இனிதான இல்லறத்தின் பொருட்டு ஒரு ஆன் மகவை ஈன்றெடுத்தாள் சந்திரமதி அக்குழந்தைக்கு லோகிதாசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் .


                      இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் தன்னுடைய சபையினால் பூமியில் உள்ள மன்னர்களில் யார் சிறந்தவன் என்று கேட்க அங்கு இருந்த வசிஷ்ட முனிவர் , சந்தேகமென்ன என் சிஷ்யன் அரிச்சந்திரன் சிறந்தவன் தன தலையே போனாலும் சத்தியத்தை விடாதவன் அவனே சிறந்தவன் என்றார் . அதை மறுத்த விஸ்வாமித்திரர் , சந்தர்ப்பங்கள் வந்தால் அரிச்சந்திரன் சத்தியத்தை மீறுவான் அதை நான் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறினார் .


                         கூறியதைப்போல அரிச்சந்திரன் வாழ்க்கையில் பெரும் புயலென துன்பங்களைத் தந்தார்.  அவனுடைய ஆட்சி இழந்து மனைவி , மகனை பிரிந்து மயானத்தில் பிணம் எரிக்கும் நிலைக்கும் சென்றான் அப்படி இருந்த போதிலும் தன்னுடைய சத்தியத்தை அவன் காத்து நின்றான் . மகிழ்ந்த விசுவாமித்திர மகரிஷி அவனுக்கு அருள் செய்து இழந்த அனைத்தையும் அவனுக்கு வழங்கி ஆசி புரிந்தார் . அவனும் நல்லாட்சி புரிந்து நற்கதியை அடைந்தான் . அது சரி எதற்காக தவத்தில் சிறந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் .            முற்பிறவியில் திரிலோசனனான அரிச்சந்திரன் , விசுவாமித்திர மகரிஷியிடம் தனக்கு பிறவா நிலையை அருள வேண்டும் சுவாமி என்று பணிந்து நின்றான் . அதற்கு அவர் , திரிலோசனா ! உன் ஊழ்வினையின்கண் நீ பல பிறப்பெடுக்க வேண்டி உள்ளது அவை அனைத்தையும் ஒரே பிறவியில் நீ அனுபவித்து சத்தியம் தவறாமல் வாழ வேண்டும் முடியுமா ? என்று கேட்டார் சம்மதித்த திரிலோசனன் , அரிச்சந்திரனாக பிறப்பெடுத்து தன்னுடைய வினைகளையெல்லாம் ஒரே பிறவியில் அனுபவித்து பிறவாத பெரும் பேரை அடைந்தான் . அவனை துன்புறுத்த அவனுக்கு சோதனைகள் இல்லை அவன் வினைகளை கழிக்கவே சோதனைகளை தந்தார் விசுவாமித்திர மகரிஷி .                 

                    அரிச்சந்திரன் அளவுக்கு துன்பபட்டவர் யாரும் இல்லை , அவனும் தன்னுடைய வினையை கழிக்க துன்பத்தை மகிழ்சசியாய் ஏற்று கொண்டதைப்போல நாமும் நம் துன்பங்களை எல்லாம் வினைகளை ஒழிக்க ஈசன் தந்தது என்று மகிழ்வுடன் ஏற்று அவன் பாதமே தஞ்சம் என்று இருந்தால் எந்த துன்பமும் , தீவினையும் நம்பால் அணுகாது சத்தியம் .


     சித்தர்கள் , மகான்கள் , முனிவர்கள் இவர்களின் ஆசியும் அருளும் இருந்தாலே நாம் நம் வினைகளை அகற்றி அப்பன் அருகில் ஆனந்தமாக 

இருக்கலாம் . நல்லது . சிவமேஜெயம் .                       சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்  
                              ஓம் ஸ்ரீ  பட்டினத்தாரே சரணம் !!

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக