வெள்ளி, ஜூன் 12, 2015

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த 

சிறு தொண்ட நாயனார் வரலாறு             காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் சாலியர் மரபினிலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும் . நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார் . பரஞ்சோதியார் யானை ஏற்றம் , குதிரை ஏற்றம் மற்றும் போர் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார் . , வேதங்கள் , வட மொழி நூல்கள் ஆகியவற்றிலும் வல்லவர் . அதைப் போல சிவத்தொண்டிலும் அவன் அடியார்க்கு தொண்டு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரே என்பது போல விளங்கினார் .

                 நரசிம்ம பல்லவனின் படையினை சேனாதிபதியாக இருந்து வழி நடத்தி பல வெற்றிகளையும் பெற்று தந்து மன்னனின் மதிப்பினை பெற்றார் . வாதாபி நகரத்தின் மேல் படையெடுத்து இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தார்.அங்கு இருந்து விலை உயர்ந்த பொருள்களையும்  செல்வங்களையும் , யானை , குதிரை  முதலியவற்றையும் கைப்பற்றி தம் மன்னனிடம் சேர்த்தார் . மன்னன் இவரது வீரத்தை எண்ணி அதிசயித்து பாராட்டினான் . தனது பணியையும் சிறப்பாக புரிந்து தொண்டையும் குறைவில்லாது செய்து வந்தார் . சில அமைச்சர்கள் மன்னனிடம் பரஞ்சோதியார் புரிந்து வரும் சிவத்தொண்டு பற்றி கூறினார்கள் . மன்னன் மனம் பதறினான் இத்தகைய சிவனடியாரையா நான் போர்க்களத்தில் கொலைச்செயல் புரிய வைத்து விட்டேன் என்று . உடனே பரஞ்ஜோதியாரை அழைத்து வாருங்கள் என்று பணித்தான் . அவர் வந்ததும் சிவனடியாரை கொலைப்பாதகம் புரிய வைத்த என்பிழைதனை பொறுக்க வேண்டும் என்று வேண்டினான் .
                             
                              மன்னன் இவ்வாறு கூறியதும் பரஞ்சோதியார் மன்னனை வணங்கி அடியேன் ஏற்றுக்கொண்ட பணி அவ்வாறு இருக்கும் போது இதில் தவறேதும் இல்லை மன்னா என்ற பதிலுரைத்தார் . அறம் விரும்பும் மன்னன் அதனை செவிமடுக்காது , இதுநாள் வரை நானறியாதவாறு நீர் செய்து வந்த சிவத்தொண்டை இனி உமது மனமகிழும் வண்ணம் எந்நேரமும் செய்வீராக என்று கூறி அவருக்கு பெருஞ்செல்வமும் , நிலம் , ஆடு , மாடு  இன்னும் எண்ணற்ற பொருள்களை மனமுவந்து அளித்து விடை கொடுத்து அனுப்பினான் . மன்னனிடம் விடை பெற்ற பரஞ்சோதியார் தமது ஊரை வந்தடைந்தார் . கணபதீச்சுவரத்து இறைவனை வணங்கி தம் தொண்டினை பழுதில்லாமல் செய்து வந்தார் . இல்லறமேற்கும் காலம் வந்தது திருவெண்காட்டு நங்கையாருடன் தனது இல்லறத்தை இனிதே நடத்தி அடியார்களுக்கும் தொண்டு செய்து வந்தார் . அடியார்களுக்கு அமுது அளித்து அவர்கள் உண்ட பின் தாம் உண்ணுவதையே வழக்கமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . சிவனடியார்கள் முன்னம் தன்னை சிறியராகக் கருதி தொண்டு செய்ததால் அடியார்கள் மத்தியில் சிறுத்தொண்டர் என அழைக்கப் பட்டார் . இனிய இல்லறத்தின் பயனாக அழகிய ஆண்மகவை பெற்றெடுத்தார் திருவெண்காட்டு நங்கையார்.  அக்குழந்தைக்கு சீராளன் என்னும் திருநாமம் இட்டு வளர்த்து வந்தார்கள் . மைந்தனுக்கு ஐந்து வயது நிரம்பியது கல்வி பயில பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் .


         
                                              இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது சிறுதொண்டரது அன்பையும் , பக்தியையும் , தொண்டின் சிறப்பையும் உலகத்தார்க்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் , பைரவ அடியார் வேடந்தாங்கி திருச்செங்காட்டங்குடி ஊருக்கு எழுந்தருளினார் . கருஞ்சட்டை அணிந்து இடக்கையில் சூலம் ஏந்தி சிறுத் தொண்டர் வீட்டின் முன் நின்று அடியார்களுக்கு அமுதிடும் சிறுத்தொண்டர் இருக்கிறாரா அவரைக் காண வேண்டி வந்துள்ளேன் என்றார் . சந்தனத்தாதியார் பைரவ அடியாரை வணங்கி அடியாரைத் தேடி வெளியே சென்றிருக்கிறார் . அடியார் இல்லத்தினுள் எழுந்தருள வேண்டும் என்றார் . அது கேட்டு சுவாமி மாதர்கள் இருக்கும் இல்லத்தில் நாம் தனியே எழுந்தருள மாட்டோம் என கூற திருவெண்காட்டு நங்கையார் எம்பெருமானே அடியார்களுக்கு உணவிட அடியாரைத் தேடித்தான் அவர் சென்று உள்ளார் நீங்கள் இங்கு வந்திருப்பது தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வார் ஆதலினால் சிறிது பொறுக்க வேண்டும் ஐயா என இறைஞ்சி கேட்டுக் கொண்டார் . பெருமானும் சரி அம்மா நாம் கனபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கிறோம் அவர் வந்த உடன் யாம் வந்த செய்தியை தெரிவிப்பீராக என்று கூறி ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்தார் .

                                அடியார்களைத் தேடி சென்ற சிறுத்தொண்டர் எங்கு தேடினும் ஒரு அடியவரையும் காணவில்லை என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார் . மனைவியார் பைரவ அடியார் வந்ததை தன் கணவரிடத்து கூறினார் . அதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டவராய் வேகமாக ஆத்தி மரத்தின் கீழமர்ந்த அண்ணலைக் காண விரைந்தார் . பெருமானைக் கண்டு அவர்தம் திருவடிகளை பணிந்து நின்றார் . பணிந்து நின்ற அடியாரை நோக்கி பைரவ அடியார் நீர் தான் சிறு தொண்டரா என வினவினார் . அடியேனை அடியார்கள் அவ்வாறு அழைப்பர் ஐயா என பணிந்து கூறினார் . பின் அடியேன் செய்த தவத்தால் இன்று உங்களைக் கண்டேன் சுவாமி தயை கூர்ந்து அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுதுண்ணல்  வேண்டும் ஐயனே என்றார் .
அதுகேட்ட பைரவர் சிறுத்தொண்டரே உம்மைக் காணும் ஆவலில் தான் யாம் இங்கு வந்தோம் எமக்கு உணவளிக்க உம்மால் இயலாது என்றார் . சுவாமி உங்களுக்கு என்ன உணவு வேண்டுமோ அதை அடியேன் விரைந்து அமுது செய்து படைக்கிறேன் தேவரீர் அருள்செய்ய வேண்டும் என்று பணிந்தார் . 

                     பைரவப்பெருமானும் எம் அன்புக்குரிய தொண்டரே நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் உண்போம் அதுவும் பசுவைக் கொன்று தான் உண்போம் அந்த நாளும் இன்று தான் ஆனால் எமக்கு அமுதளிக்க உம்மால் முடியாது ஐயா என்றார் . அது கேட்ட பரஞ்சோதியார் சுவாமி சிவபெருமான் அருளால் அனைத்து செல்வங்களும் , ஆநிரைகளும் அடியேனிடத்தில் குறைவில்லாது உள்ளது உமக்கு அமுதாகும் பசு எதுவென தெரிவித்தால் அடியேன் விரைந்து சென்று சமைத்து காலம் தவறாமல் அமுது படைப்பேன் ஐயனே என்றார் . சுவாமியும் , அன்பரே நாம் உண்ணும் பசு நரப்பசு , அதுவும் ஐந்து வயது மிகாமல் இருக்க வேண்டும் , அங்கத்தில் ஊனம் எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும் , ஒற்றைக்கு ஒரே பிள்ளையாக தாயார் பிடிக்க தந்தை அரிந்து எந்த பிழையுமின்றி சமைத்த கரியினை மாட்டுமே நாம் உண்போம் எனக் கூறிய பைரவரை பணிந்து சுவாமி அமுது செய்வதானால் அதுவும் எனக்கு கஷ்டமல்ல என்று திருவடியை வணங்கி வீடு வந்தார் . கணவர் வருகையை கண்ட நங்கையார் அடியார் விரும்பும் அமுது யாது என வினவினார் . 
                      
                       சிறுத்தொண்டர் , ஒரே பிள்ளையாய் இருக்கவேண்டும் உடலில் மறு இல்லாத பிள்ளையை தாய் பிடிக்க தந்தை அரிந்து கறி சமைத்தால் திருவமுது செய்விப்பதாக சுவாமி கூறியதை தெரிவித்தார் . திருவெண்காட்டு நங்கையாரும் அவ்வாறு அமுது செய்விப்போம் , அப்படி ஐந்து வயது பிள்ளையை யாரிடம் பெறுவது என்று கேட்டார் . சிறு தொண்டர் மனையாளின் முகம் நோக்கி எவ்வளவு பொன் பொருள் கொட்டி கொடுத்தாலும் பெற்ற பிள்ளையை யாரும் தர மாட்டார்கள் அப்படியே தந்தாலும் , தம் பிள்ளையை தாமே அரியும் பெற்றோர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . ஆகவே நமக்கு கிடைத்திருக்கும் இந்த பாக்கியம் , தொண்டு வழுவாது அடியார் பசி தீர நம் மகனை கறியமுது செய்விப்போம் என்பதைக் கேட்ட நங்கையாரும் மனமகிழ்ந்து ஒப்புக் கொண்டார் . தம் செல்வனை அழைக்க பாடசாலை சென்றார் சீராளா என்றழைத்ததும் பாதச் சலங்கை கொஞ்ச அழகாக ஓடிவந்தான் சீராளத்தேவன் . மைந்தனை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் , திருவெண்காட்டு நங்கையார் நீராட்டி , தலை வாரி தமது கணவர் கையில் கொடுக்க மைந்தனை வாங்கிய சிறுத்தொண்டர் அடியார்க்கு அமுதாகும் பிள்ளையை தாம் முத்தம் கொடுக்கலாகாது என்று , அரிவதற்கு தயாரானார் . 

                    யாரும் பார்த்திடக்கூடாத வண்ணம் , கோடிப் பொன் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத தம் செல்வத்தை வாரி அனைத்து மார்பில் தாலாட்டிய தம் மைந்தனை , திருவெண்காட்டு நங்கையார் இரண்டு கால்களையும் இறுகப் பிடித்துக் கொண்டார் , இதைக்கண்ட சீராளத் தேவன் தாம் அடியார்க்கு அமுதாவதை எண்ணி மகிழ்வது போல புன்னகை சிந்தினான் . பரமனுக்காக எதையும் செய்வோம் என்று கொள்கையுடைய பெரும் தொண்டுகள்  புரியும் சிறுத்தொண்டர் தம் குமாரனின் தலையினை அரிந்தார் , வெண்காட்டு நங்கையார் தலையின் மாமிசம் சுவாமிக்கு ஆகாது என்று மற்ற உறுப்புக்களை அரிந்து கறி சமைத்து தன கணவருக்கு தெரிவித்தார் . சிறுத்தொண்டர் விரைந்து சென்று ஆத்தி நிழலில் அமர்ந்திருந்த அம்மையப்பனை வணங்கி , கால தாமதம் ஆனதற்கு அடியேனை மன்னிக்க வேண்டும் ஐயா சுவாமி சொல்லிய வண்ணம் திருவமுது தயார் செய்தாகிவிட்டது அடியேன் இல்லத்தில் திருவமுது செய்விக்க தாங்கள் எழுந்தருள வேண்டும் என அழைத்தார் . பைரவ கோலம் கொண்ட பெருமானும் சரி என்று தொண்டருடன் புறப்பட்டார் . 

                    இல்லம் வந்த சுவாமின் பாதங்களை தூய நீரினால் கழுவினார் . சுவாமிக்கு தூபங்காட்டி மனையாளுடன் அடியாரை வணங்கி தேவரீர் திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்தார் , அடியார் அமர்ந்தார் , யாம் கூறியது போல எல்லா பாகங்களும் சமைத்து வந்து விட்டனவா என்று கேட்கவும் நங்கையார் தலைக்கறி அடியாருக்கு ஆகாது என்று எண்ணி அதை தவிர்த்து விட்டோம் என்றார் , யாம் அதையும் விரும்பி உண்போம் என்று பைரவப்பெம்மான் கூறியதைக் கேட்ட தொண்டரும் அவர்தம் மனையாளும் செய்வதறியாது திகைத்து நிற்கும் போது சந்தனத்தாதியார் , சுவாமிகள் கேட்டால் என்ன செய்வது என்று அடியேன் தலைக்கறியையும் சமைத்து விட்டேன் அம்மா  என்று தலைக்கறியையும் எடுத்து வந்தார் . எங்கே திருவமுது செய்வதில் பழுது ஏற்படுமோ என்று கலங்கிய தொண்டரது மனம் மலர்ந்தது .  திருவெண்காட்டு நங்கையார் முக மலர்ச்சியோடு தலைக்கறியையும் அடியாருக்கு படைத்தார் . அதன் பின் பைரவ கோல பெருமான் , யாம் தனித்து உண்ண மாட்டோம் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வாரும் என்றார் , இது கேட்ட தொண்டர் வெளியில் சென்று தேடினார் யாரும் இல்லை என முகத்தில் வாட்டம் கொண்டு , அடியாரிடத்தில் வந்து சிவனடியார் யாரும் இல்லை சுவாமி என்றார் . 

                   அதுகேட்ட பைரவர் உம்மை விட இன்னும் ஒரு அடியவர் தேவையா நீர் நம்முடன் உணவருந்தும் , என்று சிறுதொண்டரையும் உணவருந்த பணித்தார் . சரி என்று சுவாமிகள் திருவமுது செய்யும் பொருட்டு அடியேன் உணவருந்துகிறேன் என்று அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தார் அது கண்ட சிவனார் , யாம் ஆறு மதத்திற்கு ஒருமுறை தான் உண்போம் நாம் உண்பதற்கு முன்  பொறுமை இல்லாது நீர் உணவருந்துவது தகுமோ என்று கூறி நம்முடன் உணவருந்த உமது மைந்தனை அழைத்து வாரும் அவன் வந்த பின் யாம் அமுது செய்வோம் . அது கேட்டு அடியார்க்கு அமுது  படுமோ என்று கலங்கி சுவாமி மைந்தன் இப்போது நமக்கு உதவான் என்றார் . அவனை அழையும் அவன் வந்த பின் உணவருந்தலாம்  அப்படி இல்லையென்றால் நாம் அமுது செய்வது இல்லை என்று அடம் பிடித்தார் . பெருமானார் சொல்லை கேட்டு சிறுதொன்டரும் அவர் மனையாளும் வீட்டின் தலை வாயிலில் நின்று சீராளா , சீராளா சிவனைத்யார் உணவுண்ண அழைக்கிறார் வாடா கண்ணே என்று அழைத்தனர் , என்ன ஆச்சர்யம் !! பரமன் அருளால் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்தான் . வந்த தம் புதல்வனை வாரிக் கையிலெடுத்து சிவனடியார் அமுதுன்னப் பெற்றோம் என அகமகிழ்ந்து கணவர் கையில் கொடுத்தார் .   
                   
                          புதல்வனை அழைத்துக் கொண்டு அமுது செய்வதற்கு வீட்டுக்குள் சென்ற சிறுத்தொண்டர் அங்கே பைரவ அடியாரைக் காணாது மனம் வெதும்பி அய்யோ அடியார்க்கு அமுது செய்விக்க முடியாது போனேனே என்று கலங்கினார் . பின் சமைத்த கறியையும் காணாது திகைத்தார் , சுவாமியை தேடும் பொருட்டு வெளியில் வந்து பார்த்தார் . அங்கே ஆயிரம் சூரியன் ஒளியை மிஞ்சும் வண்ணம் செஞ்சடை சூடிய பெருமான் அம்மையொடு விடை மீது காட்சி கொடுத்தார் . சிறு தொண்டரது தொண்டை , அன்பை உலகத்தார் அறியும் வண்ணம் இந்த செயலை நிகழ்த்திகாட்டினார் . பசியால் வாடும் கன்று தாய்ப் பசுவைக் கண்டது போல உள்ளம் உவகை பொங்க தம் குடும்பத்தோடு தரையில் வீழ்ந்தார் . சிவபெருமானும் உமது தொண்டின் திறம் கண்டு யாம் மகிழ்ந்தோம் என்று தம்மை வணங்கி நின்ற நால்வரையும் திருக்கயிலையில் தம் பதத்தில் என்றும் நிலைத்திருக்க திருவருள் புரிந்தார் . 


                      
                       சிவமேஜெயம் - திருவடிமுத்துகிருஷ்ணன்         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                 

                    

                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக